அளிக்கப்படுவதெல்லாம் ஒரு கட்டத்தில் அபகரிக்கப்படும் என்கிற பாடத்தை வாழ்க்கை எனக்கு, மிகவும் குரூரமான முறையில், புகட்டி நெடுங்காலம் ஆகிறது. ஏறக்குறைய இழப்புகளுக்கு பழகிப்போனவனாய், எதன்மீதும் பெரிதும் பற்றுப் பாராட்டாதவனாகவே மாறிவிட்டேன். ஆனால் இவ்வளவு பெரிய வீட்டில், எனது மறைமுகத் தோழனாகவும், காப்பாளனாகவும் திகழ்ந்து, அரவணைப்பையும், கதகதப்பையும் வழங்கிய இச்சிறிய அறை ஒருநாள் என்னை பீதியுறச் செய்யும் என்று எவரேனும் சொல்லியிருந்தால் நிச்சயமாக நம்பியிருக்க மாட்டேன். உலகமே திரண்டு நின்று எதிர்த்தாலும் எனக்கான இச்சிறிய மூலையில் நான் பாதுகாப்பாகவே இருப்பேன் என்கிற திடமான நம்பிக்கை கொண்டிருந்தேன். 

இன்று எல்லாம் மாறிவிட்டது.

காரைப் பெயர்ந்த அறையின் மையத்தில் பொன்மஞ்சள் நிற விரிப்புடன் கிடக்கும் கட்டிலின் கீழ் மூச்சிரைத்தபடி படுத்திருக்கிறேன். அடுத்த சில நொடிகளில் நான் கைது செய்யப்படலாம். அல்லது, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வனத்துறை அதிகாரியான மார்ட்டின் துரைராஜ் அவர் வசம் வைத்திருக்கும் கைத்துப்பாக்கியால் என்னைக் கொலை செய்யலாம். எவரும் கேட்கமாட்டார்கள். தாயின் மறைவுக்கு பிறகு முழுநேரக் குடிகாரராய் மாறிப்போன என் தந்தை, நான் செத்துப்போனால் ஒரு சுமை நீங்கியது என்றே நினைப்பார்.

எல்லாம் அறிந்தும் ஏன் அந்தச் செயலை செய்தேன்?

பல தருணங்களில் எனக்குள் அந்த மர்மமான முனைப்பை உணர்ந்திருக்கிறேன். விளையாட்டும், குதூகலமும், இனிமையும் ஒரு உச்சத்தை எட்டும் அந்தக் கணத்தில் இனம்புரியாத ஒரு அதிர்வு என்னுள் குடியேறும். நியாய அநியாய தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு இருண்ட முனைப்பு என்னை ஆட்கொண்டு தாளமுடியாத ஒரு உந்துதலை மூட்டும். கண்ணிமைக்கும் வேளையில் எனது கரங்கள் ஏதேனும் ஒரு விபரீதத்தை நிகழ்த்தியிருக்கும். என்னால் ஒருபோதும் அதை புரிந்துகொள்ள முடிந்ததேயில்லை.

இன்று அனைத்தும் கைமீறிச் சென்றுவிட்டது.

அண்டைவீட்டுக்காரரான மார்ட்டின் துரைராஜ் புதிதாக ஒரு லாப்ரடார் வகை நாய்க்குட்டி வாங்கியிருந்தார். எனக்கு விலங்குகள் புடிக்கும். ஆனால் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை என் தந்தை விரும்புவதில்லை. தாய் இருந்தபோது எங்களுடன் இருந்த ஒரு சிறிய குட்டியை என் தந்தை ஒருநாள் குடிவெறியில் அடித்தே கொன்றார்.

இன்று காலை மார்ட்டின் மாமாவின் நாய்க்குட்டி டைகருடன் அவரது மகள் மேரி எங்கள் வீட்டு முற்றத்தில் ஓடிக்கொண்டிருந்தாள். ஆசையாக இருந்ததால் நானும் அவளுடன் சேர்ந்துகொண்டேன். அவர்களுடன் விளையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் மேரி களைப்புற்று அமர்ந்ததும் நான் டைகரைத் துரத்திக்கொண்டே மாடிக்குச் சென்றேன். வாழ்வில் அவ்வளவு சிரித்து நெடு நாட்கள் ஆகின்றன. அதை நான் உணர்ந்த கணமே என் அடிமனதில் அந்த அதிர்வு மூண்டது. அடுத்த ஐந்து நொடிகளில் என்ன நிகழ்ந்தது என்றே எனக்கு நினைவில்லை. ஆனால் விழிப்புற்று நோக்கியபோது பஞ்சுபோன்ற அந்த லாப்ரடார் குட்டி கீழ்தளத்தில் குருதி வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது.

மேரி அலறிக்கொண்டே மேலே பார்த்தாள். அதுவாகவே குதித்துவிட்டது என்று அக்கணத்தில் தோன்றிய பொய்யை தயங்காமல் சொன்னேன். அழுதுகொண்டே அதை அள்ளியெடுத்து மார்போடு அணைத்தபடி, “அப்பா!” என்று கத்திகொண்டே வீட்டிற்கு ஓடிவிட்டாள்.

என்ன ஆகிறது எனக்குள்? நான் யார்? ஒன்றுமறியாத அந்தக் குட்டியை ஏன் வதைத்தேன்?

யாரோ படியில் தடதடவென ஏறி வரும் ஓசைக் கேட்கிறது. மூங்கில் தடியுடன் தந்தையா? அல்லது துப்பாக்கியுடன் மார்ட்டின் மாமாவா? திடீரென என்னுள் ஒருவித அமைதியை உணர்கிறேன். நான் தண்டிக்கப்படுவதே சரி என்று ஒரு விசித்திரமான உறுதி துளிர்க்கிறது.

என் அறையின் கதவுகள் தட்டப்படுகின்றன. மறுகணம் தடாரென அவை திறந்து கொள்கின்றன.

முகத்தைத் துடைத்தபடி கட்டிலின் கீழிருந்து வெளியேறுகிறேன்.

மேரிதான் வந்திருந்தாள். அவள் கையில் அந்த லாப்ரடார் குட்டி. அதன் தலையில் இருந்த சிறிய வெட்டுக்காயத்தின் மேல் களிம்பு பூசப்பட்டிருக்கிறது. உடைந்த அதன் முன்னங்கால்கள் இரண்டிலும் கட்டுபோடப்பட்டிருக்கிறது.

மேரி “டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். விரைவில் குணமாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவனுக்கு எங்கள் வீடு பிடிக்கவில்லையாம், உங்கள் வீட்டில் உங்களுடன்தான் விளையாட வேண்டுமாம். இந்த அறையின் ஜன்னலைப் பார்த்து அழுதுகொண்டே இருக்கிறான்” என்றாள்.

அதை ஆமோதிப்பதைப்போல் அந்தக் குட்டி என்னைப் பார்த்து வாலாட்டுகிறது. என்னுள் மீண்டும் ஒரு அதிர்வு. பாய்ந்து சென்று பலவீனமான அந்தக் குட்டியை கையில் வாங்குகிறேன். அதன் எச்சில் ஈரத்தை என் முகத்தில் உணர்ந்தபோது அந்த அதிர்வையும் மீறி ஏனோ அழத் துவங்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *