ஓஷோயிசம் – சில குறிப்புகள்

சென்ற நுாற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் ஓஷோ. இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு மனிதர்களின் மனங்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஓஷோ பூரணர். ஆயினும் முரண்கள் நிறைந்தவர்.  அரிதியிட்டு நிறுவிச் சென்றவற்றை மறுக்க வேண்டிய தருணங்களில் தயக்கமின்றி நிராகரித்தவர். பிரபஞ்சத்தில் ஒளியும் இருளும் உள்ளதைப்போல அவரின் சொற்களிலும் அவை உண்டு.

ஒளியின் சமகாலத்தில் இருளை உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஒளியின் முன் இருள் இல்லாமல் போகும். அஞ்சித் தன்னைத்தானே மறைத்துக் கொள்ளும். ஒளி விடைபெற்ற மறுகணம் தன்னை பூதாகரப்படுத்தி நிறைத்துக் கொள்ளும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவை. ஓஷோவிடம் காணப்படும் முரண்கள் இவ்வகைப்பட்டதே.

ஓஷோ ஞானமடைந்தவர். அவர் சொல்லியிருக்கிறார். அதை நான் பிரதிபலிக்கிறேன். சிலர் அதை ஏற்பதில்லை. குறிப்பாக ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சீடர்கள். அவர்களுக்கு ஓஷோ பெரிய படிப்பாளி. சிறந்த சிந்தனைவாதி. உரையாடல்காரர், தத்துவவாதி. ஆனால் ஞானி அன்று. உண்மை எதுவென்று சாமானியர்களான நமக்குத் தெரிவதில்லை. தெரியாததை அரிதியிட்டுப் பேசுவது அறிவுலக ஒழுக்க மீறல்.

ஓஷோவும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் அவர்கள் பேசிச்சென்றுள்ள சொற்கள் ஊடாகத்தான் இன்று நமக்கு அறியக் கிடைக்கிறார்கள். ஓஷோவையும், ஜிட்டுவையும் ஏற்பதும் மறுப்பதும் அவரவர் மனோலயத்தின் பாற்பட்டது. ஜிட்டு முழுக்க அகம் சார்ந்து உரையாடிச் சென்றவர். குருவே தேவையில்லை. தியானம் முயன்று செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்பார். ஓஷோ குருவின் அவசியம் குறித்தும், தியானத்தின் தேவை குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இருவரும் சமகாலத்தவர்கள். இருவரும் சமமானவர்கள் தானா? ஒப்பிட முடியாத பேராளுமைகள். என் நோக்கில் ஜிட்டு போன்சாய் மரங்களை ஒத்தவர். ஓஷோ புறம்போக்கில் தன்போக்கில் வளர்ந்து செழித்திருக்கும் ஆலமரம் போன்றவர். தங்கி இளைப்பாற ஓஷோவிடமே நிழலும் போதிய இடமும் இருக்கிறது.

ஓஷோ ஒளியால் ஆன உலகத்தைப் பற்றிப் பேசும் போது, அவை இருள் உறைந்த பாதாள உலகங்களை புறக்கணிக்கின்றன. ஒளியின் சொற்கள் இருளைப் புரிந்து கொள்ள உதவுவதில்லை. ஒளி துல்லியமானது. வெளிப்படைத்தன்மை மிகுந்தது. காந்தி ததும்புவது. ரச்மிகள் கண்களைக் கூசச்செய்யும். இவற்றைக்கொண்டு இருளைப் புரிந்து கொள்ள முடியாது. இருளின் இருப்பு வேறுவிதமானது.

இருள் புதிர்கள் நிரம்பியது. வழித்தடங்களின் மீது அச்சங்களைப் போர்த்தியிருப்பது. திசைகளை மறுதலிப்பது. அடுத்த காலடியின் சாத்தியத்தை கேள்விக்குட்படுத்துவது. நிச்சயமி்ன்மைகளை வெகுமதியாக வழங்குவது. அவநம்பிக்கையை தன் இயல்பெனக் கொண்டிருப்பது.

இருவேறு உலகம். ஆனால் அவை இரண்டும் ஊடாடி முயங்கும் நடனத்தில் உள்ளன. தனித்த பேரியக்கங்கள். ஓஷோவையும் இவ்விதமே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு லட்சியங்களை சுமந்து கொண்டு செயல் புரிவது, உயரிய நோக்கமொன்றிற்காக தன் வாழ்நாட்களை அர்ப்பணிப்பது கைவிடப்பட வேண்டிய மடத்தனம். அறிவுத்தேடலை குப்பைகள் என்று அறிவுறுத்தி கைவிட்டுவிடத் துாண்டுவார். தியானம் ஒன்றே உனக்குப் போதும் என்பார். மனம் கடந்த நிலைக்கு உன்னைத் தயார் செய் என்பார். ஆனால் வாழ்நாளெல்லாம் அறிவை வாசிப்பதன் வழியாக சம்பாதித்துக்கொண்டே இருந்தார். மனிதர்களுக்கு ஞானமடைதல் குறித்து போதிக்கும் குன்றாத லட்சியவாதத்தைக் கொண்டிருந்தார். தன் உபதேசத்தை முற்றாக மீறும் ஒருவராக அவரே இருந்தார்.

ஆம். அவை சரியானவையே. மனம் ஒரு மாளாத் தொந்தரவு. மனம் என எளிதாக சொல்லி விடுவதைப்போல அத்தனை எளிதானதல்ல மனதைப் புரிந்து கொள்வது. மனமே இங்குள்ள அத்தனையும். மனதிற்காகவே இங்குள்ள அத்தனையும். கவிதைகள், காவியங்கள், பேரிலக்கியங்கள், இசைப் பேரின்பங்கள்,  ஓவியங்கள், அரசியல் பேருரைகள், மனிதப் படுகொலைகள், காதலின் உன்மத்தங்கள், கருணையின் கண்ணீர்த் தளும்பல்கள். உண்மைக்கான தேடல்கள். ஆம். மனமே இங்குள்ள அனைத்திற்கும் ஆதிமூலம். மனித வாழ்வின் விளைநிலம். மனத்திற்காகவே ஒட்டுமொத்த அறிவியலும் கண்டுபிடிப்புகளும்.

மனமே மனிதன் என்கிறார் ஓஷோ. ஒருவர் இந்தியனாக, ஐரோப்பியனாக, ஆப்பிரிக்கனாக, இருக்கலாம். ஆனால் அவன் மனிதன். மனத்தால் வழி நடத்தப்படுபவன் என்ற நோக்கில் மனதைப் புரிந்துகொண்டால் போதும் மனிதனைப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். மனித வரலாற்றின் கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் கூட மனதைப் புரிந்து கொள்வதன் மூலம் சாத்தியப்படும் என்கிறார்.

மனித மனம் ஐந்து நிலைகளை உடையது. முன் மனம், சமூக மனம், தனி மனம், பிரபஞ்ச மனம், புத்த மனம்.

முன் மனம் குழந்தைகளுக்குரியது. மூன்றில் இருந்து நான்கு வயதுவரை இயற்கையாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை சதா அந்த மனதோடுதான் இருக்கிறது. அதில் கலங்கம் இல்லை. கற்பிதங்கள் காணப்படுவதில்லை. ஐயங்களும் குழப்பங்களும் தடுமாற்றங்களும் கிடையாது. முன் மனம் ஐந்தாவது மனமான புத்த மனத்திற்கு இணையானது. பேரின்பம் நிறைந்தது. குழந்தைகளைப் போல நீங்கள் மாறா விட்டால் தேவனின் ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது என்கிற இயேசுவின் சொற்களை நினைவில் கொள்ளுங்கள். தேவனின் ராஜ்ஜியம் என்று அவர் சொல்வது ஐந்தாவது மனதை. புத்த மனதை. இயேசுவின் மனதை. குழந்தையின் மனதை.

முன் மனதிற்கு பொறுப்புகள் இல்லாத காரணத்தால், கடமைகள் நிர்ப்பந்திக்காத காரணத்தால் துயரங்களும் இல்லை. கண்ணியம், நேர்மை , லட்சியம், கடவுள் என ஏதொன்றும் குழந்தையின் உலகில் இருப்பதில்லை. குழந்தை தன்னியல்பில் ததும்பிக்கொண்டே இருக்கிறது. புராதனமான மகத்துவம். இங்கு பிறக்கும் அத்தனை உயிர்களுக்கும் உரியது. அதைப்பெற குழந்தை எந்த வித முன்தயாரிப்புகளும் மேற்கொள்ள வேண்டியதில்லை. அதைத் தக்க வைக்க குழந்தையால் ஆவதுமில்லை. ஒரு பருவ காலத்தைப்போல குழந்தைமை. வாழ்வில் ஒரே முறை. மறு வாய்ப்பு ஞானமடைவதில் உள்ளது. விலங்கு நிலைக்கும் மனித நிலைக்கும் இடையே உள்ள இணைப்பாக குழந்தைமை உள்ளது. மதி நுட்பம் குழந்தைமையின் இயல்பே. ஆனால் அது புத்திக்கூர்மை அல்ல. களங்கமின்மை அதற்கு சாத்தியப்பட்டதே ஆனால் அதில் தியான நிலை இல்லை என்கிறார் ஓஷோ.

புராதன காலத்தில் இருந்து மனிதன் கடந்து வந்த அத்தனை நிலைகளையும் குழந்தை தன் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒன்பது மாதங்களில் கடந்து விடுகிறது. லட்சோப லட்ச ஆண்டுகளாக நிகழ்ந்துள்ள பரிணாம வளர்ச்சியினை மின்னல் கடக்கும் வேகத்தில் குழந்தை தாண்டி வருகிறது. முன் மனம் ஒருவனிடம் வாழ்நாள் முழுக்க உள்ளே ஒரு ஒரத்தில் தங்கிவிடுகிறது. ஒரு பேரிழப்போ, கொடுங்கணமோ நிகழும்போது அவன் முதல் மனதில் வந்து விழுகிறான். குழந்தையைப் போல கண்ணீர் விட்டு அழத்தொடங்குகிறான். ஒரு புத்தனாக ஆவாத போது ஒருவனால் முதல் மனதில் இருந்து வெளியே வர முடிவதில்லை. தியான நிலையால் மட்டுமே முன் மனதைக் கடந்து வர இயலும். அல்லாத போது அது அவனுக்குள் என்றுமே இருந்து கொண்டிருக்கும்.

மனதில் இரண்டாவது நிலை சமூக மனம். தொகுப்பு மனம். இதை சுமை துாக்கும் ஒட்டகம் என்கிறார் நீட்சே. நம் பண்பாட்டில் கழுதை. எவ்வளவு சுமைகளை நீ ஏற்றுக் கொள்கிறாயோ அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுகிறது.

சமூக மனதில்தான் நம்மில் தொண்ணுாறு விழுக்காட்டினர் இருக்கிறோம். சராசரிகள் என்று அறிவுஜீவிகள் சுட்டும் நிலை. வரையறை செய்யப்பட்ட பாட்டைகளில் பொறுப்புகள் ஏதுமற்று அக்கடா என்று பயணித்தல். தேடல்களே இல்லாத ஆனால் விடைகள் ஏராளமாக குவிந்து கிடக்கும் நிலை. கடவுள் யார் என்றால் பல்வேறு விடைகள் ஏற்கனவே தயாரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பண்பாடு என்ற பெயரில் கலாச்சாரம் என்ற பெயரில் சுற்றி இருப்பவை எல்லாம் இரண்டாம் நிலை மனதின் வெளிப்பாடுகள். கூட்டு மனம் என்றாலும் தகும்.

மனிதர்கள் தங்களை தனித்த ஒரு உயிராக நினைப்பதில்லை. இந்தியன் என்றோ தமிழன் என்றோ இந்து என்றோ முகமதியன் என்றோ கிறிஸ்தவன் என்றோ மார்க்சியன் என்றோ பெரியாரியன் என்றோ நினைக்கிறார்கள்.

சமூக மனதில் தனி மனித பிரக்ஞை வலுப்பெற்றிருப்பதில்லை. சமூகம் அதை அனுமதிப்பதும் இல்லை. எங்களோடு சேர்ந்திரு. எங்களைப் போல இதைச் செய். அவற்றைச் செய்யாதே. உன் இனக்குழுவிற்கு இவை விதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மட்டும் பின்பற்று. கட்டளை இடப்படுகின்றன. விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சாத்தியங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வாழ்நாளுக்கும் தினசரி நாட்காட்டிகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறப்பில் இருந்து மாசானம் செல்வது வரை திசைகாட்டிகளும் செயல்குறிப்புகளும் மாறாத் தன்மையோடு காத்திருக்கின்றன. மீறினால் நீ ஒழுிந்து போவாய். புறக்கணிக்கப்படுவாய். வரலாற்றில் இருந்து அழித்தொழிக்கப்படுவாய். தனியனாக கைவிடப்படுவாய்.

விதியாகவும் மதமாகவும் சட்டங்களாகவும் இங்கே முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளவை தொகுப்பு மனதைக் கருதியே. இரண்டாவது மனம் பொருட்படுத்த வேண்டியவை இவையே. சமூக மனம் தேடல்கள் அற்றது. மீறல்களை அஞ்சுவது. புரட்சி, உலகைப் புரட்டும் நெம்புகோல்களை ஐயத்தோடு பார்ப்பது. குழந்தைமை சுயநலத்தால் மட்டுமே வாழ்வது. தன் இன்பங்களை மட்டுமே கருத்தில் கொள்வது. இரண்டாவது மனம் சமூகத்தின் மீது அக்கறை வேண்டி நிற்பது. அது பொதுநலத்தை உன்னிடம் எதிர்பார்க்கிறது. சமூகத்திற்காக ஏதேனும் செய் என்று நிர்ப்பந்திக்கிறது. கட்டளை இடுகிறது. தியாகங்கள் செய்யத் துாண்டுகிறது. லட்சியங்களை சுமந்து கொண்டு களப்பணியாற்ற அழைக்கிறது.

நாகரீகம், பண்படுதல் என்பதே ஒரு விதத்தில் தனித்த பிரக்ஞையை மட்டுறுத்தி குழுவாக வாழ்வது சார்ந்து செயல்களை அமைத்துக்கொள்வதே. தன்னியல்பில் காணப்படும் பிசிறுகளைச் செதுக்கிவைப்பதே. நான்கு அறைகளுக்குள் நீ உன்னியல்பில் இரு. பொதுவெளி என்று வந்துவிட்டால் மற்றவர்களையும் கவனத்தில் கொள் என்கிறது இரண்டாவது மனம். அல்லது தொகுப்பு மனம்.

இரண்டாவது மனதிற்கு தேடல்கள் தேவையில்லை. ஆனால் ஒப்பீடுகள் உள்ளன. மற்றவர்களோடு ஒப்பிட்டுத் தன்னைத்தானே மதிப்பீட விழைகிறது. ஏற்றத்தாழ்வுகள் கண்களில் பட அவற்றை மாற்றிவிட விரும்புகிறது. தன் செயல்களால் அகங்காரம் கொள்கிறது. இரண்டாவது நிலையில் தனித்த அடையாளங்களை மனிதர்கள் தேடிக்கொள்கிறார்கள். நீ யார் என்ற கேள்விகளுக்கு அவர்கள் நிலையான பதிலை அமைத்துக்கொள்கிறார்கள். பணக்காரன், ஓவியன், ஆட்சியாளன், மதவாதி, அரசியல்வாதி, மருத்துவர், பொறியாளர், கொள்ளையன், சாமியார் என்று ஏதோ ஒரு அடையாளமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த தனி்த்த அடையாளங்கள் மேலோட்டமாக சரிதான். உள்ளார்ந்த தளத்தில் மனிதன் இந்த மேலோட்டங்கள் மட்டுமானவன் அல்லன். அவனுக்கு அதைத்தாண்டிய நிலையும் உள்ளது. மனிதன் ஒரு சாத்தியம் மேலே கடவுள் நிலை கீழே மிருக நிலை. ஏணியில் அவன் தங்கிவிட முடியாது. பயணத்தை தொலைத்து தேங்கிவிடக் கூடாது என்கிறார் ஓஷோ.

இந்த சமூக மனம் பாமரர்களில் ஒருவனாக்கி, ஒருவித அடிமையாக்கி. உன்னிடம் அபாயகரமானதாகத் தென்படும் குழப்பம், விடுதலை, பொறுப்பின்மை ஆகியவற்றை எடுத்துவிட்டு, ஒரு வகையான சிறைத் தண்டனை கொடுத்து உன்னை கடமையுணர்வு உள்ளோனாக, பொறுப்புள்ளோனாக, நல்லது எது? கெட்டது எது? என்ற மதிப்பீட்டைத் தந்து புறாக் கூண்டில் அடைத்து வகைப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தின் பணி இப்போது முடிந்து விட்டது. அமைதியாக வாழ்ந்து கொண்டு அலுவலகம் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பி, உன் குழந்தைகளை உன் பெற்றோரை கவனித்துக்கொண்டு, அப்படி இப்படி வாழ்ந்து ஒரு நாள் மடிந்து விடு உனது இருத்தல் முழுமையாயிற்று. இது ஒரு தவறான முற்றுப் பெறல். வழக்கமான வாழ்வு முறை இது என்கிறார் ஓஷோ.

இந்தியக் கிராமங்களில், இந்திய மனதில் காணப்படும் சாந்தம் என்பது இந்த இரண்டாம் நிலை மனதினால் வழங்கப்படுவது. தங்களைத் தாங்களே வரையறை செய்துகொள்ளும் எளிய புரிதல்களால் ஆனது. மனு சொல்லிச் சென்றவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வது. தன் நிலைக்குத் தானே காரணம் என்று நம்புவது. மேலை நாடுகளில் இந்த நிலை இல்லை. அவர்கள் இந்த நிலையைக் கடந்து விட்டார்கள். தங்களைத் தனித்த ஓர் உயிரியாக கருதத் தொடங்கி விட்டார்கள். அதுவே அங்கே நிறைவின்மையைத், தேடல்களை உண்டாக்கி வைத்திருக்கிறது. பைத்தியம் ஆகும் வாய்ப்பு மேலை நாட்டினருக்கே அதிகச் சாத்தியம் என்கிறார் ஓஷோ. அமெரிக்காவின் கஷ்டம் ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இரண்டாம் மன நிலையை தந்தைக்கு ஒப்பிடுகிறார் ஓஷோ. ஒரு மரபான குடும்பத்தில் தந்தையின் இடம் என்னவோ அதுவே மனதின் இரண்டாம் நிலைக்கும். தந்தை தன் மகனைப் பாதுகாப்பதும் தண்டிப்பதும் ஏற்கனவே இங்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. செய்ய வேண்டியவற்றை கேள்விகள் அற்று செய்து முடித்து வெற்றி பெரும் மகனை தந்தை உச்சி முகர்ந்து கொண்டாடுகிறார். அவனுக்கு வழங்க வேண்டிய அத்தனை மரியாதைகளும் கிடைக்கிறது. அவனோ தந்தையின் சொற்களை எதிர்த்து கேள்விகள் கேட்பவனாக இருப்பான் எனில் தந்தையால் அவன் வேட்டையாடப்படுவான். கைவிடப்படுவான். அவமரியாதை செய்யப்படுவான். புறக்கணிக்கப்படுவான். மரபான மரியாதைகள் அவனுக்கு மறுக்கப்படும்.

மூன்றாவது மனதை ஓஷோ தனி மனம் என்கிறார். நீட்சே இதனை சிங்கத்தோடு ஒப்பிடுகிறார். இது சுதந்திர நிலை. தன் விருப்பங்களைத் தானே முடிவு செய்யும் நிலை. தேடல்களும் பொறுப்புகளும் நிறைந்த நிலை.ஆகவே சவால்களும் தத்தளிப்புகளும் கொண்டாட்டங்களும் மேலும் அதிகப்படும் நிலை.

மூன்றாவது நிலை தன்னைத் தனி ஆளுமையாக உணரும் நிலை. வரலாற்றின் முன் தன் இடத்தை பகுப்பாய்வு செய்துகொள்ளும் வாய்ப்பினை பெறுவது. பிறப்பால், சூழலால் விதிக்கப்பட்டுள்ளவற்றை மீறும் பேறு. சிங்கம் தன் வலிமையாலே காட்டுக்கு ராஜா ஆவதைப்போல. ஒருவன் மீது சுமத்தப்படும் அத்தனை அடையாளப்படுத்துதலில் இருந்தும் விடுதலையாகும் எத்தனிப்பினால் ஆகும் சாத்தியம். மரபென்றும் பண்பாடு என்றும் மதம் என்றும் முன் தீர்மானங்களால் வகுக்கப்பட்டுள்ளவற்றை மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாக வேண்டிய கட்டாயம் இந்நிலைக்கு உண்டு.

குழந்தை மனதில் தெளிவற்ற ஒரு மையம் உண்டு. இரண்டாவது சமூக மனதில் வெளியில் இருந்து வழங்கப்பட்ட ஒரு கூட்டு மையம் உள்ளது. மூன்றாவது மனதில் தனக்கேயான ஓர் உள் மையம் கட்டமைக்கப்படுகிறது. மூன்றாவதில் தோன்றும் மையத்திற்கு சகோதரத்துவம் இயல்பென்றாகிறது. யாரும் உன்னைக் கட்டுப்படுத்த முடியாது. யாரையும் நீ கட்டுப்படுத்த விரும்புவதும் இல்லை. உன்னைப்போல பிறரையும் மதிக்கும் பெருங்குணம் மூன்றாவது மனதின் தன்மை. இந்த மூன்றாவது நிலையே தனித்த ஆளுமை உருவாகும் காலம். அறிவுஜீவியாக, கலைஞர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக மனிதர்கள் பரிணாமம் கொள்கிறார்கள். இரண்டாம் நிலை தந்தைகளுக்கு உரியது. அதைத்தாண்டிய நிலையில் தந்தை இறந்து விடுகிறார். நீட்சே இறைவன் இறந்து விட்டான் என்று சொன்னது இதைக்குறித்துத்தான். தந்தையாக இருந்தவன் மடிந்து விட்டான். மூன்றாவது மனதில் பொறுப்புகள் எழுகின்றன. தனக்குத்தானே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. தான் நடந்து செல்வதே தனக்கான முன்னோடித் தடமாக அமைகிறது.

மூன்றாவது மனநிலையை வந்தடைந்த பின்னர் ஒருவரால் இரண்டாவது நிலைக்குத் திரும்ப முடிவதில்லை. அதற்கான கதவுகள் முற்றாக அடைக்கப்படுகின்றன. கடந்து வந்த பாலங்களை உடைத்த பின்னரே மூன்றாவது நிலையை ஒருவன் அடைகிறான். சமூகத்தைப் புறக்கணிக்கிறான். இணையாக சமூகமும் அவனைப் புறக்கணிக்கிறது. ஆல்பெர் காம்யு கூறிய அந்நியமாதல் இந்நிலையில்தான் வாய்க்கிறது. மூன்றாம் நிலை வரை கடந்து வருவது மிகச்சாதாரணமாக சாத்தியமாகக் கூடியது. அறுபது விழுக்காட்டினர் இரண்டாம் மனநிலையில் தேங்கிவிடுகிறார்கள். மீதமுள்ள நாற்பது விழுக்காட்டினர் மூன்றாம் நிலைக்கு முன்னேறி விடுகிறார்கள். மேலைநாடுகளில் இந்நிலை மனிதர்கள் அதிகம். கீழைத் தேயங்களில் இரண்டாம் மனநிலையே இன்று அதிகம் காணப்படுகிறது.

மூன்றாம் நிலையில் அகங்காரம் வலுவாக உருப்பெறுகிறது. இரும்புக்கோட்டை போன்று நிலைத்துவிடுகிறது. அதன்பின்னர் நான்காம் நிலையாகிய பிரபஞ்ச மனநிலையை அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு குருவானர் தேவைப்படுகிறார். தியானமும் ஆன்மீகமான உள்முகத் தேடல்களும் ஆரம்பிக்கப்பட்டாக வேண்டியுள்ளது. அவை அமையாமல் போனால் பைத்தியம் பிடிக்கும் சாத்தியம் உள்ளது. நீட்சே பைத்தியம் ஆனது அதனால்தான் என்கிறார் ஓஷோ. நீட்சேக்கு புத்தரைப் போன்ற ஒருவர் தேவைப்பட்டார். ஆனால் மேற்கில் அது சாத்தியமாகவில்லை. எனவே அவர் கர்ஜித்து கர்ஜித்து முடிவில் பைத்தியம் ஆனார். ஆன்மீகமாக வழிகாட்டுதல்கள் அவருக்கு இல்லாமல் போனதன் விளைவே அவரின் பைத்திய நிலை என்கிறார் ஓஷோ.

நாற்பத்திரெண்டு வயதிற்கு மேலே இந்த நிலை ஆரம்பிக்கிறது. அவநம்பிக்கை கொண்டு விலகி வந்தவனை, அவிசுவாசி என்றாகியவனை நான்காம் நிலையே ஆற்றுப்படுத்தும். காரல் குஷ்தவ் ஜங்க் இந்த நிலையையே “நாற்பதில் இருந்து நாற்பத்து ஐந்து வயதானவர்கள் எப்போதுமே ஒரு சமய நெருக்கடியைச் சந்திக்கின்றனர்” என்று வரையறை செய்திருக்கிறார். அந்த வயதின் காலகட்டத்தில் மனிதன் நான்காவது நிலையைத் தேடத் தொடங்குகிறான். நான்காவது அவனுக்குச் சாத்தியமானால் கட்டற்ற ஆனந்தமும் சாத்தியமாகிறது. அல்லாது போனால் பைத்தியமாகி தன்னைத்தானே கைவிடுகிறான். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையம் வீணடிக்கிறான்.

மனதின் இந்த நான்காவது நிலையை ஓஷோ பிரபஞ்ச மனம் என்கிறார். இந்த நிலையில் அகங்காரம் கரைந்து விடுகிறது. கனிவு இயல்பாகிறது. அகங்காரம் வலுப்பெற்றால் மட்டுமே அது கரைந்து விடுவதும் சாத்தியம். அகங்காரம் முதிர்ந்தால் மட்டுமே கரையவும் கூடும். நம் தனித்தன்மையே நம் அகங்காரம் அகங்காரம் ஒரு முகமூடி. நீயாக உருவாக்கிக்கொண்டது, ஆனாலும் கைவிடப்படவேண்டியது.

ஐந்தாவது நிலையை புத்த மனம் என்கிறார் ஓஷோ. தான் என்கிற உணர்வையும் கைவிட்டு அறிபவரும் அறியப்படுதலும் ஒன்றாதல். நான்காம் நிலை படைப்பூக்கம் நிறைந்த நிலை. அகங்காரத்தின் நிழலற்ற படைப்புக்களை தோற்றுவிக்கும் பரிபூரணம்.

மனித மனம் குறித்த இந்து ஐந்து நிலைகளும் ஒட்டுமொத்த மனித வாழ்வையும் புரிந்து கொள்ள ஒரு கையேடாக உதவக்கூடும். தேடல் உள்ளவர்களுக்கு மேலம் ஒரு கைவிளக்காக விளங்கும். நீந்துவது எப்படி என விளக்கும் புத்தகங்களைப் போன்றதுதான் ஓஷோவின் சொற்களும். நீந்த வேண்டும் என்றால் உயிரைப் பணயம் வைத்து நீரில் குதித்துவிட வேண்டும்.

புகழ் வாய்ந்த ஜென் குருவின் பதிலோடு இதை முடிக்கலாம்.

“ஜென் படிப்பதற்கு முன்னர் மலைகள் மலைகளே, ஆறுகள் ஆறுகளே. ஜென்னை கற்கும்போது மலைகள் ஒரு போதும் மலைகளாக இருக்கப் போவதில்லை. ஆறுகளும் ஒரு போதும் ஆறுகள் அல்ல. ஜென்னைக் கற்றுக்கொண்ட பின்னர் மலைகள் மீண்டும் மலைகளாகவும், ஆறுகள் மீண்டும் ஆறுகளாகவுமே உள்ளன”

ஓஷோ வாழ்நாள் முழுக்க கற்கச் சாத்தியமுள்ள தொடர் பயணம். நான் இங்கே தந்திருப்பது ஒரு மணிநேர பயண அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *