விஷ்ணுபுரம் விருது விழா -2022 சில குறிப்புகள்

விஷ்ணுபுரம் விருது விழாவைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளில் இருந்து சென்று வரவேண்டும் என்ற ஆசை. ஏதேதோ காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. எனக்கே உரிய மனத்தடைகள்.

முதல் தயக்கம். புதியவர்களை எதிர்கொள்வது சார்ந்தது. சிறுவயதில் இருந்தே வளர்ந்து வரும் மனச்சிடுக்கு. அப்புறம் இலக்கியம் வாசிப்பதும் எழுதுவதும் என்னளவில் மிக அந்தரங்கமான செயல்பாடுகள். அல்லது தியானிப்பதைப் போன்ற தனிமைச் சாத்தியம். அவற்றைப் பற்றி பொதுவெளியில் பலருடன் பகிர்ந்து கொள்வது தத்தளிப்பானது. இருபத்தைந்தாண்டுக்கால வாசகன் என்ற போதும் விரல்விட்டு எண்ணிவிடும் இலக்கியக் கூட்டங்களில்தான் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தாண்டு முதல்முதலாக விஷ்ணுபுரம் விழாவிற்கு சென்றுவந்தேன். என் பயணத்தை கேள்விப்பட்ட பலரும் நம்ப மறுத்தனர். ஒரு இலக்கிய விழாவில் என்ன நடக்கிறது என்பதைக் காணவும், சாரு நிவேதிதாவை நேரில் காணும் ஆசையும் முக்கிய காரணங்கள்.

இந்த இரண்டு நாட்களும் பிரமிப்பில் இருந்து கீழிறங்க முடியவில்லை. ஏன் இத்தனை ஆண்டுகள் கலந்து கொள்ளாமல் வீணாக்கினோம் என்ற சுய விம்மலும். நான் கேள்விப்பட்டவரை இத்தனைக் கச்சிதமும் துல்லியமும் கூடிய பிறிதொரு இலக்கிய விழா இல்லை. பிரமாண்ட அரங்கு, நுாற்றுக்கணக்கான வாசகர்கள். சமகாலத்தின் முக்கியப் படைப்பாளிகள் வருகை என ஏங்கச் செய்யும் சூழல்.

விழாவின் உச்ச நிகழ்வாக நான் கருதுவது த அவுட்சைடர் என்ற பெயரில் அராத்து இயக்கி திரையிடப்பட்ட ஆவணப்படம். நுாற்றுக்கணக்கான பார்வையாளர்கள் சூழ ஒரு தமிழ் எழுத்தாளனைப் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தது மிகுந்த பரவசம் அளித்தது. சாருவைச் சரியாக வெளிப்படுத்தும் முயற்சி. விசில் சத்தமும் கைதட்டலும் வணிக சினிமா ரசிகர்களை அரங்கினுள் கொண்டு வந்தது. இதற்கு முந்தைய வி.பு.விருதாளர்கள் எவருக்கும் இத்தனை ரசிக சஞ்சாரமும் ஆர்ப்பரிப்பும் அவர்களின் ஆவணப்படத் திரையிடலின் போது ஏற்பட்டிருக்காது என்றே நினைக்கிறேன்.

சீலே நடன மங்கையர்களின் சதிராட்டத்தை திரையில் பார்த்து அருகில் அமர்ந்திருந்த என் நண்பர் உற்சாகம் பீறிட கிசுகிசுத்தார். “என்னமா வாழந்திருக்கான்யா இந்த மனுசன்” என்று. அவரே படம் முடிந்த பிறகு “ரஜினி படம் பார்த்த மாதிரி இருக்கு“ என்றார் நம்பமுடியாமல். சாருவைத்தவிர தமிழ்ப் படைப்பாளிகள் எவருக்கும் இப்படி ஒரு திரைச்சலனம் சாத்தியம் ஆகும் வாய்ப்பே இல்லை.

இலக்கியம் நற்கருத்துகள், லட்சியவாதம், அன்பு என்றே சொல்லப்பட்டிருக்கிறது. சாருவைப் பற்றிய ஆவணப்படத்தில் குடியும், குட்டிகளின் முத்தங்களும், சுய இன்ப நினைவு கூர்தலையும், பேய்கள் வாழ்ந்த புளியமரத் தோப்பினையும் காட்சிப்படுத்தியிருந்தார் அராத்து. சாரு குறித்த என் கட்டுரையிலும் இந்த இரண்டு அம்சங்களை அவரின் தனித்தன்மைகளாக நான் குறிப்பிட்டுருக்கிறேன். அவற்றை திரையில் காண நேரிட்டபோது எனக்கே உச்சி வரை குளிர்ந்தது.

சாரு நிவேதிதாவின் அழகியல் நமக்குச் சங்கடங்களைத் தரக்கூடியது. பன்றிகளுக்குப் பயந்துகொண்டேதான் மலம் கழிக்க வேண்டியிருக்கிறது என திறந்தவெளி கழிப்பிடம் பற்றி எழுதியிருக்கிறார்.  அப்போது கூட இப்படி ஒரு வரி “பன்றிகளின் பசி பன்றிகளுக்குத்தானே தெரியும்“ என்று. பாரீஸ் மெத்ரோ ரயில் நிலையத்தில் தொடைவரை ஜீன்ஸை இறக்கிவிட்டு மூத்திரம் போய்க்கொண்டிருந்த பெண்னைப் பார்த்து “மனித சுதந்திரம் இங்கே மூத்திரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பார். இந்த மூத்திரத்தை நான் முத்தமிட விரும்புகிறேன்” என்கிறான் கண்ணாயிரம் பெருமாள்.  இதைப் போன்ற பல்வேறு கலாச்சார அதிர்ச்சிகள்தான் சாருவின் அழகியல். இவ்வழகியல் கூறுகளை ஏற்றுக்கொள்வதில் ஏற்படும் தயக்கமே அவரைப் புரிந்துகொள்வதில் ஒருவரைத் தேங்கி நிற்க வைத்து விடுகிறது.  சாருவின் புனைவுலகத்தை மிகச்சரியாக உள்வாங்கிக்கொண்ட ஒருவரால் இயக்கப்பட்டுள்ளது இப்படம். மலச்சந்து என்று  நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவர் காண நேரிட்ட ஒரு குறுகிய சந்துவினை நடந்து கொண்டே அடையாளப்படுத்துகிறார். சாரு புனைவுலகின் ஆதார மையம் அந்த சந்தும், அதில் பிழைப்பின் பொருட்டு உழன்று சென்ற மனிதர்களும் தான். அவரின் புனைவுலகில் வெளிப்படும் குரல்களும் அந்த சந்தில் பிறந்து வாழ்ந்து மடிந்தவர்களுடையதே.

ஆவணப்படத் திரையிடலின்போதும் சரி, சாரு நிவேதிதாவின் கலந்துரையாடலின் போதும் சரி அரங்கம் நிறைந்து வழிந்தது. சற்றே தாமதித்து வந்த என் போன்ற சிலர் இரண்டு பக்கங்களிலும் நிற்க நேரிட்டது. தன்னிடம் கேட்கப்பட்ட கடைசி இரண்டு கேள்விகளைத் தன்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என்று சாரு அவருடைய பிளாக்கில் எழுதியிருக்கிறார். ஒரு கேள்வியை சுனில் கேட்டார். அவருடைய பழுப்பு நிறப்பக்கங்கள் எழுதக்காரணமான பார்வைக்கோண மாற்றம் எப்போது நிகழ்ந்தது என்று.

தமிழின் பெரும்பாலான படைப்பாளிகளை முற்பகுதியில் நிராகரித்த சாரு அறுபது வயதிற்கு மேல் அவர்களைக் கொண்டாடி பழுப்பு நிறப்பக்கங்கள் என்று எழுதித் தள்ளுகிறார். தன்னை ஐரோப்பாவின் பாதிப்பு என்று சொன்னவரின் ஒப்புதல் வாக்குமூலம் அது. நவீன தமிழ்ப்படைப்பாளிகள் பற்றிய அவரின் கண்ணோட்டம் மிகக் சமீபத்தில்தான் மாற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் அவரின் நாவல்களில் தமிழ் மரபின் எச்சங்களை நெடுக காணலாம். ஆழ்வார்கள்,நாயன்மார்கள், உபநிசத்துக்கள் முதல் மரபான சமையல் குறிப்புகள், சித்த வைத்திய மருந்து தயாரிப்பு முறைகள் என்று எடுத்தாண்டு இருக்கிறார். சார்வாகனாக வாழ்ந்து, வள்ளலாராக கனிந்த உருமாற்றமே சாரு. அவருக்கு முன்னோடிகள் நம் மரபில் இருந்திருக்கிறார்கள்.

கோவை ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோக்காரரிடம் பேரம் பேசி இடித்துக்கொண்டு அமர்ந்து ஆர்.எஸ்.புரம் கிளம்பி போது நான் ஆச்சரிம் கொண்டேன். மாநகரத்தில் ஆள்அரவமே இல்லை. வாகன நெரிசல்கள், புகை கக்கும் முந்துதல்கள், குறுக்கே சாடிச்செல்லும் இருசக்கர வாகனங்கள் எதுமற்று, ஏன் சாலைகளின் இருபுறமும் குப்பைகள் கூட அற்று கோவை மாநகரம் என்னை வாய்பிளக்க வைத்தது. ஆட்டோ ஓட்டுநர்தான் என்னை மட்டுப்படுத்தினார். ”சார்..இன்னைக்கு சண்டே அதான் இப்படி இருக்கு. ஒர்க்கிங் டே வந்தீங்கண்ணா தெரியும்..

அவர் சொன்ன எச்சரிக்கை மாலையில் அதே ரயிலைப்பிடிக்க கால் டாக்சியில் விரைந்த போது அனுபவமானது. ஏழரை வண்டியைப் பிடிக்க ஆறுமணிக்கே நண்பர்கள் கிளப்பி விட்டனர். கால் டாக்சிக்காரர் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வழி தெரியாது என்று சாதாரணமாக சொல்லிவிட்டார். நாங்கள் மூவரும் கோவைக்குப் புதியவர்கள். ஐந்தாறு நண்பர்களுக்கு போன் மூலம்தொடர்பு கொண்டு ஒருவழியாக ரூட்டை கண்டடைந்தோம். ஆனால் ஐம்பது மீட்டருக்கு ஒரு சிக்னல். வாகனங்களுக்கு இடையே தேங்கித் தேங்கிதான் கார் ஊர்ந்தது. கிழக்கே போகும் ரயிலைப் பிடித்துவிட முடியுமா என்ற பதற்றம். எனக்கு அந்த நெருக்கடியிலும் அ.மி. காலமும் ஐந்து குழந்தைகளும் சிறுகதைதான் ஞாபகத்தில். ரயில் நிலைய வாசலில் வண்டியை நிறுத்தி ஐந்து நிமிட அவகாசத்தில் பொதிகளைச் சுமந்து ஓடினோம். ரயில் நிலையத்தைச் சுற்றிலும் வடக்கத்திய முகங்கள். குடும்பம் குடும்பமாக. நடைபாதையில் நிரம்பி இருந்தார்கள். திகைப்போடுதான் அவர்களை கடந்துசென்றோம்.

வந்து இறங்கிய அதிகாலையிலும் சரி, விழாவின் இடைவேளையின்போதும் சரி அருந்திய டீக்களோ, காபியோ ருசிக்கவில்லை. கோவைக்காரர்களின் ருசிபேதம் என்னை சிந்திக்க வைத்தது. மதிய உணவிற்காக நண்பர் அகரமுதல்வன் ஒரு மெஸ்சிற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். சந்தைக்கடையைப் போன்ற இரைச்சல்.தள்ளுமுள்ளு. இங்கே ஆலங்குளம் பக்கம் திருமண வீடுகளில் பந்தியில் அமர்ந்திருப்பவர்களின் பின்னால் அமர வேண்டியவர்கள் அடைத்துக்கொண்டு காத்திருப்பார்கள். அதைப்போன்ற நிலை. சாம்பாருக்கும், ரசத்திற்கும் கூப்பாடு போட வேண்டியிருந்தது. அவர்கள் பரிமாறிய தொடுகறிகளும் ருசிக்கவில்லை. நெல்லை சைவாள் ஓட்டல்கள் தேவலை என்று எண்ணிக்கொண்டேன். சொதிக்குழம்பு என்கிற பிரமாஸ்திரத்தைக் கொண்டே பசிப்பிணியைக் கொன்றுதீர்த்துவிடுவார்கள்.

தமிழினி, அழிசி, விஷ்ணுபுரம் என்று கடை விரித்திருந்த ஐந்தில் மூன்று பதிப்பகங்களின் அத்தனை நுாற்களும் என்னிடம் ஏற்கனவே இருக்கின்றன. புதிதாக ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். தேவிபாரதியின் நீர்வழிப்படூவும், இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் தொகுதியும் வாங்கினேன்.

போகன் சங்கர், கீரனுார் ஜாகீர் ராஜா, சு.வேணுகோபால், சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், செந்தில் ஜெகன்நாதன் என்று ஏகப்பட்ட இளம்படைப்பாளிகள். அனைவரிடமும் ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேச முடிந்தது. ஒரே நேரத்தில் இத்தனைப் பேர்களை சந்திக்க நேரிட்டால் வேறு வழியேதும் இல்லை. மூத்த படைப்பாளிகள் நாஞ்சில்நாடன், தேவதேவன் ஆகியோரிடம் நின்று பேசவே வாய்க்கவில்லை. ஜெ.விடம் சென்று ஒரு அட்டனனெஸ் போட்டேன். அவர் மறக்காமல் மயிர் இதழ் குறித்து விசாரித்தார். எவரையோ அழைத்துவர வேகமாக சென்று இறங்கினார். அவ்வளவுதான். அதற்குமேல் அவருக்கு தொல்லை தர விரும்பவில்லை. ஆவணப்படம் நிறைவடைந்த பின்னர் சாரு அகஸ்மாத்தாக தம்மடிக்க அரங்கிற்கு வெளியே வந்தார். வாசலில் காருக்காக காத்திருந்த நான் ஓடிச்சென்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். மதியம் அரங்கின் வாசலில் ஒருவர் “பசிக்குது பசிக்குது“ என்று கூவி உள்ளே செல்கிற அத்தனைப்பேரிடமும் இரந்து கொண்டிருந்தார்.

இத்தனை சாதித்த பின்னரும் இவ்வளவு பெரிய ஆளுமையாக மாறி பிறகும் கூட ஜெ.விடம் விழாப் பதற்றம் தென்பட்டது. எந்தவித எதிர்மறைச் செயல்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவர் எண்ணியிருந்திருக்கலாம்.

விழாவில் அப்படி எதுவுமே நிகழவில்லை. நவீன நக்கீரரின் காரியங்கள் மிகச்சரியாகவே அமைந்துவிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *