ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்

நம் மண்ணின் பெருங்கவி யார்? இப்போதிருக்கிறானா, ஒருவேளை இனிதான் வரக்கூடுமோ? அல்லது நேற்றே நிகழ்ந்துவிட்ட கம்பனா? தீராக்குழப்பம்தான் கவிதையறிந்தவர்களுக்கு. ஆனால் கவிப்பேரரசர்களும் சிற்றரசர்களும் இதுகுறித்த எவ்வித லஜ்ஜையும் அற்று இறுமாந்து காவியம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாயிரம் வருட இலக்கியப்பாரம்பரியம் உள்ள நமக்கு ஒரு இரண்டாயிரம் கவிதைகளோடு பரிச்சயம் இருக்குமா? தற்போது சிறப்பாக எழுதிக்கொண்டிருக்கும் பத்து கவிஞர்களின் பெயர்களையாவது அறிமுகம் உண்டா? சினிமாவில் தோன்றி நடித்தும்கூட விக்கி அண்ணாச்சியை சிறந்த கவிஞரென்று  வாசித்திருப்போமா?

அண்ணாச்சி தமிழின் பஷீர். கவிஞனாக வாழ முயன்ற அனுபவங்களும் சாமானியனாக வாழ நிர்ப்பந்தி்த்த அனுபவங்களும் அவரிடம் சிறந்த கவிதைகளாக உருமாற்றம் அடைந்துள்ளன. அண்ணாச்சி பெருங்குடிக்கு பழகியவர். தமிழ் பெரும்போதை என்பதால் பிற போதை வஸ்துக்கள் அதற்கும் கீழே என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதனால் கவிஞர்கள் மதுவை ஆராதிப்பவர்களாக இருப்பது கூடுதல் சிறப்பு.

அண்ணாச்சியை அவருடைய தனிப்பட்ட வாழ்வியல் தடங்கள் குறித்த அறிமுகத்தோடு வாசிப்பதென்பது பேரனுபவம். ஞானம் நுரைக்கும் போத்தல் எ்ன்ற பிம்பத்திற்கு சாலச்சிறந்த ஒரு ஆளுமை அண்ணாச்சிதான். ஞானிகளுக்குரிய பாவனை அவரின் கவிதையின் சிறப்பு. ஆடிஆடி ஆடியவர் அற்றுப்போய் ஆடலே அற்ற இருப்பு என்று அண்ணாச்சியின் கவிதைகளை கைக்குள் அடக்க விழைகிறேன்.

இத்தொகுப்பினை வாசித்த போது பெரும்பாலான நேரம் புன்னகைக்கும் முகத்தோடுதான் இருந்தேன் தற்கால நவீன கவிதையின். பெரும்பகுதி  நமக்கு சோர்வையும் கண்ணாமூச்சி விளையாட்டின் திகிலையும் அளிக்கும் போது இக்கவிதைகள் நம்மோடு நட்புகொள்கின்றன.

அண்ணாச்சியின் தரிசனமென்று ஒரு கவிதை

மானுடமென்பது சும்மாவா

நாம்

சாதாரணர்கள்

நமக்கு

தலைவன் ஒருவன் வேண்டும்

நாம்

சராசரிகள்

நமக்கு மீட்பன் ஒருவன் வேண்டும்

நாம்

சாமானியர்கள்

நமக்கு

இறைவனில்லாமல் தீராது

நாம்

மனுஷர்கள்

நமக்கு

மனுஷியின்றி முடியாது

பின்னேயும்

உறவுகள் வேண்டும்

இன்னும்

கலைஞர்கள் வேண்டும்

மேலும்

சுகங்கள் வேண்டும்

மேலும் மேலும்

பணம் வேண்டும்

கேளிக்கைகள் கொண்டாட்டங்கள்

சகலமும் வேண்டும்

சந்தோஷம் ஆனந்தம்

அத்தனையும் வேண்டும்

இத்தனைக்கும் சமூகம் வேண்டும்

பிறகும்

சட்டம் ஒழுங்கு வேண்டும்

இதிகாசங்கள் புராணங்கள் நீதிநுால்கள்

எல்லாமே வேண்டும்தான்

மானுடமென்றால்

சும்மாவா

நண்பர்களே ஒரு மகத்தான கவி அன்றி வேறுயாரால் இத்தனை எளிய சொற்களைக்கொண்டு நம் அத்தனைபேரின் அன்றாடத்தை சொல்லிவிட முடியும். வாத்துக்கள் என்றொரு கவிதை பசுவய்யாவின் மின்விசிறி குறித்த கவிதைபோன்று மிக நுட்பமான அங்கதம். வந்து இறங்குகின்றன வரிசை குலையாமல் என்று தொடங்கி வாத்துக்காரனுக்காகவே பிறவியெடுத்ததுபோல வயணமாய் இருந்துகொள்கின்றன வாத்துகள் என்று முடிகிறது. இங்கே நாம் வாத்துக்கள் அல்ல என்பதையும் குறிப்பிடவேண்டும்.

இருபதாம் நுாற்றாண்டில் பெரும்பாய்ச்சலாக கருதப்பட்ட இரண்டு சிந்தனையாளர்கள் பிராய்டும் மார்க்சும். அண்ணாச்சி அவர்கள் மீதான விமர்சனத்தை பத்து வரிகளில் பதினைந்து சொற்களில் நறுக்கென்று வைத்துவிடுகிறார்.

பிராய்ட்

பணத்தை விட்டுவிட்டார்

மார்க்ஸ்

மனத்தைக் கவனிக்கத்தவறிவிட்டார்

ஆனாலும்

என்ன

இருவரின் கொடைகளும்

எந்நாளும் அழியாதவைதாம்

ஒன்றை

யொன்று நிரவியபடியே

சில கவிதைகள் மந்திரங்கள் போலும் நம் மனவெளியில் பித்தேறி அலைந்துகொண்டிருக்கும். கவிஞன் வரலாற்றை எதிர்கொள்ளும் வழியென்பது வெள்ளத்தில் நீந்தி கரையேறுவது போன்றதே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னும்பின்னும் என்றொரு கவிதை

நீங்கள் எப்படியோ

தெரியாது

நான்

சாதாரணன்

பார்க்கப்போனால்

ரொம்ப சாதாரணன்

என்று துவங்கி

இப்போதெல்லாம்

நீங்கள் சிகரெட் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாலும் தட்ட

மாட்டேன்

பாட்டில் வாங்கிவர ஏவினால்

கௌரவம் பார்க்க மாட்டேன்

பெண்ணே கேட்டாலும்

முடிந்தவரையிலும் முயலுவேன்

சுயமரியாதை தன்மானம் என்று

நினைக்க மாட்டேன்

முள்ளிவாய்க்கால் நிகழ்வு அப்படி

மாற்றிப்போட்டிருக்கிறது என்னை

இருக்காதா

பின்னே படங்களுடன் செய்திகளைப் பார்த்ததில் எப்படி

பைத்தியம் பிடிக்காமல் போயிற்று

ஏன் துாக்கமாத்திரை போட்டு

தற்கொலை செய்துகொள்ளவில்லை

டாஸ்மாக்தான்

காப்பாற்றிவைத்திருக்கிறது உண்மையிலேயே

நேரம் காலம் இல்லாமல்

குடித்துக்கொண்டேயிருந்தேன்

தெருவில்

விழுந்துகிடந்தேன்

போதைவெறிச்சியில்

பாரதிதாசன் கவிதைகளைக் கொளுத்தத்

தோன்றியது

”இனவுணர்வும் மொழியுணர்வும்

என்ன இழவுக்கு”

திராவிட இயக்கத் தலைவர்கள் சிலைகளை

துாள்துாளாக உடைத்தெறியத் தோன்றியது

(இத்தனை சீரழிவுக்கும்

யார் காரணம்)

மேலும் ஒரு குவாட்டர் அடித்துவிட்டு

புலம்பிக்கொண்டிருப்பேன்

நாடகம்

முடிந்தது திரைச்சீலையையும்

தொங்கவிட்டுவிட்டார்கள்

இங்கே

நானும் ரொம்ப ரொம்ப சராசரிதான்

முண்டந்துறைப் புலிகளைப்போல என்ற கவிதை யாராகவும் இருப்பது சிரமம்தான். சராசரியே சரி இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறதே விசேஷம் முண்டந்துறைப் புலிகளைப்போல களக்காட்டுச் சிங்கவால் குரங்குகளைப்போல என்று முடிகிறது. சராசரி என்பது காண வாய்க்காத முண்டந்துறைப்புலியை போன்ற ஒன்றா?

அண்டைவீட்டார் பற்றி ஒரு கவிதை. இம்மண்ணில் வாழ்வது குறித்த பெரிய தத்துவத்தெறிப்பு. படித்தபோது பகீரென்று சிரிப்புவந்தாலும் பத்துநிமிடம் அச்சத்தால் உடல் நடுங்கியது. எத்தனை துயர்மூண்ட வாழ்விது.

முதலில் ஒரு முடுக்கு – பிறகு இன்னொரு முடுக்கு – அப்புறம்தான் வீடு – அதுவும் முடுக்குமாதிரிதான் – வீட்டுக்கு வரும் முடுக்கு தனக்குத்தானென்று பாத்யதை கொண்டாடும் பக்கத்து வீட்டுக்காரர் – என்ன உலகமடா சொக்கா – இதில் எப்படிக் காலம் கழிப்பதடி மீனாட்சி

அப்பா என்ற கவிதை ஒருவிதத்தில் தமிழ்க்கவிதையின் வரலாறு. உயிரின்வேட்கைகள் சுலபத்தில் – ஒடுங்கிவிடாதவை – அடிமனசின் கனவுகள் – அடங்கிவிடாதவை – ஒரு பேராற்றை நீங்கள் கடக்க நினைத்து – ஒருவேளை முடியாமல்போனால் – உங்கள் தலைமுறையிலேயே ஒருவன் அக்கறையில் நிற்பான் நிச்சயமாய் –

நிலம் என்ற கவிதையே இத்தொகுப்பின் சாரம் மிகுந்த கவிதை என்பேன். நாஞ்சில் நாடனின் சாலப்பரிந்து சிறுகதையின் கவிதை வடிவம்.

மிகமிக எளிய சொற்கள். அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள் பேசிப் பகிரும் அதே வார்த்தைகள். வாழ்வியல் அனுபவம் தரும் ஒளியூட்டலால் கவித்துவம் கொள்கின்றன. அண்ணாச்சியின் கவிதைகள் கனிந்த லௌகீகிக்கு உரியவை. எளியவை என்றாலும் குழந்தையின் களங்கமின்மை போன்று அபூர்வமானவை.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  1. அண்ணாச்சியை புரிந்துகொள்ள உதவுகிற கட்டுரை. தன் வாழ்க்கை சித்தாந்தங்களை அனுபவப் பகிர்வாக அள்ளியள்ளிக் கொடுக்கிறார் கவிதைகளில்.