4.அசோகமித்திரனின் ஆண்கள் பெண்கள் குழந்தைகள்- திரு.பரசுராமய்யர்

அசோகமித்திரனின் படைப்புகளில் விடுதலை குறுநாவல் பரிபூரணம் நிறைந்தது. காவியங்களின் ஆதார குணங்களை கொண்டிருக்கும் குறுநாவல் அது. அறம் பொருள் இன்பம் வீடுபேறு என்கிற நான்கு வாழ்க்கைக் கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதில் வெற்றி பெற்ற மனிதராக பரசுராமய்யர் மகிழ்ந்திருக்கிறார்.

நவீனத்துவ எழுத்தாளர்களில் அசோகமித்திரனே முதன்மையானவர். சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் போன்றோரிடம் காணப்படாத வாழ்வின் அர்த்தம் என்ன? என்கிற தத்துவார்த்த தேடல் கொண்ட கதாப்பாத்திரங்களை அதிகம் எழுதியுள்ளவர் அசோகமித்திரன். பம்பீனா என்கிற சேரிப்பெண் ஆங்கிலத்தில் ஆன்மீக உரையாற்றும் ஜே.கிருஷணமூர்த்தியை தேடி வந்து கேட்கிறாள். அசோகமித்திரனின் அத்தனைப் பாத்திரங்களிலும் அவரின் சாயல்கள் தென்படும். அசோகமித்திரனின் நடையுடை பாவனைகளை அவர்கள் கொண்டிருப்பார்கள். அசோகமித்திரனைப் போல அவரின் கதாப் பாத்திரங்களும் கனவான்களாகவும், சகல சங்கடங்களையும் முணுமுணுத்து பொறுத்திருப்பவர்களாகவும், தனக்குள் தானே சகித்துக் கொண்டிருப்பவர்களாகவும், எதையும் ஆர்ப்பாட்டமின்றி மிக இயல்பாக கடந்து செல்லக் கூடிவயர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக வாழ்வின் மீதான சஞ்சலங்களை எதிர்கொண்டு தத்தளிக்கும் கதாப்பாத்திரங்கள் அனைவருக்கும் சில  பொதுவான அம்சங்கள் ஒத்துக் காணப்படும். தனக்குள்ளேயே தத்துவ விசாரம் மேற்கொள்ளும் இயல்பு அவர்களின் மையச் சரடு. அது நினைவோடை உத்தியாக புனையப்பட்டிருக்கும்.

அசோகமித்திரனின் கலையை மினியேச்சர்களின் உலகம் என்றும் வரையறைத்துக்கொள்ளலாம். எவ்வளவு பெரிய கொந்தளிப்பும் மிக சாதாரண ஓர் அன்றாடக் காரியத்தைப்  போலத்தான் விவரிக்கப்பட்டிருக்கும். உணர்ச்சிகள்  வெளித்தெரியாத வண்ணம் அல்லது உணர்ச்சிகளை அளந்து வெளிக்காட்டும் சுய தணிக்கை கொண்டவர்களாக அவரின் கதாப்பாத்திரங்களின் இயல்புகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். பரசுராமய்யரின் கடைசி கந்தல்துணியையும் கடல்நீர் பாய்ந்து வந்து உருவிச் சென்றுவிட மல்லாந்து வானம் பார்த்து மகிழ்ந்திருக்கும் பரவச நிலையை அசோகமித்திரன் “பரசுராமய்யர் தனக்குள் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தார்” என்றுதான் எழுதுகிறார். மல்லாந்திருப்பவரின் எதிரே ஒட்டுமொத்த நீலவானம். அகண்ட முடிவற்ற பெருவெளி. அலைத்து நுரைக்கும் ஆழியின் அருகாமை. நிர்வாணக்கோலத்தில் தன்னை மறந்த லயிப்பு. விடுதலையின் பறத்தல் என்கிற நிலையை அசோகமித்திரன் துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தார் என்று இரண்டு சொற்களில் கட்டிப் பறக்கவிட்டுவிடுகிறார்.

விடுதலை குறுநாவல் ஐம்பது வயதினை அடைந்த ஒருவனின் ஆன்மீகத் தேடலை மையக் கருவாகக் கொண்டுள்ளது. விட்டு விடுதலை ஆகும் பெறுவாழ்வை சித்தரிக்கிறது. வாழ்வின் மீதான விருப்பங்கள் தீர்ந்து  போன பிறகு ஒருவருக்கு எஞ்சுவது என்ன? என்கிற ஆதார கேள்விக்கான விடையாக பரசுராமய்யரின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.

பரசுராமய்யர் ஐம்பதை நெருங்கியவர். இருபத்தைந்து வருடத் தாம்பத்யமும், அதன் விளைவாக உண்டான ஒன்பது குழந்தைகளும் அவரின் வாழ்வினை நிர்ணயிப்பவையாக இருந்து வந்துள்ளன. அலுவலகம் செல்வது, குழந்தைகளைப் பேணுவது, குடும்பக் கடமைகளை சீராகச் செய்து முடிப்பது என்று சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீரென ஏற்பட்ட ஒரு இழப்பு அவரை  முற்றாக நம்பிக்கை வறட்சிக்கு ஆட்படுத்திவிடுகிறது. அவரால் அந்த இழப்பினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முற்றாகக் கைவிடப்பட்ட நிலையை உணருகிறார்.

ஒவ்வொரு நாளும் எவ்விதம் தொடங்கச் சாத்தியமோ அதே போன்றுதான் அன்றும் ஆரம்பம் ஆகிறது. விடிந்ததும் வீட்டுத்தேவைகளுக்காக அடிபம்பில் தண்ணீர் அடிப்பதில் கதை தொடங்குகிறது. ஆறு மணிக்குத்தான் குழாயில் தண்ணீர் வருகிறது. அதை சேகரிக்க ஒரு மணி நேரம். அதன்பிறகு குழந்தைகளை குளிப்பாட்டுவது, தொடர்ச்சியாக வீட்டுச் சாமான்கள் வாங்கிவர கடைக்குச் சென்றுவருவது என ஒரு நாளின் அதிகாலை தொடர் நெருக்கடிகளைக் கொண்டிருப்பது. எட்டே முக்காலுக்கு அவர் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். பத்து  மணி அலுவலகத்திற்கு அந்த நேரத்தில் கிளம்பினால்தான் சரியாகச் சென்றடைய முடியும்.  கிடைக்கும் மிகக் குறைந்த நேரத்தில் சுடச்சுட சோற்றைப் பிசைந்து குழம்பும் ரசமும் ஒன்றாகக் கலந்து அவசரமாகச் சாப்பிட்டு முடித்து வியர்க்க விறுவிறுக்க அவர் பஸ் நிறுத்தத்தைச் சென்றடைகிறார்.

வெளி உலகம் அதன் இரும்பு விதிகளில் எந்தவித நெகிழ்வுகளையும் கொண்டிருக்கவில்லை. அன்றும் அந்தப் பிச்சைக்காரன் பரசுராமய்யரைத் தேடி வந்து பிச்சைக் கேட்டுவிட்டு –அவன் கடமை முடிந்த திருப்தியில் –  அவன் இடத்திற்கு சென்று  அமர்ந்துகொள்கிறான். பரசுராமய்யரைப் பார்த்ததும் மணி ஒன்பதாயிற்றா என்று பட்டாணிக்கடலைக்காரன் தவறாமல் கேட்கிறான். பரசுராமய்யருக்கு அது ஒருவிதமான கிண்டல் என்று தோன்றி ஆத்திரத்தைக் கிளப்புகிறது. அவர் அவன் அவ்விதம் மணி என்ன என்று கேட்ட பிறகுதான் பாக்கெட் கடிகாரத்தைத் தேடி எடுத்து சாவி கொடுக்கிறார். வீட்டில் வைத்து அதைச் செய்ய அவருக்குத் தோன்றுவதில்லை. நேரமும் கிடைப்பதில்லை. உண்மையில் கடலைக்கடைக்காரன் மணி கேட்ட பிறகுதான் பாக்கெட் கடிகாரம் இருக்கும் நினைவே அவரில் எழுகிறது. அன்றாடம் நிகழும் வாடிக்கைதான். ஆனால் அன்று அதுவே உச்சபட்ச எரிச்சலையும் கோபத்தையும் பரசுராமய்யரிடத்தில் உண்டாக்கிவிடுகிறது. அவரால் எந்தவிதத்திலும் எதிர்வினையாற்ற முடிவதில்லை. மௌனியாக பேருந்து வரும் வரை சகித்துக் கொண்டிருக்கிறார்.  அக்கணமே துாக்கில்  தொங்கி தற்கொலை செய்துகொண்டுவிடலாமா என்று தோன்றுகிறது. நாள்பட்ட அழுத்தம் உண்டாக்கும் உடனடி விளைவெண்ணம். அதற்கு அங்கே சாத்தியம் இல்லை என்பதால் பஸ்சின் கைப்பிடியில் தொங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறார் என்று அசோகமித்திரன் எழுதுகிறார்.

இரண்டரை ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாத பயண விதிகள். மாநகரப் பேருந்தின் சக பயணிகளைப் பார்க்கிறார். அவர்களை அவர் ஆண்டு முழுக்க அதே கோலங்களில் கண்டுகொண்டுதான் இருக்கிறார். ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய தனித்துவ அடையாளங்கள் வழியாக அவரின் நினைவில் நிற்கிறார்கள். அதில் ஒருவர்தான் இரக்கம் கொள்ளும்படியாக  தோற்றம் அளிக்கும் பள்ளிக்கூட வாத்தியார். அவரைப் பார்க்கும்போதெல்லாம்  தோன்றும் எண்ணந்தான் அன்றும் தோன்றியது. அது அவர் வண்ணாரிடமிருந்து சலவைக்கு கொடுத்து வாங்கும் தோய்த்த துணிகளைக் கூட கசக்கித்தான் அணிந்துகொள்கிறாரோ என்ற சந்தேகம்.

பயண நெரிசலில் இடிபடுகிறார். சாலையில் குறுக்கே பாய்ந்த கால்நடையொன்றினால் பயணிகள் முன்னே சாய்கிறார்கள். உடனே பின்னாலும் வந்து மோதுகிறார்கள். முன்னே நின்ற பயணி ஒருவர் பரசுராமய்யரின் கால் விரலை மிதித்து நசுக்கிவிடுகிறார். ஒருவழியாக நிறுத்தம் வந்து இறங்கியவர் கால் விரல்களை நீவி விட்டுக்கொண்டு – அதன் வலியைக் கூட பொருட்படுத்தி முதலுதவி செய்து கொள்ள நேரம் இல்லாமல் –  குடல் தெறிக்க அலுவலகத்தை நோக்கி ஓடுகிறார். அங்கே ஆறுமாடி கொண்ட வளாகத்தில் லிப்டிற்காக பெருங்கும்பல் காத்திருக்கிறது. அதில் அவர் செல்ல வேண்டியது நான்காம் மாடியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு.  அலுவலகத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் லிப்டிற்காக காத்திருக்கிறார்கள். அவர் படிக்கட்டுகளின் வழியாக ஓடி ஏறுகிறார். அலுவலகத்தை அடைந்த போது ஏற்கனவே அனைவரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் போல அன்றும் அவர்தான் கடைசி வருகை.

பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் ஒரே நாளில் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்த நண்பர்தான் சிவஸ்வாமி. முன்பு இருவரும் அருகருகே வாடகைக்கு குடியிருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவஸ்வாமி குரோம் பேட்டையில் சொந்தவீடு கட்டிக்கொண்டு சென்றுவிட்டார். சிவஸ்வாமி அன்றும் பரசுராமய்யரிடம் வீட்டு மனை ஒன்று இருக்கிறது வந்து பார்க்கிறாயா? என்று அக்கறை காட்டுகிறார். பரசுராமய்யரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. காசிக்கு தீர்த்தயாத்திரை சென்றிருக்கும் அம்மா திரும்பி வந்ததும் கேட்டு விட்டுச் சொல்கிறேன் என்கிறார். ஐம்பது வயதான பிறகும் அவரால் சுயமான முடிவுகள் எடுக்க முடியவில்லை. குடும்பக் காரியங்களை அவர் ஒருவர் என்றுமே முடிவு செய்துவிட முடியாது. அதன் சாமர்த்தியங்கள் அவரிடம் இல்லை. அல்லது அவராக தேர்வு செய்தவை அவருக்கு அளித்த ஏமாற்றங்கள் அவரை எப்போதும் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கின்றன.

சிவஸ்வாமி பரசுராமய்யரின் இயலாமையைக் கண்டு சினங்கொள்கிறார். ”நீ உறுப்பட மாட்டாய்” என்று  நேராகவே சபித்துச் செல்கிறார். தன்னிடத்தில் அமரச் சென்ற பரசுராமய்யரைத்தேடி பியூன் வருகிறான். அவனுக்கும் அவரிடத்தில் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. எப்போதும் அந்தக் காரியத்தைச் சுணங்காமல் செய்து கொடுக்கக் கூடிவயராகத்தான் அதுநாள் வரை அவர் இருந்திருக்கிறார். ஆனால் அன்று அவர் அதை மறுத்து விடுகிறார். பியூனின் மச்சினனுக்கு அலுவலகத்தில் கடன் வாங்குவதற்கான விண்ணபத்தை எழுதித் தர அவர் அன்று மெனக்கெடவில்லை. பியூன் அவர் காதுபடவே “இந்த பாப்பானுக்கு திடீர்னு என்ன வந்தது?” என்று  திட்டுவிட்டுச் செல்கிறான். அத்தனை நாட்களாக அவர் செய்துவந்த உதவிகள் அனைத்திற்கும் அன்று அர்த்தம் இல்லாமல் ஆகிவிட்டது.

ஆபிஸ் பையன் பரசுராமய்யரை டிபுடி தனது அறைக்கு வரச்சொல்கிறார் என்பதைத் தெரிவிக்கத்தான் வந்தவன். அவரிடம் விண்ணப்பம் எழுதி வாங்கும் எண்ணமும் உடனே தோன்றிவிடுகிறது. பரசுராமய்யருக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கால்வலி உண்டு. முன்பெல்லாம் அவர் தனது முதல் மகன் பாபுவை கால்வலித் தைலம்  தேய்த்துவிடச்  சொல்வார். இப்போது அவனும் வளர்ந்து விட்டான். இரண்டாவது மகள் சரோஜா கேட்டுக்கொண்டால்  செய்வாள்தான். ஆனால் அவள் பூஞ்சை. அவளுக்கே அதன்பின் வலியைப் போக்க எண்ணெய் தேய்த்துவிட வேண்டியிருக்கும். அப்படி கால்வலி உள்ளவரைத்தான் டிபிடி தனது அறைக்குள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைக்கிறார். அவரைப் போன்றவர்தான் என்றாலும் சிவஸ்வாமி நாற்காலியில் அமர வைக்கப்படுகிறார். நின்றுகொண்டிருக்கும் பரசுராமய்யரைப் பார்த்து சிவஸ்வாமி சங்கடப்பட்டாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. அலுவலகத்தில் பரசுராமய்யரின் இடம் ஒருவிதத்தில் நமக்கு உணர்த்தப்பட்டுவிடுகிறது.

கதை  நெடுக பரசுராமய்யர் என்கிற கதாப்பாத்திரங்களின் குண இயல்புகள் மிக நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. அன்று மாலை ஏழு மணியைப் போல வீடு திரும்புகிறார் பரசுராமய்யர். வீடு அன்று பார்த்து பூட்டிக்கிடக்கிறது.  ஒன்பது நபர்கள் இருக்கும் வீடு அப்படி ஒருநாளும் சாத்தியிருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணந்தான் அவருக்கு முதலில் தோன்றுகிறது. அவரின் அம்மா காசிக்குச் சென்றிருக்காவிட்டால் வீட்டின் கதவு சாத்தியிருக்க வாய்ப்பே இல்லை. முன்னும் பின்னுமாக நான்கு வீடுகள் கொண்ட வளாகத்தின் பின் புற வீட்டின் வாசலின் முன் சென்று நிற்கிறார். உள்ளே இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “சார்..சார்.” என்று அதிகம் ஒலியெழுந்துவிடாத வண்ணம் கூப்பிடுகிறார். அப்போதுதான் அவருக்கு தான் அதுவரை பின் வீட்டுக்காரரின் பெயர் என்ன என்பதைக் கூட  தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்கிற வருத்தமும் சங்கடமும் ஏற்படுகிறது. உள்ளே அவரின் குரல் கேட்கப்படவில்லை. உரையாடல்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பட்டணத்து வேலைக்காரிகளின் திமிர்ப்பிடித்த நடத்தையில் ஆரம்பித்து கடை ரொட்டியைச் சுண்டல் பண்ணும் பக்குவம் வரை விரிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் சோர்ந்துவிடுகிறார். வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தோடு திரும்பும்போதுதான் அந்த பின்வீட்டுக்காரர் – ஆவடியில்  வேலைக்கு செல்கிறவர் என்பதால் ஆவடிக்காரர் – எதிரே வந்து நிற்கிறார். அவருக்கு பரசுராமய்யரை உடனே தெரிந்துவிடுகிறது. வீட்டிற்கு உள்ளே வந்து காபி  சாப்பிட்டுவிட்டுப்போக அழைக்கிறார். பேச்சரவம் கேட்டு உள்ளே இருந்தவர்கள் வெளியே வருகிறார்கள். பரசுராமய்யர் அப்பெண்கள் இருவரையும் மிகச்சிறிய நேரம் என்றாலும் நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார். ஆவடிக்காரரின் மனைவிக்கு நெற்றியின் முன்பகுதியில் நரைத்து இருக்கிறது என்கிற சித்திரம் கூட துல்லியமாக நினைவில் பதிந்து விடுகிறது. அவர் மனைவி அடுத்த தெருவில் ஒரு சீமந்த வீட்டிற்குச் சென்றிருக்கும் தகவலை அப்பெண்கள் அவரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பூட்டியிருந்த வீடு திறந்திருக்க பரசுராமய்யர் உள்ளே நுழைகிறார். அவருடைய ஒன்பதாவது குழந்தை ஜம்பு ஓடிவந்து அவரின் கால்களைக் கட்டிக்கொள்கிறாள். குழந்தைகளின் உலகம் அவரை பாய்ந்து வந்து அரவணைக்க முயல்கிறது. பரசுராமய்யர் அதிலும் ஆர்வம் இழந்தவராக இருக்கிறார். ஜம்புவை விலக்கி வைத்துவிட்டு உடைமாற்றச் செல்கிறார். அதற்குள் அவரின் கடந்த காலத்தில் குழந்தைகளின் பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும் பாடுகளும் நினைவு கூரப்படுகின்றன. அவர் குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் ஸ்கார்ப்பியன் பைட் என்கிற ஈரல் குலைக்கட்டி நோய் வந்துவிடுகிறது. அது ஆளைக்கொல்லும் கொடிய நோய். பிள்ளைகளைத் தோளில் போட்டு ஒவ்வொரு மருத்துவமனையாக அவர் ஏறியிறங்கியிருக்கிறார். நகரத்தில் உள்ள அத்தனை மருந்துக்கடைகளுக்கும் அதற்கான மருந்து வாங்க அலைந்து திரிந்திருக்கிறார். குணப்படுத்த முடியாத நோய்க்கு பிறந்த நான்கு ஆண் குழந்தைகளில் இரண்டைப் பலி கொடுத்திருக்கிறார். பரசுராமய்யரின் வருகையினால் அதுவரை ஆரவாரித்துக்கிடந்த வீடு இயல்பாக அமைதிக்குத் திரும்புகிறது. மனைவி தர்மாம்பாள் அவருக்கான தேவைகளை கவனிக்க ஆரம்பிக்கிறாள். குழந்தைகளை அதற்கான ஏற்பாடுகளில் பிரித்து அனுப்புகிறாள். ஆனால் அவருக்கு அன்று காபி, சாப்பாடு எதுவும் தேவையில்லை. உடனே படுத்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. மனைவிக்குப் பயந்து எதையாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம். இல்லையென்றால் ஏன் சாப்பாடு வேண்டாம் என்பதற்கான காரணங்களைக் கேட்டு அவரின் மனைவி நச்சரிக்க ஆரம்பித்து விடுவாள். ஒரு கட்டத்தில் அம்மாவும் மனைவியும் ஒரே மாதிரியாகி விடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்.

பரசுராமய்யருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அன்று அவள் சென்று வந்த சீமந்த வீட்டைப் பற்றிய பேச்சு நடக்கிறது.  வீடு சாத்தியிருந்ததனால் பின் வீட்டில் அவர் விசாரிக்கச் சென்றதை அவர் சொல்கிறார். அப்போது அவரின் மனைவி அவரிடம் கேட்கிறாள். “ஜயம் பின் வீட்டில்தானே இருக்கிறாள்” என்று. ஜயம் அவரின் ஆறாவது பெண். இரண்டாம் வகுப்பினை அடுத்த தெருவில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்காக யாரும் பெரியதாக அக்கறைகள் கொள்ளத் தேவையில்லாதவள். சமர்த்தாக பள்ளி சென்று மதிய உணவிற்காக வீட்டிற்குத் திரும்பி, உண்டு முடித்து மீண்டும் பள்ளி சென்று வரக்கூடியவள். அன்று அவள் பள்ளி சென்று திரும்பிய பிறகு வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் தர்மாம்மாள் எண்ணிக்கொண்டிருக்கிறாள். ஜயம் தொலைந்து போய்விட்டாள் என்று தேடி அலைய நேரிட்ட போதுதான் அன்று நடந்த அத்தனை அழுத்தங்களும் பரசுராமய்யரின் மீது ஒரு மலையைப் போல வந்து அமர்கிறது.  அவரை நெக்குறுகச் செய்கிறது. அவரின் நம்பிக்கையை முற்றாக வடிந்து போகச் செய்துவிடுகிறது. அவரின் அன்றாடத்தின் ஒருநாள் அன்று வழக்கத்திற்கு மாறாக முடிந்துவிடுகிறது.

இரண்டாம் அத்தியாயத்தில் பம்பீனா அறிமுகம் ஆகிறாள். அவள் சேரியில் வசித்து வருபவள். சேரிவாழ் மக்களின் வாழ்க்கையை மிகச் சுருக்கமாக அசோகமித்திரன் பதிவு செய்துவிடுகிறார். அங்கே மீறப்படாத எந்தவிதிகளும் இல்லை. பம்பீனா பரசுராமய்யர் மகள் ஜெயலெட்சுமி படித்த ஆரம்ப பள்ளியின் தற்காலிக ஆசிரியர். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாக பம்பீனாவிடம் விசாரிக்க வருகிறார் பரசுராமய்யர். அவர் வரும்போதே அவரிடம் இரண்டு வாய்ப்புகள்தான் மீதம் எஞ்சியிருந்தன. அவற்றில் கடைசிக்கு முந்திய முயற்சி பம்பீனாவிடம் விசாரிப்பது.

பம்பீனாவின் படிப்பும், அவள் ஆங்கிலத்தில் உபதேசம் கேட்க ஆலமரத்தடி சத்சங்கத்திற்கு சென்று திரும்புவதும் அவளின் அம்மாவிற்கு உவப்பானவை அல்ல. அம்மாவின் மீது மகளுக்கும் மகளின் மகிழ்ச்சியின் மீது அம்மாவிற்கும் துளி அளவுகூட அக்கறைகள் இருக்கவில்லை. பம்பீனாவின் அப்பாவுடன் இடையில் வந்து சேர்ந்து கொண்டவள்தான் இப்போதிருக்கும்  அவளின் அம்மா. அவளுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். அவன்தான் பம்பீனாவின் அண்ணன் அந்தோணி. அவர்கள் மூவரும் சேர்ந்துதான் அந்த சேரியின் விதிகளை மீறி தன்னிச்சையாக முளைத்திருக்கும் குடிசையில் வசித்து வருகிறார்கள்.

பம்பீனாவைத் தேடி பரசுராமய்யர் வருவதற்கு முன்னர் சேரிக்குள் ஒரே அடிதடி. பம்பீனாவின் கைப்பையில் இருந்த அரையணாவை அவளின் அம்மா எடுத்து அந்தோணிக்கு சினிமாவிற்குச் செல்ல கொடுத்துவிடுகிறாள். இதனால் அம்மாவிற்கும் மகளிற்கும் வாய்ச்சண்டை. அது ஒருவரை ஒருவர் தலையைப் பிடித்து தள்ளிக்கொள்ளும் கைகலப்பு நிலைக்கு நீடிக்கிறது. அந்தோணி பம்பீனாவிடமிருந்து அம்மாவை பாதுகாக்க அடிக்கப் பாய்கிறான். அவர்களின் குடிசையின் முன்னால் கும்பல் சேர்ந்துநின்று வேடிக்கைப் பார்க்கிறது. பரசுராமய்யரின் வருகையினால் அந்தச் சந்தடிக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. பம்பீனாவின் அம்மாதான் முதலில் பரசுராமய்யரை எதிர்கொண்டு விசாரிக்கிறாள். பரசுராமய்யர் தனது மகள் ஜயம் பள்ளி சென்று திரும்பவில்லை. தொலைந்து விட்டாள் என்பதை கவலையோடு சொல்கிறார். பம்பீனா அவளின் அம்மாவின் துடுக்குத்தனமான கேள்விகளால் கடும் எரிச்சல் அடைகிறாள். அம்மாவை அங்கே இருந்து விரட்டிவிடுவதில்தான் குறியாக இருக்கிறாள். அவர்களின் சண்டையைப் பார்த்த பிறகு பரசுராமய்யருக்கே தான் இங்கே வந்திருக்கக் கூடாதோ என்ற ஐயம் தோன்றிவிடுகிறது. பம்பீனாவும் அவளின் அம்மாவும் அவருக்கு ஆறுதல்கள் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். பஸ் ஏற நிறுத்தம் சென்ற பரசுராமய்யர் பலகீனமாகி ஒரு குவியலைப்போல கீழே சரிந்து விழுகிறார். அங்கே தனது நண்பன் கண்ணுசிங்கைப் பஸ் ஏற்றிவிட சேர்ந்து வந்த டிரைவர் முருகையனுக்கு முதலில் ஒரு பெரியவர் குடிபோதையில் அலைபாய்ந்து தள்ளாடிக்கொண்டிருப்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. அவர் நினைவிழந்து கீழே விழும்போது தொடையால் அவரை ஏந்திப்பிடித்து துாக்கும்போதுதான் அவர் சோர்வடைந்து சுய நினைவினை இழந்திருக்கிறார் என்பதே புரிபடுகிறது. சேரியில் அவரை பம்பீனாவுடன் பார்த்த நினைவில் முருகையன் பரசுராமய்யரை மறுபடியும் பம்பீனாவின் குடிசைக்கே கொண்டுவந்து சேர்த்துவிடுகிறான்.

பம்பீனா  சொல்லியனுப்பியதன் பேரில் பரசுராமய்யரின் குடும்பம் அண்டை வீட்டார் அலுவலக நண்பர் சிவஸ்வாமி ஆகியோர் சேரியைத் தேடி வருகிறார்கள். சரோஜாவும், தர்மாம்மாளும் அவரை வீட்டிற்கு வரச்சொல்லி கெஞ்சுகிறார்கள். பின் வீட்டுக்காரரான ஆவடிக்காரருரம் அவரின் மனைவியும் கூட அவரை மீட்டுச் செல்ல அங்கே வந்திருக்கிறார்கள். பாபுவை அப்பாவைக் கூட்டிச் செல்ல ஒரு கார் ஏற்பாடு செய்து வரக்கேட்டுக்கொண்டு பரசுராமய்யரைக் கிளம்பச் செய்யும் முயற்சியில் இறங்குகிறார் சிவஸ்வாமி.  அவரின்  தொடர்ந்த கேள்விகளுக்கு உடனே எதிர்வினையாற்றாத பரசுராமய்யர்  “நீயுமா என்னைக் கட்டாயப்படுத்துகிறாய்? என்று குழப்பமே இல்லாத தெளிவுடன் கேட்கிறார். ஒரு கண நேரத் திகைப்பிற்கு பிறகு சிவஸ்வாமிக்கு தெளிவாகப் பரசுராமய்யரின் மனநிலை என்ன என்பது புரிந்து விடுகிறது. பாபு அழைத்து வந்த காரில் மனைவி குழந்தைகளை ஏற்றி வீட்டிற்குச் செல்லக்  கேட்டுக்கொண்டு அவரும் ஆவடிக்காரருமாக பஸ் ஏறிவிட பஸ் நிறுத்தத்திற்கு செல்கிறார்கள். அவ்விதம் பரசுராமய்யர் சேரி வாசியாக பம்பீனாவின் அண்டை வீட்டுக்காரராக அமர்ந்துவிடுகிறார்.

பரசுராமய்யர் மனச் சமாதானம் அடைந்த பிறகு சேரியில் இருந்தபடியே அலுவலகம் சென்றுவர ஆரம்பிக்கிறார். அவ்விதம் அலுவலகம் கிளம்பிய ஒரு நாள் அவர் அடையும் உலகியல் உண்மை அவரை மேலும் பக்குவம் கொள்ளச் செய்கிறது. அது ஒரு வேலைநாளின் எட்டு மணி காலை நேரம். அவர் ஏறிய நகரப்பேருந்து மற்றொரு நகரப்பேருந்தின் பின்னால் மறைந்து மறைந்து செல்கிறது. முன்னே செல்லும் பேருந்தும் அந்தப் பேருந்தும் ஒரே இடத்திற்குச் சென்றாலும் முன்னே உள்ள பேருந்தினை முந்திச்செல்ல வாய்ப்பிருந்தும் அவ்வாறு செல்லாத வண்ணம் ஓட்டுநரும் நடத்துநரும் நடந்து கொள்கிறார்கள். பஸ் நிறுத்தம் வந்த போது பஸ்ஸை நிறுத்துவதைப்போல மெதுவாகக் கொண்டு நிறுத்தி யாரும் ஏறுவதற்கு முன்பே வண்டியை விசில் ஊதி கிளம்பச் செய்து விடுகிறார்கள். பயணிகள் கூட்டமாக ஏறிவிடக்கூடாது என்கிற ஒரு நோக்கம்தான் அவர்களுடையது. அலுவலக நேர நெருக்கடியிலும் பேருந்து காலியாக இருப்பதை அவர்கள் விரும்பினார்கள். உள்ளே ஏற்கனவே இருந்தவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும்  வெளியே பஸ்சிற்காக காத்திருந்தவர்களுக்கு அது தர்மசங்கடம். ஒரு நிறுத்தத்தில் பஸ் ஆய்வாளர் வண்டியை நிறுத்தி காத்திருந்தவர்களை ஏறச் சொல்கிறார். இரண்டு பெண்மணிகள் ஓடிவந்து ஏறுகிறார்கள். இளம் வயது பெண் உடனே ஏறிவிடுகிறார். வயதான அம்மாவால் இரண்டாவது படியில்தான் காலை வைக்க முடிகிறது. அதற்குள் நடத்துனர் விசிலை ஊதிவிட பஸ் சுண்டிப் பாய ஆரம்பிக்கிறது. நல்ல வேளையாக அங்கே நின்றிருந்த பரசுராமய்யர் அந்தப் பெண்மணியைப் பிடித்து உள்ளே இழுத்து விடுகிறார். ஒல்லியான உடம்பில் இருந்ததால் அவரால் சுலபமாக அவளை விபத்தில் இருந்து காபந்து செய்துவிட முடிகிறது. இந்த நிகழ்ச்சியினால் ஆத்திரம் கொண்டு பரசுராமய்யர் நடத்துனரிடம் சண்டைக்குப் போகிறார். நடத்துனருக்கு தான் செய்த தவறு தெரிந்திருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் நல்லெண்ணம் இருக்கவில்லை. அவன் பரசுராமய்யரின் மீது எரிந்து விழுகிறான். அடிக்க கையை ஓங்கி கத்துகிறான். திடீரென அங்கே ஒரு சண்டை வெடிக்கிறது. ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பஸ்ஸை நிறுத்தி விடுகிறார். நடத்துனர்தான் முதலில் பாய்ந்து சென்று புகார்  சொல்கிறான். ரைட்டர் வந்து பஸ்சில் விசாரிக்கிறார். பரசுராமய்யரை முறைத்துக்கொண்டு அவர் எப்போதும் பெண்கள் பகுதியில்தான் முன்னால் சென்று நிற்பார் என்று புகார் வைக்கிறான். மேலும் கண்டக்டரின் சட்டைப்பிடித்து இழுத்தான் என்று குற்றச்சாட்டு வைக்கிறான். ஒருமையில் பேசி ஏசிக்கொள்கிறார்கள். பரசுராமய்யரின் தார்மீகத்திற்கு அங்குள்ளவர்களில் எவராவது ஆதரவளிப்பார்கள் என்ற அவரின் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. உள்ளே அமர்ந்திருந்தவர்களுக்கு அவர்களின் அவசரம். அத்தனைப்பேரும் கடிகாரத்தைப் பார்த்து நெளிந்துகொண்டு இருக்கிறார்கள். ரைட்டர் சமாதானம் செய்து பஸ்ஸை அனுப்பி வைக்கிறார். “பப்ளிக் சர்ண்ட் கிட்ட சர்வண்ட் கிட்ட நீங்களும் முறையா நடந்துக்கணும். அவன் நம்ம பையன், நல்ல பையன். என் பேச்சைக் கேட்பன். வேறெ யாருகிட்டயும் சட்டையைப் பிடிக்கிற வழக்கத்தை வெச்சுக்காதிங்க?” என்று பரசுராமய்யருக்கு ஆலோசனை வேறு. பரசுராமய்யர் ஒன்றும் பதில் பேசவில்லை. பஸ் கிளம்பியதும் உள்ளே ஏறி நடத்துனர் வேண்டுமென்றே அவரை இடித்துவிட்டுச் செல்கிறான். இறங்கி நடந்துசெல்லும்போது பரசுராமய்யரிடம் ஒருவர் அருகில் வந்து நலம் விசாரிக்கிறார். அவரும் அந்த பஸ்சில்தான் வந்திருக்கிறார். பரசுராமய்யர் சங்கடப்பட்டு நின்றிருப்பதைப் பார்த்தும் அந்த மனிதர் அவருக்கு துணையாக எதுவும் பேசிவிடவில்லை. எல்லாருக்கும் அவரவர்பாடுகள்தான் முக்கியம். யாருக்கு என்ன வந்தாலும், யார் அநீதியால் பாதிக்கப்பட்டாலும் தங்கள் தலைக்கு வராதவரை அது ஒரு பொருட்டே அல்ல. இந்த சிறிய சம்பவத்தின் மூலம் பரசுராமய்யர் அடையும் நடைமுறை ஞானம் அவரை வேறொரு பக்குவத்தினை அவருக்கு அளிக்கிறது. உலகத்தைத் திருத்த முயற்சிப்பது வீண்வேலை என்கிற முடிவிற்கு அவர் வந்தடைகிறார்.

ஆறுமாத சேரி வாழ்க்கை. அலுவலகம் செல்லும் பழக்கத்தை இன்னும் பரசுராமய்யர் கைவிட்டுவிடவில்லை. ஐம்பது ரூபாயை மட்டும் சம்பளத்தில் இருந்து தனக்காக எடுத்து வைத்துக்கொண்டு மீதிப்பணத்தை வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார். அவரின் முதல் மகள் சரோஜாவை அவரின் அலுவலகத்தில் தட்டச்சர் பணியிடத்தில் சிபாரிசு செய்து சேர்த்துவிட்ட பிறகு அலுவலகத்தையும் அவர் துறந்துவிடுகிறார். ஒரே ஒருமுறை அவர் இடையில் தன்னுடைய வீட்டிற்கு சென்று திரும்பினார். அது எல்.ஐ.சி.யின் முதிர்வுத் தொகையினை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்  பொருட்டு. வீட்டிற்குள் செல்லத் தயக்கம் கொண்டவராக வாசலில் நின்று கொண்டு பெட்டியில் இருக்கும் புத்தகக் கட்டுகளைத் தேடி எடுத்து வருமாறு தன் மகள்களிடம் கேட்கிறார். மகள்களால் அதைக் கண்டறிய முடியாமல் போனபோது அவரே அறைக்குள் சென்று தேடி எடுக்கிறார். அவளுடைய மகள்களில் ஒருத்தியான பாலா அவரின் கால்களைக் கட்டிப்பிடித்து தனக்கு பேனா வாங்கித்தாப்பா என்று கேட்கிறாள். குழந்தைகளுக்கு அவரின் துறவு இன்னும் பிடிபடாமல்தான் இருக்கிறது. குழந்தைகளின் வ ழியாக சம்சார உறவு அவரை மீண்டும் பிணைத்துப்போட விரும்புகிறது. சாப்பிடும் போது அம்மாவின் கண்களை ஒருமுறை நேருக்கு நேர் பார்க்கிறார். அதனால் எல்லாம்  அவர் உள் உடைவினை அடையவில்லை. சாப்பிட்டு மௌனமாக வெளியே கிளம்பும்போது அவரின் அம்மா அவரை வழி மறிக்கும் விதமாக “நீபாட்டுக்கு எங்கேயோ ஒரு பறச்சேரியிலே உக்காந்துட்டா  மத்தவா காரியம் எல்லாம் எப்படி? என்று கேட்கிறாள். “ உன் பிள்ளை பூணுாலுக்கு என்ன ஏற்பாடு பண்ணப்போற” என்றும் நினைவுப்படுத்துகிறாள். அம்மாவின்  கேள்விகளைக் கேட்டவாறு பரசுராமய்யர் திடமான சிந்தனையோடு கிளம்பி வெளியே வருகிறார். அன்றைய வெளியேற்றம் அவரை முற்றாக குடும்பத்தை சுய நீக்கம் செய்தவராக உறுதி கொள்ளச் செய்கிறது.

வீடு, மனைவி, மக்கள், சமூக மதிப்பு என ஒவ்வொன்றையும் துறந்து விட்டு விடுதலையான பரசுராமய்யரின் கடைசித் தளை பெண்ணுடல். பம்பீனாவின் மீது அவருக்கு உள்ளார்ந்த ஈடுபாடு இருக்கிறது. அதுதான் அவரை அங்கே கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. பறச்சேரி என்று அம்மா திட்டினாலும் அவருக்கு புத்தியில் உறைப்பதே இல்லை. பம்பீனாவின் குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் பரசுராமய்யருக்கான புதிய குடிசை தயார் ஆகிறது. பம்பீனாவின் அம்மா அவருக்கான உணவுகளை உண்டாக்கித் தருகிறாள். பம்பீனாவின் பொருட்டு அவர் அந்தோணிக்கும் ஒரு வேலைக்கான வாய்ப்பினை உண்டாக்கித் தருகிறார். பம்பீனாவின் ஆசிரியர் பணியை மீண்டும் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை அவர் விருப்பத்தோடு மேற்கொள்கிறார். அதன்பொருட்டு தனது  அலுவலக நண்பர் சிவஸ்வாமியிடம் பேசி தலைமை செயலகத்தில் கல்வி அமைச்சரின் உதவியாளர் வரை சிபாரிசு பெறுகிறார். விண்ணப்பத்தை எழுதவும், அதைக்கொண்டு வந்து கல்வி அமைச்சரிடம் சேர்க்கவும்  அவர் பம்பீனாவைக் கேட்டுக்கொள்கிறார். முன் அனுமதி பெற்று பரசுராமய்யர் அலுவலக நேரத்தில் தலைமைச் செயலகத்திற்கு முன்னே வந்து பம்பீனாவின் வருகைக்காக காத்திருக்கிறார். அன்று பம்பீனா அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக வராமல் இருந்துவிடுகிறாள். அவருக்கு அவள் வராததற்கான காரணங்கள் பிடிபடுகின்றன.

அதற்கு முந்திய நாள்தான் அவர் அவளிடம்தன் விருப்பத்தை குறிப்பாக உணர்த்திருப்பார். அது ஒரு காதல் காட்சி. மிக நுட்பமாக அசோகமித்திரன் அத்தருணத்தை மிகக் குறைந்த சமிக்ஞைகள் கொண்டு உணர்த்தியிருப்பார். மனு எழுதியதை சரி பார்த்துக்கொண்டிருக்கிறார் பரசுராமய்யர். அருகில் பம்பீனா நின்று கொண்டிருக்கிறாள். அவள் நீட்டிய நோட்டில்இருந்து நான்காக மடித்து வைக்கப்பட்ட ஒரு கடிதம் தரையில் விழுகிறது. அதனை உடனே எடுத்து உள்ளங்கைக்குள் கசக்கி மறைத்துக்கொள்கிறாள் பம்பீனா. பரசுராமய்யர் அவளிடம் தன் காதலைச் சொல்லும்விதம் அபாரமானது.

“உன்கிட்டே சில நல்ல குணங்கள் இருக்கு. நல்ல குணங்கள்னு சொல்ல மாட்டாங்க நல்ல வாசனைகள் இருக்கு. அந்த வாசனைகளை வளர்த்துக்கொண்டே போனல் நம்மைக் கஷ்டப்படுத்தும் ஆத்திரம், எரிச்சல், பொறாமை இதெல்லாம் படிப்படியாகக் குறையும்னு சொல்வாங்க. நான் இங்கே வந்து, திருப்பி வீட்டிக்குப் போகாமே தங்கிப் போனதுக்குக்கூட எனக்கு அப்படி ஏதாவது காரணந்தான் சொல்லிக்க முடிகிறது”

பரசுராமய்யர் சொல்லி முடித்ததும் சேரியின் பல குடிசைகளில் சிறு சிறு விளக்குகள் ஏற்றப்பட்டு கண் சிமிட்டுகின்றன.  அந்த விளக்கு வெளிச்சத்தில்  பெரிய சாலையில் எதையோ பார்த்து அக்கணமே பம்பீனா கிளர்ச்சி அடைகிறாள். அவளுக்கான பரவச கணமாக அத்தருணம் அமைந்து விடுகிறது. “நீங்க போயிட்டு வாங்க” என்று அவள் அவரை அனுப்பிவிட்டு தன்குடிசைக்குச் சென்று அரையும் குறையுமாகத்  தெரிந்த வெளிச்சத்தில் ஒரு முறை தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சரிசெய்துகொள்கிறாள். அவளும் வெளியே கிளம்புவதன் வழியாக அவளுக்கான தேடல் யார் என்பது தெரிந்து விடுகிறது. அவளுக்காக தோன்றி மறையும் அப்துல் காதர் அங்கே காத்திருக்கிறான்.

சில மாதங்களில் அவர் முற்றாக துறவுக்கோலம் பூண்டுவிடுகிறார். மாதத்தில் ஒருநாள் மதியம் ஒரு மண்டபத்தில் நடக்கும் அன்னதானம் மட்டுமே அவரை அவரின் உறவினர்கள் சந்திக்கும் இடமாக இருக்கிறது. அப்படி ஒருநாளில் சாப்பாட்டு பந்தி நடந்துகொண்டிருக்கும்போதே சரோஜா அவரைப் பார்க்க வந்துவிடுகிறாள். சரோஜா அப்பாவின் அலுவலகத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்த பணிக்கு சென்று வருகிறாள். அவளும் திடம் அடைந்துவிட்டாள்.  அவரின் உறவுகளில் சரோஜாதான் கடைசி வரை அவரை விடாப்பிடியாக விரட்டிக்கொண்டிருக்கிறாள்.  அவரை எப்படியாவது வீட்டிற்கு திரும்ப அழைத்துப்போய்விடவேண்டும் என்கிற ஆசையோடு இருக்கிறாள். அன்றும் அவள் அப்பாவைப் பார்த்து கண்கலங்கி அழத்தொடங்குகிறாள். அம்மாவைப் பார்க்க அப்பா வீட்டிற்கு வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். ஆனால் பரசுராமய்யர் அவருக்கு தன் நிலையைப் புரிய வைக்கிறார்.

“சில விஷயங்களுக்கு நாம் காரணம் கேட்டுத்  தெரிந்துகொள்ள முயற்சிப்பதே வீண். பார்க்கப்  போனால் பெரிய ஆபத்து என்று தோன்றினால் ஒழிய  ஆகிற காரியங்களை ஆகிற வழிப்படியே விட்டுவிடுவதுதான் சரி ”

மகளின் அழைப்பையும் தடுமாற்றம் இல்லாமல் அவரால் நிராகரித்து விட முடிகிறது. கடற்கரையை நோக்கி அவர் செல்கிறார். வழியில் அவருக்கு அறிமுகம் ஆன பெண் ஒருத்தி தோளில் கைக்குழந்தையைச் சாத்தி வெயிலில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். யார் என்று அவருக்கு தெரிந்தாலும்  அவளையும் கடந்து செல்ல முயல்கிறார். அப்போது அந்தப்பெண்ணே அவரை வழி மறிக்கிறார்.

“இந்தாங்க..பாக்காதது மாதிரியே..போயிடுறீங்களே..” என்ற பம்பீனாவின் குரல் அவரை நிற்கச் செய்கிறது.

“என்ன இப்படி ஒரேயடியா துரும்பா? இப்போ எங்கே இருக்கறீங்க…இன்னும் வீட்டிற்குத் திரும்பலயா?

பரசுராமய்யர் சிரிக்கிறார்.

பம்பீனா அப்பவும் அவரை “நம்ம வீட்டுப்பக்கமாவது வரக்கூடாதா?” என்று அழைப்பு விடுக்கத்தான் செய்கிறாள். அப்துல்காதர் ஒரு குழந்தையைக் கொடுத்து விட்டு காணாமல் ஆகிவிடுகிறான். அவள் அவனால் கைவிடப்பட்டு குழந்தைக்காக அவளின் அம்மாவிடமும் அந்தோணியிடமும் சரண் அடைந்து விடுகிறாள். அவளுக்கு ஒரு ஆண் துணையாக பரசுராமய்யர் இருந்துவிட்டால் ஆறுதலாக இருக்கும். அவர்  ஆசைப்பட்ட அவளின் அருகாமைக்கான வாய்ப்பு பரசுராமய்யருக்கு அப்போது மீண்டும் கிடைக்கிறது.

பரசுராமய்யருக்கும் பம்பீனாவிற்கும் இடையே அந்த கடற்கரை மணலில் நடக்கும் உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.

“உனக்கு உன் சூழ்நிலையையும் மீறிய சில நல்ல வாசனைகள், குணங்கள் இருந்தது. நான் எதுக்கு எப்படி அந்த இடத்திலேயே தங்கிப் போயிட்டேன்னதெரியலை. என் வீடு, என் குழந்தைகள் பற்றிக் கவலை அதிகம் வரவில்லை. வந்தாலும் என்னை உபத்திரவப் படுத்தவில்லை. ஆனால் உன்னை விசேஷமாக மாற்றிவிட வேண்டுமென்று ஒரு வேகம் வந்தது. மந்திரியைப் பார்க்க உன்னை வரச்சொல்லிவிட்டு செக்ரட்டேரியட் வராண்டாவில் உனக்காக நான் காத்திருந்த போது நீ ஒரு அப்துல் காதரைத் தேடிக்கொண்டு போனது எனக்குத்தெரிந்த போது கஷ்டமாகத்தான் இருந்தது”

பரசுராமய்யர் கடல்  மணலில் இறங்கி நடந்து செல்கிறார். அவருக்குள் கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. எது அவசியம் என்று  அவர் தன்னிடம் கேட்டுக்கொள்கிறார். மண் மீது படுத்துக்கொள்கிறார். அப்போதும் அவர் மனது இந்த மண்ணுக்கு நல்ல வாசனை என்றுதான் எண்ணந்தோன்றுகிறது.

”எனக்கு எல்லா அவசியங்களும் போய்விட்டன. கடைசியாக எங்கோ மூலையில் அடைத்துக்கொண்டிருந்ததைக் கூட இப்போது சொல்லித் தொலைத்தாகி விட்டாயிற்று.” எவ்வளவு ஆனந்தமான விடுதலை.

ஒருவரை நம்பி இன்னொருவர் இல்லை என்கிற தரிசன வரிகளோடு பரசுராமய்யர் நம்மிடம் இருந்து விடைபெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *