நிழலில் ஒருவர்

சடசடவென விழுந்த மழைக்கு தலை கொடுக்காமல் பேருந்து நிறுத்தத்திற்கு போடப்பட்டிருந்த தகர செட்டில் போய் நின்றவன், எதிரே இருந்த கட்டிடங்கள் மரங்கள் எல்லாம் மெல்ல மெல்ல நனைந்து முற்றாக மழையுடன் சேர்ந்து கொண்டதை ரசித்துக் கொண்டிருந்தான். சாலையின் இரு பக்கங்களிலும் மனிதர்களே இல்லை. மழையின் ஓசையை தவிர வேறு சத்தமே இல்லை. சாலையின் அந்தப்பக்கம் இருந்த குப்பைத் தொட்டியின் அடியில் ஒரு நாய்க்குட்டி படுத்துக் கொண்டு தன் கால்களால் குப்பைத்தொட்டியின் அடிப்பகுதியை சுரண்ட, இந்த உலகம் எவ்வளவு அழகானது என நினைத்து தனக்கு தானே சிரித்துக் கொண்டவன் தான் நின்றிருந்த தகர செட்டின் மூலையில் கிடந்த  அழுக்கு மூட்டை ஒன்றைக் கவனித்தான்.

மழையின் அழகை ரசிப்பவனுக்கு, இந்த அழுக்கு மூட்டை அசௌகரியமாக இருந்தது. ருசியான உணவின் போது கல் கடிபடுவதை போல் உணர்ந்தான். மூட்டையை மறந்து மழையை ரசிக்க எத்தனிப்பவனின் கண்கள் மீண்டும் மீண்டும் மூட்டையையே நோக்கின. பின் ஒருவித தவிப்பு மேலோங்க மூட்டையைத் தூக்கி வெளியே வீசி விடலாம் என நெருங்கியவன் அதிர்ச்சியுற்றான்.‌ அது மூட்டையில்லை, மனிதன். அழுக்கான நைந்து போன உடையோடு ஒடிசலான ஒரு நபர். ஏறத்தாழ அவருக்கு எழுபது வயதை தாண்டியிருக்கும். அவர்மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. அருவருப்படைந்து விலகிச் சென்றவனை மழை மறித்ததால் ஒன்றும் செய்ய முடியாது அங்கேயே நின்று போனான்.

“ஒருவேள செத்துட்டாரா”

எட்டி நின்று மழைநீரை கையில் பிடித்து அவர்மீது வீசினான். அசைவில்லை. மீண்டும் கைநிறைய மழைநீரை பிடித்து தெளித்தான். அசைவில்லை. இப்போது மழை அவனுக்கு துக்கத்தோடு அழுவதைப் போலிருந்தது. யாராவது வரமாட்டார்களா என சாலையை வெறித்துக் கொண்டிருத்தான்.

“அந்த ஆளு நிஜமாவே ஒரு மூட்டையா இருந்தா நல்லாருக்கும்”  என்றபடி திரும்பி பார்க்க, அவர் எழுந்து அமர்ந்திருந்தார். ஒரு நொடி திடுக்கிட்டு கண்களை மூடிக்கொண்டான். ஒரு நீண்ட பெருமூச்சுக்கு பின் இயல்புநிலையை அடைந்தான். இப்போது மழை அவனைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போலிருந்தது.

“பாவங்கிறது வெயில் மாதிரி, புண்ணியங்கிறது மழை மாதிரி, பாவம் எவ்வளோ சேந்தாலும் மனுசன் அவன் வேலைய பாத்துட்டே இருப்பான். புண்ணியம் கொஞ்சம் சேந்துட்டா கூட அவனால் தாங்க முடியாது. அப்படி புண்ணியத்த தாங்க ஒரு மனசு வேணும் திராணி வேணும்” என அவர் சொல்வது தனக்குத்தான் என்பதை புரிந்து அவரைப் பார்த்து “ம்ம்….” என்று தலையசைத்துக் கொண்டான்.

“என்ன படிக்கிறீங்க”

“ப்ளஸ் டூ”

“நல்லது நல்லது. எங்க அப்பாரு என்ன எம்.ஏ படிக்க வச்சாரு அந்த காலத்துலையே. எம்.ஏ இந்தி, மெட்ராஸ் யுனிவர்சிட்டி ல போய் படிச்சேன். நமக்கு நேருன்னா ரொம்ப இஸ்டம். நேருன்னா தெரியும்லா”

“ம்ம்….” என்று ஒன்றும் புரியாதவனாய் விழிக்க அவர் தொடர்ந்தார்… “ஆமா, அவரு பேசுறக்க எல்லாம் புரிஞ்சிக்கதா இந்தி படிச்சேன். எங்க ஊருக்கெல்லா வந்தாரு அப்போ.. முன்னே…. எங்கப்பாரு காங்கிரஸ் ஆளுல்ல. அதான் அப்பிடியே ஊரிப்போச்சு.”

காற்று திசைமாறி அடிக்க சாரல் செட்டுக்குள் வந்து குளிரச் செய்தது. அவர் ஏதோ பொய் சொல்வதாகவே அவனுக்கு தோன்றியது. “படிப்பு முடிஞ்ச பெறவு அப்பாவோட யாவாரந்தா போச்சு. கடல மண்டி. அப்படியே வர போக  நல்லா போச்சு. ஊரே மெச்சுக்கும் நம்மள பாத்தா. அப்போல்லா ராசா கணக்கா இருக்கேனு எல்லா சொல்லுவாங்க.” என்றவர் அமைதியானார்.

“நெஜமாவா… இப்ப ஏ இப்பிடி இருக்கிங்க” என ஏளனமாய் கேட்க, அவர் அவனை நோக்கி சின்னதாய் சிரிக்க மட்டுமே செய்தார். ஆம், அந்த சிரித்த முகம் ஒரு ராஜாவினுடையது தான்‌ என அவனுக்கு தோன்றியது. அவன் அவர் மழை மூவரும் சப்தமின்றி இருந்தனர். அன்று ஏனோ மழை மிக நீண்டதாக இருந்தது. “இப்பமும் நா சந்தோசமா தான் இருக்கேன். என்னா, நாளைக்கு ஒரு ரெண்டு வேள சோறு கெடச்சா நல்லாருக்கும்” என்றபடி தன் அழுக்கு வேட்டியை திறந்து இடதுபுறத் தொடையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் இடதுபுறத் தொடை முழுக்க தோல் ஏதும் இல்லாமல் சிவந்த ரோஸ் மற்றும் வெளிறிய நிற சதை வெளியே தெரிய, அங்கங்கே ரத்தவட்டுக்களாய், காயத்தின் ஓரங்களில் கருப்பு நிறமாகவும், சில இடங்கள் சீல் பிடித்து மஞ்சள் நிறமாகவும் இருந்தது. அதில் வடியும் திரவத்தை அவர் கீழே கிடந்த காகிதத்தை கொண்டு துடைத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த போது அவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. மழை அப்போது குறையத் தொடங்கியிருந்தது.

“ஈ… என்ன இது”

“போன வாரம் உங்கள மாதிரி ஒரு தம்பி வண்டில வந்து இடிச்சப்ப கீழ விழுந்துட்டேன் அதான். இந்தா இங்க தான்” என்று விழுந்த இடத்தை கைநீட்டி காட்டினார். “அந்த தம்பி ஏடிஎம் ல போய் காசு எடுத்துட்டு வந்து ஆஸ்பத்திரிக்கி கூட்டு போறேனு செல்லிட்டு போனாரு, அதான் ஒரு வாரமா வேற எங்கயும் போகாம இங்கயே இருக்கேன். நாம ஒரு பக்கம் போயி அவரு வந்து நம்மள தேடிட்டு இருக்க கூடாதுல” எனச் சொல்லி சிரித்தார். அப்போது மழை முற்றாக முடிந்து விட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *