சூரியன் எங்கோ தூரத்தில் ஒரு மலைக்குப்பின் மறைந்து கொண்டு தன் வெளிச்சத்தை மட்டும் என்மீது பரப்பிக் கொண்டிருந்தது. பனிபடர்ந்த உலகம் தன்னை வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியிருந்தது. 10 நாட்களாக தொடர்ந்து பனிபொழிந்து கொண்டே இருக்கிறது. எங்கும் பனி. அடர்ந்த பனி. வெள்ளை பனி. பொட்டு பொட்டாய். காற்றில் மிதக்கும் பஞ்சு போன்ற பனி. அரிதாரம் பூசிக் கொண்ட மழைத்துளி போல, எடையே இல்லாமல் முடிவே இல்லாமல் ஓசையே இல்லாமல் அடுக்கடுக்காய் வரிசை வரிசையாய் எனக்கே எனக்காய் மட்டும் பனி தீராமல் பொழிந்து கொண்டேயிருக்கிறது. வீட்டின் தாழ்வாரத்தில், நானும் பனியும் குளிரும் கூடவே பேனாவை தன்னுள் மறைத்துக்கொண்டு என் டைரியும். தங்க நிறத்தில் 2020 என எழுதப்பட்ட சிகப்பு நிற டைரி. என் பிறந்தநாள் பரிசாக டோரி அனுப்பிய  டைரி. டைரியில் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என யோசித்துக் கொண்டிருந்தேன். தூரத்து மலையும் பனியும் தவிர இங்கு வேறு ஏதும் இல்லை. அவிழ்ந்திருந்த ஷூவின் லேஸ்களை இறுகக் கட்டிக்கொண்டு  பனியில் இறங்கி நடந்தேன். பனியில் கால், கணுக்கால் வரை மூழ்கியது. அடி அடியாய் எடுத்து வைத்து மலையை நோக்கி நடந்தேன். உன்னால் என்னை தொட்டு விட முடியுமா என்பது போல மலை என்னை பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் நடந்த பின் கால்கள் களைத்து பனியின் நடுவே அமர்ந்து கொண்டேன். திரும்பி நான் தங்கியிருந்த வீட்டை பார்த்தேன், பனியால் போர்த்தப்பட்ட மரவீடு. ஒரே ஒரு வீடு அக்கம்பக்கம் ஏதும் இல்லாமல் தனி வீடு. வெள்ளைத்தாளில் சிந்திய ஒரு துளி மை போல. மீண்டும் எழுந்து  வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டு வாசலில் இருந்த மின்கம்பத்தில் விளக்கு எரிந்து மணி ஐந்தானதை நினைவுபடுத்தியது. இன்றும் டைரியில் எதுவும் எழுதாமல்,எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். கணப்பில் கனன்று கொண்டிருந்த நெருப்பு வீட்டை கதகதப்பாக வைத்திருந்தது. டைரியை மேசை மேலே வைத்துவிட்டு கோட், மஃப்ளர், கையுறை அனைத்தையும் அதனதன் இடத்தில் அமர்த்திய பின்னர் சூடான ஒரு கோப்பை காப்பியை எடுத்துக் கொண்டேன். கணப்புக்கு அருகில் போடப்பட்டிருந்த கம்பிளியில் அமர்ந்து, காபியை உறிஞ்சினேன். உள்ளே சென்ற காப்பி உடல் தசைகளை இலகுவாக்கியது. செவிகளை கூர் தீட்டி நான்கு திசைகளுக்கும் அனுப்பினேன். கணப்பில் நெருப்பு எரியும் ஓசையைத் தவிர வேறு ஓசையே இல்லை. எல்லா திசைகளிலும் நிசப்தம். நான் இருக்கும் இடத்தை ஒரு முறை நோட்டமிட்டேன். மொத்த வீடுமஒரு சதுர அறை மட்டுமே. கூரையும் மூன்று சுவர்களும் மரத்தால் ஆனவை. ஒரு சுவர் மட்டும் முழுக்க கண்ணாடியால் ஆனது. உள்ளிருந்தவாறே தூரத்து மலையினை பார்த்து ரசிக்க முடியும். பல இரவுகள் தூங்காமல் நிலவின் வெளிச்சத்தில் அந்த மலையுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். ஒருவகையில் அவன் என் நண்பன். அறை முழுக்க மயிர்கள் அடர்ந்த தடிமனான கம்பளி விரிக்கப்பட்டிருக்கும். அறையின் வடக்கு பக்கம் தான் என்னுடைய சமையலறை. அடுப்புடன் சிறிது சமையல் பாத்திரங்கள் கொண்டது, அமர்ந்தவாறே சமைக்கலாம். அருகே ஒரு பாத்திரத்தில் ரொட்டியும் சு ட்ட கோழி, நாளை உணவுக்காக. நேரெதிரே அறையின் தெற்கு பக்கம் சிறிய மஞ்சள் நிற புத்தர் சிலை, கண்களை மூடியவாறு. அவர் என்னைப் பார்க்காமல் கண்களை மூடி இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை சுற்றிய அலமாரிகள் எங்கும் புத்தகங்கள். எனக்கு வெளியே உலகம் இருப்பதை நினைவுகூற பழைய டிரான்சிஸ்டர் ரேடியோ பெட்டி. அதை எப்படி ஆன் செய்வது என்று மறந்தே போயிருந்தது. மேலும் ஒரு பெட்டியில் சில உடைகள் அவ்வளவே என் வீடு. நேரம் செல்லச் செல்ல இருள் முழுமையாக கவ்விக்கொண்டது. கணப்பின் வெளிச்சம் அறையில் ஒரு மந்தமான ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் புத்தனின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். பேரமைதியுடன் அமர்ந்திருந்தார்.  இங்கிருக்கும் புத்தகங்களில் டோரியின் புகைப்படம் இருக்கும் புத்தகம் எது என எனக்குத் தெரியும். இருந்தும் மறந்துவிட்டது என எனக்கு நானே  பாசாங்கு செய்து கொண்டேன். சட்டென்று எழுந்து சென்று மேஜை மீதிருந்த டைரியை எடுத்து “இன்றும் வீடு திரும்ப மனமில்லை” என்று எழுதிவிட்டு மீண்டும் கணப்பருகில் வந்து படுத்துக் கொண்டேன். கண்கள் தானாகவே மூடிக் கொண்டது. கணப்பில் எரியும் நெருப்பு  இதமாக இருந்தது. மீண்டும் அதே நிசப்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *