காதலென்னும் பெரும்பித்து

வா.மு.கோமுவின் ‘பிலோமி டீச்சர்’ சிறுகதையை முன்வைத்து

மீதி வாழ்நாளெல்லாம் பிலோமி டீச்சர் எந்த ஆணையும் திரும்பிப் பார்த்திருக்க மாட்டாள். மெல்லிய மாற்றமாக குதியோட்டத்தில் நலுங்கி நிசிகளில் ஊற்றெடுக்கும் உணர்வுகளை தலைக்கு தண்ணீர்விட்டு அவள் ஆற்றுப்படுத்தியிருக்கக் கூடும். ஒருவேளை அடக்கப்பட்ட உணர்வுகள் எரிமலைப்போன்று பீறிட்டு வழிந்து ஆண்பெண் உறவு குறித்த  மனச்சிதைவாக மாறி வக்கிரச்சொற்களாகக் கொட்டிக்கொண்டிருக்கலாம். கடெலெல்லாம் நீர்தான் என்றாலும் ஒருவாய் குடிக்க லாயக்கில்லை என்பது போன்று அவளுக்கு அதன்பின் ஆண்கள்.

பிலோமீ டீச்சர் மிக அழகான காதல்கதை. தனக்கென்று விதிகள் ஏதும் கொண்டிருக்கவில்லை என்பதே காதலின் ஈர்ப்பு. அனைத்தையும் ஆகுதியாகக்கொள்ளும் செஞ்சுடர். காதலின் மனநிலை சன்னதம் நீடித்த மனதின் திரட்சி.

வா.மு.கோமு. பாலியலை பாவனைகள் இன்றி எழுதியவர்.  பாவனைகள் அற்ற பாலியல் வெறும் உடல்சார்ந்த லௌகீகத் தேவைகளில் ஒன்றாக பாலியலை மாற்றுகிறது.உண்மையில் தீவிரப்புணர்ச்சி என்பது கிளைடர் விமானத்தைப்போன்றது. துவங்குவது மண்ணில் என்றாலும் மிதந்து திரிவது வானவெளியில் அல்லவா.

பிலோமி டீச்சர்தான் ஜான்சனை பற்றிப்படரத்தொடங்குகிறாள். எத்தனை இருந்தும் அன்பு காட்டவும் அன்பு பெறவும் ஒரு துணையற்ற இருப்பு என்பது ஒரு அவலம் தானே? பிரச்சினைகள் ஏதுமற்ற அன்றாடத்தைப்போல அலுப்பு மிகுந்த ஒன்று உண்டுமா சாமானியர்களுக்கு. தடுத்துநிறுத்த முயலும் பாறைகளில் உள்ளது நதியின் மூர்க்கம்..

மிக எளிய கதை. வெகுஜன எழுத்திற்குரிய துரித ஓட்டம். இடையே கதைக்கு கூடுதலான  பகைப்புலமாக அமையும் ஆசிரியரின் எண்ண ஓட்டங்கள். கணவனை விவாகரத்து செய்து தனித்துவாழும் பிலோமி டீச்சர் ஜான்சன் மேல் காதலில் விழுகிறாள். அது அவளின் மகள் எஸ்தர் மீது அவனிக்கிருக்கும் துாய அன்பின் வழியே அவளுக்குள் உதிக்கிறது. காதலை அவள் உணரும் தருணம் கணவனைப்பிரிந்து ஆறாண்டுகள் கழிந்ததாக இருக்கிறது. தனக்கென்று தன்மனம் விரும்பித் தேர்ந்த ஓர் ஆண்.

கோபியில் இருந்து சேலத்திற்கு கல்லுாரியில் படிக்க வந்து பக்கத்துவீட்டு இந்திராணியின் தம்பியாக அறிமுகம் ஆகிறான் ஜான்சன். அவனுக்கு எஸ்தரை எப்படியோ பிடித்துப்போகிறது. அவளுடன் கொஞ்சிப் பழகுகிறான். அவளுக்காகவே அவன் பிலோமி டீச்சர் வீட்டிற்கு வந்துபோகிறான். அவனிடம் இருந்து எந்தவித அழைப்பும் இவளைத் தீண்டியதில்லை. படிப்பு ஏறாமல் அவன் கோபிக்கே ஆறுமாதகாலத்திற்கு பின்பு திரும்பிச்சென்றுவிட்ட பின்தான் அவளுக்கு அவன் மீதான காதல் வலுப்பெறுகிறது. இடையில் ஒருநாள் ஊரில்இருந்து அக்காவைப் பார்க்க வந்தவன் எஸ்தரைப்பார்க்க அவள் வீட்டிற்கு வருகிறான். அவள் அன்றெல்லாம் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறாள். கோபமும் வெறுப்பும் சிரிப்பும் என்று பைத்திய வெளி அவளைச் சுற்றி.

எஸ்தரைக் காரணமாகக்கொண்டு ஜான்சனைத்தேடி கோபிக்கே போகிறாள் பிலோமி டீச்சர். ஒயரிங் கடையில் வேலையில் இருக்கும் அவனுக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை. அவள் முதலில் சென்றது ஒரு சனிப்பகல். அவனைத்தேடிச் சென்று அவனைப்பார்த்துவரும் முடிவை வந்தடைய அவளுக்கு மேலும் ஆறுமாதகாலம் தேவைப்படுகிறது. என்றோ அவன் அவளுக்குள் விதையாக விழுந்திருக்கிறான். அல்லது அவனில் இருந்து ஒரு கிளையைப் பறித்து அவள் தனக்குள் நட்டிருக்கிறாள். ஈரம் சுரந்து நாள்பட முதல் தளிர்விடுவதை அவள் அறிந்திருக்கக்கூடும். பூத்துக்குலுங்கும் பரவசம் தாளாமல்தான் அவனைத்தேடிச் சென்றது.

ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பாவனையின் ஊடாக அவளுக்குள் மலர்ந்திருக்கும் அந்த புத்தம் புதிய செடியின் மலர்ச்சியை அவனுக்குத் திறந்துகாட்டுகிறாள். சிறுவனாக இருந்தவனைத் தட்டித்தட்டி இளைஞனாக கனியச்செய்கிறாள்.

ஒரு ஞாயிறு அவன் விடுதி அறைக்குவரத்தாமதமாகிறது. வரும்போது கையில் முகத்தில் காயங்களோடு வருகிறான். அவளுக்கு பதற்றமும் கோபமும் அதிகரிக்கிறது. வாஞ்சையோடு அவனை அணைத்துக்கொள்கிறாள். வண்டி ஓட்டும்போது கவனம் வேண்டாமா என்று கடிந்து கன்னத்தில் அறைந்தும் விடுகிறாள். அவன் நோய் அவளை வாட்டுகிறது. அக்கணத்தில் அவளில் தோன்றிமறையும் சொற்களில் அவன் அவளின் அன்பை அறிந்துகொள்கிறான்.  அவனுக்குள் அவள் மீது முன்பிருந்த எண்ணம் உருமாற்றம் கொள்கிறது. அவனும் காதலில் விழுகிறான். அவள் குறித்த மனக்குகை ஓவியத்தில் வேட்கையால் பற்கள் நீண்டு விழிபிதுங்கிய பெண்முகத்தின் சாயல் மாறுகிறது. தேவதையாகிறாள்.

ஜான்சன் செல்போனுக்கு வரும் நண்பனின் அழைப்பை எடுத்து அவள் கேட்கநேர்ந்த அடுத்தகணம்தான் எல்லாமே மாறிப்போகிறது. நறுமணம் மறைந்து துர்நாற்றம் எழுகிறது. தான் கொண்டிருப்பது காதல்தான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போகிறது. பதறி எழுந்து விடுதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு ஓடுகிறாள்.

      உடலிச்சை மட்டுமே கொண்டலையும் மனுசியாக பிறரால் தான் புரிந்துகொள்ளப்படுகிறோம் என்ற எண்ணம் அவளைத் தீயாகச் சுடுகிறது. ஆறாவடு. தன் அந்தரங்கம் நான்கு சுவர்களையும் மீறி பேசப்படுவதைக் கேட்க நேர்ந்த நடுக்கம். காமமு்ம்தான் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் பேதமை.

ஆண்பெண் உறவில் உள்ள புதிர்த்தன்மையை சிறப்பாக ஆடிக்காட்டும் புனைவுத்தருணங்களே இக்கதையை முக்கியமான படைப்பாக கருதச்செய்கிறது. மனிதன் என்றால் மனித நாற்றமும் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *