காமம் காமம் என்ப

மு. தளையசிங்கத்தின் ‘தொழுகை’ சிறுகதையை நினைவு கூர்தல்

மார்கழிக்குளிர். அதிகாலை ஐந்து மணி. ஆறுமுகம் மாஸ்டர் காலைக்கடன்கள் முடித்து சிவன்கோவிலுக்கு வழிபட சென்றுவிடுகிறார். செல்லம்மாவுக்கு கலைவருவதற்கான முன்னறிவிப்பு. அடிவயிற்றில் நீரூற்றின் பீறிடல். முத்துவின் வருகையால் நிலமதிர்வதை ஏங்கி கூர்ந்து நிற்கிறாள். கால்கள் நிலைகொள்ளாமல் வாசலுக்கும் உள்ளுக்கும் அலைபாய்கின்றன. கோவிலில் அவர்பாடும் திருவெம்பாவை கேட்கிறது. அவர் குரல் அவளுக்கு அளிக்கும் பரவசத்திற்கு அவரோ மாணிக்கவாசகரோ காரணமல்ல இருளென உருண்டுதிரண்ட பனைகளை காலமெல்லாம் தொற்றிஏறி . நெஞ்சு விரிந்து கெட்டித்த உடல்கொண்ட முத்துவின் காலடித்தடம் நீரில் பாய்ந்துவரும் மின்சாரமாகி அவளைத் தீண்டுகிறது. அந்தக்குளிரிலும் அவளுக்கு வியர்க்கிறது.

பத்து நாட்களுக்கு முன்புதான் முத்துவைப் பழக்கம். பனையேறி.  விறகுவெட்டிப்போட வந்தவன். பேசிப்பழகும்போது அவளுக்குள் அதுவரை அடைபட்டுக்கிடந்த கீலின் துருக்கள் துார்ந்து ஒரு கதவு திறந்துகொள்கிறது. கண்கூசும் ஒளிக்கீற்று உள்ளே சுடர்கிறது. சிற்பமொன்றின் அசைவு பொருந்திய ஆணுடல்.  கலைவந்து செல்லம்மாவை கலைத்துப்போட்ட முதல் நாள். நாற்பதைத் தொடும் தன்வயதை மறந்து கன்னிமை காத்த பருவ நாட்களை மீட்டிக்கொள்கிறாள். அடுத்த மூன்றாம் நாள் அவளின் போதமின்றியே கால்கள் அவளை அவனிடம் இழுத்துச்செல்கின்றன. உள்ளமும் கன்றுக்குட்டியைப்போல அவன்மடி முட்டி உயிர்ச்சுனை தேடித்தவிக்கிறது.

கூடலை அறிந்து உடல்கொள்ளும் பாவனைகளே காமத்தின் சுவைபோலும். உள்ளே நிலம்பிளந்து கொள்ள, காலடி மண் ஊஞ்சலாகிறது. இருளுக்குள் இருந்து முத்து கணந்தோறும் வந்துகொண்டே இருக்கிறான். அல்ல இருள் முத்துவை ஒளித்துவைத்து செல்லங்கொஞ்சி விளையாடுகிறது. செல்லம்மா லாந்தரை எடுக்க நடுவறைக்குள் போகிறாள். அவளறியாமலே அவள் உள்ளமெங்கும் அவரின் குரலில். அவர் திரும்பிவர இன்னும் நேரமிருக்கிறது.

இரண்டு பெண்மக்களும் அறைக்குள் துாங்குகின்றனர். முன்னேற்பாடாக கதவினை வெளியே தாளிட்டுக்கொள்கிறாள். நடை தளர்கிறது. இருளுக்கு கை முளைத்து திடீரென அவள் கண்களைப் பொத்துகிறது. பயந்தாலும் உடனே மனம் அவன்தான் என்பதை அறிந்துகொள்கிறது.

மு.த.வின் தொழுகை செல்லம்மாவின் கோணத்தில் இருந்தே சொல்லப்பட்டுள்ளது. செல்லம்மா என்னும் நடுத்தரவயது கொண்ட ஒருத்தியின் நிலையழிவு.  பதினாறு வருடத் தாம்பத்யமும் அது அளித்த மீளாச்சலிப்பும். இரண்டு பெண்மக்கள் இருக்கும் வீட்டிற்குள் அவனை துணிந்து கைபிடித்து அழைத்துவரச்சொல்கிறது. ஆறுமுகம் மாஸ்டர் மிகமிக நல்லவர். அவருக்காக உயிரைக்கூட விட அவள் தயார்தான்.  அவர்தான் செல்லம்மாவிற்கு உயிர். ஆனாலும் முத்துவின் மீதுதான் அவளுக்கு ஆசை. அவளின் ஆசை கருக்கொண்டு ஒர் ஆணைத்தெரிவு செய்ய இத்தனைக்காலம்  காத்திருக்கவேண்டியுள்ளது.

முத்துவின் பழக்கம் அவரிடம் அதுவரைப் புலப்படாத குறைகளை காணும் பார்வையை அவளுக்கு அளிக்கிறது. தொகதொக வென்று தசை அலையடித்து தொங்கும் உடம்பு. எதையும் மிகுந்த பிரக்ஞையோடு பகிர்ந்தளிக்கும் கண்டிப்பு. சதா எப்போதும் அவளை ஒருபடி கீழே இருக்கச்செய்தபின் மனமுவந்து அளிக்கும் யாசகம். ஒருபோதும் தன்னிலை அழிந்து வீணையின் நரம்புகளை வெறிகொண்டு மீட்டாத நிதானம். இவையெல்லாம் தான் அவளை மீறச்சொல்கின்றன. எல்லாம் சரி.  புயல் போலவந்து அவளை உந்தித்தள்ளும் அலைக்கழிப்புதானே அவள் விருப்பம்.

முத்துவிற்காக காத்திருந்தாலும் அவன்வந்து  நிற்கும்போது அவன் தவிப்பை அதிகரிக்கச் செய்வதைப்போல லாந்தரை தடவிக்கொண்டு நிற்கிறாள். தாமதிக்கும் கணங்கள் பல்கிப்பெருகி ஆவேச அணைப்புகளாக மாறும் என்பது அவள் அறியாத ஒன்றா?

அவளுக்கு பச்சையாக வேண்டும். நாகரீகம் வந்தபின்தானே சமைத்து ருசிசேர்த்து உண்பது. மன ஆழத்தில் பச்சை ருசித்த நாவின் தவிப்பு இன்னும் இருக்கும்தானே.  சுவை அரும்புகள் கிளர்ந்து விரைக்க ஊன் அருந்திய ஆதி நினைவு.

ஒருபோதும் வெளிச்சத்தில் நிகழ்ந்ததே இல்லை. ஒருபோதும் அன்றைய நாட்களைப்போல உடைகள் ஒவ்வொன்றாய் களைந்து கண்முன் விழுந்ததே இல்லை. ஒருபோதும் ஆண்டையாய் அவள் மாறி அவரை அதிகாரம் பண்ணும் தோரணை வாய்த்ததே இல்லை. இப்படி எத்தனையோ ஒருபோதும்கள். எத்தனையோ இல்லைகள்.

கதையின் ஊடாக திருவெம்பாவையின் கவித்துவம் முயங்கிய வரிகள். மூலஸ்தானத்தில் இருபெரும் துாண்களுக்கிடையில் தொங்கிக்கொண்டிருக்கும் துாண்டாமணி விளக்கின் பின்னணியில் எண்ணெயின் வழுவழுப்போடு கன்னங்கரேரென்று எழுந்து நிற்கும் லிங்கம். சிவப்புத் தீபம் மேலே செல்கிறது. லிங்கத்தின் நுனிக்குச் செல்கிறது.

முத்துவுக்கும் அதே பித்தேறிய நிலை. கள்ளுக்கடையில் செல்லம்மாவைப்பற்றி கேட்டதெல்லாம் அவன்நினைவில் வந்துமோதுகின்றன. ஆறுமுகம் மாஸ்டரின் பொண்ணாட்டி தங்கப்பவுண்..கடவுள் பக்தியான மனுஷி. அடையும் நிமிடமெல்லாம் பூரித்து நிற்கிறான். உலகத்தையே வாள்கொண்டு வென்ற பெருமிதம்.

மு.தளையசிங்கத்தின் கலை உச்சம் அடைந்த சிறுகதைகளில் இக்கதை ஒன்று. புதுமைப்பித்தனைப்போன்ற படைப்பாளி. பெரிய கனவுகள் கண்டவர். மெய்யுள் என்கிற இலக்கிய வடிவமே நவீன மனிதனுக்கு உகந்தது என்று புது வடிவமொன்றை பரிந்துரை செய்தவர். இன்றைய பெருநாவல்கள் கொண்டிருப்பதைப்போன்று ஒரு மெய்யுளுக்குள் கதை, கவிரை, கட்டுரை என இலக்கிய வடிவத்தின் அனைத்தின் இருப்பையும் அவசியம் என்று கருதியவர்.

காலைநடையின்போது எதிர்பாராமல் நெற்றிப்பொட்டில் விழுந்த தேங்காய் நெற்றைப்போன்று அறிமுகம் ஆன கதை இது. இதுவரை பத்துமுறைகளுக்கு மேல் வாசித்திருப்பேன். ஒருமுறைகூட உள்ளம் கசியாமல் இருந்ததில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆகும். பாலியலை குற்றவுணர்ச்சியின் நடுக்கமின்றி உன்மத்த மனநிலையில் கச்சிதமான சொற்கள் கொண்டு எழுதப்பட்ட கதை. சினந்து மறுத்து வெகுதொலைவிற்கு நம்மை விரட்டும் கதையும் கூட.

மு.தளைய சிங்கம் மனித மனத்தின் நிறப்பிரிகையை கூர்ந்துநோக்கி படைப்பிற்குள் கொண்டு வந்தவர். வரிகளனைத்தும் நுட்பங்களை பொதிந்து வைத்துள்ளன. இக்கதையில் ஒருவார்த்தையை அநாவசியம் என்று கருதி களைந்துவிட முடியாது. நவீனத்துவச் சிறுகதை என்பதன்  துல்லியம் கூடி நிகழ்ந்த கதை. தேடல், கோட்டை போன்றவை இவரின் சிறந்த வேறு கதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *