19.03.23 அன்று 3.00 மணிக்கு பத்து கோடி எனக்கில்லை என்பது தெரிய வந்தது. பத்துகோடிதான் வேண்டாம். பத்து இலட்சம், ஐந்து இலட்சம், ஐம்பதாயிரம். சீச்சி..சீச்சி..ஐநுாறு……க்கும். விழவில்லை. ஒரு மாதத்திற்கும் மேல் அச்சீட்டை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் சாமி கும்பிட்டேன். உள்ளுணர்வில் அத்தனை நம்பிக்கை. பிறந்ததில் இருந்து வெந்து நொந்துபோன வாழ்க்கை. கையில் காசு நிற்பதே இல்லை. வயதோ நாற்பத்தைந்தை நெருங்கிவிட்டது. இரண்டு பெண் குழந்தைகள் வேறு. என்னதான் செய்வது?

என் முதலாளி என்னைப் பார்த்து “என்னடே..இன்னைக்கும் லேட்டு?“ என்று கேட்டதை நான் பொருட்படுத்தவில்லை. இன்னும் பத்து நாட்கள்தான். அதன் பிறகு உன்னைப் போல நானும் ஒரு மொதலாளியாகி இருப்பேன். உன் கடைக்கு எதிரேயே உன்னைவிட பெரிய அளவில் ஒரு ஜவுளிக்கடையைத் திறந்திருப்பேன். அப்போது வியாபாரிகள் சங்கத்தில் என் குரலும் ஒலிக்கும். லயன் சங்கம், ரோட்டரி கிளப் போன்றவற்றில் உன்னைப் போல நானும் முக்கிய பொறுப்பாளர் ஆகியிருப்பேன். நீ வைத்திருப்பதை விட கூடுதல் சிவப்பில் ஐந்தாறு வயது குறைந்த குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அனுபவிப்பேன்.

இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்த முன்னேற்றமும் இல்லை. பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த வேலை. இன்று ஐம்பது ரூபாய் பேட்டாவில் வந்து நிற்கிறது. வீட்டில் இன்றும் இரவில் தண்ணீர் விட்ட கஞ்சிதான். பிள்ளை இல்லையென்று பேறுகால மருத்துவமனைகளுக்கு அலைந்ததில் ஒரு காசு கையில் தேங்கவில்லை. எத்தனை ஸ்கேன்கள், எத்தனை மாத்திரை மருந்துகள், எத்தனை கோயில்கள்.நேர்த்திக்கடன்கள்.

ஜவுளிக்கடைக்கு வருகிறவர்களை எதையாவது வாங்க வைப்பது ஒன்றுதான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் மிகப்பெரிய சவாலாக ஆகியிருக்கிறது. என் முதலாளிக்கு தற்போதைய நடை முறை என்ன என்பதே தெரியாது. கை முதலை முடக்க யோசிக்கிறார். முன்பு மாதிரி சூரத் பாம்பே என்று கொள்முதலுக்கு செல்வதில்லை. வாடிக்கையாளர் இல்லை என்றால் ஓடிப்போய் விளக்குகளை அணைத்து இருள் மண்டச் செய்துவிடுவார். வீட்டில் இருந்து நகராட்சி குடிதண்ணீரை மினரல்வாட்டர் கேன்களில் நிரப்பி, செயற்கையாக பிளாஷ்டிக் பேக்கிங் செய்து குடிநீர் என்று விநியோகிக்கிறார். சிக்கனமாம். தரித்திரியம் தான் பிடித்தாட்டுகிறது. வியாபாரம் மந்தம் ஆகிவிட்டது என்று ஐம்பது ஆட்கள் இருந்த இடத்தில் இருபது ஆட்களாக குறைத்து விட்டார். மொத்த சர்டிங் சூட்டிங் செக்சனும் இப்போது என் தலையில்.

கேரளாவில் லாட்டரி நடைமுறையில் உள்ளது என்பதும், அங்கே தினந்தோறும் லட்சக்கணக்கில் குலுக்கல் நடைபெறுகிறது என்பதும் எனக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் தெரியும். நம்பிக்கை அற்றும் இருந்தேன். என் கடையில் உள்ளவர்கள் நான் சீனியர் கடுவா என்பதால் என்னைத் தள்ளியே வைத்திருந்தனர். நானும் போட்டுக்கொடுப்பதில் சமர்த்தன். என்னை யாருக்கும் ஆகவும் செய்யாது. ஆனாலும் எப்படியோ கடைக்குள் அத்தனைப் பேரும் கேரள லாட்டரி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை கண்டுகொண்டேன். கருணாவுக்கு ஐம்பதாயிரம் பரிசு விழுந்த அன்று பார்டர் கடையில் இருந்து கொத்துப் புரோட்டா வாங்கிக் கொடுத்தார்கள். அதைப் பார்த்த பின்னர்தான் எனக்கும் ஆசை வந்தது.

ஆரியங்காவு சென்றால் வாங்கலாம். இருபத்தெட்டு ரூபாய் போக ஆகும் டிக்கட் செலவு. செம்மண் கலர் கேரளப் பேருந்துகளை காணும்போதெல்லாம் எனக்கு ஆசை பொங்கும். புளியரையைத் தாண்டிவிட்டாலே போதும் பூலோக சொர்க்கம் என்று தோன்றத் தொடங்கிவிடும். அங்கு காணப்படும் பசுமை. வழி நெடுக பார்த்துக்கொண்டு வருவேன். மரங்கள்.மரங்கள்.மரங்கள். வானம் பார்த்த மானாவாரி மண்ணில் பிறந்தவன் என்பதன் பக்கவிளைவு.

ஒரு லாட்டரிச் சீட்டின் விலை நாற்பது ரூபாய். மாதம் ஒரு முறை செல்வேன். சம்பளம் வாங்கிய வாரத்தில் ஒரு நாள். அது பெரும்பாலும் ஞாயிறாக இருக்கும். அதிகாலையில் கிளம்பினால் விடியும் முன்னர் போய்ச் சோ்ந்து விடுவேன். கடை திறந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் வாசலில் காத்திருப்பது மனதிற்கு கொண்டாட்டமாகத் தோன்றும். பழம்பொரியும் டீயும் சாப்பிட்டு காத்திருப்பேன்.

சுரண்டை அண்ணாச்சி ஒருத்தர் அங்கே  கடை போட்டிருக்கிறார். அவரிடம் சென்றால் ராசியான எண்கள் என்று தேடித்தேடி எடுத்துத் தருவார். சென்ற மாதம் போனபோது பத்துக்கோடி பம்பர் பரிசு என்றார். பத்துக்கோடியா என்று வாயைப் பிளந்தேன். இந்த பிறவி என்ன பத்து பிறவி எடுத்தாலும் என்னால் சம்பாதிக்கவே முடியாத பணம்.

இருநுாற்றம்பது ரூபாய்க்கு ஒரு டிக்கட் வாங்கிக்கொண்டேன். இரண்டு நாட்கள் வருகிற மாதிரி மீதி தொகைக்கு தேர்வு செய்தேன். ஆயிரம் காலி. அண்ணாச்சி என்னைப் பார்த்து கண்ணடித்தார்.

“இந்த முறைக்கு உங்களுக்குத்தான்…இதோட உங்க கஷ்ட காலமெல்லாம் முடியப்போகுது” என்றார். எனக்கு அது நல்ல சகுனமாகப் பட்டது.

என் மனைவியிடம் காட்டியபோது அவளுக்கும் சந்தோசம். எப்படியாவது நம் சங்கடம் தீர்ந்தால் போதும். பத்துகோடி விழுந்தால் முன்னுரிமையில் வாங்க வேண்டியவை எவை என்று அன்றிரவு நானும் அவளும் ஒரு பட்டியல் இட்டோம்.

1.நாற்பது இலட்சத்திற்கு ஒரு வீடு

2.இரண்டு பெண்குழந்தைகளுக்கும் நுாறு நுாறு பவுன் தங்க நகைகள்.

3.இருபத்தைந்து இலட்சத்திற்கு  சொகுசு கார் ஒன்று.

4.அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்டுவிடவேண்டும்.

5.சின்னதாக கவுரிங் கடை ஒன்றினை அவளுக்கு ஏற்படுத்திக்கொடுத்து அவளை முதலாளி ஆக்க வேண்டும்.

நான் என் ஜவுளிக்கடை கனவைச் சொன்னேன். அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. விழுந்தால் பார்த்துக்கொள்வோம் என்றாள். விழுந்துவிடும் என்றே  நம்பிக்கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை அளித்த ஆறுதல் நான் தினந்தோறும் வணங்கும் திருமலைக்கோவில் முருகன் கூட அதுநாள் வரை வழங்கியதில்லை.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் லாட்டரிச்சீட்டை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்வேன். எண்கள் மனப்பாடம் ஆகிவிட்டன. நடு இரவில் தாகம் விரட்ட எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு தரையில் நம்பரை எழுதி நினைவுப்படுத்திக் கொள்வேன்.

என் சகலை மதுரையில் இருந்து வந்திருந்தார். அவரிடம் ஒரு நம்பரில் பத்துகோடி தவறிவிட்டது என்று புலம்பினேன். அவர் அதற்கு வேறு ஒரு மார்க்கம் சொன்னார்.

நிழல் லாட்டரி என்று அதன் பெயர். பரிசுவிழும் எண்ணைத் தேர்வு செய்து வெளியிடுவது கேரள அரசுதான். பரிசு அறிவிக்க உள்ள நம்பரை தேர்வு செய்திருந்தால் எண்களின் எண்ணிக்கையைப் பொருத்து இங்கேயும் பரிசு கிடைக்கும் என்றார். எனக்கு முதலில் புரிய வில்லை. ஏமாத்தி விட்டால் என்ன செய்வது என்றேன்.

“உனக்குப் பிடித்த நாளு நம்பரு சொல்லு” என்றார்.

“2325” என்று யோசிக்காமல் சொன்னேன்.

அவர் அதை யாரிடமோ போனில் சொன்னார். மூன்று மணிக்கு ரிசல்ட் தெரிந்து விடும் அது வரை சரக்கடித்துவிட்டு வரலாம் என்று என்னைக் கிளப்பினார்.

நான்கு மணியைத் தாண்டி விட்டது. நடக்கவே முடியவில்லை. என் சகலை சாப்பிடாமலே படுத்துவிட்டார். ஆழ்ந்து துாங்கிவிட்டேன். துாக்கத்தில் கூட லாட்டரிக்கனவுகள், வெற்றிகள், கொண்டாட்டங்கள்.

“சகல..உங்க நம்பருக்கு பரிசு விழுந்திருக்கு…எழுந்திருங்க ” என்னை உலுக்கி எழுப்பினார் சகலை.

நான் நம்ப முடியாமல் அவரைப் பார்த்துச் சிரித்தேன். நிழல் லாட்டரியில் அவருக்கு இதைப்போல பலமுறை பரிசு விழுந்திருக்கிறது என்றார். நானும் என் யோகத்தை நினைத்து சிரித்துக்கொண்டேன். இருபத்தைந்து கைக்கு கிடைத்ததும் எர்ணாகுளம் வரை ஒரு எட்டு சென்று வந்துவிடவேண்டும். கடவுளைக் கைவிட்டவனுக்கு அதிர்ஷ்டமே எதிர்காலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *