அன்றாடத்தின் நீர்மை

அசோகமித்திரனின் ‘விடிவதற்குள்’ சிறுகதை குறித்து

அசோகமித்திரன் தினசரிப்பாடுகளைப்பற்றி எழுதிச்சென்றவர். பெருநகர நடுத்தர மக்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றியே பெரும்பாலும் பேசியிருக்கிறார். கூடுதலாக அவர் சார்ந்த சினிமா உலகம் குறித்து. செகந்திராபாத் அனுபவங்கள், சென்னையின் சித்திரங்கள் மேலும் கனவுத்தொழிற்சாலைக் குறிப்புகள் என்று ஏகதேசமாக அவருடைய படைப்புலகை வரையறை செய்யலாம்.

விடிவதற்குள் என்ற சிறுகதையை வாசித்து அப்படியே அரைமணிநேரம் அமர்ந்திருந்தேன். வேறு வேலைகள் எதிலும் மனம் ஈடுபாடுகொள்ளவில்லை. பாலியல் வல்லுறவும் படுகொலைகளும் மட்டும்தான் மனிதக்கீழ்மைகளா. அடிப்படைத் தேவைகளுக்காக எளிய மனிதர்கள் அடையும் அல்லல்கள் மனித அவலங்கள் அன்றி வேறென்ன?

சென்னையின் தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்த  சிறுகதை இது. இக்கதையில் பொதிந்துள்ள  ஆன்மீகம் வலிமையானது. வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற கவியின் உணர்வுகளை ஒத்தது. இரவு பன்னிரெண்டு மணிக்கு தன் மகன் முத்துவை தண்ணீர் பிடிப்பதற்காக பங்கஜம் தட்டி எழுப்புகிறாள். துாங்கிக்கொண்டிருப்பவனை எழுப்புவது அவளக்கு தர்மசங்கடம் அளிக்கும் ஒன்றுதான். அதுவும் பள்ளிசெல்லும் மகனை எழுப்புவது எந்தத் தாயும் செய்யத்தயங்கும் செயல். முத்துவும் தட்டிக்கழிக்காமல் எழுந்து அம்மாவிற்கு ஒத்தாசைசெய்ய கிளம்புகிறான். இரண்டு இடங்களில் தண்ணீருக்காக அம்மாவும் மகனும் விரைந்து செல்கிறார்கள். நாற்பதை ஒட்டிய பங்கஜத்திற்கு இப்படி நடுநிசியில் துாங்கிக்கொண்டிருக்கும் மகளை தனியே விட்டுவிட்டு கதவைத்தாளிடாமல் சாத்திவிட்டு வருவது குறித்து பயம்தான். ஆனால் வேறு வழியில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்தத் தெருவில் ஒருசில வீடுகளுக்கே வரும் தண்ணீரைப் பிடித்தால்தான் அன்றாடத்தைக் கழிக்க முடியும்.

நான்கு பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு மூத்திரச் சந்துவழியே சென்று வரிசையில் வைக்கிறாள். அவளுக்கு முன்பே அங்கு நீண்ட வரிசை இருக்கிறது. இருளுக்குள் நிழல்களாக தெருவாசிகள் காத்திருக்கிறார்கள். பங்கஜம் வரிசைக்கு சென்றபோது ஒரு குரல் அவளை விரட்டுகிறது. ”இனிமே இங்க வராதீங்கன்னு போன தடவையே சொன்னேனே? என்று எரிச்சல் கொள்கிறது. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்றால் சரிப்படுமா? மரியாதையை இழந்துதான் தண்ணீர் பிடிக்க  வேண்டியிருக்கிறது.     .அது குறித்து அவளுக்கு பெரிய புகார்கள் ஏதுமில்லை.  அவளை அப்படி ஆக்கிவைத்திருக்கிறது  வாழ்க்கை.

தண்ணீர் வருகிறது. அவள் வரிசையில் நிற்கிறாள். அவளுக்கு முன் ஒரு வயோதிகப் பெண்மணி பெரிய அண்டாவை நிறைக்க கைப்பம்பினை மூச்சிறைக்க அடிக்கிறாள். அவளின் இயலாமையைக் காணச் சகிக்காமல் பங்கஜம் அந்தப்பெண்மணியிடம் இருந்து வாங்கி அடித்துக்கொடுக்கிறாள். பாவம் அந்த அம்மாள் வீட்டில் எத்தனை நபர்களோ என்று அவள் இரக்கம் கொள்கிறாள். பங்கஜமே இரக்கம்படும் நிலையில் உள்ளவள்தான்.

நான்கு பக்கெட்டுகளை அடித்து முடிப்பதற்குள் அவளுக்கு கண்ணைக்கட்டிக்கொண்டு வருகிறது. உதவியாக முத்துவந்து முடித்து வைக்கிறான். இனி நீர் நிறைந்த வாளிகளை வீடுகொண்டு சேர்க்க வேண்டும்.  ரோட்டின் ஒருபுறமிருந்து மறுபுறத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவள்  ஒருவாளியைக் கொண்டு எதிர்புறம் வைக்க முயலும்போது  தண்ணீரில் தாகம் தீர்க்க ஒரு கன்றுக்குட்டி தவிக்கிறது. அவள் முதலில் போ போ என்று அதை விரட்டுகிறாள். அது நகராமல் அங்கேயே நிற்கிறது. மறுபடியும் அவள் விரட்ட முயன்றபோது அது எந்தத் துவேசமும் பாராட்டாமல் அவள் சொறிந்து கொடுக்க வாகாகத் தலையை உயர்த்தி அவளை வாஞ்சையோடு எதிர்கொள்கிறது.  ஒரு கணம் யோசித்தவள் சரி குடி என்று அனுமதிக்கிறாள்.

கதையின் சித்தரிப்புகளில் இரண்டு இடங்களில் பங்கஜம் மற்றும் அவள் மகன் முத்து ஆகியோருக்கு இருக்கும் நோய் குறித்து வருகிறது. பங்கஜத்திற்கு கர்ப்பத்தடை ஆபரேசன் செய்தபின் கடின வேலைசெய்யும்போது தோன்றி ஆளைக்கொல்லும் வயிற்று வலி இருக்கிறது. அதை அவள் பொருட்படுத்த முடியாது. அதனால் எல்லாம் தாயாக அவள் ஆற்றவேண்டிய கடமையை தள்ளிவைக்க முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயமாக அவளுக்கு வயிற்றுவலி பெரும்நோயாக மாறி வாழ்நாளை நரகமாக்கும். ஆனால் வேறு வழியில்லை. முத்துவிற்கு குடல்வால் வலி. நாளை அது விஸ்வரூபம் எடுக்கலாம். அதனால் எல்லாம் அவனை தண்ணீர் பிடிக்க பயன்படுத்தாமல் இருக்க இயலாது. அவனைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்? கணவனோ வெளியூரில்.

வாசித்து முடித்தபின்தான்  கதையே தொடங்குகிறது என்பார்கள். இக்கதையை அப்படியே சொல்லப்பட்ட சம்பங்களைக்கொண்டு கற்பனை செய்து நீட்டித்துப்பார்க்கலாம். பங்கஜத்தின் மொத்த வாழ்க்கையையும் எண்ணிப்பார்க்கலாம். எத்தனை துயர்மண்டிய வாழ்வு. தண்ணீருக்கும் உணவுக்கும்  வாழ்நாளில் பெரும்பகுதியை இழக்கும் நிலை. எளிய மனிதர்களை சிடுக்குகள் நிறைந்த மனநிலைக்கு இட்டுச்செல்லும் அன்றாடத் தேவைகள். அவற்றினால் அவர்கள் எதிர்கொள்ளும் இயலாமைகளும் வெறுப்புகளும் கோபங்களும். அண்டை வீட்டாரோடு அது குறித்து அவர்களுக்கிருக்கும் புகார்கள். அவற்றைப் பற்றிச் சிந்திக்கும் போது கனத்த வெறுமை.

      கொல்லைப்புறத்தில் வற்றாத தாமிரபரணியைக் கொண்டிருப்பவர்களுக்கு இச்சித்திரம் அளிக்கும் அதிர்ச்சி எளிதானதல்ல. குற்ற உணர்ச்சியால் குறுகிப்போனேன். சொட்டிடும் நீர்த்துளிகளின் சப்தம்  தாகம் எழுப்பிய ஓலம் என்று இக்கதை எனக்குப் புரியவைத்தது.  கூடவே அன்னையெனும் பெருந்தெய்வம் எப்போதும் உடனிருக்கும் நம்பிக்கையை.  ஒரு அன்னையன்றி வேறு யாரால் அரும்பாடுபட்டு சேகரித்திருக்கும் தண்ணீரை தாகமென்று வந்துநிற்கும் கன்றுக்குட்டிக்கு அருந்தத் தரக்கூடும். பங்கஜத்திற்கு காக்கை குருவிகள் எங்கள் ஜாதி் என்று எப்படியோ தெரி்ந்திருக்கிறதுதானே? அரைமணிநேரப் பயணமாக இருந்தபோதிலும் கொலைவெறியோடு பஸ்ஸின் இருக்கைகளை, தொடர்வண்டியின் சீட்டுகளை ஆக்கிரமித்துக்கொள்ள விழையும் நமக்கு பங்கஜம் என்னவாகத் தெரியக்கூடும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *