கவிஞர் க.சுப்பிரமணியன் தென்காசி மாவட்டம் புளியங்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இருபதாண்டுகளாக பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகிறார். கலாபாரதி, சூர்யன் என்ற பெயர்களில் வெகுஜன இதழ்களில் நிறைய எழுதியவர் இன்று தன் சொந்தப் பெயருக்கு வந்து சேர்ந்திருக்கிறார். மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு சென்னையில் வசித்து வருகிறார். தற்போது நக்கீரன் பத்திரிகையில் உதவி ஆசிரியர் . இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புக்களை மின் நுால்களாக வெளியிட்டுள்ளார். அவை வெளி வந்து ஓராண்டு கூட நிறைவடையவில்லை. நீண்டகாலமாக கவிதையோடு புழங்கிக்கொண்டிருந்தாலும் தொகுப்பாக வெளிவந்தது சமீபத்தில்தான். காப்க்கா போன்ற ஆளுமை. எழுத்தை பிழைப்பின் ஊர்தியாகக் கொண்டவர்.
பேரிடர்களின் பருவம் அவரின் முதல் கவிதைத் தொகுதி. முத்தப்பிசுக்கு இரண்டாம் தொகுதி. கவிதைகள், சிறுகதைகள் எழுதியதோடு மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்டவர். இதுவரை நான்கு மொழிபெயர்ப்பு நுால்கள் வெளிவந்துள்ளன. அவை முறையே ‘ஹாருகி முரகாமியின் நோர்வீஜியன் உட் , பாவ்லோ கோலோவின் பதினோரு நிமிடங்கள், அலெக்சாண்டர் சோல்செனிட்சின் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள் ஆகிய நாவல்கள் மற்றும் ஒற்றை ஓநாய் -ஜாக் லண்டனின் வாழ்க்கை வரலாறு. மின் அஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு ஒரு கட்டுரை வடிவில் பதில் அளித்துள்ளார். இனி அவரின் சொற்கள்.
திட்டமிட்டெல்லாம் எனது இலக்கிய ஆர்வம் அமையவில்லை. அப்பாவின் காலம் வரை, எனது வீட்டில் தினமணியும், தினமலரும் தொடர்ந்து வாங்கப்பட்ட செய்தித்தாள்கள். அதில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும், சிறுவர் மலரின் கதைப் பகுதிகளும் என் வாசிப்புக்கான வாசலாக அமைந்தன.
வாசல் தாண்டியபோது அது நேராக நூலகத்தை நோக்கியதாக இருந்தது. நூலகத்தில் கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா என பல்வேறு சிறுவர் இதழ்கள் இருந்தன. கூடவே ஆனந்த விகடன், குமுதம், கல்கி, இதயம் பேசுகிறது உள்ளிட்ட பல்வேறு வெகுஜன இதழ்கள். நூலகத்திலே அமர்ந்து தெனாலிராமன், பீர்பால் உள்ளிட்ட சிறுவர் கதை நூல்களைப் படிக்கவும் வாய்ப்பிருந்தது. சில நண்பர்களின் வீடுகளில் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ்கள் கிடைத்தன.
கூடவே க்ரைம் நாவல்களின் உலகத்துக்கு அறிமுகமாகி ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். பதின்பருவத்தின் தொடக்கத்துக்கு அந்த நாவல்கள் பொருத்தமாக இருந்தன.
புத்தகம் கிடைத்தால் படித்துமுடித்துவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டு எழுந்திரிக்கும் பழக்கமிருந்தது. என்னை விட மூத்தவர்கள் எல்லாம் ஒரு பக்கத்தைப் படிக்க தண்ணீர் குடித்து மூச்சுவாங்கி நின்றபோது, நான் இயல்பாக படித்துக் கடந்துவந்தேன். அது தன்னம்பிக்கையளிப்பதாக இருந்தது.
நண்பன் ஒருவனின் அண்ணன் பலசரக்குக் கடையில் வேலைபார்த்து வந்தார். கடையில் பார்சலுக்கு வரும் மாலைமதி நாவல்களை வீட்டுக்கு படிப்பதற்காக எடுத்துவந்துவிடுவார். நண்பனுடன் இருக்கும் அணுக்கத்தால், அந்த நாவல்களை அவரது வீட்டிலேயே வைத்து படித்துவிட்டுக் கொடுத்துவருவேன். இப்படியே நூலகத்தில் சாண்டில்யன், ஜெயகாந்தன் வரை வந்தாயிற்று.
ஊரில் என் வாசிப்புப் பழக்கத்துக்கு துணையாக வந்த நபர்தான் இராயகிரி சங்கர். லயன் காமிக்ஸ் படிப்பதற்கு நண்பன் ஒருவன் 25 காசு, ஐம்பது காசு வசூலிப்பான். அதுபோல ஆரம்பத்தில் சில முறை நாம் சேர்த்துவைத்த நாவல்களை ஓ.சி.யில் படித்துப்போவதா என க்ரைம் நாவல்கள் வாசிக்க சங்கரிடம் ஒரு ஐம்பது காசோ, ஒரு ரூபாவோ வசூலித்திருக்கிறேன். பின்னால் இரண்டு பேரும் புத்தக விவகாரத்தில் பரஸ்பரம் கொடுக்கல்- வாங்கலில் இறங்கியதால், அந்த சில்லறை ஆதாயங்களை எதிர்பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்.
பள்ளிப் பருவமெல்லாம் முடிந்த காலகட்டத்தில் பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் அறிமுகமாகி கொஞ்ச காலம் பாலகுமாரன் நாவல்களாக தேடிப்பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். பாலகுமாரன் நாவல் பக்கம் திரும்பிய நேரம், பாலகுமாரன் ஆன்மிகம் பக்கம் திரும்பி ஆன்மிக நாவல்களாய் எழுதித்தள்ள ஆரம்பித்திருந்தார். தேவகியின் கதை, பஞ்ச பாண்டவர்களில் நகுலன் சகாதேவன் கதையையெல்லாம் வைத்து நாவல்கள் எழுதித் தள்ளினார். அப்படி ரெண்டு நாவல்களை வாசித்துவிட்டு அஜீரணமாகிவிட்டது. சரி, நமக்கு அவர் சரிப்பட்டுவர மாட்டார் என அவரை விவாகரத்து செய்துவிட்டு இருந்தபோதுதான் ஓஷா புத்தகங்கள் அறிமுகமாகி, அவரது நூல்களையெல்லாம் தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட அதே காலகட்டம்தான், எனது அண்ணன் சுரேஷால் ஈர்க்கப்பட்டேன். அவனது தாத்தா வீட்டின் மொட்டை மாடி, தெருவில் பலருக்கும் ஒரு இளைப்பாறுதல் மையமாக இருந்தது. எப்போதும் கவிதைகளும், சினிமா பாடல்களுமாக எழுதிக் குவித்தபடி சினிமா பாடலாசிரியராக மாறுவது என்ற கனவுடன் இருந்தான். நூற்றுக்கணக்கான சினிமா பாட்டுப் புத்தகங்கள் அவன் கையில் இருக்கும். வாலி, வைரமுத்து, புலமைப்பித்தன் என ஒவ்வொருவரின் பாடல் வரிகளையும் அவர்களது தனித்தன்மைகளையும் குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருப்பான்.
சுரேஷ் எனது ஆதர்சமாக இருந்ததற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. வீட்டில் என்னைத் தெருவில் மற்றவர்களுடன் விளையாடுவதற்கே சரிவர அனுமதிக்கமாட்டார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருப்பேன். அப்பாவோ, அம்மாவோ அழைப்பார்கள். தெருவைத் தாண்டி கதர் ஸ்டோர், அரசு உயர்நிலைப்பள்ளி, குளம், கிணறு என்று தெருப்பையன்கள் போகும்போது, என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தவறி யாராவது அழைத்துச்சென்றாலும், விஷயம் தெரிந்ததும் நேராக அம்மா அவர்களது வீட்டுக்குப் போய் அவனை வெளியே எங்காவது அழைத்துப் போகாதீர்கள் என முறையிட்டு வந்துவிடுவார்கள். நான் நீச்சல் பழகுவதற்கே, ரகசியச் செயல்பாடு மாதிரி ஒளிந்து மறைந்து நண்பர்களுடன் போய் பழகவேண்டியிருந்தது.
சனி, ஞாயிறாக இருந்தாலும் காலையில் எழுந்ததும் நேராக தெருவிலிறங்கி விளையாடப் போய்விடமுடியாது. வீட்டில் பிஸ்கெட் பெட்டிகள் வந்து இறங்கியிருக்கும். அவற்றை மாடிக்கு ஏற்றியாகவேண்டும். நோட்டுப் பண்டல்கள் பிற கனமான பெட்டிகளாக இருந்தால், சித்தப்பா பையன்களான அண்ணன்களை எழுப்பிவரச் சொல்வார் அப்பா. அவர்கள் கடையில் பன்னிரண்டு, பதிமூன்று நேரம் வேலைபார்த்துவிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருப்பார்கள். எழுப்புகையில், அவர்கள் முகத்தில் தெரியும் வெறுப்பும், கடுப்புமே எழுப்பச் செல்வதற்கு அச்சத்தைக் கிளப்பும். வேறு வழியில்லை. எழுப்பியாக வேண்டும்.
சில நேரம் வீட்டில் இறங்கியிருக்கும் பொருட்களுக்கு சங்கேத விலைக் குறியீடுகளை அவற்றின் மீது ஒட்டவேண்டும். இப்படி ரகவாரியாக எப்போதும் வேலையிருக்கும். இதைச் செய்துகொண்டிருக்கும் போது தெருவில் பம்பரமோ, கோலியோ, கிட்டிப்புள்ளோ ஆடிக்கொண்டிருக்கும் பையன்களின் உற்சாகக் குரல்கள் எரிச்சலைக் கிளப்பியபடியே இருக்கும்
மறுபடி சுரேஷுக்கு வருவோம். பள்ளிப் பருவம் தாண்டியதும் தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டான் அவன். குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டும்தான் பெரும்பாலும் வீட்டிலிருப்பான். மற்ற நேரங்களில் நண்பர்களுடனே சுற்றித் திரிவான். இரவானால், அவனது தாத்தா வீட்டின் மொட்டை மாடியில் படுத்துறங்குவான். இல்லை ஆஸ்பெஸ்டாஸ் கூரையிடப்பட்ட ஒரு பகுதியின்கீழ் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி கவிதை இரவு இரண்டு மணிதாண்டியும்கூட எழுதிக்கொண்டிருப்பான். ஊரே எழுந்து காலை உணவு முடித்து வேலைக்குக் கிளம்பிய பின்பு மெல்ல மாடியிலிருந்து இறங்கி, குளிப்பதற்கு வீட்டுக்குச் செல்வான். அந்தக் கட்டற்ற சுதந்திரம் எனக்குப் பிடித்திருந்தது.
சித்தப்பாவும், இதற்காக அவனைக் கடிந்துகொள்ளவோ அடிக்கவோ செய்யாமலில்லை. ஒரு கட்டத்தில் தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளையை என்ன செய்வது என அவனது வழிக்கே இறங்கிவந்தார். நான் ஈர்க்கப்பட்டதும் அந்தக் கட்டற்ற சுதந்திரத்தை நோக்கித்தான்.
அவன் எழுதும் கவிதைகளுக்கு உடனடி வாசகனாகவும் இருந்தேன். அவனது அருகாமை என்னையும் கவிதை எழுதத் தூண்டிற்று. வெறும் பாடலாசிரியர் கனவு ஒரு கட்டத்தில், அவனுக்குப் போரடிக்க ஒரு கட்டத்தில் இயக்குநராவது என்ற முடிவுக்கு வந்தான். அண்ணனுக்காக சினிமா கதவு திறக்கும்போது, அவனோடே ஒண்டிக்கொண்டு நாமும் உள்ளே நுழைந்துவிடுவது என்ற கனவில் இருந்தேன். அந்த சமயத்தில் நானும் நோட்டுகள் நிறைய கவிதை எழுதித் தள்ளிக்கொண்டிருந்தேன்.
நல்லவேளை அவற்றை புத்தகமாக வெளியிடவில்லை. ஒரு காலகட்டத்தில் சென்னை வந்தபின் அவற்றின் பெரும்பகுதியைப் பரிசீலித்துவிட்டு பெரும்பாலானவற்றைக் கிழித்தெறிந்துவிட்டேன். ஊரிலிருக்கும்போதே ஆனந்த விகடன், கல்கி, இதயம் பேசுகிறது, சுஜாதா நடத்திய மின்னம்பலம் இதழ், நாவல் லீடர் போன்ற இதழ்களில் கதைகள் பிரசுரமாகி நம்பிக்கை அளித்தன.
என் வீட்டில் கூட்டுக் குடும்பம். அப்பா, சித்தப்பாக்கள் அருகருகேயிருந்த வீட்டில். ஜெனரல் மெர்ச்செண்ட் எனப்படும் நோட்டு, சாக்லேட் உள்ளிட்ட சிறு பெட்டிக் கடைகளுக்கான மொத்த வியாபாரம். முக்கோணம் போல ஒரு காலகட்டம் வரை உச்சத்தை எட்டி சரிவை நோக்கி வியாபாரம் சரிந்துகொண்டிருந்த நேரம். வியாபாரத்தில் துணையாக நான் வரவேண்டுமென அப்பா எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். வியாபாரமோ, எனக்குக் கசந்தது. தூங்கவும் சாப்பிடவும் மட்டும் அனுமதித்துவிட்டு, மிச்சமில்லாமல் மொத்த நேரத்தையும் கேட்கும் தேவதை அது. அதனிடம் என்னை ஒப்புக்கொடுக்க கடைசிவரை தயக்கமிருந்தது.
நான் நினைத்தபடி கடைக்குப் போகாமல் சாதித்தேன் என்றாலும் அதனால் இதுவரை பெரிய ஆதாயமடைந்ததாக நினைவில்லை. அப்பா மரணத்தின் மூலம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். நான் சென்னையில் தஞ்சமடைந்தேன்.
சென்னையில் இருந்த காலகட்டத்தில், மிகச் சில வருடங்களில் என சினிமா கனவு பொசுங்கிவிட்டது. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும், சினிமா கேட்கும் எதையும் மிச்சம்வைத்துக்கொள்ளாத முழு அர்ப்பணிப்பை அளி்க்கமுடியாதெனத் தோன்றியது. ரெண்டாவது கொலைப் பட்டினி கிடந்து வாய்ப்புத் தேடியலைய முடியாது. அதைத் தாண்டிதான் நான் ஆனந்த விகடனில் எழுதிய கன்னத்தில் அறைந்தாலும் சிறுகதை, பாலுமகேந்திராவின் கதைநேரத்தில் தேர்வுசெய்யப்பட்டு ஒளிபரப்பாகியது. அதுதொடர்பாக இரண்டு முறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னால் ஒரு சமயம் அண்ணன் சுரேஷ், உன்னோட கதையை உனக்குக் காட்டறதுக்கு ஆட்டோவில் ஏத்தி கூட்டிட்டுப் போனதுதான் வெற்றிமாறன் என்றார். நாவல் இரட்டையர்களான சுபாவுடன், ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சில காட்சிகளுக்கு வசனம் எழுதினேன். ஏதோ ஒரு காரணத்தால் அந்த சீரியல் முயற்சி முழுமை பெறாமல் ரத்தானது.
அதே சென்னையில் இருந்தபோதுதான், நவீன இலக்கிய அறிமுகமும் லட்சுமி மணிவண்ணன், கோணங்கி, சி.மோகன், எஸ்.ரா. போன்றவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அதே காலகட்டத்தில்தான் சில வேலையிழப்புகள், புதிய வேலைகளுக்கான முயற்சிகளும் நடந்தது.
சென்னையில் ஊடகத்துறையில் நீடித்திருப்பதற்கான சில தகுதிகள் தேவைப்படுகின்றன. தவிர உங்கள் நேரத்தில் பெருமளவை நாளெல்லாம் என்ன நடக்கிறது என அறிவதில் செயல்படவேண்டும். கூடவே ஓஷோ வாசிப்பு வேறு. எல்லாம் சேர்ந்து நவீன இலக்கிய வாசகனமாக மட்டுமே தேங்கிப்போனேன். வாசிப்பும்கூட தொடர்ச்சியாய் அமையவில்லை. பிடித்த சில எழுத்தாளர்களின் படைப்புகளைத் தவிர பெரும்பாலானவற்றை வாசிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நடுவில் கிட்டத்தட்ட விடாமல் வாசித்த எழுத்தாளரென்றால் அது ஜெயமோகன் மட்டும்தான். தற்போது அதேயளவு ஈர்ப்பும் சுவாரசியமும் போகன் சங்கரின் படைப்புகளில் எனக்குத் தட்டுப்படுகிறது.
எனது மொழிபெயர்ப்பு குறித்த ஆர்வம், பெரும்பாலும் ஆங்கிலத்தின் மீதான ஈர்ப்பில் வந்ததுதான். அர்த்தம் புரியாவிட்டால்கூட, ஹிந்துவின் பக்கங்களில் வரும் டைகர், பீநட்ஸ் உள்ளிட்ட கார்ட்டூன் ஜோக்குகளை ஆர்வமாகப் படித்துப் புரிந்துகொள்ள முயற்சிசெய்வேன். ஊடகத் துறைக்கு வந்தபோது ஆங்கிலக் கட்டுரைகள், செய்திகள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள தொடர்ந்து வாசிக்க முயற்சிசெய்தேன்.
அதேபோல் ஆலிஸ் இன் வொன்டர்லேண்ட், லேடி சாட்டர்லிஸ் லவ்வர் போன்ற நாவல்களை மிகுந்த ஆர்வத்துடன் அகராதியின் துணையுடன் வாசிக்க முயற்சிசெய்தேன். பெரிய அனுபவமில்லாதபோதும், ஆழி பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பு பணியில் வாய்ப்பளித்தார்கள். அங்கிருந்தபோது கற்றுக்கொண்டது பெரிதும் துணைசெய்தது. சில தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற நூல்களுக்குப் பின் அகல் பதிப்பகத்துக்காக ஜாக் லண்டனின் சரித நூலான ஒற்றை ஓநாயை தமிழில் மொழிபெயர்த்தேன். பின் எதிர் பதிப்பகத்துக்காக பாவ்லோ கோயெல்லோவின் பன்னிரண்டு நிமிடங்கள், ஹாருகி முரகாமியின் நார்வீஜியன் வுட், அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள் போன்றவற்றை மொழிபெயர்த்துள்ளேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு முகநூலுக்கு வந்தபோது, அன்றாட நடப்புச் செய்திகளைத் தரக்கூடியவர்களைத்தான் நண்பர்களாகத் தேர்வுசெய்தேன் பிறகு, இலக்கியத்தின் பக்கம் பார்வை திரும்பியது. இலக்கிய நண்பர்களுக்கு நட்பு அழைப்பு கொடுத்து நண்பர்களாகியபோது, பழைய இலக்கிய ஆர்வம் ஊற்றெடுத்தது. அப்புறம் “நேற்று வந்தவர்களெல்லாம் இலக்கியத்தில் ஏதோ சாதித்துவிட்டார்கள், நாம் எதுவும் சாதிக்கவில்லை”யென்ற இராயகிரி சங்கரின் விடாத அனத்தல்.
அதனால்தான் திரும்பவும் கவிதையில் கைவைத்தேன். எனக்குப் பழக்கமான புதுக்கவிதையின் மொழிதான் திரும்பவும் வந்தது. அதன் சாயலைத் தொலைக்க விடாது போராடவேண்டியிருந்தது. சமகாலத்தில் எழுதும் கவிஞர்களின் தொகுப்புகளை தேடிப்பிடித்து வாங்கி வாசித்தேன். அவர்களை வாசிப்பதால் மட்டும் அவர்களது உலகம் வந்துவிடாது என்பது புலப்பட்டது.
எது என்னால் இயலுமோ அதை எழுத ஆரம்பித்தேன். அந்த எல்லைகளை கடக்க முயல்கிறேன். அமேசான் கிண்டில் இருப்பதால் எளிதாக கவிதைத் தொகுப்பை வெளியிட முடிந்தது. முதல் கவிதைத் தொகுப்பை நான் மட்டுமே காசுகொடுத்து வாங்கினேன். கவிதைத் தொகுப்பின் பிடிஎப்பை சில நண்பர்களுக்கு அனுப்பிவைத்தேன். கிண்டிலில் இலவசம் என அறிவித்தபோது கிட்டத்தட்ட 52 பேர் தரவிறக்கியிருக்கிறார்கள் எனத் தெரிந்தது. அந்த 52 பேர் யார்… அவர்களில் யாருக்காகவது கவிதை பிடித்ததா… பிடிக்கவில்லையா… எதுவும் தெரியவில்லை. இலவசமாக தரவிறக்கிக்கொண்டதற்கு பிடித்தது… பிடிக்கவில்லையென ஒரு வார்த்தை… ம்ஹூம்… இரண்டாவது கவிதைத் தொகுப்பை இலவசமாகக் கொடுப்பதை இந்த நிமிடம் வரை தடுத்துக்கொண்டிருப்பது… இலவசமாக தரவிறக்கிக்கொண்டு ஒரேயொரு வார்த்தைகூட எழுதிப்போட முனையாத அந்த மனப்பான்மைதான்.
முகநூலில் கவிதை எழுதும்போது சில கவிதைகளுக்கு லட்சுமி மணிவண்ணன் விருப்பக் குறியிட்டு, தொடர்ந்து எழுதும்போது உங்களுக்கென ஒரு மொழி உருவாகும் என நம்பிக்கையளித்திருந்தார். ஒரேயொரு கவிதை கவிஞர் இசைக்குப் பிடித்திருந்தது. பாலைநிலவன் இரண்டொரு கவிதைகளை ரசித்திருந்தார். மற்றதெல்லாம் முகநூல் நண்பர்கள் ரசித்ததும் பாராட்டியதும். நவீன கவிதையுலகில் இன்னும் எனது கவிதைகள் செல்லுபடியாகவில்லை… அல்லது கவனம் பெறவில்லை.
எது கவிதையில் தவறுகிறது என நோட்டமிட்டு, தொடர்ந்து எழுதவேண்டியதுதான்.
கவிதைகளை எழுதுவதற்கு நான் திட்டமிட்டு இதைத்தான் எழுதப்போகிறேன் என தீர்மானித்துக்கொண்டு எழுதுவதில்லை. அர்த்தமில்லாமல் இரண்டொரு வார்த்தைகளை தட்டச்சு செய்துகொண்டு செல்வேன். அதை அழித்து இன்னும் இரண்டு வார்த்தைகள். இப்படியே அழித்து எழுதும் விளையாட்டில், எங்கோ ஓரிடத்தில் கவிதை உருப்பெற ஆரம்பித்துவிடும். அபூர்வமாக, ஆரம்பத்திலே என்ன எழுதப்போகிறேன் என்கிற தெளிவுடன் சில கவிதைகளை எழுதியதும் உண்டு.
நவீன இலக்கிய உலகத்தில் ஒரு வாசகனாகவே எஞ்சிவிடப்போகிறோமோ என்ற வருத்தமும் உண்டு. அதேசமயம் அதற்கான விலையைத் தராமல் பொருளை மட்டும் கோருகிறேன் என்கிற தெளிவிருப்பதால், உரிய விலை தரும்போது பொருள் கிட்டும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
ஓஷோ, எந்த இடத்திலே நான் தேங்கியிருந்தேனோ அங்கிருந்து வெகுதூரம் என் சிந்தனையில் பாய்ச்சலை நிகழ்த்தக் காரணமாக இருந்தார். மரபின் சுமை என்ன, கொடை என்ன என்பதைத் தெளிவுறுத்தினார். ஒருவரை ஏற்றுக்கொள்ளும்போதும் அவரது வாதமும், அவரை நிராகரிக்கும்போது அவர் வைக்கும் வாதமும் சுவாரசியமானவை. டஜன்கணக்கான ஆன்மிக குருக்களையும் அவர்களது தனித்துவத்தையும் ஓஷோவின் வாசிப்புதான் எனக்களித்தது. தான் சொல்ல நினைக்கும் இடத்துக்கு, பார்வையாளர்களை அல்லது வாசிப்பவர்களை நைச்சியமாக பேசிப் பேசி அவர் அழைத்துவரும் விதமும் என்னைக் கவர்ந்தவை. உரைகளைக் கேட்பவர்கள் சலிப்படைந்துவிடாமலிருக்க, உரைக்கு நடுவில் அவர் தூவும் நகைச்சுவைகளுக்கு பெரும்பாலானவர்களைப் போல நானும் ரசிகன்.
இந்த பூமியில் பிறந்து எப்போதாவது நாம் எதுவுமே சாதிக்கவில்லை, சல்லிக்காசு கூட சேர்க்கவில்லை என்று மனம் வெதும்பிநிற்கும்போது ஓஷோவை வாசித்தால், இந்த பூமியில் அப்படி சேர்த்து அள்ளிக்கட்டுவதற்கு என்ன இருக்கிறது என்ற நம்பிக்கையை அளிப்பார். ஆனால், அதே மனப்பான்மையை நாம் நமது சோம்பேறித்தனத்துக்கு கவசமாக உபயோகித்துக்கொள்ளவும் நேருமென்பதால் கவனமாக இருக்கவேண்டும்.