
1.
ஓர் ஆழமான மாயைக்குள்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கிறார் ஓஷோ. நம்முடைய எதிர்காலக் கனவுகள், நம்பிக்கைகள், நாளை ஒரு பொன்னுலகம் என்கிற ஆருடம் இவை அனைத்துமே நம்மை விலக்க முடியாத நிரந்தர மாயைக்குள் தள்ளிவிடுகின்றன. நம் மனம் நாளையை எதிர்நோக்கியே உற்சாகத்தோடு செயல்படுகிறது. நேற்றின் விளைவாகத் தோன்றி வடுக்களை எதிர்வரும் நாட்களில் மாற்றும் ஆசையே நம்மை வாழச் செய்கிறது என்கிறார்.
மனம் சாதாரணமாக கண்டுணர மறுக்கும் மெல்லிய சல்லாத்துணிகளாக உண்மையின் இருப்பு ஒட்டிக்கிடக்கிறது. பொத்தாம் பொதுவான கருத்துக்களால், எண்ணங்களால் நம் சிந்தனை திரண்டு எழும்பி நம்மை நிம்மதி கொள்ளவோ, நிம்மதி இழக்கவோ வழிகாட்டிச் செல்கிறது. மனம் இருப்பதற்கு நேற்றும் , நாளையும் தேவைப்படுகிறது. இன்று என்பது உண்மையினை உள்ளபடியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது. அதில் மனமயக்கங்களுக்கு இடம் இல்லை. யதார்த்தம் பிரத்யட்சமாகத் தோன்றி மனதில் நம்பிக்கை கொண்டிருப்பவற்றை மறுதலிக்கவோ பொய்யாக்கவோ செய்யலாம். எனவே இன்றை எதிர்கொள்வதில் இருந்து மிக நுட்பமாக மனம் தப்பித்துச் செல்ல விரும்புகிறது. மனதின் தப்பித்தலுக்கு கனவுகள் உதவுகின்றன.
கனவுகளை அடிப்படையாகக் கொண்டே மதங்கள் செயல்படுகின்றன என்கிறார் ஓஷோ. இன்றின் கணங்களில் ஏற்படும் சங்கடங்களைத் தாண்டிச்செல்ல அவை உந்து சக்தியாக இருப்பினும் தற்கணத்தின் மகத்துவங்களை மங்கிப்போகச் செய்யவும் அவை துாண்டுதலாக அமைந்து விடுகின்றன. வாழ்தல் எப்போதும் இன்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டிருப்பது. நாளைய உணவு இன்றின் பசியைத் தீர்க்காது என்பதைப்போல நாளை கிடைக்கச் சாத்தியமான சொர்க்கம் இன்றின் இன்னல்களை எதிர்கொள்ள உதவி செய்வதில்லை. ஆனால் மனம் இன்றை கடந்து செல்லவே விரும்புகிறது. இன்றின் மீது எந்தவித அரிதாரங்களையும் பூச முடிவதில்லை. அப்பட்டம் கண்முன்னே அகலித்து கிடக்கும்போது மனத்தால் என்ன செய்துவிடமுடியும்? ஆகவே கனவுகள் மனத்தின் வலுவான நிலைக்களன்களாக இருக்கின்றன.
கனவுகளுக்கும் கனவுகளற்ற ஆழ்ந்த துயிலுக்குமான ஊசலாட்டந்தான் ஒருவரின் இரவு நேர உறக்கம் என்கிறார் ஓஷோ. நாற்பது முதல் ஐம்பது நிமிடங்கள் வரை முதலில் ஆழ்ந்த துாக்கமும் அதனைத் தொடர்ந்து நாற்பது முதல் ஐம்பது நிமிடங்கள் வரை கனவுகளும் வந்து செல்லும் ஒழுங்குடன் கூடிய விளையாட்டைப் போலத்தான் துயிலும் செயல் நடக்கிறது. இரவும் பகலும் போல ஒன்றை ஒன்று விரட்டிக்கொண்டு கனவுகளும் கனவுகளற்ற ஆழ்துயிலும் ஊடாடிக்கிடக்கின்றன என்கிறார் அவர். கனவுகள் அற்ற அமைதியான துாக்கத்தின் போது துயிலும் ஒருவரைத் தட்டி எழுப்புவதால் அவர் விழித்த உடன் சோர்வையோ களைப்பையோ உணர்வதில்லை. ஆனால் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் போது துயிலும் ஒருவரைத் தட்டி எழுப்பினால் அவர் மிகுந்த சோர்வைக் கொண்டிருக்கிறார். களைப்பினால் உடல் வலியை உணரக்கூடும். கனவுகள் அற்ற நிலையில் மொத்தஉடலும் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுகிறது. கனவுகள் நடனமிடும் தருணங்களில் உடல் மீண்டும் தீவிரமான இயக்க நிலைக்குத் திரும்பிவிடுகிறது. துயிலும் ஒருவர் கனவுகள் கண்டுகொண்டிருக்கிறாரா இல்லையா என்பதை மூடிய இமைகளுக்குள் ஏற்படும் அசைவுகளைக் கொண்டு கண்டுகொள்ளலாம். ஆழ்ந்த துயிலின் போது விழிகள் அசைவதில்லை. துயில்வதன் மூலம் பெறும் புத்துணர்ச்சி என்பது என்றும் உள பிராணசக்தியை அறிந்து கொள்வதனால்தான் என்கிறார் அவர்.
பதஞ்சலியின் யோக மார்க்கம் கனவுகளை, நம்பிக்கைகளை இரத்து செய்கிறது. யோகம் செய்ய ஒருவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை மனநிலை முற்றிலும் நம்பிக்கைகள் அற்ற நிராசையே. இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்கிற கையறுநிலையே யோகப் பயிற்சியாளருக்கு ஆதாரம். யோகியாக வாழ்வதற்கான பயிற்சிகள் நம்பிக்கையினால் வலுப்பெறுவதில்லை. மனதின் இருப்பினை இல்லாமல் ஆக்கும் நிலைத்த மௌனத்தால் மட்டுமே உண்மையை உணர முடியும்.
மனித மனம் உண்மையை உணர விரும்புவதில்லை. உண்மை எப்போதும் அகங்காரத்திற்கு எதிரானது. மனம் அகங்காரத்தினை உண்டே உயிர் வாழ்கிறது. உண்மையை உணர்ந்து கொள்வதற்கு அகங்காரமே பெரும் தடையாக உள்ளது. அகங்காரம் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்படுகிறது. தன் காலடி நிலத்தை மட்டுமே நம்பக்கூடியது. தன் நம்பிக்கைகளுக்கு மீறிய எவற்றையும் அது நிராகரிக்க விரும்புகிறது. எனவே உண்மையை அறிய விரும்பும் சஞ்சாரிக்கு மனம் ஒரு பெரிய தடைக்கல்.
யோகம் மனமற்ற நிலையை அடைவதற்கான அறிவியல் பூர்வமான வழி முறை என்கிறார் ஓஷோ. அறிவியல் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் மேலை நாட்டினரால் கண்டறியப்பட்டவை. ஆனாலும் அவை இன்று மனித குலத்திற்கே சொந்தமானவை. மேலை நாடுகளில் அதிகமும் கிறிஸ்தவ மதமே பின்பற்றப்படுகிறது. எனவே அறிவியல் கண்டுபிடிப்புகள் மிகுதியும் கிறிஸ்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. அதைப்போல கீழை மனத்தின் அறிவியல் ரீதியிலான கண்டுபிடிப்பே யோகம். அதை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது ஒருவித அறியாமை என்கிறார் ஓஷோ.
உண்மை மட்டுமே விடுதலை அல்லது மோட்சமாக முடியும் எ்ன்கிற ஆதார மையத்தை கொண்டிருப்பது யோகம். யோகம் எந்தவித நம்பிக்கையும் அற்ற நிலை. எந்தவிதமான ஆசையும், நம்பிக்கைகளும் , வருங்காலங்களும் அற்ற யதார்த்தம். ஒரு யோகி இன்றில் வாழ்கிறவர். இன்றின் உண்மையோடு உரையாடக் கூடியவர். அவருக்கு நேற்றும் இல்லை ஆகவே நாளையும் இல்லை.
மனம் ஒரு போதைப் பொருள் என்கிறார் ஓஷோ. கனவு என்பது முழுமையான தன் ஏய்ப்பு. நிகழ்காலம் இறந்தகாலமும் எதிர்காலமும் அற்ற நிகழ்வு. நம்மால் இறந்த கால அனுபவத்தின் நினைவுகளற்று நிகழ்காலத்தை எதிர்கொள்ள முடிவதில்லை. ஊகங்களும், குறைபட்ட புரிதல்களைக் கொண்டிருக்கும் அனுபவங்களும் நிகழ்காலம் என்கிற புத்தம் புதிய குழந்தையைக் கண்டு கொள்வதில் குளறுபடிகளை உண்டு பண்ணுகின்றன. எனவே இன்றின் இன்பம் நமக்கு முழுவதுமாக கிடைக்காமல் போகிறது. நேற்றின் துன்பத்தைக் கண்டு சூடு கண்ட பூனையின் மனநிலைக்கு ஆளாகிறோம். இங்கே மனம் நம்முடைய மாஸ்டராக கையில் பிரம்புடனும் கொந்தளிக்கும் வார்த்தைகளுடனும் சதா முன்னே நிற்கிறது. கண்காணிக்கிறது. வழிகாட்டிச் செல்கிறது. கட்டளை இடுகிறது.
யோகம் நம்பிக்கையை பரிந்துரைப்பதில்லை. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சமமான நிகழ்வுகளே. கடவுளை நம்பும் ஆத்திகரும், கடவுளை மறுக்கும் நாத்திகரும் சமமான பின்விளைவுகளை உண்டு பண்ணும் சக்திச் சீற்றத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகரும் எதிர் திசைகளில் பயணித்தாலும் நம்பிக்கை என்கிற மையப்புள்ளியில் அவர்களின் முளைக்குச்சி அடித்து நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவநம்பிக்கையும் ஒரு நம்பிக்கையே. யோகம் இவற்றைத் தாண்டியது. யோகத்திற்கு எதிர்காலம் கிடையாது என்பதால் நம்பிக்கையும் இல்லை. நம்பிக்கையின் பொன்னுலகமாக எதிர்காலம் உள்ளது. எனவே எதிர்காலத்தை விட்டொழிக்கும் முகாந்திரமாக நம்பிக்கையை கைவிடலும் அமைகிறது. யோகம் வாழ்ந்து பெறும் அனுபவத்தின் சாரமாக உள்ளது. உண்மை நிலையை நம்பிக்கையின் பேரால் நினைப்பது அல்ல. அனுபவத்தின் வழியாக உணர்ந்து கொள்வதே யோகத்தின் முறையாக உள்ளது என்கிறார் ஓஷோ. ஞானத் தேடலில் துல்லியமான கணித வாய்ப்பாட்டைப் போல பதஞ்சலியின் யோக முறை உள்ளது. இரண்டும் இரண்டும் நான்கு என்பது எத்தனை உறுதியானதோ அதைப்போல. பதஞ்சலிக்கு முன்னரோ பின்னரோ உண்மையை அடைவதற்கு இத்தனை துல்லியமான கணக்குகளுடன் ஒருவர் தோன்றியிருக்கவில்லை. ஞானம் அடைதல் ஒரு சூதாட்டமல்ல என்பதற்கு பதஞ்சலியும் அவரின் யோக மார்க்கமும் ஒரு அத்தாட்சி என்கிறார் ஓஷோ.
