வேட்கையின் முணுமுணுப்புகள்

பிரபு காளிதாஸின் ‘நீருக்கடியில் சில குரல்கள்’ நாவலை முன்வைத்து

புனைவு வகைகளில் நாவல் என்பது நிகர் வாழ்க்கைக்கு ஈடானது. வாசிப்பின் பயன்களில் நாவல்களே அதிக சாத்தியப்பாடுகள் கொண்டுள்ளவை. இந்த உலகத்தை அறிந்துகொள்ளும் விருப்பம் கொண்டுள்ள ஒருவருக்கு நாவல்கள் சிறந்த அனுகூலங்கள். அனுபவங்கள் வேண்டி மெனக்கெட்டு ஊர் ஊராகச் சுற்றித்திரிய வேண்டியதில்லை, உறவுகளின் சூதாட்டத்தில் சிக்கி வெறுப்புக்களை எதிர்கொள்ளாமல்,. உணர்ச்சி கொந்தளிப்பிற்கு மத்தியில் தத்தளித்து நீந்திக்கிடக்காமல். காதல், துரோகம், அன்பு, பாசம் என்று காட்டாற்று வெள்ளப்பெருக்கினில் அகப்படாமல். பட்டபின்பு ஞானம் என்று புலம்பித்தள்ளாமல் சிறந்த நாவல் ஒன்றை கையில் எடுத்து தனிமைச்சூழ அமர்ந்து வாசித்தால் போதும். ஆசனத்தில் கண் மூடி அமர்ந்து உலகை அறியும் தியான அனுபவத்திற்கு இணையானது. தியானம் அக ஆழத்திற்குச் அழைத்துச்செல்லும்  என்றால் நாவல் வாசிப்பு அகஉலகத்தின் எல்லைகளை அரிதியிட்டுச் சொல்லும்.புற உலகின் தலைகீழாக்கமே அகஉலகச் சிடுக்கள் என்பதால் அவ்வனுபவங்களை நம்மால் புறக்கணிக்க இயலாது.  நம் அனைவரிடமும் நம்மால் மட்டுமே எழுத முடிகிற  மகத்தான ஒரு நாவலுக்கான வாழ்க்கை உள்ளது. எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை நாவலாக படைக்கிறார்கள். சாமான்யர்கள் தங்களின் அனுபவங்களின் சாரத்தினை ஒற்றை வரியில் உபதேசிக்கிறார்கள். ஆயின் ஒவ்வொரு சிறந்த நாவலுக்கும் ஒற்றைவரியில் உபதேசிக்கும் தன்மை இருக்கத்தான் செய்யும். பொதுவாக நாவலை அப்படிச் சுருக்கி வரையறை செய்துவிட முடியாது என்றாலும் எல்லா நாவல்களும் சிலவரிகளுக்குள் அடையாளப்படுத்தக் கூடிய தன்மைகள் உள்ளவைதான்.

உலக இலக்கியத்திற்கு இணையான தமிழ்ச்சாதனைகள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே கவிதையில் நிகழ்ந்துள்ளது. சமகாலத்தில் சிறுகதைகளிலும் நாவல்களிலும். உலகத்தரத்திலான ஐம்பது இந்திய நாவல்கள் என்று தமிழில் இருந்து இன்று முன்னிலைப்படுத்தக்கூடிய தரத்திலான நாவல்கள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு நாவலுக்குள் முடிந்த மட்டும் வாழ்க்கையின் அத்தனை வகைமாதிரிகளையும் அடைத்து ஒட்டுமொத்தமாக வாழ்வின் சாரமென்ன என்ற கேள்விக்கான பல்வேறு சாத்தியங்கள் கொண்டுள்ள பதில்களை வாசிப்பின் முடிவில் வாசகனே வந்தடையும் பண்புகளை தமிழ் நாவல்கள் கொண்டுள்ளன.

தொண்ணுாறுகள் வரை எழுதப்பட்ட நாவல்களில் மிகுதியும் நவீனத்துவச் சாயலின் இறுக்கத்தையும் ஒற்றைப் படைத்தன்மையையும் உதாரணமாக காப்காத்தனமான சிக்கனத்தையும் காணலாம். ஒருவிதத்தில் அக்காலத்தைய அப்பாக்கைளைப் போலிருந்தன அவை. இன்றைய நாவல்கள் அப்போது குழந்தைகளாக இருந்து தங்கள் குழந்தைகளுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கிக் கொண்டாடும் .இன்றைய அப்பாக்களாக வளர்ந்துவிட்ட பிள்ளைகளைப் போலிருக்கின்றன. நேற்றைய தமிழ் நாவல்கள் ஒரு புள்ளியில் தொடங்கி எட்டுத்திசைகளிலும் பற்றிப்பரவும் தன்மையை கொண்டிருக்கவில்லை. ஜெயமோகனின் நாவல்களின் வரவு தமிழ் நாவல்களின் வடிவபோதத்தில் முக்கியமான திருப்பு முனை. சிறந்த நாவல் வடிவத்திற்கான முன்னுதாரணங்கள் என்றே அவற்றைச் சொல்லலாம். தமிழின் ஒற்றைநாடி நாவல்களுக்கு மத்தியில் மதயானையைப்போல நிலமதிர வந்து நாவலின் உண்மையான விஸ்வரூபத்தை நமக்கு காட்டிச்சென்றன.  நாவல்களின் பன்முகத்தன்மை, நுட்பங்களின் செறிவு, கோவில் கோபுரங்களில் இருப்பதைப்போன்று சொற்சிற்பங்களின் அடர்த்தி என்று புதிய வகைமாதிரிகளை முன்னிலைப்படுத்தின. அதன்பின் எழுதப்பட்ட நாவல்கள் அத்தனையிலும் அவர் முன்வைத்த மகத்தான நாவல்களின் இயல்புகள் இருப்பதைக் காணலாம்.

இரண்டாயிரத்திற்கு பின்பு எழுதப்பட்ட நாவல்கள் சில தனித்துவ குணாதிசயங்களை கொண்டுள்ளன.  அதுவரை தமிழில் சொல்லப்பட்டிராத பிரதேசங்களின் நிலவறைச் சித்திரங்களை அவை கொண்டிருக்கின்றன. சினிமாவும், வெகுஜன எழுத்தும் கச்சாப்பொருளென பயன்படுத்திய கதை உலகத்தை இலக்கிய வெளிக்குள் அவை அழைத்துவந்தன. லும்பர்களின், விளிம்புநிலை மக்களின் கோட்டுச்சித்திரங்கள், ஐ.டி.ஊழியர்களின் அன்றாடங்கள், நிழலுக மனித  மாதிரிகள், குற்றங்கள் மண்டிய உள்ளறை அடுக்குகள், ஹாலிவுட் படங்களின் ஆகிவந்த வடிவமான அப்பட்டமான காமமும் அதீத வன்முறையும் என்பவை இந்நாவல்களின் அடிப்படை இயல்புகளாக உருக்கொண்டன. இவ்வகை நாவல்களை போன்சாய் நாவல்கள் என்று வகைப்படுத்தலாம்.  இதுவரை தமிழில் எழுதப்பட்டிராத மனித வாழ்வின் கோட்டுச்சித்திரங்களை கொண்டுள்ளன என்பதே அவற்றை தவிர்க்க இயலாத புனைவுகள் என்றாக்குகின்றன. தமிழ் நாவல் புனைவு வெளியின் பரப்பை மேலும் விஸ்தரிப்பதால் அவற்றை பொருட்படுத்தியே ஆகவேண்டியும் உள்ளது.  சிறுத்த வடிவம், நாளிதழ் மொழி, நாவல் நிகழும் உலகை வாசிப்பவனின் சுயஅனுபவமாக்கும் திறனற்ற விவரணை, குறைவான புறஉலகச் சித்திரிப்பு, மனித மனங்களை இயக்கும் ஊற்றுமுகங்களின் மீது போதிய நுட்பங்களை கொண்டிராத்தன்மை போன்றவை இவ்வகை போன்சாய் நாவல்களின் போதாமைகள்.

பிரபு காளிதாஸின் நீருக்கடியில் சில குரல்கள் தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள முக்கியமான நாவல்களில் ஒன்று. படிக்கும் போது ஏற்பட்ட தொந்தரவுகளும் நிம்மதியின்மைகளும்தான் இந்நாவலைப்பற்றி எழுதத் துாண்டின. எந்த விதத்திலாவது ஒரு சிறந்த படைப்பென்பது வாசகனை பாதிப்பிற்குள்ளாக்கத்தான் வேண்டும். நேர்மறை என்பதும், எதிர்மறை என்பதும் பொருட்படுத்த வேண்டிய அனுபவங்கள்தான். பதினாறு அத்தியாயங்கள் கொண்டு 122 பக்கங்களில் முடிந்துவிடும் சிறிய நாவல். எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி, சம்பத்தின் இடைவெளி, செந்துாரம் ஜெகதீசின் கிடங்குத்தெரு, ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து போன்று அமைப்பில் ஒத்தது.  பெரிய நாவலாக விரித்தெழுதும் வாய்ப்புள்ள நாவலும் கூட.

சுந்தர், கதிரவன் என்கிற இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையே ஊடுபாவாக நாவலில் பின்னப்பட்டுள்ளது. சுந்தர் பதின்பருவத்தைச் சேர்ந்தவன். கதிரவன் இருபதுகளை ஒட்டியவன். கதை நடக்கும் காலகட்டம் எண்பதுகள். எண்பதுகளின் தமிழ்ச் சமூகத்தின் குணநலன்கள் நாவல்முழுக்க விவரிக்கப்பட்டுள்ளன. சினிமாக்களும், சினிமாப்பாடல்களும், சினிமாவில் வெற்றிபெறும் கனவுகள்கொண்டு சென்னைக்கு ஓடிப்போகும் இளைஞர்களும் இந்த நாவலில் இருக்கிறார்கள். எண்பதுகள் குறித்து இதுவரை வெளிவந்த நாவல்களில் இருந்து இந்நாவல் வித்தியாசப்படும் ஒரு கோணம் என்பது இந்நாவலில் வெளிப்படும் பெண்களின் முகங்கள்தான். ஒருவிதத்தில் பிரபு காளிதாஸ் அளிக்கும் தமிழ்ப்பெண்களின் விவரணைகள் நம்மை கலாச்சார அதிர்ச்சிக்கும், அவநம்பிக்கைக்கும் அழைத்துச்செல்கின்றன. பெண்களை அன்னையராக்கி புனிதபிம்பங்களென தொழும் மனோபாவத்தை பிரபுகாளிதாஸ் பரிசீலனைக்கு உட்படுத்துகிறார்.

கதிவரவின் அம்மா, கதிரவன் நண்பன் ராஜாவின் மனைவி கவிதா, சுந்தரின் புத்தக நண்பர் ரவியின் காதல் மனைவி ஜெயராணி, சினிமா தியேட்டர் ஆபரேட்டர் தர்மலிங்கம் அண்ணாச்சியின் மனைவி என்று இதில் வரும் பெண்கள் அத்தனைப்பேரும் காமத்தை எவ்வித கூச்சங்களும் தயக்கங்களும் இன்றி கேட்டுப்பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதும், உடல் இன்பத்திற்காக குடும்ப நெறிகளை எளிதில் மீறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதும் வாசகர்களை பதறச்செய்யும் உண்மைகள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் காம வேட்கை இயற்கையானது என்றாலும் ஆண்களின் அழிச்சாட்சியங்களை அறியும்போது வராத பதற்றம் பெண்களின் இச்சைவிழைவுகளை கேள்விப்படும்போது ஏற்படத்தான் செய்கிறது.

இணைகோடுகளாக சுந்தரின் கதையும் கதிரவனின் கதையும் சொல்லப்படுகின்றன. இரண்டுகதைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் அவை தஞ்சை மாவட்டத்தை கதைப்புலமாக, குற்றங்கள் செய்யும் மனிதர்களின் அருகாமையை கொண்டுள்ளன என்பதுதான். மிக எளிதாக குற்றங்கள் நிகழ்கின்றன. திட்டமிடலோடு குற்றங்கள் செய்யும் ராஜாவும், அப்பள கணேசனும் கதிரவனின் ஆதர்சநாயகர்கள். கருவாயனும் இளவயது அப்பள கணேசன்தான் சுந்தரின் ஆதர்சமாக அவன் இருக்கிறான்.

கதிரவன் விருதாப்பயலாக ஊர்சுற்றித்திரிபவன். படிப்பும் ஏறவில்லை.லாரிஓட்டுநனரான அப்பா அம்மாவை தனியாக விட்டு ஓடிவிட ஆற்றுப்படுத்த வந்த பீட்டி ஆசிரியரோடு ஓடிப்போகிறாள் அம்மா. ஒரு கொலைமுயற்சியில் இருந்து அவன் தப்பிப் பிழைக்கும் காட்சியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அவன் பின்தொடரும் கோமதியின் ஆட்களாக அவர்கள் இருப்பார்களோ என்று சந்தேகிக்கிறான். காலில் பட்டகாயத்தில் இருந்து அவனை மீட்கும் நண்பனாக ராஜா இருக்கிறான். ராஜா சில்லறைக்குற்றங்களை கூலிக்காக செய்பவன். பிற்பாடு கவிதாவைத் திருமணம் செய்து மளிகைக்கடை வீடு என்று செட்டில் ஆனவன். ராஜாவிடம் தஞ்சமடைந்தவனை ராஜாவும் கவிதாவும் மருந்திட்டு பாதுகாக்கிறார்கள். கவிதா ராஜாவின் மீது காட்டும் அன்பு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. கதிரவனை தொழிலுக்காக அப்பள கணேசனிடம் அழைத்துச்செல்கிறான் ராஜா. கட்டப்பஞ்சாயத்து கும்பலின் தலைவனாக இருக்கும் கணேசனுடன் கதிரேசன் இணைகிறான். சில காரியங்களை சிறப்பாக செய்துகொடுத்து தன் திறமையை நிருபித்துவிடுகிறான்.

சுந்தரின் பால்யம் அவன் அப்பாவால் சிதைக்கப்படுகிறது. குடும்பக் கவுரம் என்று சுற்றத்தாரை தவிர்க்கும் மத்திய அரசு குமாஸ்தா சுந்தரின் அப்பா. அப்பாவைத் தொழும் வாசுகி அம்மா. பள்ளி, அப்பா, அப்பா அலுவலக நண்பர்கள் என்று தொடர்ந்து அதிகார மனிதர்களால் அடித்து விரட்டப்படுகிறான் சுந்தர். அடிப்பவர்கள் ஆசிரியர்கள் என்றாலும் திருப்பி அடிக்கத் தயங்குவதில்லை. அவ்விதமான அத்துமீறல் அவன் மீது அவன் தந்தைக்கு மன்னிக்க முடியாத குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போகச்செய்கிறது. பள்ளியைப் புறக்கணித்து ஊர்சுற்றுவதில் ஆர்வமுள்ளவனாக அவனின் புறச்சூழல் மாற்றுகிறது. பொறுக்கித்தனங்களின் துடிப்புகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் கருவாயானின் சாகச உலகத்தில் சென்று மண்டியிடுகிறான். கருவாயனும் சுந்தரும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க சென்னைக்கு திருச்சியில் இருந்து கள்ள ரயில்ஏறி ரயில்வே போலிசில் மாட்டுகிறார்கள். சுந்தரின் காமிக்ஸ் நண்பரும் ரயில்வே இஞ்சின் ஓட்டுநருமான ரவியின் நட்பு அவர்களை மறுபடியும் தஞ்சைக்கு மீட்டு வருகிறது. சுந்தரை அவன் அப்பா கரூர் ஆசிரமம் ஒன்றில் சேர்த்து நல்வழிப்படுத்த விரும்புகிறார். ஆசிரம வார்டனின் ஓரிணப்புணர்ச்சி வேட்கையினால் வெறுப்படைந்த சுந்தர் வார்டனைத்தாக்கிவிட்டு இரவோடு இரவாக ஊர்திரும்ப முயல்வதோடு கதை முடிகிறது. இக்கதைகள் இரண்டும் ஏற்கனவே நமக்கு அறிமுகம் ஆனவைதான். கதிரவன்களும் சுந்தர்களும்  தமிழ்சினிமாவில் பல்வேறு விதங்களில் காட்சிக்கு வந்துவிட்டவர்கள். ஆனால் இவர்களோடு வந்துபோகும் பெண்கள் நமக்கு முற்றிலும் புதியவர்கள்.

மூன்றாவது அத்தியாயத்தில் சில வரிகளே சொல்லப்படுகிறது கதிரவனின் அம்மாவைக் குறித்து. கதிரவனின் அப்பா அம்மாவை விட்டுப்பிரிந்து பிறிதொரு பெண்ணோடு வாழப்போக அவளின் படுக்கையறை சாமர்த்தியங்கள் போதாமல் இருந்ததே காரணம் என்று கதிரவன் கேள்விப்படுகிறான். அம்மா அவனைப் படி படி என்று எச்சரிக்கிறாள். நீயும் படிக்காமல் போயி உங்கப்பன மாதிரி லாரி டிரைவரா ஆயித் தொலையாதே என்கிறாள். லாரி ஓட்டப்போகும் இடங்களில் கண்டவளோடு அவர் படுத்துவரும் சமாச்சாரங்களும் அவளுக்குத் தெரியும். அந்த அசூயை கூட அவளிடம் அவர்மீதான விலகலை அதிகப்படுத்தியிருக்கலாம். பீட்டிவாத்தியார் ஆயா வேலை வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அடிக்கடி வந்துபோகிறவராகவும் ஆகிறார். பள்ளி நண்பர்கள்வரை அம்மாவின் பீட்டிவாத்தியார் புழக்கம் தெரிந்துவிடுகிறது. ”கதிரவா..பீட்டிவாத்தி..உங்க வீட்டுக்குள்ள போறத இப்பத்தான் பார்த்தேன்” என்று சகமாணவர்கள் ஏளனம் செய்கிறார்கள். உடல்நலமில்லாமல் பள்ளியில் இருந்து வீடுதிரும்பும் ஒருமதியம் வீட்டிற்குள் வாத்தியார் மேல் இருந்து இயங்கும் அம்மாவைப் பார்க்க நேரிடுகிறது. அதை அம்மாவிடம் கோபத்தில் சொல்லும்போது அவள் எதிர்கொள்ளும்விதம் நம்மை திகைப்படையச் செய்கிறது. ”மரியாதையா..பேசு நாயே..செருப்பு பிஞ்சுரும்” என்று அவள் அவருக்காக வக்காலத்து வாங்குகிறாள். வார்த்தை முற்றி அம்மாவும் பிள்ளைக்கும் அடிதடியில் முடிகிறது. அம்மா மகன் முன் கூனிக்குறுகி நிற்கநேரிடும் என்கிற நம் எதிர்பார்ப்பு வேறு விதமாக அமைகிறது. அதன்பின் அம்மாவின் வாழ்க்கை மாற்றம் கொள்கிறது. அம்மாவைப்பற்றிய மனவோட்டங்களாக கதிரவனின் நினைவோடைச் சொற்கள் பின்வருமாறு இருக்கிறது.

”அம்மா ஒருபுறம் வாத்தியாரோடு ஜல்ஸா செய்துகொண்டிருக்கிறாள்.இப்போதெல்லாம் பார்க்க அச்சுஅசல் தேவடியாள்போலவே இருக்கிறாள். தலைநிறைய கமகமவென்று பூ வைத்துக்கொள்கிறாள். வாத்தியாரோடு நாலுநாள், ஒருவாரம் என்று கேரளா, ஊட்டி போகிறாள். அவள் செய்வதெல்லாம் பார்த்தால் இதற்காகவே இத்தனை வருடங்கள் காத்திருந்த மாதிரியே இருக்கிறது. ஒருநாள் அந்த வாத்தியாருக்கும் அலுத்துவிட்டால் அம்மா என்ன செய்வாள்? இந்த சூட்சுமம் இவளுக்கு ஏன் அப்பாவிடம் இல்லாமல் போனது?”

அப்பள கணேசனின் அம்மாவும் ஒருவிதத்தில் அவள் கணவனை விரட்டக் கூடியவளாக இருக்கிறாள். அப்பள கணேசனின் அப்பாவிற்கு கூட்டுறவு சொசைட்டியில் வேலை. அங்கே கூட்டிப்பெறுக்க வரும் கூலிப்பெண்னோடு தொடர்பு ஏற்பட்டு கர்ப்பம் வரைப் போகிறது. அம்மா பணம் சம்பாதி என்று அப்பாவை விடாமல் துரத்த அப்பா அதுதான் சாக்கு என்று தெறித்து ஓடுகிறார். அந்த துாப்புக்காரியோடு தனியே வாழந்து வருகிறார்.

கதிரவனின் தியேட்டர் ஆபரேட்டர் தர்மலிங்கத்தின் மனைவியின் கதை வேறுவிதம். கணவனின் மீதும் அவன் தொழில் மீதும்  ஆரம்பத்தில் இருந்து விருப்பங்கள் ஏதுமற்றவள். இரண்டு வருடத்தாம்பத்தியத்தில் குழந்தை பிறக்கவில்லை. அதையே தனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி வந்துபோகும் அத்தனைப்பேரிடமும் குறை தன் கணவனிடம்தான் என்று புலம்பித்தள்ளுகிறாள். ஒரு பாத்திர வியாபாரியோடு ஓடிப்போகிறாள். அதன்பின் தர்மலிங்கம் சினிமா தியேட்டரின் பிட்டு படங்களைத் தனிமையில் ஓடவிட்டுப்பார்த்து கரமைதுனம் செய்து வாழ்கிறார். இலவசமாக சினிமா பார்க்க சில பெண்களுக்கு அனுமதி அளித்து கைமாறாக இலவச புணர்ச்சிகளை தியேட்டருக்குள் பெறுகிறார்.

ராஜாவின் வீட்டிற்குள் நண்பன் என்கிற முறையில் நுழையும் கதிரவனை கவிதா தன் விருப்பத்திற்கு கொண்டுவரும் நகர்வுகளை துல்லியமாக நிகழ்த்துகிறாள். ராஜா இருக்கும்போதே கதிரவனை கூடும் சந்தர்ப்பத்தை உண்டாக்கித் துய்க்கிறாள். நான்குமுறை நிகழ்ந்துவிட்ட கருக்கலைப்பினால் ராஜாவிற்குத் தன்மீது விருப்பமே இல்லை என்பது அவள் தன் செயலுக்குச் சொல்லும் காரணமாக இருக்கிறது.

சுந்தரின் நண்பர் கருவாயன் வழியாக சொல்லப்படும் பெண்களின் கதைகள் காதுகள் கூசும் தரத்திலானவை. அப்பட்டமான உடலிச்சை கொண்டவை. ஜானி என்பவனும் சில்லறைப்பொறுக்கிகளில் ஒருவன்தான். கதிரவனின் தெரு நண்பன். அவன் மூலம் கலா அறிமுகம் ஆகிறாள். போலிஸ்காரனின் மனைவி கலா. அவர்களிடையேயும் புரிதல் இல்லாமல் போகிறது. சிக்குகிற அத்தனைப் பெண்களையும் விடுதிக்கு அழைத்துச்சென்று அவன் பயன்படுத்திக்கொள்வதை அறியும் கலா தன் விருப்பத்தை ஜானு மீது கொட்டுகிறாள்.

அனைத்தையும்விடத் துயரம் நிரம்பியது ரவியின் திருமண வாழ்க்கை. சுந்தரின் காமிக்ஸ் நண்பரான ரவி. வயது வித்தியாசமின்றி நட்பு பாராட்டக்கூடியவர். டெலிபோன் பூத்தில் போன்பேசச்சென்ற போது ஜெபராணியின் அறிமுகம். ரவி மத்திய அரசூழியர் என்பதால் ஜெபராணியின் வீட்டிற்கு சென்று பெண்கேட்க முடிகிறது. ஜெபராணியை வளர்த்துவரும் மாமா வக்கிரங்கள் நிறைந்தவர். அத்தையின் முன் ராணியை நிர்வாணமாக்கி கூடக்கூடியவர். மாமாவின் மூலம் தன் உடலில் ஆணிற்காக வெறி துாண்டிவிடப்பட்டது என்கிறாள். ஒரு காதல் அதன்மூலம் கர்ப்பம் என்ற நிலையில் காதலன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறான். அப்போது ரவியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது திருமணம் வரை போகிறது. அம்மாவையும் தம்பியையும் எதிர்த்து ராணியைத் திருமணம் செய்து தனிக்குடித்தனம் வைக்கிறார் ரவி. அவளும் ஒருநாள் கடிதம் எழுதி வைத்துவிட்டு பழைய காதலன் திரும்பி வந்ததும் அவனிடம் ஓடிப்போகிறாள். ஏமாற்றம் தாளாமல் துாக்குமாட்டிக்கொள்கிறார் ரவி.

மனிதர்களை அவர்களின் இன்பநாட்டங்களும் இச்சைகளும் மட்டுமே இயக்குகின்றன. ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அத்தனைப்பேரின் இயல்புகளும் இப்படியாக இருக்கின்றன என்கிறது நீருக்கடியில் சில குரல்கள். பெண்கள் தங்கள் விருப்பம் போல்தான் இருப்பார்கள் என்கிற வரி நாவலின் ஓரிடத்தில் வருகிறது. இங்கே வலுவானதாக காட்சித்தரும் குடும்ப அமைப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் கலைந்து இல்லாமல் ஆகலாம் என்கிற சாத்தியத்தை இந்நாவலின் அத்தனைப் பாத்திரங்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நிலைகொள்ளாமையே இந்நாவலை முக்கிய பிரதியாக வாசிக்கச் சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *