சிக்குவும் பல்லுதாத்தாவும்

 

சிக்கு பந்தை கைக்கு கை மாற்றிப் போட்டுக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான். தெருவே மனித வாசம் அற்று பூரணமாக இருந்தது. சிக்கு பந்து விளையாட்டு விளையாட ஆள் தேடிக் கொண்டிருந்தான். அவன் தன் தேடுதல் வேட்டையில் தோல்வி அடைந்து விட்டான் என்று நினைக்கும் தறுவாயில் பல்லு தாத்தா அவன் கண்ணிற்கு அகப்பட்டார். பல்லு தாத்தா திண்ணையில் காலை நீட்டி  சுவரில் சாய்ந்தபடி இருந்தார். காலத்தையும் வெளியையும் தூரப் போ என விரட்டி விட்டு நித்திய சுகத்தை அனுபவித்து கொண்டிருந்தார்.

சிக்கு உற்சாகத்துடன் ஓடிச் சென்று பல்லு தாத்தா முன்னாடி நின்றான்.

“தாத்தா”

அசரவில்லை..

“ஹே.. பல்லு தாத்தா.. வா பந்தாட்டம் வெளாடலாம்” என கத்தினான்

காதுக்கு சுரணை வந்தது. தாத்தா மெதுவாக தலை எழுப்பி சிக்குவைப் பார்த்தார்.

“என்னடா சிக்கு.. வேற யாரும் கெடைக்கிலையா”

“இல்ல தாத்தா.. நீதான் வாயேன்”

“சரி..”

 திண்ணையை விட்டு கீழே இறங்கினார்.

சிக்குவும் பல்லு தாத்தாவும் கொஞ்சம் தூர இடைவெளி விதியை கடைப்பிடித்து நின்றனர். சிக்கு பந்தை தூக்கிப் போட, தாத்தா குனிந்து பிடித்தார். விளையாடிக் கொண்டே அவர்கள் பேச ஆரம்பித்தனர்..

“தாத்தா இவ்ளோ பெரியா ஆளா ஆயிட்டு.. சின்ன பசங்க மாறி பந்து வெளையாட்றியேனு யார்னா கேட்டா என்ன சொல்லுவ”

“கையும் கண்ணும் உறுதியா இருந்தாலே பந்து வெளையாடலாமே.. சின்ன வயசா இருக்கனுமா என்ன? னு கேப்பன்”.

சிக்கு பந்தை விட்டு விட்டான். ஓடிச் சென்று எடுத்துக் கொண்டு வந்தான். விளையாட்டு தொடர்ந்தது..

“தாத்தா..எதுக்கு தாத்தா படிக்கனும்”

” இந்த கேள்விக்கு பதில் யாரும் சொல்லலியா”

“சொன்னாங்க.. “

“என்ன சொன்னாங்க”

தாத்தா சற்று நிமிர்ந்து பிடிப்பதாக சிக்கு பந்தை தூக்கி போட ஆரம்பித்தான்.

“சம்பாதிக்கறதுக்குனு சொன்னாங்க”

“அதுக்காகவும் படிக்கலாம்.. ஆனா உன்ன பத்தி தெரிஞ்சிகறுதுக்கும்.. சுத்தி இருக்கறத பத்தி தெரிஞ்சிகறுதுக்கும்.. ஒலகத்த பத்தி தெரிஞ்சிகறுதுக்கும் தான் படிக்கணும்.. உனக்கு தெரிஞ்சது மத்தவங்களுக்கு எவ்ளோ உபயோகமா இருக்கோ அவ்ளோ பணமும் சம்பாதிக்கலாம்”

“அப்டியா.. ஏன் ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்றாங்க”

“ஒவ்வொருத்தங்க தேவையும்.. ஆசையும் வேற வேறல அதான்.. உனக்கு மிட்டாய் வேணும்னா.. காசெல்லாம் மிட்டாயா தானா தெரியும்.. அந்த மாதிரி தான்”

“உனக்கு காசு என்னவா தாத்தா தெரியும்”

“சில நேரத்துல டீயும் பீடியுமா தெரியும்.. சில நேரத்துல காசே தெரியாது”

“தாத்தா பரமபிரகாசம் இருக்காருல அந்த குடுமி தாத்தா.. ஒரு கூட்டத்துக்கு முன்னாடி வாழ்க்கயோட அர்த்தமும் நோக்கமும் என்னன்னு தெரியுமா?னு கேடுட்டு இருந்தாரு”

“என்ன சொன்னாங்க நம்ம கூட்டம்?”

“தலைய சொறிஞ்சிட்டு இருந்தாங்க.. அவரு மூக்குத்தியோ என்னவோ சொல்லிட்டு இருந்தாரு.. நீ சொல்லு தாத்தா வாழ்க்க அர்த்தமும் நோக்கமும் என்ன? “

“வாழ்க்க அதுபாட்டுக்கு இருக்கட்டுமே.. அதுக்கு ஏன் அர்த்தம் நோக்கம்ங்கற பலுவ ஏத்திகிட்டு”

” அப்றம் சாவ பத்தியும் பேசிட்டு இருந்தாங்க”

“சல்லி பைசாவுக்கு ப்ரோஜனம் இல்ல.. புத்தியுள்ள மனிஷாளுங்களுக்கு வாழ்க்க பத்தின எண்ணம் தான் இருக்கும்.. சாவ பத்திலாம் யோசிச்சுலாம் நேரத்த கடத்தமாட்டாங்க”

” சரி.. சாவுனா என்ன தாத்தா”

” விடிஞ்சுது போ.. வயசு ஆக ஆக அது என்னனு தெரிய வச்சு துக்க தம்பட்டம் அடிக்க வெப்பாங்க.. அதுக்குள்ள மாட்டிக்காத சிக்கு.. அப்றம் அட்ட போல உன் வாழ்கக உறிஞ்சிடுவாங்க”

” என்னமோ தாத்தா.. உன் பல்லு ஏன் இப்டி இருக்கு? “

மனித நடமாட்டம் ஆரம்பித்தது. அவர்களை சுற்றி கூட்டம் கூடியது. ஆனால், அவர்கள் ‘விளையாடி’ கொண்டு தான் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *