இருள் என்பது குறைந்த வெளிச்சம்

போகன் சங்கரின் நிறமற்ற வானவில்

பால்யகால நண்பர்கள் எதிர்பாராதவிதமாக ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துகொள்கிறார்கள். பார்வை இழந்தவனின் உளவியல் கதை முழுதும் நுட்பமாக வெளிப்படுகிறது. சாந்தமானவர்கள் என்கிற பிம்பத்தையும் பரிதாபத்திற்குரியவர்கள் என்கிற முன்முடிவையும் கலைத்துப்போடுகிறது. பார்வையிழந்தவருக்கு ஆசிரியர் வைத்திருக்கும் பெயர் ராஜா. பார்வை அற்ற, அதனால் தோன்றும் பரிதாபங்களை வெறுக்கும் நிஜ ராஜா.

பிறவியிலேயே பார்வையற்றவருக்கு இவ்வுலகம் இருள் சூழ்ந்தது. கடல் நீருக்குள் இருந்து உப்பைப்பிரித்தெடுப்பதைப்போல அவர்கள் வளர்ந்துவரும் காலமெல்லாம் வண்ணங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பவர்கள்.  பார்வையுள்ளவர்களைப்போல சிவப்பிற்கு ஒரே நிறம் மட்டும்தான் என்கிற ஒற்றைத்தகவமைப்பு அல்ல அவர்களுடையது. ஒவ்வொருவருக்கும்  அவர்களுக்கே உரிய குறைந்த இருளே அவர்களின் வண்ணங்கள். பாதியில் பார்வையிழந்தவர்களின் நிலையோ மிகத் துயர்மண்டியது. நீந்தத்தெரிந்தவனை கால்கைகளைக்கட்டி கிணற்றுக்குள் தள்ளிவிடுவதைப்போன்றது.  பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வாய்க்காத ஏழாம் உலகம்.

மூன்று காட்சிகளாக இக்கதை எழுதப்பட்டுள்ளது. சமகாலக் கதைகள்  நேர்கோட்டில் இருந்து தன்னை வீம்போடு துண்டித்துக்கொள்பவை. வாழ்வின் ஒரு தருணத்தை காட்டும் ஒற்றைக்கதவின் முன் அழைத்துவந்து நிறுத்துபவை அல்ல. இரண்டு கைகளால் இறுகிக்கிடந்த சன்னல்கள் கதவுகளை முண்டித்திறப்பவை. தொடுவானம் வரை விரிந்த வானம் நம்முன் அகன்று கிடக்கும். புல் நுனி ஏந்திய பனித்துளி நீர்ப்படுதாவில் ஒளிரும் பெருங்காடு. அத்தகைய கதைகளுக்கு சிறந்த உதாரணமாக போகன் சங்கரின் கதைகளைச் சொல்லலாம்.

கதைசொல்லி கருப்புக்கண்ணாடி அணிந்த நபரைப் பார்த்த உடன் தன் சிறுவயது நண்பன்தானோ என்கிற சந்தேகத்தோடே கதையை விவரிக்கிறார். சன்னலோர கனவானிடம் கருப்புக்கண்ணாடி அணிந்தவர் ஒரு காபி வாங்கித்தர முடியுமா என்று ஒரு ரயில் நிறுத்தத்தின் போது கேட்கிறார்.  சற்றும் எதிர்பாராத கனவான் கனவான்களுக்கே உரிய மவுனத்தோடு அதை எதிர்கொள்கிறார். அவருக்கு இந்தியா பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று இனவெறிபிடித்த ஐரோப்பிய மூளை உற்பத்தி செய்த ஒவ்வாமை வரிகள் விசனத்தோடு தோன்றுகின்றன.

கனவானின் தயக்கத்தை உணர்ந்த கருப்புக்கண்ணாடி மனிதர் ” நன்றி” சொல்லி சூழலின் தீவிரத்தை முறுக்கேற்றுகிறார். செய்யாத உதவிக்கு கிடைத்த நன்றி. தகுதியற்றவனுக்கு வாய்த்த முதல் பரிசு. அந்தப்பெட்டியில் அமர்ந்திருந்த அத்தனைபேர் முன்னிலையிலும் கனவான் வெட்கித்தலைகுனியும் நிலை. பிச்சைக்காரன் என்றெண்ணி ” இது முன்பதிவு பெட்டி.” என்று கண்டிக்கிறார்.. கருப்புக்கண்ணாடிக்காரர் ”என்னிடமும் பயணச்சீட்டு உண்டு. பணமும் இருக்கிறது. நான் பார்வையற்றவன்” என தன்னிலை விளக்கம் அளிக்கிறார்.  இளம்பெண் ஒருத்தி பாய்ந்து வந்து காபி வாங்கி அவருக்கு அளித்து அவரிடமிருந்து காபிக்குரிய பணத்தை முதலில் வாங்கத் தயங்கி அத்தருணம் அளித்த முகமாற்றத்தை உணர்ந்து பணத்தை வாங்கிக்கொள்கிறாள்.

 நடுவழியில் எங்கோ ஒரு நிறுத்தத்தில் விழித்துக்கொண்ட கதைசொல்லிக்கு ரயில் நிறுத்தத்தினை அடையாளப்படுத்துகிறார் கறுப்புக்கண்ணாடிக்காரர். கதைசொல்லி தன் சந்தேகத்தை ” நீங்க திருநெல்வேலியில் வசித்தீர்களா ” என்று அவரிடம் கேட்டே விடுகிறார். அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் என்னை ஒத்த உங்கள் நண்பரைப்பற்றி சொல்லுங்களேன் என்கிறார். கதைக்குள் இன்னொரு கதை அவிழத்துவங்குகிறது.

பேரழகியான புனிதா டீச்சரின் மகன் ராஜா. படிப்பில் கெட்டி. அவன் நண்பனான கதைசொல்லிக்கு அவனைக்கண்டால் எரிச்சல்தான். ராஜாவுக்கோ கண்ணாடிபோட்ட மற்றொரு சக மாணவனைக் காணும்போது இளக்காரம். கணவனைப்பிரிந்து தன் மகனுடன் அப்பள்ளியிலேயே டீச்சராக இருக்கிறார் புனிதா டீச்சர். ராஜாவுக்கு திடீரென்று ஒருநாள் பார்வை போகிறது. அதுவரை இருந்த ராஜாவின் குணநலன்கள் திரியத்தொடங்குகின்றன. பாசத்தோடு அணைத்து ஆறுதல் சொல்லும் அம்மாவைக்கூட முகத்தில் துப்பி வெறுப்பினை உமிழும் கோபக்காரனாக மாற்றி வைக்கிறது பார்வைக்குறைவு.

அதிகாரத்தில் இருப்பவர்களை தொழுது வழிபடுபவர்கள்தான் எப்போதும் அவர்களை கொன்றொழித்து அவ்விடத்தை கைப்பற்ற காத்திருக்கிறார்கள். அதைப்போலவே பேரழகானவர்களின் முன் தன்னை சிறுமையாக எண்ணி பெருமூச்செறிபவர்களும். எதிர்வினையாக அழகானவர்களைப்பற்றிய  அவதுாறுகளை பரப்பித்திரிவார்கள். ஆண்துணையற்ற பேரழகி அணுகுண்டைப்போன்றவள் ஆகிறாள்.  அருகில் இருக்கும் எக்கணமும் வெடித்துச்சிதறி தன்னிடத்தைநாசமாக்கும்  இருப்பு அவள் என்பதால் சதா அவள் மீதான அச்சம் மற்ற பெண்களிடம்.

புனிதா டீச்சர் ராஜாவுடன் விளையாடி இருக்க அழைத்துச்செல்ல கதைசொல்லியைத்தேடி அவனின் வீட்டிற்கு வருகிறாள். அம்மாவிற்கு நிலைகொள்ளா தவிப்பு. சேரில் அமர்ந்து நாசூக்காக பேசி்ச்சிரிக்கும் ஆண் மட்டுமே அல்ல அவள் கணவன். இருளுக்குள் அவன் மாறச்சாத்தியமுள்ள ஆண்குறித்த முன் அனுபவம் உள்ளவள். அந்த ஆணின் ருசி கண்டு சோர்ந்து அமர்ந்த கணங்கள் உண்டு அவளுக்கு. அம்மா புனிதா டீச்சரை கரித்துக்கொட்டுகிறாள்.

லா.ச.ரா.வின் பச்சைக்கனவு ஒன்றே நானறிந்து பார்வையற்றவர்களின் உலகினை தமிழில் எழுதிய மிகச்சிறந்த படைப்பு.  பார்வையற்ற ஒருவர் பரிதாபத்திற்குரியவர் அல்ல என்ற திறப்புதான். இக்கதையின் தனித்தன்மை. அவரும் அதை வரவேற்பதில்லை. உங்களைப்போன்றுதான் நானும் என்னிடம் இரக்கம் கொள்ளாதீர்கள் அது என்னை சிறுமைகொள்ளச்செய்கிறது என்கிறார் தன் செயல்கள் மூலம். நீங்கள் வாசித்திருக்காத உலக இலக்கியத்தை அறிந்துகொண்டவன் நான் என்கிறார். கதைசொல்லிக்கு ஏற்படும் குழப்பத்தை ” டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலில் வரும் முதல் வரியைச் சொல்லி ” தீர்த்து வைக்கிறார். பயணத்தின் நடுவழியில் கதைசொல்லிக்கு ரயில்வந்து நிற்கும் இடம் எது என்பதற்கு பதில் அளிப்பவரும் அவர்தான்.

அப்பாவுக்கு பணி மாறுதலாகி கதைசொல்லி பள்ளியைவிட்டு கிளம்பும்போது ராஜா அன்பளிப்பாக வாட்டர் கலர் பெட்டியை நீட்டுகிறான். அப்பெட்டியை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா என்று இருபதாண்டுகள் கழித்து கேட்கும்போது கண்களில் இருந்து நீர் வழிந்து செல்கிறது கறுப்புக் கண்ணாடி நண்பருக்கு.

அக்கணம் உறுதிப்படுத்துகிறது தன் முன் இருப்பவர் தனது பால்ய கால நண்பர்தான் என்று. கதைசொல்லி குற்றவுணர்வோடு தான் அந்தப்பெட்டியை தொலைத்துவிட்டதாகச் சொல்கிறார். இவ்விடத்தில் அந்தப்பெட்டி என்பது காலம் கறுப்புக்கண்ணாடிக்காரரிடம் இருந்து தட்டிப்பறித்த ஓவியங்களின் மீது அவர் கொண்டிருந்த விருப்பத்தின் குறியீடாக மாறுகிறது.

ஒரு படைப்பாளி நமக்கு உருப்பெருக்கி வில்லை போன்றவர். நம் கண்முன் காட்சிக்கு வராத நுட்பங்களை, சிறிய மகத்துவங்களின் பேருருக்கோலத்தை, காண வாய்க்காத பொற்தருணங்களை தன் எழுத்தின் ஊடாக காட்சிப்படுத்துபவர். நாம் அதன் மேல்தான் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதை அறிய வாய்க்காதவர்கள். சிறந்த படைப்பு நம்மை அவற்றை அறிந்துகொள்ளப் பணிக்கும் பாக்கியவான்களாக மாற்றுகிறது. அவ்விதத்தில் போகன்சங்கரின் இக்கதை அதிகம் தமிழில் எழுதப்படாத ஒரு கதைப்பின்ணணியை கருப்பொருளாக கொண்டுள்ளது. போலி இரக்கங்களினால் பார்வையற்றவர்களை அவமரியாதை செய்யாமல் கனப்படுத்தும் படைப்பு. அதுவே இக்கதையின் தனித்தன்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *