ரகசிய வேளை

ராணியென்று தன்னையறியாத ராணி – ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

மனிதர்களில் ஞானியைப் போன்றது மொழியில் கவிதை.  காலத்தால் அழியாத மதுவை தன் சொற்களில் சேகரித்துவைக்கிறான் கவிஞன். நல்ல கவிதையொன்றை வாசிக்கும் போது நாமும் ஞானியைப் போல ஒரு பறத்தலை அடைகிறோம். அன்றாடங்களின் அலுப்பு தரும் புதைக்குழிக்குள் நாள்தோறும் மூழ்கிக்கொண்டிருக்கும் நமக்கு அந்த கண நேரப்பறத்தல் அளிக்கும் ஆசுவாசம் அபூர்வமானது.

கவிதையை ரசிக்கத்தெரிந்த மனம்வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குத் தேவனின் ராஜ்ஜியத்தில் சிவப்புக்கம்பளம் விரிக்கப்படுகிறது. கவிதை அறியா மனமென்பது முழுக்கவே வாய்களுக்காகவும் குறிகளுக்காகவும் வாழ்ந்து, வெறுமையில் வெம்பிமடியும் விருதாத்தனத்தால் ஆனது. சபிக்கப்பட்ட பிறவி.

கவிதை நிகழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். கவிதை பதின்பருவத்து கன்னியைப்போல, தகுதியறிந்த பின்பே அவள்தன் கன்னிமையைத் திறக்க நம்மை அனுமதிப்பாள். அரங்குகளில் எச்சில் தெறிக்கப்பேசும் மொழிச்சேட்டைகளை கவிதைகள் என நமக்குப் புகட்டுகிறார்கள் கல்வியாளர்கள். சினிமாக்கவிஞர்கள் அசல் கவிஞர்களின் முகமூடி அணிந்து தருக்கித்திரிகிறார்கள். சினிமா என்னும் பூதாகரம் நமக்கு உண்டாக்கிய பெருந்தீங்குகளில் ஒன்று சினிமாப்பாடல் ஆசிரியர்களே தமிழின் சிறந்த கவிஞர்கள் என்று மக்கள் திரளுக்கு முன் கூச்சமின்றி உரக்கச் சொன்னது. உலக மொழிகளில் வியந்துநோக்கும் கவிதைத்தொடர்ச்சியும் சொற்களின் களஞ்சியமும் வாய்த்த நாம்தான் நம் பிள்ளைகள் தமிழ் பேசுவதையும் படிப்பதையும் ஒருவித பதற்றத்தோடு தடைசெய்கிறோம். நமக்கு இருக்கும் தாழ்வுணர்ச்சி நம் அறியாமையின் சொத்து.

ஷங்கர் என் அந்தரங்க கவிஞர்களில் ஒருவர். புனைவுவெளியில் அசோகமித்ரனைப்போல, சுந்தர ராமசாமியைப்போல, ஜெயமோகனைப்போல. அவருடைய சொல்முறையும் நுட்பங்கள் செறிந்த அவதானிப்புகளும் கவிதையில் சதா நிகழ்த்திப்பார்க்க விழையும்  பரிசோதனைகளும் என் விருப்பத்திற்கு உரியவை. மேலும் அதிகமாக இன்றெழுதும் கவிஞர்களில் முதன்மையான  கவிஞரும் கூட. யவனிகா ஸ்ரீராம் போல, லஷ்மி மணிவண்ணன் போல, பிரான்சிஸ் கிருபா போல.

கவிதை வாசகனாக கவிதையெழுதும் அத்தனைப்பேர்களையும் என்னால் தங்குதடையின்றி கற்றுத்தேற இயலவில்லை. எவ்வளவு முக்கிமோதியும் சில தாள்கள் திறக்க மறுக்கின்றன.  சொற்களின் புதிர்த்தன்மை முயங்கி அச்சமூட்டுகிறன சில. நிலமற்ற வெட்டவெளிக்கு அழைத்துச்செல்லும் கவிதைகளும் இருக்கின்றன. காற்றைப்போல அறிய மட்டுமே முடிகிற கவிதைகள்தான் ஆச்சரியம் அளிக்கின்றன.

ஒரு வாசகனாக நான் கவிதையில் இருந்து பெறுவதென்ன? இந்தக்கேள்விக்கு ஷங்கரின் சில கவிதைகள் தரும் வாசிப்பனுபவமே போதும். நல்ல கவிதை பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றதுதான். கவிதை வரிகளில் வந்துவிழும் பிம்பங்களும் பாவனைகளும் நம்முடையது. நாம் மட்டுமே அறிந்து அந்தரங்கமாக பதுக்கிவைத்தவற்றை ஒரு கவிதை வெளிக்காட்டும்போதுதான் நாம் மீளா அதிர்ச்சிக்கு ஆளாகிறோம். அந்த அதிர்ச்சி யானையின் துதிக்கை ஆசிபோன்றது.

1. குப்பை சேகரிப்பவன்

குப்பைகளிலிருந்து
கவிதைகளைச் சேகரிக்கும்
சிறுவன் நான்.
எரியும் சூரியனுக்கு கீழே
நான் வெயிலின் மகன்
தனிமையான இரவு வானத்தின் கீழே
நான் நட்சத்திரத்தின் பிள்ளை.
மழையில் என் வசிப்பிடம்
மூழ்கும்போது
தவளை ஈனும் தலைப்பிரட்டைகளில்
ஒரு உயிர் நான்.
ஈரக்குப்பை
உலர்குப்பை
மக்காத குப்பை அனைத்தும்
எனது கைகளுக்குத் தெரியும்
கண்ணாடிப் பொருள்களால்
ஊறுபட்ட காயங்களும் தழுப்புகளும்
எனக்கு உண்டு
நட்சத்திரத்தின் உயரத்திலிருந்து
குப்பைத்தொட்டிகளைப்பார்த்தால்
இந்த உலகம் அழகிய சிறு கிணறுகளால்
ஆனதாய் நீங்கள்சொல்லக்கூடும்
ஆனால் உண்மையில்
இவை ஆழமற்றவை
நான் நடக்கும் நிலத்திற்கு
அடியில்
கடல்கொண்ட நகரங்களும்
மூதாதையரும்
அவர்தம் மந்திரமொழியும் புதைந்துள்ளது
எனக்குத் தெரியும்
ஆனாலும்
ஒரு ஆணுறையை
பால்கனியிலிருந்து
எறியப்படும் உலர்ந்த
மலர்ச்சரங்களை
குழந்தைகளின் ஆடைகளை
தலை உடல்
தனியாக பிய்க்கப்பட்ட பொம்மைகளை
விரலில் சுற்றி வீசப்பட்ட கூந்தல் கற்றையை
ரத்தம் தோய்ந்த மருந்து ஊசிகளை
சுமந்து செல்லும்போது
பூமியின் பாரத்தை
உடைந்த சிலம்புகளை
சுமக்கும்
புனித துக்கம் எனக்கு.

 கவிஞனின் சொற்களாக ஒரு மனிதனை உணர்வது உன்னதமானது. அன்னையரின் விரல்நுனிகளில் சதா சுரந்து நிற்கும் அன்பினைப்போன்று ஒரு கவிஞனின்  நீர்மை அவன் சொற்களில். அவன் உலகைப்புரக்கும் பேரன்னை. தீர்ந்துபோகா பெருந்தனங்கள் அவன் சொற்கிடங்கு. மளிகைக்கணக்கிற்காக, வட்டிக்கணக்கிற்காக, பிழைப்பு உபாயத்திற்காக, மருத்துவக்குறிப்புகளுக்காக மொழியைப் பயன்படுத்தும் மொண்ணைத்தனத்தில் இருந்து மீட்டு ராணியென்று நாம் அறிய மொழியைக் கனப்படுத்துபவன் கவிஞன். குப்பைகளில் இருந்து கவிதைகளை சேகரிக்கும் சிறுவனின் கண்களைப் பெற்றவர்கள்தான் கவிஞர்கள். எரியும் சூரியனுக்கு கீழே அவர்கள் அன்றாடங்களில் உழன்று கருத்து நிழலின்றி அலைந்தாலும் வெயிலின் புதல்வர்கள். அவர்களின் சொற்களில் வெக்கையை பதுக்கிவைப்பவர்கள்.

இக்கவிதை குப்பை சேகரிக்கும் சாதாரணத்தனத்தில் வேர்கொண்டிருந்தாலும் நான் நடக்கும் நிலத்திற்கு அடியில் கடல்கொண்ட மூதாதையரும் அவர்தம் மந்திரமொழியும் புதைந்துள்ளது என்ற வரிகளில் இருந்து அசாதாரணமாக வான் நோக்கி எவ்விப்பாயத்தொடங்குகிறது. பால்கனியில் இருந்து எறியப்படும் உலர்ந்த மலர்ச்சரங்களை காணும்போது நம் அகம் அலுங்கி உணர்வோட்டம் குலைகிறது. விரலில் சுற்றி வீசப்பட்ட கூந்தல் கற்றையை எதிர்கொள்ளும் நமக்கு வந்துபோகின்றன அதுநாள்வரை நாம் அறிந்திருக்கும் அத்தனைப்பெண்களின் முகங்களும். குப்பைகளாக வீசப்பட்டவற்றை சுமந்து செல்லும் போது நம்தோள்களில் வந்து கனக்கிறது பூமியின் பாரம். கூடவே உடைந்த சிலம்புகளை சுமக்கும் புனித துக்கம். உடைந்த சிலம்புகள் என்ற இரண்டு சொற்கள் அளிக்கும் எண்ணச்சிதறல் இக்கவிதையில் ஒரு காவியத்தன்மையை படரச்செய்கிறது.

2. சிவப்பு பலுான்

மகள் என் வயிற்றின் மீது
விளையாடிக்கொண்டிருக்கிறாள்
இடுப்பின் கீழே என் குறிமிதித்து
அவள் வானேறுகிறாள்
நான் அவளைத் தொடவேயில்லை.
என் பால்யத்தில்
அந்தச் சிவப்புநிறப்
பலுானை
தொட்டுத்தொட்டு
கைவிடுத்து
காற்றில் அலையவிட்டேன்
நான் அந்தப் பலுானை
ரத்தச்சிவப்பைத்
தொடவேயில்லை
காதலியை ஸ்பரிசித்தேன்
தொட்டுத்தொட்டு
உச்சத்தில்
நான் இல்லாமல் ஆகும்
உன்மத்தத்தில்
அவளுக்குள் நுழைந்தேன்
நான் தொடவேயில்லை
இப்பூமியில் சற்றுமுன்
முளைத்திருக்கும் புற்கள்
அருவி
சாயங்காலம்
அலாதியாகச் சிவந்திருக்கும் வீடுகள்
கடல் ஆசை
அலைகள் அழகு
இவற்றையெல்லாம்
குதிரைகள் கடக்கின்றன
தொட இயலாத துக்கம் எனக்கு.

நமக்கும் அந்தச் சிவப்புபலுானை ஆசையாய் கையில்வைத்து விளையாடிய அனுபவம் இருக்கும். நாற்பதுகளைத்தாண்டும்போதுதான் நமக்குப் புரியவரும். நாம் ஒருபோதும் தொடமுடியாத ஒன்றுதான் அது என்று. தொடமுடியாமைதான் அதன் அழகு என்று. குழந்தைகளின் கைகளில் மட்டுமே ஒரு பட்டாம்பூச்சியைப்போல வந்தமரும் சிறு பறவை அது என்று.

ஜி.நாகராஜன் இறந்துவிட்டார் என்பது பகடிக்கவிதை. இன்று கவிதையெழுதும் புதியவர்களைப்பற்றிய ஒரு அவதானிப்பில் கிளர்ந்த ஆவேசம், கனிந்து நல்ல கவிதையாக உருமாறியிருக்கிறது. அகராதியில் இல்லாதவையா கவிஞனிடம் இருந்துவிடப்போகிறது என்பது போன்ற பொதுப்புத்தி கொண்டு கவிதையை வாசிப்பவர்களை, கவிதையை எழுத முயற்சிப்பவர்களை இதழ்விரிய புன்னகைத்து கடக்கும் கவிதை. முன்சுவடுகளை அறியா வழிப்போக்கனின் மடமை அக்கவிதையில் உள்ளது. இக்கவிதையை அறிய குறைந்தபட்ச நவீன இலக்கிய வாசிப்பு இருக்கவேண்டும். புதியவர்களுக்கு இக்கவிதை முழுஅர்த்தப்பூர்வமாக மாற வாய்ப்பில்லை.

21 ஆம் நுாற்றாண்டு கிருஷ்ணன் என்ற கவிதை சமகாலத்தன்மை கொண்டது. தொழில்நுட்பம் எனும் ரகசிய வேட்கையின் கோரமுகத்தை காட்டுவது.

அப்பொழுது
அந்த ரசகிய வேளையில்
அவள் தன்னை மறந்திருந்தாள்
அவன் அவள் உடைகளை அவிழ்க்கிறான்
அவள் தன்வசம் இழந்திருக்கிறாள்
அவன் அவள் முலைகளைச் சுவைக்கிறான்
அவள் தன் நிர்வாணத்தை ஒப்புக்கொடுக்கிறாள்
அவன் முத்தம் கொடுக்கிறான்
அவள் கண் மூடியிருக்கிறாள்
அவன் கண்கள்
திரும்பத் திரும்ப
மறைந்திருக்கும் ஒளிப்பதிவுக் கருவியை
கூர்ந்து வெறிக்கின்றன
அவன் கண்களைப்போல்
இந்த நுாற்றாண்டின்
பயங்கரமான பொருள்
இதுவரை கண்டுபிடிக்கப்படவேயில்லை.

இத்தொகுதியில் சிறந்த கவிதைகள் என்று கன்னியாகுமரி, நான் ஒரு கவிதையை, கவிஞர் கே. இப்படி, அவர்கள் குழந்தைகள், நல்லதங்காள்,நான் தமிழ் புரோட்டா போன்றவற்றை சொல்லலாம்.  கன்னியாகுமரி சிறுகதை வடிவில் எழுதப்பட்ட கவிதை. சமகாலத்தோடு வந்துமோதும் ஆதித்தொன்மம்.

நல்ல கவிதையனுபவத்தை அளிக்கும் மிக முக்கியமான தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *