உயிர்ப்பின் வெக்கை

சு. வேணுகோபாலின் ‘மாயக்கல்’ சிறுகதை வாசிப்பனுபவம்

பிற அனைத்தையும் விட தொடர்ச்சியாக நம் மொழிக்குள் பெரும்படைப்பாளிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதற்காகவே நாம் தற்பெருமை கொள்ளலாம். உண்மையில் இந்த உலகத்திற்கு உரக்கச்சொல்ல நமக்கு வாய்த்திருக்கும் ஒரே ஒரு மொழிசார்ந்த பெருமை இதொன்றே.  சங்க இலக்கியத்தின் அறுபடா நீட்சி. என்மனார் புலவர் என்பதை எண்ணினால் காலம் இன்னும் முன்செல்லக்கூடும். இவ்வளவு பழமையோடு செழுமையான இலக்கியப்படைப்புக்கள் உடைய வேறு மொழி ஒன்றும் இல்லை என்றுதான் – அது பிழையாக இருப்பினும்கூட சொல்லத்தோன்றுகிறது.

வாசிப்பின் ருசி அறியா பெருங்கூட்டத்தை தவிர்த்துவிட்டு ரசனை சார்ந்து வாசிப்போரை மூன்று விதங்களில் அடுக்கலாம். சங்கஇலக்கியம் துவங்கி தனிப்பாடல்கள் வரை மட்டுமே இலக்கியம் என்று நம்பி அவற்றை  பாலபாடம் செய்யும் மரபான வாசகர்கள். இவர்களுக்கு நவீன இலக்கியம் என்பவை கற்சிலைகள் போன்றவை. பார்க்க கட்டுக்கோப்பும் கச்சிதமும் உடையவைதான். ஆனால் அவற்றிற்கு உயிர் இல்லையே என்ற மனோபாவம். நவீன வாசகர்களுக்கு சங்க இலக்கியம் காட்டிற்குள் தனித்திருக்கும் யானையைப்போன்றவை. தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கலாம். அருகில் செல்வதற்கான துணிச்சல் இருப்பதில்லை. சொற்பெருக்கெனும் பிலங்களில் நுரைக்கும் பேராழி.

லட்சிய வாசகர்கள் என்போர் மூன்றாம் விதத்தினர். சங்கஇலக்கியம் முதல் இன்றைய இளம் படைப்பாளி வரை தேடித்தேடி வாசிப்போர். நான் என்னை ஒரு லட்சிய வாசகனாக நீட்டிக்கும் விழைவு கொண்டிருப்பவன். புதிதாக எழுதவருகிறவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பும் சிறப்பாக எழுதிக்கொண்டிருப்பவர்கள் மேல் தீராக்காதலும் பேணுபவன். பாரதியில் துவங்கி ஒவ்வொரு தலைமுறைக்கும் என்னைக் கவர்ந்த படைப்பாளிகளின் பட்டியல் உண்டு. புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலான் தி.ஜானகிராமன்,  முதல் தலைமுறை என்றால் அசோகமித்ரன் சுந்தர ராமசாமி, கு்அழகிரிசாமி, கி.ரா என்ற அடுத்த தலைமுறை. தொடர்ச்சியாக நாஞ்சில்நாடன், வண்ணதாசன், பூமணி, பிரபஞ்சன் என்ற வரிசை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஸ்ணன், சாரு நிவேதிதா, எம்.யுவன் சந்திரசேகர், அ.முத்துலிங்கம், கோணங்கி போன்று அண்ணாச்சி தலைமுறையாட்கள். இன்றைய படைப்பாளிகளில் சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், எஸ்.செந்தில்குமார், கீரனுார் ஜாகீர்ராஜா, போகன் சங்கர், என்.ஸ்ரீராம்  என்று நீளும் கண்ணிகள். இவை படைப்பின் ருசி சார்ந்து தன்னியல்பாக எழுந்துவளர்ந்தவை.

சு.வேணுகோபால் மிகத்தேர்ந்த கதைசொல்லி. அவர் படைப்புக்களை சிறுசிறு சொற்சிற்பங்களாக நினைவில் நிறுத்திக்கொள்வேன். மாமனார் மீதான காதலை தொட்டி நீரள்ளித்தெளித்து குறிப்புணர்த்தும் மருமகளை ஒருநாளும் மறந்துவிட முடியாது என்னால். அக்கா அவுங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்லலையா என்று கேட்டு தலைகுனிந்து நிற்கும் அண்ணணை என்னசெய்வது. ”இதுக்கு மட்டுந்தான் நீயா? என்று இயங்கிக்கொண்டிருக்கும் கணவனைக்கேட்டு கொலைவெறியேற்றும் வனிதா யாராக இருந்தால் என்ன ? ஆணாக தருக்கித்திரிவதன் அவலத்தை உணர்த்தியவள் அவள் அல்லவா? காட்டுநெல்லியைப் போன்ற கதைத்தருணங்கள். வாழ்வின் நீர்மை பாயும்தோறும் பீச்சிப்பரவும் இனிப்பின் ஊற்று.

மாயக்கல் விளிம்பின் விளிம்பில் வாழநேர்ந்த மூக்கம்மா எனும் தாயின் கதை.  பெத்தனன் திருட்டுபழி சுமத்தப்பட்டு காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்படுகிறான். அவனுடன் அவன் தாய் மூக்கம்மாவையும் இழுத்துச்செல்கிறார்கள். அவனும் திருடக்கூடியவன்தான். ஆனால் அந்தத்திருட்டுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை. காவல்துறையினர் மிதித்துக்கேட்கக் கேட்க தனக்கு தெரியாது என்று உண்மையைச் சொல்கிறான். விசாரணை உத்தியாக தாயைப் புணரவைத்து வதைக்கிறார்கள்.

மரத்திருட்டிற்காக சாமத்தில் புளியமரத்தினை ரம்பம்கொண்டு அறுக்கும் பிச்சைக்கு ஆத்திரம் மண்டிய உறுமலாக ஒலிக்கிறான் பெத்தனன். தீக்குச்சி கிழித்து அறுத்த வேர்ப்பகுதியைப் பார்த்தால் இளங்குருதியின் மினுக்கம். அந்த புளியமரத்தில்தான் புழுத்து ஊன்சொட்டிய தசைக்கூட்டமாக கயிற்றில் தொங்கிய பெத்தனனை முதலில் பார்த்தவன் பிச்சை. அவனால் அங்கே நிற்க முடியவில்லை. ஒருநாளும் இதைப்போன்ற சம்பவத்தை அவன் கண்டதில்லை. உயிர்பயம் பிடித்தாட்ட பாய்ந்தோடுகிறான்.

சு.வேணு தான் எழுதத்தேர்ந்துகொண்ட கதாபாத்திரத்திற்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்து கொஞ்சக்காலம் வாழ்ந்துவிடுவார்போலும். மூக்கம்மாவின் நினைவோடையில் பன்றிகளும் பீக்களும் மிதந்துவந்து நம்மை உரசிச்சொல்கிறார்கள். வீடுகள்தோறும் கழிவறைகள் பெருகி அதிகாலைகளில் செப்டிங் டேங்களில் வந்துவிழும் பீ மீது வருத்தம்தான் அவளுக்கு. பன்றிகளின் பசியறிந்தவளுக்கு வேறு எவ்விதம் என்னத்தோன்றும்? பன்றிகளுக்கு தீனி வாங்க  வங்கிகளில் கடனா கோரமுடியும் அவளால்.

வெள்ளிக்கிழமையின் ஓர் இரவில் பதினைந்து வயது பெத்தனன் பிடறியில் அறைந்து வண்டியில் ஏற்றப்படுகிறான். பெத்தனன் அதற்கு ஆறுமாசம் முந்திதான் ஒரு களவுக்கேசில் மாட்டி சின்னாபின்னமாகி ஐநுாறு அபராதம்கட்டி சத்தியம் செய்து வெளியே வந்திருந்தான். அவன் உண்மையில் அதன்பின் திருந்தியிருந்தான்.

புனைவு என்றாலும் நம்பமுடியாமல் அரற்றிக்கொண்டேதான் இக்கதையை வாசிக்க முடிந்தது. மனிதக்கீழ்மையின் ஆகக்கொடுமையான சித்தரிப்பு. மகன் முன் தாயைக்களையச்செய்து கூடக் கட்டாயப்படுத்துகிறார்கள். அதன்பின் அவர்களின் முறைவரிசை.

பெத்தனன் வெளிவந்த உடனே அரளிக்கொட்டையை அரைத்து குடிக்கிறான். சந்தர்ப்பவசமாக காப்பாற்றிவிடுகிறார்கள். இப்படி ஒரு நெருக்கடி நிகழ்ந்தபின் அவனால் மனக்கோணல் இன்றி ஜகத்தினை அழித்திட எழும் உக்கிரவேட்கையின்றி உயிர்வாழ்ந்திட முடியுமா என்ன?

மூக்கம்மாவையும் வழிமறித்து பிணைய முயலும், அவளிடம் கண்டஇடத்திலும் மிரட்டி பணம்பறிக்கும் வெங்கடநாயக்கர் என்றொரு சித்திரம்.

வாரிக்கரையில் நின்ற பரவுகாவல்கார பொம்மையனின் ” ஏய்..மூக்கம்மா” குரல்கேட்டு ரோட்டு கட்டுக்காப்பில் நின்றாள்.

”பதினஞ்சு ரூவா கேட்டேனே.என்ன?

இதென்ன சாமி ஏழைபாளைகிட்டே போயி?

”அப்ப மந்தக்கொளத்துக்கு பன்னிய கொண்டு வராத”

”மந்தக் கொளத்தில பரம்பர பரம்பரையா விட்டுருக்கோம் சாமீ..பீ திங்கிற பன்னிக்கி புதுசா காசு கேட்டா எப்படி சாமி..பீக்கும் காசா?

அம்மாவிற்கு புளியமரமாக வாழந்துகொண்டிருக்கும் மகனைச்சென்று பார்த்துவிடும் ஆசை. .ஏறுவெயிலில் புளியமரத்தை நோக்கி நடக்கிறாள். மதிய வெயிலில் பொய்க்குதிரை பூமிக்குமேல் நெளிந்தது.கட்டி அணைக்க  முடியாத அடிமரத்தில் நெஞ்சைச் சாய்த்ததும் கண்கள் கலங்குகின்றன. ”மகனே” என அழைத்து கையெடுத்துக்கும்பிட்டு வீடு திரும்புகிறாள். மிஷ்கினின் பிசாசு படத்தில் மகளைப்பார்த்து கையெடுத்துக்கும்பிட்டு கதறியழும் ராதாரவியைப்போல.

மகன் பேயாகி விட்டானா? தெய்வமாக வில்லையா? என்றுதான் அவன் புளியமரத்தில் வாழ்ந்துவருவதைப்பற்றி முதலில் கேட்டபோது அவளுக்குத் தோன்றுகிறது. ஆற்றாது அழுத கண்ணீரோடு புளியமரத்தில் உறைந்திருக்கும் பெத்தனன்.

மூக்கம்மாவின் கனவில் அன்றிரவும் பெத்தனன் கூகையாக வந்து மாயக்கல் இருக்கும் இடம் சொல்லி மறைவதாக கதை முடிகிறது. தப்புகள் அனைத்தையும் பிறர்காணாமல் மறையச்செய்யும் மந்திரக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *