தனிமையின் வாதை

கீரனுார் ஜாகீர்ராஜாவின் ‘நாச்சியா’ சிறுகதை குறித்து

இலக்கியமாக எழுதப்படாத வாழ்க்கை இம்மண்ணில் இருந்ததற்கான அடையாளமற்றுப்போகும் வாய்ப்புள்ளது. இந்திய வாழ்க்கை  நுாற்றியேழு கோடிச்சொச்சம் பேர்களின் வாழ்க்கையும்தான். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனுக்கே உரிய வாழ்வியல் அனுபவங்கள் உள்ளன. அவற்றைச் செறிவூட்டி தேர்ந்த படைப்புகளாக மாற்றும் ரசவாதம் நமக்கு வாய்க்குமென்றால் அதைப்போன்ற பெரும்கொடை நம் மொழிக்கு வேறொன்றில்லை.

ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. நாம் வாழநேர்ந்த சாதியின் தற்போதைய வாழ்நிலையின் அத்தனைப் பரிமாணங்கள் குறித்த   போதம் நம்மிடம் முழுமையாக இல்லை. ஒரே சாதிக்குள்ளே ஊர்ஊருக்கு நீத்தார் சடங்குகள் வேற்றுமை கொள்கின்றன. அப்பன், பாட்டனைத்தாண்டி மூதாதையின் நினைவுகளென அறிந்துகொள்ள ஒருசொல் கிடைப்பதில்லைஇன்று. எனில் நீர்மேல் எழுத்துபோன்றதுதானா இங்கு நிகழ்ந்துமுடியும் அத்தனைப் பாடுகளும்? ஒவ்வொரு தலைமுறையும் வாழ்ந்து கண்டடைந்த ஞானத்தை தன் சிதையோடு எரித்துச்செல்லத்தான் வேண்டுமா?

இந்தியா பல்வேறு இனக்குழுக்களின் பெரும்தொகை. தெளிவாக வரையறை செய்யப்பட்ட ஒரு சாதி என்பது கிட்டத்தட்ட ஒத்தகுணங்களும் தொழில்களும் உடைய இனக்குழுக்களின் தொகுப்புதான். மனிதர்கள் அடிப்படை உணர்வுகளால் ஒன்றிணைந்தும் நுட்பமான வாழ்வியல் தருணங்களால் வேறுபட்டும் விதவிதமான மனச்சாய்வுகளோடு இருக்கிறார்கள். எழுத்தைத் தவிர சினிமாவும், ஓவியமும் இன்னபிற கலைகளும் நமக்கு இருப்பினும் அவற்றை அவற்றின் நோக்கத்தை புறக்கணித்து கேளிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தும் பாக்கியவான்களாக  ஆக்கப்பட்டுள்ளோம். கோமாளிகளை சிவப்புக்கம்பளம் விரித்து வீடுகளின் வரவேற்பறைகள் வரை அழைத்து வந்து சிம்மாசனத்தில் அமரச் செய்து பணிவிடைகள் செய்வதில் நமக்கு எந்தவிதத் தயக்கங்களும் இருப்பதில்லை. சிந்தனையாளர்களின் இடத்தை போலிக்கூச்சலிடும் அற்பப் பதர்களுக்கு வழங்கிவிட்டு நுண்ணுணர்வற்ற தடித்தனத்தோடு வாழந்துகொள்ள பழகிவருகிறோம்.

.ஓராயிரம் மாயத்திரைகளுக்கு மத்தியில் இலக்கியம் ஒன்றே நம்பத் தகுந்த அறிதல் முறையாக உள்ளது.  சுய அனுபவத்தின் ஞானமின்றி கற்பனைக்கோட்டைகளைக் கட்டி இலக்கியம் என்று கூவி விற்கும் கும்பல் இதிலும் பெருகிவரத்தொடங்கிவிட்டது. இன்று இலக்கியம் என்பது மேலும் ஒரு நுகர்பண்டம். கோடிகள் புழங்கும் வியாபாரம்.

தமிழில் இஸ்லாமியர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை எழுதிச்சென்ற படைப்பாளிகளுக்கென்று ஒரு தொடர்ச்சி இருப்பினும் காத்திரமான படைப்பாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. கிறித்தவம் மற்றும் இசுலாம் போன்ற மதங்களுக்கு இலக்கியம் குறித்து ஒவ்வாமை இருப்பதான தோற்றத்தை அதன் பிரச்சாரகர்கள் உருவாக்கி நிலைப்படுத்தி விட்டார்கள். கிறித்துவர்களை விட தீவிர இலக்கிய வாசகர்களாகத் தொடரும் இசுலாமியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. ஒரு கலகக்காரனாக, அதிகார மையங்களை நோக்கி கேள்விகள் கேட்கக்கூடியவனாக ஒரு படைப்பாளி இருக்கிறான் என்பதே இலக்கியவாதிகளை மதத்தலைவர்களும் மதபோதகர்களும் அஞ்சி விலக்க அடிப்படைக்காரணங்களாக இருக்கிறது.

இன்று எழுதும் இளம்தலைமுறைப் படைப்பாளிகளில் கீரனுார் ஜாகிர்ராஜா முதன்மையானவர்.  அடிப்படையில் மிகச்சிறந்த நாவலாசிரியர். வடக்கேமுறி அலிமா, கருத்த லெப்பை, துருக்கித்தொப்பி, மீன்காரத்தெரு போன்ற மிகச்சிறந்த நாவல்களைத் தந்து அதுவரை அதிகம் வெளிச்சத்திற்கு வரவாய்ப்பின்றி மூடுண்டு கிடந்த ஒரு வாழ்க்கைப்பரப்பின் மீது நம் கவனத்தை விழச்செய்தவர். தோப்பில் முகமது மீரான், சல்மா, எம்.தீன், பாலைவன லாந்தர், மனுஷ்ய புத்திரன், மீரான் மைதீன், எச்.ஜி.ரசூல் என்று விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கே தமிழில் இசுலாமியர்களின் வாழ்வியலை எழுதவந்தவர்களின் எண்ணிக்கை. இதில் முன்னத்தி ஏராக கருதப்படும் தோப்பில் அம்மதத்தின் மீதான விமர்சனங்களை முற்றிலும் தவிர்த்தவர். ஜாகிர்ராஜாவிற்கு அந்த பாதுகாப்பு வளையத்தை மீறி எழுதிச்செல்லும் திறன் வாய்த்திருக்கிறது. பாவம் இவள் பெயர் பரக்கத்நிஸா என்ற கதை முத்தலாக்கின் துயரத்தை ஆங்காரமாகச் சொல்லும் படைப்பு.

நாச்சியா இசுலாமியப் பெண்களுக்கே உரிய தனிமையின் சுமையை மையப்படுத்திய சிறுகதை.  பொருள்வயின் பிரிதலுக்காக  குடும்பங்களை விட்டுச்செல்லும் குடும்பத்தலைவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள வாழ்க்கை சூழல். துார்ந்துபோன மரச்சன்னல் ஊடாக உயிர்ப்பு கொள்ளும் நாட்கள். எங்கிந்தோ பறந்துவந்து ஒரு கணம் அவள் முன் சிறகடித்துச் செல்லும் சிறுபறவையின் வருகைதான் அவளின் மன உவகைக் கணங்கள். காக்கை குருவிகள் எங்கள் சாதி என்பதைப்போல எருக்கஞ்செடிகளும் பனைகளும் எம்கேளிர் என்பதாக இருக்கும் தனிமைத் திகைப்பு.

சு.வேணுகோபாலைப்போல ஜாகிர்ராஜா அதிகமும் பெண்களை மையப்படுத்தி எழுதிவருகிறார். உச்சபட்ச சாதனையாக வடக்கே முறிஅலிமாவைச் சொல்வேன். சு.வேணுகோபாலின் அவதானிப்புகள் பெண்களின் சுயநலம், இச்சைநாட்டம், கட்டுகளை மீறிச்செல்லும் விழைவு, ஆண்களின் அற்பத்தனங்களை சாடியெழும் சீற்றம் என்று மையம் கொள்வதைப்போன்று ஜாகிரின் பெண்கள் படைக்கப்படவில்லை. கொமறுகாரியம், நாச்சியா, பாவம் இவள் பெயர் பரக்கத்நிஸா போன்றவை கைவிடப்படுதல் என்னும் கூர்வாளின் நுனியில் அகப்பட்டு உள்ளம் கொள்ளும் அவஸ்தைகளைச் சொல்பவை. பொறிகளில் சிக்கி உரக்க குரல் எழுப்ப இயலாதவர்களின் வேதனைகலந்த முணுமுணுப்புகள். மனுஷி என்ற கதை சமீபத்தில் பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதையாக இருக்கிறது. தி.ஜானகிராமனின் சிலிர்ப்பு, பிரபஞ்சனின் மனுஷி, வண்ணநிலவனின் எஸ்தர் கதைகளுக்கு இணையான ஒன்று.

 திண்டுக்கல் பழனி போன்ற பிரதேச மக்கள் நம் கதைகளில் இதுவரை அதிகம் வந்திருக்கவில்லை. அந்தக் குறையை போக்கும் படைப்புகள் இவை என்பது மேலும் கவனம்கொள்ள வேண்டிய தனித்தன்மை. நெல்லையும் நாஞ்சில்நாடும் தஞ்சையும் விதவிதமாக எழுதப்பட்டது போன்று கொங்குமண்டலத்தின் திண்டுக்கல், கரூர், பழனி போன்ற நிலப்பகுதிகள் எழுதப்படவில்லை. பெருமாள் முருகன், என்.ஸ்ரீராம், வா.மு.கோமு, புலியூர் முருகேசன், எம்.கோபாலகிருஸ்ணன், கே.என்.செந்தில் என சொற்ப அளவிலான படைப்பாளிகளே அங்கிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கலாச்சாரத் தலைநகராக மாறிவரும் கோவைக்குக்கூட பெரும் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை குறைவே. நாஞ்சில் நாடன்  கோவையை மையப்படுத்தி எழுதியிருப்பினும் மண்ணின் மைந்தர்களின் எழுத்தாக அவற்றை ஏற்றுக்கொள்ள இயலாதுதானே

நாச்சியா அத்தனைபேர்களாலும் கைவிடப்படுகிறாள். பெற்றோர்களின் இறப்பிற்கு பின்பு அவளை கொக்காட்டி மாமா வளர்த்து நிக்கா செய்து வைக்கிறார். அவள் உலகம் முழுக்கவும் கொக்காட்டிமாமா, மலையாளத்து வாஹீது மற்றும் மரங்கள் பறவைகள் வானம் நட்சத்திரங்கள் என்று இருக்கிறது. அவளிடம் இருந்து மனிதர்கள் விலகிக்கொண்டும் விலக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அன்றாடம் அவளுக்கு உரையாடக் கிடைக்கும் சக தோழமை என்பது எருக்கஞ்செடிகளும் தொலைதுாரத்தில் இருளென நிலைத்து நின்றாடும் பனைகளும்தான். பொழுதெல்லாம் அவள் துார்ந்து போன சன்னலின் முன் அமர்ந்து அவற்றோடு உறவாடிக் கழிக்கிறாள். யாருமற்ற இருப்பு அவளுக்கு பல நேரங்களில் கதறி அழும் மனநிலையை தந்துவிடுகிறது.

காலமாற்றம் அந்த ஆறுதல்களைக்கூட அவளிடமிருந்து பறித்துப்போகத் திட்டங்கள் வகுக்கிறது. எருக்கச்செடிகளும் பனைகளும் மண்டிய நிலப்பகுதியை சீராக்கி அங்கே ரயில்ப்பாதைகள் கொண்டுவரப்படுகின்றன. நாச்சியாவிற்கு அந்தமாற்றம் அளிக்கும் துயரம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பொக்லைன் கொண்டு கிளறிப்பிடுங்கி வீசியெறியப்படும் தாவரங்கள் என்பவை அவளின் இரத்த உறவுகள் அல்லவா? பேயோடு பழகினும் பிரிவு கொடிது என்பதைப்போல தாவரங்களோடு கொண்ட பிரிவை எளிதாக புறக்கணிக்க முடியுமா? மனிதர்கள் இல்லாக்குறையை தங்கள் கிளைகளால், சிறகசைத்து அறைக்குள் வந்துசெல்லும் இறக்கைகளால் ஆற்றுப்படுத்தியவை அவைதானே. தனிமையெனும் பேராழியில் நீந்திக்கடக்க வாய்த்த மிதவைகளை இழக்கச்சம்மதிப்பாளோ? ஆனால் இங்கு எதுவும் அவளின் அபிப்ராயம் கேட்டா நடக்கிறது.

பாலியல் சுரண்டலும், வரதட்சணைக்கொடுமைகளும் மட்டும்தானா பெண்களின் ஆதாராச் சிக்கல்கள்? சிறைச்சாலைகளைப்போல மாறிவரும் வாழ்விடம் சார்ந்த ஒரு சித்திரம் இக்கதையில் உள்ளது. பெண்களுக்கு நாம் அளிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு என்னவாக இருக்கிறது. வீடுகளுக்குள் அடைப்பட்டு வெறுமனே காத்திருந்து கழியும் நாட்களுக்கு யார் பொறுப்பாகக்கூடும். கன்றும் உண்ணாது கலத்தினும்படாத நல்ஆம்மின் தீம்பாலைப்போன்று வீணாகும் வாழ்நாட்களை எவ்விதம் ஈடுசெய்ய முடியும் அவளால்?

நாச்சியாவால் தன் பால்யகால நாட்களை எண்ணி கண்ணீர்விடத்தான் முடிகிறது. பால்யமும் அத்தனை கொண்டாட்டமாக அமைந்த ஒன்றல்ல. அநாதையைப்போல சாவடியிலும் கொக்காட்டி மாமாவின் அருகாமையிலும் வளர்ந்துவந்த நாட்கள். ஆனால் அவற்றைவிட நிகழ்காலம் இருளாக இருக்கிறது. ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வந்து சிலநாட்கள் தங்கிச்செல்லும் ஒருஆண்தான் அவளின் ரகுமான். அவனுக்கு அவள் வருத்தம் புரிவதே இல்லை. எல்லா ஆண்களைப்போல அவனும் அவளைப் புரிந்துகொள்ள மறுக்கிறான். தனிமைத்துணையாக ஒரு மகனோ மகளோ இருந்தால்கூட அவளுக்கு சமாதானம் உண்டாகக்கூடும். நாளை மற்றுமொறு நாளே என்பதைப்போல ஒரு கனவில் இருந்து மற்றொரு கனவிற்குள் செல்வதற்கான பயணமாகவே அவளின் நாட்கள் இருக்கிறது.

நவீன வாழ்வியல் சிடுக்குகளில் ஒன்றை இலக்கியப்படுத்திய விதமே இக்கதையினை தவிர்க்க இயலாத ஒன்றாக ஆக்குகிறது. பேரோசையுடன்  நம் அகத்திற்குள் வந்துமோதி  ஒரு அதிர்வை ஏற்படுத்தி வெளியேறும் காற்றைப்போன்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *