பயணம் (அறிமுக எழுத்தாளர்)

இரவு மணி 11.30 இருக்கும். புதிய ஊர், முகவரி அறியா இடம், அறிமுகமில்லாத நபர்கள் என எல்லாமும் புதிதாய் சூழ்ந்திருக்க, உடம்பே வேர்வையால் நனைந்திருந்தது. ஒரு சொட்டு பயம் கூட தன் முகத்தில் இருந்து சிந்தாமல், அங்கும் இங்கும் பார்த்தவாறு ரயில் இருக்கையின் ஓரத்தில் வெளிக்காட்டாத பயத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தாள் கமலி. பெண்களுக்கான சிறப்பு ரயில் பெட்டியைத் தவறவிட்ட வேதனை அவளை வாட்டி வதைத்தது.

மூச்சு விடக்கூட சங்கடமான நிலை அது! முன்பதிவில்லா ரயில் பெட்டியின் அகோரங்களில் அதுவும் ஒன்று.  கமலியின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவரின் பார்வை அலைபாய்ந்தது. ஓரக் கண்ணால் பார்த்தும் கூட, காமம் நிறைந்த அவரின் நாட்டம் முன் இருக்கும் ரயில் பெட்டிகளுக்கும் நீளும் அளவிற்கு, சாராய நாற்றத்துடன் வழிந்தோடியது. அவள் அவ்வளவு அழகில்லை என்றாலும், அம்மாவின் கண்களுக்கு அவள் தான் உலக அழகி! பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவரின் கண்களுக்கும் தேவதையாய் தெரிந்திருப்பாளோ என்னவோ…அவரும் துளிக்கூட கூச்சமில்லாமல், சுற்றியிருந்த அனைவரின் கண்களும் விழித்திருக்க, தைரியமாய் அவரின் காமப்பார்வையால் அவளை தின்றுகொண்டிருந்தார். எல்லோர் கண்களும் விழித்திருந்தும் பயனில்லை: அவரவருக்கு அவரவர் பாடுகள்.

முன்பதிவு செய்துக்கூட தனி இருக்கையில் நிம்மதியாய் வீடு திரும்பியிருக்க முடியும், கமலியால்; ஆனால் அவளோ, அம்மாவின் பணத்தை செலவழிப்பதில் மிகுந்த சிக்கனம்! பிறந்தது ஏழ்மை குடும்பத்தில் என்றாலும், அம்மா கமலியை மிக நேர்த்தியாக  பண்பிலும், ஒழுக்கத்திலும், அறிவிலும் வளர்த்தாள். அந்த ஏழைத் தாய் சொல்லிக்கொடுக்காத ஒன்றையும் கமலி தானாகவே தன்னோடு சேர்த்து வளர்த்து வந்தாள்: கருமித்தனம்.

அம்மாவிற்கு, கமலி வெளியூரில் படிப்பதில் கடுகளவும் விருப்பமில்லை. ஆனாலும், கமலியின் பிடிவாதத்திற்கு முன்பு, தோற்றுப்போக மட்டும்தான் அவளுக்கு நேரிட்டது. எவ்வளவு காசு கொடுத்துவிட்டாலும், அதில் ஒரு ரூபாய்க்கூட குறையாமல் அதை அம்மாவிடம் அடுத்தமுறை ஊருக்கு வந்ததும் கொடுத்துவிடுவாள், கமலி. அம்மா ஆயிரம் முறை…இல்லை, பன்னாயிரம் முறைகூட கமலியிடம் சொல்லியிருப்பாள், பணத்தைச் செலவழி என்று: கமலியின் காதுகளில் அது ஒருமுறைகூட விழுந்திருக்க வாய்ப்பில்லை… அவள் அம்மாவிடம் காசை திருப்பிக்கொடுக்கும் போது, தன் அத்தனைப் பற்களாலும் நகைத்து பெருமிதம் கொள்வாள்.

அந்த துர்நாற்றம் நிறைந்த பெரியவரின் பக்கத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை கமலிக்கு. கொஞ்சம் நகர்ந்தால்கூட, அந்த கிழிந்த
இருக்கையை தட்டிப்பறிக்க நாற்பத்திரண்டு அசதியான கால்கள் தயாராயிருந்தன. அடுத்த பதினொரு மணிநேரம் முழுக்க நிற்பதற்கு, அந்த துர்நாற்றமே மேல் என எண்ணி, மூக்கை மூடியவாறு அமர்ந்திருந்தாள்.

இந்த முறையும் முன்பதிவு செய்யா ரயில் பெட்டியில் கமலி வருவது அம்மாவிற்குத் தெரிந்தால், அவள் நெஞ்சே வெடித்துவிடும். தான் ஊருக்கு திரும்புவதை ரகசியமாய் வைத்து, அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் கமலிக்கு, அந்த கூட்ட நெரிசல் ஒரு பொருட்டாக தென்படவில்லை.

மூக்கை மட்டும் மூடிக்கொண்டு வந்த கமலிக்கு, இன்னும் ஒரு பேராபத்து நெருங்கி வந்தது. தன் காலின் கீழ் சர்பத்தைப்போல் பிண்ணிக்கிடந்த வடநாட்டுத் தம்பதியினர். தாம் வெளியில் உள்ளோம் என்பதை மறந்துவிட்டார்கள் போல; வீட்டின் இருளில் அந்தரங்கமாக நடக்க வேண்டிய அனைத்தும், ஓடும் ரயிலின் நடுவே. அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது.  பாவம் அவள்! அவளால் வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லக் கூட வழியில்லை. கூட்டம் அப்பிக்கிடந்தது.

நல்ல வேளை.கமலியின் மேல் தூங்கி விழுந்த கிழவி திடீரென்று தூக்கம் கலைந்து விழிப்படைய, அவர்கள் காலின் கீழ் இடம்பெற்ற காட்சிப்பிழையைக் கண்டு, அவள் கொதித்தெழ, அந்தக் காதல் புறாக்கள் அங்ஙனமிருந்து
அந்நொடியே அடுத்தப்பெட்டிக்கு பறந்தனர்.

கமலியைப் போல நேரமும் அசையாமல் நின்றுவிட்டது .  கைக்கடிகாரத்தைப் பார்த்தவாரே கண்கள் சொக்கி நித்திரைக்குள்ளானாள் கமலி. சிறிது நேரம் கழித்து, “டீ காபி, டீ காபி” என்ற சத்தம் அவளைக் கலைக்க, அவள் தன் கைக்கடிகாரத்தை மீண்டும் பார்க்க, ஐந்து நிமிடங்கள் கூட கழிந்திருக்கவில்லை.

பக்கத்தில் இருந்த பெரியவரின் சிவந்த கண்கள் எதிரில் இருக்கும் எதையோ வெறித்துக்கொண்டிருந்தன. கமலியும் எதார்த்தமாக எதிர் இருக்கையைப்பார்த்தாள். ஒன்றுமில்லை. எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அனைவரும் மூன்றாம் உலகத்திற்கே போயிருந்தனர். ரயில் இரைச்சலிலும் குழந்தைப்போல் தூங்கிய அந்த களைப்படைந்த வடக்கன்களைக் கண்ட கமலிக்கு பொறாமையே வந்துவிடும் போல! அவ்வளவு நிம்மதியாக உறங்கினார்கள்.

அவர்களை ரசித்துக்கொண்டிருந்த கமலியின் கால்களில் ஏதோ தவழ்வது போல உணர்ந்தாள். என்னவென்று கீழ் நோக்கிப்பார்த்த கமலி சற்றே திடுக்கிட்டுப்போனாள். ஒரு சிறிய எலி . அதைக் கண்ட கமலி, தன் கீச் குரலால் அ….வென்று கத்தி அனைவரின் தூக்கத்தைக் கலைத்தாள். எரிச்சலடைந்த சிலர் அவளை அற்பமாக பார்க்க, வெட்கி குனிந்தாள்.

அதிகாலை மூன்றரை மணி ஆயிற்று. மார்கழி இரவும் தன் குளிர்ந்த காற்றால் அவளை அணைத்தது.  குளிர் உறைய வைக்க, ஏதோ பனிக்கத்தி போன்ற ஒன்று அவள் மார்புகளை வருட, அவள் ஒரு நிமிடம் பேச்சு மூச்சின்றி  உறைந்து போனாள்.  அவள் பக்கத்திலிருந்த பெரியவரின் கை அவளைத் தீண்டிக் கொண்டிருந்தது. அவள் சுதாரித்து சட்டென இருக்கையை விட்டு எழுந்தாள். அவளின் இடப்பக்கம் அமர்ந்திருந்த கிழவி எதையும் கண்டுகொள்ளாமல் சவுகரியமாய்  நகர்ந்து, தலை சாய்த்து நிம்மதியாய் தூங்கத் தொடங்கினாள். எழுந்து நிற்கும் கமலி அந்தப் பெரியவரைத் தன் கண்களால் தாக்க, எதுவும் நடக்காதது போல, அவர் தன் தலையை சொரிந்து, இமைகளை மூடிக் கொண்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். செய்வதறியாது நின்ற கமலியிடம், “மேல வரீங்களா?” என்ற குரல் ஒலிக்க, மேலே பார்த்தாள் கமலி. அண்ணனா தம்பியா…எவ்வாறு அழைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்த கமலி, அவனிடம், ” இல்லை, பரவாயில்லை இருக்கட்டும்” எனக் கூறினாள். ஆனால் அவன், தன் கையைக் கமலிக்கு நேர் நீட்டி, “மேல வாங்க” என்றான். சற்றே தயக்கத்தில் இருந்த கமலி, அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, அருகிலிருந்த இன்னொருவரையும் தெரியாமல் மிதித்து மேலிருக்கையின் மேல் ஏறினாள்.

அவர்கள் இருவர் மட்டுமே அந்த மேல் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

ஏதோ ஒரு பாதுகாக்கும் உணர்வு அவளைச் சூழ, நிம்மதியாய்  கண்களை மூடி நித்திரைக்குள்ளானாள். திடீரென்று கமலியை மெதுவாகத் தொட்டெழுப்பி, “டீ குடிக்கிறீங்களா?” எனக் கேட்டான். “இல்ல வேண்டாம்” என்றவளிடம், “வடையாவது சாப்பிடுங்க” என்றான். . “இல்ல” என சிரித்தவாறே  மறுத்தாள். டீயும் வடையும் சாப்பிட்ட பின் அவன் கண்களாலே கமலியிடம் பேச முயன்றான். கமலி அதை கண்டுகொள்ளாததுபோல கீழே குனிந்துகொண்டாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்களில் துளிக்கூட காமம் இல்லை,  காதலுமில்லை; ஆனால் ஏதோவொரு ரசிக்கத்துாண்டும் அன்பு! பேசுவதற்கு துடித்த அவன் வாய் அசைவை நுகர்ந்த கமலி, தன் காதுகளில் காதொலிப்பானை மாட்டிக்கொண்டாள். கமலி ரயிலிலிருந்து இறங்குவதற்கு இன்னமும் அரை மணிநேரமே இருந்தது. எதுவும் பேசாமல் அதையும் கடத்தினாள்.

ரயிலும் நின்றுவிட்டது. அவனிடம் போய் வருகிறேன் என்று சொல்ல கமலிக்கு அளவுகடந்த ஆசை. ஆனால் ஏதோவொன்று அவளின் வாயை அடைத்தது. கமலி இறங்கியதும், அவனும் ஏமாற்றம் அடைந்ததுப்போல விழித்தான்.

உண்மையில் பயணம் அதன் பின்னர் தான் ஆரம்பித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *