நுண்மையைச் சுட்டும் பூதக்கண்ணாடி

கோபிகிருஷ்ணனின் கதையுலகம்

கோபிகிருஷ்ணன் அசோகமித்திரனைப்போல எழுதியிருக்கிறார். ப.சிங்காரத்தைப்போல புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். சி.மோகன் கண்டுபிடித்து பதிப்பிக்காமல் போயிருந்தால் நமக்கு புயலிலே ஒரு தோணி கிடைத்திருக்காது. சுந்தர ராமசாமி  கூட அந்நாவலை சரியாக மதிப்பிடவில்லை. கோபிக்கும் அதுதான் நிகழ்ந்துள்ளது. இருபத்து நான்கு சிறுகதைகள் எழுதி சிகரச்சாதனையாளராகப் போற்றப்படும் மௌனியைவிட கோபியின் எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது.   ஆதவனின் உலகத்தைப் போலிருக்கிறது அவரது புனைவுவெளி. மனச்சிதைவின் ததும்பலை எம்.வி.வெங்கட்ராம், நகுலன் என்று சிலரைத்தவிர வேறு எவரும் தமிழில்  எழுதியிருக்கவில்லை. மௌனியைப்போன்றே நகுலனும் துரதிருஷ்டவசமாக அவர்களின் தகுதியை விட அதிகமாக கொண்டாடப்பட்டவர்.  அவ்வகையில் ஆகச்சிறந்த ஆக்கம் ஜெயமோகனுடைய பின்தொடரும் நிழலின் குரல் அருணாசலம் தான்.   தன்னுடைய பணிசார்ந்த அனுபவம் என்பதால் மனநலம் குன்றியவர்களின் உலகத்தை மிக விரிவாக எழுதியிருக்கிறார் கோபி கிருஷ்ணன்.

யூட்யூப்பில் கோபி குறித்துத் தேடினேன். அழகிய சிங்கரும் அபிலாசும் பேசியதைக்கேட்டேன். இருவரின் பார்வைகளும் எனக்கு உவப்பானவை அல்ல. அழகியசிங்கர் கோபியின் விசித்திர நடைமுறைகளைப்பற்றியே அரைமணிநேரத்திற்கும் மேலாகப் பேசுகிறார். இத்தனைக்கும் அவர்களுக்குள் நெருங்கிய பழக்கம் இருந்திருக்கிறது. அவர்பேச்சில் கோபிகிருஷ்ணனின் எழுத்துலகம் குறித்த எண்ணங்களோ, அவற்றின் இலக்கிய முக்கியத்துவமோ கொஞ்சமும் இல்லை.

சாமானியர்கள் சமவெளி மனிதர்கள். அவர்களின் பறத்தலும் சமவெளி மட்டும்தான். றெக்கைகள் இருந்தும் வான்தீண்ட வாய்க்காத வாத்துக்களின் இருப்பு. ஆனால் படைப்பாளிக்கு பாதாள உலகம் சென்றுவரவும் சிகரநுனி தொட்டுத்திரும்பும் பாக்கியமும் உண்டு. அந்தத் தத்தளிப்பு அவர்களின் அன்றாடத்தைப் பாதிக்கத்தான் செய்யும். பஷீர் முதல்  ஜெயமோகன்வரை ஒரு காலகட்டத்தில் மனச்சிதைவினால் பாதிக்கப்பட்டவர்கள்தான். படைப்பாளிகள் தன்னிலை இழப்பது ஒருவித அதிர்ஷ்டம். சுந்தர ராமசாமி ”நினைவோடையில்” பிரமிள் , ஜி.நாகராஜன் குறித்து எழுதியிருப்பவை எல்லாம் அதிர்ச்சி அளிப்பவை. அவரால் எழுதப்பட்டதை விட எழுத முடியாதவை இன்னும் ஏராளம் இருக்கும். அதற்காக பிரமிளை, ஜி.நா.னை சிறந்த படைப்பாளிகள் இல்லை என்று மறுத்துவிட முடியுமா? நமக்கு அதுவா முக்கியம்.?

அபிலாஷோ ஒரு ரூபாய்க்கு ஒரு கதை குறித்து பிராய்டிய நோக்கில்  ஒரு பார்வையை கொண்டிருக்கிறார். மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான இக்கதையை மறைமுக பாலியல் விழைவு என்று கண்டுபிடித்து எழுதுகிறார். அதற்கான எவ்வித சமிக்ஞைகளும் கதையில் இல்லை. தன் மகளை ஒத்த ஒருத்தி என்றுதான் ஐம்பதுகளை ஒட்டிய ஒரு தந்தை மாற்றுத்திறனாளிப் பொண்ணொருத்திக்கு வலிந்து உதவுகிறார். இதில் எங்கே இருக்கிறது பாலியல் துழாவல். நவீனத்துவ படைப்பாளிகளின் பிராய்டிய பாதிப்பு என்று இதை எடுத்துக்காட்டுகிறார். இது அவரின் வாசிப்பனுபவமாக இருக்கக் கூடும். எனில் அந்த ஒத்தரூபாய் ஏன் கதைசொல்லிக்கு மறக்கமுடியாத சுமையாகத் தோன்ற வேண்டும். இத்தொகுப்பிலேயே அதற்கு சடங்கு என்று பதில்கதையொன்று இருக்கிறது. சமூக சேவை செய்கிறவர்களின் களவாணித்தனத்தை உக்கிரமாக ஏளனம் செய்யும் கதை அது.

கோபியின் படைப்புலகம் நவீனத்துவச்சாயல் கொண்டிருப்பினும் அதை மீறிய ஒன்றும் அதில் இருக்கிறது. டேபிள் டென்னிஸ் குறுநாவல் அவரின் பின்நவீனத்துவ சாதனை. அதற்கிணையாக சமீபத்தில் நான் வாசித்த நாவல் கீரனுார் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா. இரண்டும் எனக்கு ஒரேவித அனுபவத்தை அளித்தன. பண்படாத தமிழ்ச்சமூகம், மருத்துவ உலகின் தகிடுதத்தங்கள், ஆன்மீக உலகின் வறுமை, நிறுவனங்களின் மனிதத்தன்மை அற்ற   சுரண்டல்   என இத்தொகுப்பில் உள்ள கதைகளை வகைமுறை செய்யலாம்.

இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகள் சிறந்தவை. ஒரு தொகுப்பில் ஐம்பது விழுக்காடு சிறந்த கதைகள் இருந்தாலே அத்தொகுப்பு வெற்றிபெற்ற ஒன்று. புயல், வயிறு, இரு உலகங்கள், துாயோன் என்பவை மிகச்சிறந்த கோபிகிருஷ்ணன் கதைகள். புயல் கதை பெருநகர நடுத்தர வர்க்க மனிதனின் இயலாமையை, அவனுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை  கடந்துசெல்லும் காட்சி மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இக்கதை அசோகமித்ரனின் ஒருகதையை நினைவுப்படுத்திற்று.

கதைசொல்லியின் மனைவி வேலைக்குப் போய் வந்த அனுபவத்தை ஆவேசமாகச் சொல்கிறார். எல்லா இடங்களிலும் ஆண்கள் அவளை அணுகும்விதம்குறித்து அவளுக்கு அச்சம் இருக்கிறது. அப்பட்டமாக வெளிப்படும் பாலியல் சீண்டல்கள் அவளைத்துணுக்குறச்செய்கின்றன. எப்போதோ அருகில் வசித்த வாடகை வீட்டுக்காரன் கூட அவள் வீட்டிற்கு வந்து அவளைச் சினிமாவிற்கு கூப்பிட்டு நடுங்கச்செய்கிறான்.  எதிர்கொள்ளும் அத்தனை ஆண்களும் படுக்கைக்கு அவளை இழுக்க முயற்சிக்கும் செயல் நிலைகுலையச்செய்கிறது. தன் ஆதங்கத்தை கணவனிடம் கொட்டுகிறார். கணவனோ ஒன்றும் செய்ய இயலாத சிந்தனை வீரன். சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று அவர்கள் அத்தனைப்பேரையும் திட்டுவிட்டு அதன் ஊடாக எளிதாக அதைக்கடந்து செல்கிறான்.

உடைமை என்ற கதை போன்று இதுவரை நான் தமிழில் வாசித்திருக்கவில்லை. கதைசொல்லியின் மகளைத் தேடி வந்து பார்த்து அன்பு காட்டிவிட்டுப்போகும் என்றோ அண்டை வீட்டில் வசிக்க நேர்ந்த ஒரு வாலிபனுக்குள் உறைந்திருக்கும் தந்தையை கண்டறியும் தருணம். அந்த வாலிபன் வாரந்தோறும் கதைசொல்லியின் மகளுக்காக அவர் வீடு தேடிவருகிறான். காம்பவுண்ட் ரக குடித்தனம் அவர்களுடையது. வீட்டுக்காரியின் வாய்த்துடுக்கு கொடும் விஷம். அதற்கு அஞ்சியும் மகளை சைக்கிளில் வைத்து சுற்றிக்காண்பித்துவிட்டு வருகிறேன் என்பவன் கொண்டுபோய்விடுவானோ என்று பயந்தும் அவரின் மனைவி அந்த வாலிபனை இனிமேல் மகளைப்பார்க்க வரவேண்டாம் என்று கண்டிக்கச்சொல்லி சண்டையிடுகிறாள். கதைசொல்லிக்கோ அவனும் தன்னைப்போல தன்மகள் மீது பாசமாக இருக்கிறான் இதில் என்ன தப்பிருக்கிறது என்று தோன்றுகிறது. முடிவாக கலீல் ஜிப்ரானின் வரிகள் ” உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல”

வயிறு கதை தனி மனிதர்களை சுரண்டும் மருத்துவ அமைப்புகள் குறித்தது. இன்று பேசப்படும்பெரும்பாலான பிரச்சினைகளை கோபி அப்போதே எழுதியிருக்கிறார். கதை முழுக்க சுரண்டல் சாடல்கள். நண்பர் ஒருவரின் சிபாரிசில் ஒரு தனியார் மருத்துவமனையில்வேலை கிடைக்கிறது. சம்பளம் குறைவுதான் மாதம் 200. ஆனால் மருத்துவர் நல்லவர். கொடூரமான உழைப்புச் சுரண்டல் இந்த அழகில் சுரண்டலாளரிடமிருந்து நல்லொழுக்க போதனைகள் வேறு. அங்குள்ள அத்தனைபெண்களோடும் அவனுக்கு நல்ல நட்பு வாய்க்கிறது. இதில் நடுவயது விதவை தாதி ஒருத்தி அவனை விரும்புகிறார். அவன் சாமர்த்தியமாக அவளிடம் இருந்து மீண்டு வருகிறான். மருத்துவர் நீ என்ன பெரிய காஸனோவாவா? என்று அவனை எச்சரிக்கிறார். பாலிகிளினிக் என்பதை போலியொ கிளினிக் என்று வாசித்து போலியோ பாதிப்புடைய தன்மகனை சிகிச்சைக்கு துாக்கிவரும் தந்தையிடம் போலியோ மருத்துவமனைக்கு வழியும் சிகிச்சை ஆலோசனையும் வழங்கி அதற்கு பீஸ் வாங்கும் மருத்துவரின் செயல் அவனை ஆத்திரம் அடையச்செய்கிறது. துாக்க மாத்திரை தின்று தற்கொலைசெய்துகொண்ட ஒருவருக்கு ஆயுள்காப்பீட்டுப் பணம் கிடைக்கும் வகைக்காக இறப்பிற்கான காரணத்தை பணம்வாங்கிக்கொண்டு மாற்றி எழுதி அவனை அறிக்கை தயார்செய்து வரச்சொல்லும் போது அவனால் அங்கிருக்க முடியவில்லை. வேலையை உதறிவிட்டு வெளியேறுகிறான். அவன் நிலை மிகப்பரிதாபகரமாக இருந்தபோதும். ”முட்டைக்கோஸ் சூப்பும் ரொட்டியும் மட்டும் வாழ்க்கையாக ஆகிவிடுவதில்லை” என்று மேரி கோரல்லியின் வரிகளை எண்ணிக்கொள்கிறான்.

வண்ணதாசனின் கவித்துவ உலகத்தைப்போல கோபியின் உலகம் மிக நுண்மைத்துவம் கொண்டது. காற்றுப்பட்டால் கூட கலைந்துவிடச் சாத்தியமுள்ள வாழ்க்கைத் தருணங்களை இலக்கியமாக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *