அப்பா ஊருக்கு போய் இருக்கார்

இறங்கியதும் இந்த ஊரின் மேல்  இனம் புரியாத பாசம் தொற்றிக் கொண்டது. இன்றுதான் மாற்றலாகி வந்திருந்தான். சம்பந்தமே இல்லாத புது ஊர். ஆனால் அமைதியான ஊர். காலே அரைக்கால் நகரம் என்று சொல்லலாம். காலையிலேயே சற்று அனலாக இருந்தது. தேடி அலசி ஒருவழியாக இரண்டு பெட்ரூம் பிளாட் பிடித்தாகிவிட்டது.மூன்றாவது மாடி நன்றாக செட் ஆகி இருந்தது.அதன் பால்கனியின் வழியே சலூனைப் பார்த்தான்.சின்னதாக சாலையை ஒட்டி இருந்தது. அதன் பெயர் சாந்தி மார்டன் சலூன். கடை சின்னதானலும் பெயர் பலகை பெரியது. இங்கு  நவீன யூனிசெக்ஸ் சலூனை எதிர்பார்க்க முடியாது.

நமுட்டுச் சிரிப்பு சிரித்து அங்கிருந்த கண்ணாடி எதிரே நின்று விரல்களால் முடியை நீவிக் கொண்டு முடிவெட்டிக்கொள்ளத் தீர்மானித்தான். தாடி கொசகொசவென வளர்ந்து உறுத்தியது.

பூர்ணிமா , இறக்கி வைத்த மாற்றல் சாமான்களின் நடுவில் உட்கார்ந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று களைப்பில் யோசித்துக் கொண்டிருந்தாள். ஏண்டா வேண்டாத சாமானை எல்லாம் சுமந்துக் கொண்டு வந்தோம் என்று அலுத்துக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான சாமான்கள் எல்லாம் அடுக்கப்பட்டாகி விட்டது.

“ஏய் பூர்ணிமா  வெயிட் பண்ணு. ஒத்தையா செய்யாதே.வேண்டாததெல்லாம் கடாசிடலாம்.ரூம்ல போய் படுத்து ரெஸ்ட் எடு .நா வந்து ஹெல்ப் பண்றேன்”

கொட்டாவி விட்டபடி பெட்ரூம்  சென்றாள்

“வரும்போது ஏதாவது கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வா பரத்.  வெக்க அதிகமா இருக்கு” என்றாள் பூர்ணிமா

பரத் அதற்குள் கிளம்பி விட்டிருந்தான்.

சாந்தி மார்டர்ன் சலூன். போர்டில் ரஜினிபடம். கண் நெற்றியில் ரஜினி ஜாடை. ஆனால் கன்னங்கள் உப்பி போய் வேறு மாதிரிஇருந்தார்.வளர்ந்து வரும் ஓவியக் கலைஞர் போல.I say one time, but it is 100 times said என்று ரஜினியின் தலைக்கு மேல் எழுதியிருந்தது.இரண்டு கண்ணாடி கதவுகள்.
அதில் ஆளுக்கு ஒரு பக்கமாக  இரண்டு இடை மெலிந்த முக்கோண வடிவ முக தலைக் குனிந்தக் கன்னியர்களின் கைக்கூப்பிய  வெல்கம் ஸ்டிக்கர். இது ஒன்றுதான் புதுசாக இருந்தது.

தயங்கியபடி கதவைத் திறந்து உள்ளே பார்த்தான்.

”வாங்க வாங்க …வாங்க சார்….இப்ப முடிஞ்சுடும்”

சலூன்ஓனர்?20 வயது இளைஞன் கம் பையன். உள்ளே மூன்று நபர்கள் இருந்தார்கள்.சின்னஇடம்.ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கித்தான் உட்கார முடிந்தது.இவனுக்கு அடுத்து வாஷ் பேசின்.பிரில்கிரீம்சவரக்கட்டி அழுக்கு  மூன்றும் கலந்துக்கட்டியாக நாற்றம் அடித்தது.கீழே மயிர் கொத்துகள் நிறைய கிடந்தது. அதற்குள் அடுத்த நபர் உள்ளே நுழைந்தார்.அவரையும் ”வாங்கசார்.. இப்பமுடிஞ்சுடும்“ என்று அழைத்தான். சலூனைநோட்டம்விட்டான் பரத். சுவரெல்லாம் காரைப்படிந்து ஈரிச்சுப்போய் இருந்தது.அதில் 2015 வருடத்தின் வரசக்தி விநாயகர் காலண்டர் கிழிந்துப் போய் தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று மொபைல் நம்பர்கள் எழுதி இருந்தது.

பக்கத்தில் இருந்தவர் பரத்தயே கால்முதல் தலைவரை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்.ஆனால் பார்க்காத மாதிரி வேறு பாசாங்குச் செய்துக் கொண்டிருந்தார்.லோனுக்கு அடி போடுகிறாரோ?

அவரை முறைத்து  விட்டு விலைப்பட்டியலைப் பார்க்கஆரம்பித்தான்.

“சார்… அதுஜஸ்ட் ஒரு பார்மலிட்டிக்கு மாட்டிவச்சுருக்கிறேன். சங்கம் கொடுத்தது ….அந்தஅமவுண்ட் வாங்கறதில்ல.”.

”நீங்க ஊருக்கு புதுசா சார்?’

”ஆமாம்”

ஏதோ இக்கட்டில் இருப்பது போல உணர்ந்து அதைத் தவிர்ப்பதற்கு மேலே  நோட்டம் விட ஆரம்பித்தான்.

அங்கு மூலையில் அதிர்ஷ்ட சுதர்சன சக்கரத்தகடு பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.உள்ளே கரப்பான்பூச்சிகள்.

”என்னைப்பார் யோகம் வரும்” கழுதைப்போட்டோ.பக்கத்தில் வெங்கடாசலபதி பத்மாவதி தாயார் போட்டோ. காயந்துப் போன பூக்கள். ரேடியோ.சதுர வடிவமாக டெல்லி செட்போல் இருந்தது. இந்த மாதிரி சலூனுக்கென்றே பிரம்மாவால் படைக்கப்பட்ட     ரேடியோ. நிறைய திருகு சுவிட்சுகள் இருந்தது.FMல்யாரோ ஒருபெண் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.வாய் ஓய்ந்தவுடன் ஏதோ ஒரு பாட்டை யாருக்கோ டெடிகேட் செய்துபாட்டு ஆரம்பித்தவுடன் இரண்டு பேர் வந்தார்கள்.

அவன் முறை வந்தது.ரெக்சின் சீட்டை தட்டி அழைத்தான் ஓனர் பையன்.கிட்டத்தில் அவனின் தலை முடி தற்போதைய டிரெண்டில் ஸ்டைலாக இருந்தது.

உட்கார்ந்தவுடன் முதலில் உட்கார்ந்திருந்தவரின் சூடு ஆறாமல் மிச்சமிருந்து  லேசாக சுட்டது. சரி செய்து உட்கார்ந்து நேரே இருந்த கண்ணாடியைப் பார்த்தான் .நான்கு பேர் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பொன்னாடைப் போர்த்தி வேலையை ஆரம்பித்தான்.

”கட்டிங்…என்ன மீடியமா?”

”எஸ்”

“ஆ பாத்தாவே தெரியது சார்.உங்களோட பேவரைட்”

கல்யாணத்திற்கு முன் எல்லாம் க்ளோஸ் கட்டிங்தான். இவனுக்கு அதுதான் பேவரைட்.  க்ளோஸ் கட்டிங் பூர்ணிமாவிற்குப் பிடிப்பதில்லை.“லூசு” மாதிரி இருக்கு என்பாள்

.‘கர்சிக்கர்சிக்” வெட்ட ஆரம்பித்துசீக்கிரமேமுடித்து விட்டான்.அடுத்து ஷேவிங்.சேரின் ஹெட் ரெஸ்ட்டை கிரிக் என்று இழுத்து நிற்க வைத்தான். முதலில் தலையை அதில் சாய்த்து அழுத்தியபடி ஷேவிங்கை ஆரம்பித்தான்.

“என்னம்மா உள்ள வாங்க………குட்டிப் பையனுக்குமுடிவெட்டனுமா?” வெளியே போனான்.வெளியில் ஒரு பெண் குரல்கேட்டது.

“அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.அடுத்தது குட்டிப் பையன்தான் பாஸ்டா முடி வெட்டிடறேன்”.

அவள் தயங்கிய மாதிரி தெரிந்தது.நிறைய வேலை இருப்பதால் வெயிட் பண்ண முடியாது என்று சொன்னாள்.இந்திக் கலந்த தமிழ்.ஆவலில் குனிந்து வெளியே பார்த்தான்.அதே தருணத்தில் வெளியே பெண்ணிடம் ஒட்டிக் கொண்டிருந்தப் பையனும் குனிந்துக் குறுகுறுப்போடு  இவனைப் பார்த்தான்.

குட்டிப் பையன் களைச்சொட்டும் முகத்தோடு சூட்டிகையாக இருந்தான்.அவனை ஒட்டி இருந்த 20-25 வயது பெண்நைட்டி அணிந்து சிவப்பாக இருந்தாள்.இந்திக்காரி வகிடில் குங்குமம்.முகம் தெரியவில்லை.பக்கத்தில்  4-5 வயதில் களையான முகத்தோடுக் குட்டிப் பையன்.பரத் மெலிதாகக் கையசைத்தான் அவனும் பதிலுக்கு நட்போடு சிறிது லஜ்ஜையோடு பெண்ணை ஒட்டிக் கொண்டு கையசைத்தான்.

துண்டுப் பேப்பரில் ஒருசெல்நம்பர் எழுதிக் கடை ஒனர் பையனிடம் கொடுத்துவிட்டு  போய் விட்டாள் பையனை அழைத்து வந்த பெண். ஊரோடு வந்து வீட்டிலேயே தங்கி எல்லா வீட்டு வேலைக்கும் உதவி செய்யும் பெண் என்று சலூன்காரன் சொன்னான்.

சலூன்காரன் பையனின் கைப்பிடித்து வர பையன் மிரண்டபடி பின்பக்கம் பார்த்தப்படி  உள்ளே வந்தான். ஓரத்தில் உட்கார வைத்தான் சலூன்காரன்.முகம்  சுளித்தான். ஒருவழியாக என் முறை முடிந்தது.
சின்னப்பையனைத் தூக்கி ரோலிங் சேரில் உட்கார்த்தி வைக்க சலூன் காரனைப் பார்த்து மிரண்டுப்போய்
“மம்மி” என்று பெரிதாக அழ ஆரம்பித்தான்.
முரண்டுப் பிடித்து இறங்கி கதவு அருகே ஓடினான்.
இரண்டு பேர் அவனைச் சமாதானப்படுத்தக் கெஞ்சியவாறு ஓடினார்கள்.

அவர்களின் கெஞ்சலில்  யதார்த்தம் இல்லாமல் கடமையாக மேலுக்கு இருந்தது.
பையனுக்கு அவர்களைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

”குட்டிப் பையா… சாக்லேட் வாங்கித் தரேன் சமத்து இல்லையா சேர்ல உட்காரு’ சலூன்காரன் கெஞ்சினான். பையன் வருவதாக இல்லை.

”பாவம்.. இந்தபையன் அம்மா வீட்ல ஜெண்ட்ஸ் இல்ல போல ..”உச் கொட்டினான் சலூன்காரன்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பரத் புன்னகைத்தவாறு அன்புடன்  குட்டிப் பையனிடம் நெருங்கி உட்கார்ந்து ஆறுதலாகப் பிஞ்சுக் கையைப் பிடித்தான்.பரத்தின் தொடுகைப் பையனின் உடல் முழுவதும் கிளைப் பரப்பிப் பாதுகாப்பு உணர்வைத் தந்தது.பரத்தை உற்றுப் பார்த்தான்.கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீர் துளிகளைத் துடைத்துவிட்டு

”ஆர் யூ ”துறுதுறு” ஆர் ”க்யூட்”? சொன்னா ஒரு கிஃப்டு கொடுப்பேன்”

”துர்துர்” (புரியாமல் முழித்து) சொல்லி அழுத முகத்தோடு சிரித்தான்.ஆனாலும் பிடிகொடுக்கவில்லை.

”யூ லைக் மீ?”

தலையாட்டினான். அவனைத் தூக்கி உச்சி முகந்துவிட்டு உரையாட ஆரம்பித்தான்.
.

”வாட்  இஸ் யுவர் நேம்?”

“அபிலாஷ்”

“வாட்ஸ் யுவர்ஸ் கூல் நேம்?’

“சின்மயா”

”டாடி ஆபிஸ் போயிட்டாரா?

“ஊருக்குப் போயிட்டாரு”

”டாடி பேர் என்ன?”

“தெரியாது”.

பரத் சற்று  அதிர்ந்து … ”ஓகே நோ பிராப்ளம்.காட் பிலஸ் யூ” என்று புன்னகைத்தான்.

சில நிமிடங்கள் இப்படியே செல்லம் கொஞ்சும் வார்த்தைகள் பேசப் பேச  பையன் பரத்திடம் இருவருக்கும் பரஸ்பரம் பிடிப்பு ஏற்பட்டது. யதார்த்தமாக  ஒட்டிக் கொண்டான்.பேசி ஒரு வழியாக சமாதானமானான் அவனை அப்படியே குண்டு க்கட்டாகத் தூக்கி முத்தம் கொடுத்து கட்டை வைத்த சலூன் சோபாவில்  உட்கார வைத்தான்.
பையனின் நெற்றியில் தன் நெற்றியை வைத்து உரசி அபிலாஷ் இஸ் ஏ குட் பாய் என்றான்.

”யூ லைக் மிரண்டா?”

”எஸ்” குஷியாகத்  தலையாட்டினான்.பெரிய மிரண்டா பாட்டில் வாங்கி அவன் மடியில் சில்லென்று வைத்துவிட்டு எடுத்தான்.குளிராகி சட்டென்று உதறினாலும் அவனுக்குப் பிடித்திருந்தது.ஈளித்தப்படி
அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சமத்தா முடிவெட்டிக்கனும்.ஓகேவா?தாதிம்மா வந்துடுவாங்க.மிராண்டா இங்கசாப்பிடக்கூடாது.மம்மி வருவாங்களா? மம்மிக்கிட்டகேட்டுட்டுத்தான் சாப்பிடனும். என்னஒகேயா?”முத்தம்கொடுத்து “பை” சொல்லிபரத் கிளம்பினான். அபிலாஷ் முகம் வாடியது.உடம்பை முறுக்கி சிணுங்கி மீண்டும் ஓவெனஅழ ஆரம்பித்தான்.

அப்போது சலூன்காரனின் செல் ஒலித்தது.எடுத்துப் பேசினான்.

“சார்… முடிவெட்டறவரைக்கும்இருங்க ..அவங்கஅம்மா வந்துருவாங்க.தாதிம்மா வரமாட்டாங்க”

சம்மதித்தேன்.பையனின் அம்மாவைப் பார்க்க ஆர்வமாகத்தான் இருந்தது.அப்பா எங்கே?ஏன் பெயர் தெரியாது?ஏன் ஊருக்குப் போய் இருக்கிறார்?

அபிலாஷூக்கும் கட்டிங் முடிந்தது. சின்னதாக தும்மிவிட்டு மூக்கை உறிஞ்சினான்.முடி வெட்டியவுடன் ரொம்ப குட்டியாகத் தெரிந்தான்.ஆணா பெண்ணா என்று தெரியாமல்  இரண்டிற்கும்  இடையில் இன்னும் துறுதுறுவென அழகாக இருந்தான். முடித்துகள்களை தட்டிவிட்டு முத்தமிட்டான் பரத். அபிலாஷ் முகம் சிவந்து வெட்க பட்டான். வாசலில் ”அபி” பையனை அழைக்கும் பெண் குரல் கேட்டது.சலூன்காரன் காசு வாங்கிக் கொண்டு”அவருதான்” பையன ஒரு வழிக்குக் கொண்டு வந்து என்று ஆரம்பித்து  பூர்வ கதையெல்லாம்  சொல்லிக் கொண்டிரு ந்தான்.

வாசலைப்பார்த்து “அம்மா” என்று பாட்டிலைத் தூக்கியவாறுஓடினான்.”அந்த அங்கிள் வாங்கிக் கொடுத்தாரு” கை நீட்டி அவனைக் காட்டினான். அவன் அம்மா கதவருகில் வந்தாள். பரத்தும் வெளியே வர அபிலாஷின் அம்மாவைப் பார்த்தான் .ஓ மகேஸ்வரி.
அவளும் பரத்தைப் பார்த்துத் திடுக்கிட்டு சிவந்து கோபமாக சிறுவனைப் பார்த்தாள்.

”உனக்குத் தெரியாத ஆளுங்கக் கிட்ட போககூடாதுன்னு.. எவ்வளவு தடவச் சொல்லியிருக்கேன்… இடியட்..”

குழந்தையை இழுத்தாள்.

மிரண்டா பாட்டில் கிழே விழுந்து சலக் சலக் சிறு சப்தத்துடன் ரோடில் ஓடியது. முடி வெட்ட வந்தவர்கள் சற்று  அதிர்ச்சியாகி ஒன்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *