மனித ஒப்பனையும் சாத்தானின் புன்னகையும்

ஆடிக்காற்று பலமாக வீசியதில் மரங்கள் வேகமாக ஆடின. தெருவில் உள்ள குப்பை கூளங்களும், புழுதியும் சேர்த்து பறந்து வாகனம் ஓட்ட முடியாதபடி இங்குமங்கும் அழைக்கழித்தது. கண்களைத் திறக்க முடியாதபடியும், சுவாசிக்கவும்  சிரமமாயிருந்தது. ஒரு வழியாக காற்று சற்று  தளர்ந்தது. வேலை செய்ய வேண்டிய இடத்தை அடைந்தோம்.

அது ஒரு வீடு, பழைய பங்களா வடிவில் கட்டப்பட்ட வீடு, கார் நிறுத்துமிடத்தில் இடது புறம் சுவற்றில் மெயின் சுவிட்சு பொருத்தப்பட்டிருந்தது. அவ்வீட்டின் ஓனர் காற்று வேகமாக வீசியதில் மின் கம்பத்தில் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட 440 யில் மெயினில் ப்யூஸ் போய் விட்டது என்று அழைத்திருந்தார். மீட்டர் போர்டிலிருந்த பியூஸ் கேரியரில் தான் பியூஸ் போயிருந்தது வயரை புதிதாக சீவி செப்பு கம்பியை மட்டும் தேவையான அளவு   போட்டு மீண்டும் கேரியரில் சொருகிய போது லேசாக ஸ்பார்க் வந்து மின்சாரம் வீட்டினுள் வந்துவிட்டதை உள்ளே எரியும் விளக்கையும் வைத்து தெரிந்து கொண்டோம்.

மேற்கொண்டு உள்ளே எல்லா இடங்களிலும் மின்சாரம் கிடைக்கிறாதா? என அஜித்தை வீட்டினுள் போய் பார்க்க சொன்னேன் .

எனது சொல்போன் ஒலித்தது.  டிஸ்பிளேயில் எனது நீண்ட கால கஸ்டமரான தங்கப்பன் அழைத்திருந்தார்

“சொல்லுங்கண்ணே ”

“பிரசன்னா நம்ம பழைய பஸ் ஸ்டான்டு ஆபீஸ் மாடியில ரெண்டு டியூப்லைட்டும் எரியல  கொஞ்சம் உடனே பாக்க முடியுமா? நா ஊர்ல இல்ல .”

“ரெண்டு நாளா எரியல ஆபீஸ்ல வேல செய்யுறவளும் சொல்லறதில்ல, எம்பையனும் சொல்லறதில்ல எல்லாத்தையும் நானே சொல்ல வேண்டியிருக்கு” என்றார்.

“சரிங்கண்ணே இங்க நம்ம ஏரியாவுல ஒரு சின்ன வேல முடிஞ்சிருச்சி இப்ப போயிடுறேன் , இன்னிக்கு சனிக்கிழம ஆபீஸ்ல யாரு இருப்பா?” என்றேன்

“நீ போ இப்ப நம்ம மோகினி இருக்கும். கொஞ்சம் லேட்டாதான் வீட்டுக்குப் போவும்.  பெரிய கணக்கு வேல குடுத்துருக்கேன்.  ஆடிட்டர் கேட்ட பேப்பர்லாம் தரனும் அதனால கண்டிப்பா அங்க இருக்கும்.இப்ப மணி நாலாவுது, நா வேண்ணா போன் பண்ணி இருக்க சொல்றேன் ”

”சரிண்ணே“  

எப்போதும் சனிக்கிழமை மதியமே ஆபீஸ் பூட்டப்பட்டு விடும். என்ன காரணம் என அவரும் சொன்னதில்லை நானும் கேட்டதில்லை .

அஜித்தும் அந்த வீட்டினுள்ளே எல்லா இடங்களிலும் கரண்ட் இருக்கிறதா என  சரிபார்த்து விட்டு வந்து விட்டான்.அஜித் எனது உதவியாளர்களில் ஒருவன். 

“என்னப்பா  போலாமா”

“போலாம்ணே வேல முடிஞ்சிருச்சி”

“சரி பார்ட்டிகிட்ட நூத்தம்பது ரூபா வாங்கிட்டு வா” 

வீட்டினுள் போன அவனிடம் ஒனர் என்னிடம் சைகை செய்தபடி பணத்தை கொடுத்தனுப்பினார். வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விட்டான். சட்டை பையில் திணித்தபடி வண்டியில் உட்கார் என்றேன். பின்னால் உட்கார்ந்து “போலாம்ணே” என்றான்.

வண்டியில் போகும் போதே “அண்ணே இன்னும் வேலயிருக்கா” என்றான்

“ஆமாம்பா தங்கப்பன் ஆபிஸ்ல மாடியில ரெண்டு டியூப் லைட்டும் எரியல அத பாத்துட்டு தான் வீட்டுக்கு போகனும். ஒனக்கு வேலையிருக்கா? வீட்டுக்கு போவனுமா? மணி நாலு தானே ஆவது இப்பவே போவணுமா?”

“ஆமாண்ணே அம்மா சித்தி ஊருக்கு போவனும்னு சொன்னிச்சி அதான் போவலாம்னு இருக்கேன் நாளைக்கு மட்டும் வர மாட்டேன், நாளைய மறுநாள் வந்துருவேன்” என்றான்.

எனக்கு பொதுவாக ஞாயிறு விடுமுறை கிடையாது. வேலையிருந்தால் அன்றும் வேலை பார்ப்பேன். வேலையில்லாத அன்று தான் எனக்கு விடுமுறை ஓய்வு எல்லாம் . அஜித்தின் கேள்விக்கு சரி என்று தலையாட்டினேன்.

பழைய பஸ் ஸ்டாண்டை நெருங்கி விட்டதால் அஜித் ஊருக்கு போகும் பேருந்துக்கருகில் வண்டியை நிறுத்தினேன்.திருவையாறிலிருந்து வேலைக்கு வருகிறான். பேருந்தும் புறப்பட தயாராக இருந்ததால் ஏறிவிட்டான்

பேருந்து நிலையம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது. பஸ்ஸில் ஏறிய அஜித் படியில் நின்றபடி  கை சைகையால் பிறகு போன் செய்வதாக  காட்டினான்.

நானும் இரு சக்கர வாகனத்தை பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை போகும் பாதையில் செலுத்தி மலபார் கோல்டு கடைக்கு பக்கத்திலிருக்கும் தங்கப்பனின் ஆபீஸிற்கு வந்து சேர்ந்தேன். முப்பதுக்கு எழுபது சதுர அடி இடத்தை கொண்டது இரண்டு மாடி கட்டிடமாக அவரே கட்டியது. முழு எலக்ட்டிரிக்கல் வேலையும் நானே பார்த்து கொடுத்தேன். கீழே ஒரு வெள்ளி நகை கடைக்கு வாடகைக்கு விட்டது போக மாடியை தனக்கென ஆபீஸாக வைத்திருந்தார். ஆபீசுக்கு பெயர்ப் பலகையோ அறிவிப்பு பலகையோ இருக்காது. வெள்ளி நகை கடைக்கு நல்ல பெரிய தொகை வாடகையாக வாங்கினார். கடைக்கு வலது புறம் உள்ள  படி வழியாக மாடிக்கு போக வேண்டும். ஆபீஸ் வாயிலில் நுழைந்த உடன் பத்துக்கு பதினைந்தில் ஒரு வரவேற்பறையும் அதையெட்டி காத்திருப்பு அறையும். குளிரூட்டப்பட்ட பெரிய அலுவலக அறையும் அதன் பின்னால் கழிவறையுடன் கூடிய குளியலறையும். நகரில் பல இடங்களில் அவருக்கு சொந்தமாக கடைகளும் வீடுகளும் ஏராளமாக இருந்தது.  வட்டிக்கும் விடுவார், தினசரி வசூல் செய்யும்படியும்  வட்டிக்கு விட்டிருந்தார்.அவற்றின் வரவு செலவு கணக்கை அவரின் மகனும் அவரும் இந்த இடத்தில் வைத்துத்தான் பார்ப்பார்கள் . ஆபீஸ் வேலைக்கு பக்கத்தூரிலிருந்து மோகினி என்ற இளம் பெண்னை வேலைக்கு வைத்திருந்தார். ஒரு நடிகையை போல ஒப்பனை செய்து வருபவர் உடைகளும் நடையும் , வடிவமும் நிச்சயம் பார்ப்பவரை ஒரு கணமேனும் சபலம் தட்டும் படி இருக்கும். வாங்கும் சம்பளத்தை தாண்டி செலவு செய்பவர். அதுவே எனக்கு சந்தேகத்தை தூண்டும்.என்னை தவிர மற்றவர்கள் அவரின் முகத்தை பார்த்தே பேச முடியாது என அவரே பலமுறை என்னிடம் சொன்னதுண்டு. அவரின் இரண்டு மார்பகங்களும் சற்றே பெரிதானவை அதுவே அவருக்கு பொருத்தமாகவும் இருந்தது. தங்கப்பன் எனக்கு இருபதாண்டுகளாக பழக்கமென்பதால் அவரின் அனைத்து இடங்களிலும் வேலை செய்துள்ளேன். என்னை விட பத்தாண்டு வயதில் மூத்தவர்  .மகன் என்ன விட பதினைந்தாண்டு இளையவர். அவரின் வீடு முதற்கொண்டு எனது பராமரிப்பில் இருந்தது.

இரு சக்கர வாகனத்தை பூட்டிவிட்டு டூல்ஸ் பையை எடுத்துக்கொண்டு திரும்பும்போதுதான் கவனித்தேன். கடையிலிருந்து சற்று தள்ளி எதிர்புறம் நகராட்சி பள்ளி சுற்று சுவரின் உட்புறம் வளர்ந்து பெரிதாக நிழல் தருமிடத்தில்  தங்கப்பனின் மகன் அபிசேக்கின் கார் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. அவருக்கு மணமாகி ஆண் பெண் என இரு குழந்தைகள் உண்டு. இந்த நேரத்தில் இவர் இங்கே வரமாட்டாரே என சிந்தித்தபடி படியேறினேன்.

அலுவலக அறை நுழைவாயில் உட்பக்கம் பூட்டப்படாமல் இருந்ததை. கை வைத்ததும் தெரிந்தது.  மெதுவாக சத்தமின்றி தள்ளி உள்ளே சென்றேன். வரவேற்பறையில் மோகினி இல்லை . மெலிதாக கூப்பிட்டு பார்த்தேன் பதிலும் இல்லை . காத்திருப்பு அறையின் கதவை தள்ளினேன். அதுவும் சத்தமில்லாமல் திறந்தது. அங்கிருந்து ஏழு அடிக்கு அப்பாலிருந்த அலுவலக அறையின் உள்ளிருந்து லேசான முனகல் குரல்கள் சட்டென்று முகத்திலறைந்தது . வெளிச்சத்தம் அதிகம் அங்கு கேட்காததால் முனகல் சப்தம் மெலிதாகவும் துல்லியமாகவும் இருந்தது. பெரிய அலுவலக அறை அலுமினிய ஃபரேமால் செய்யப்பட்ட தடுப்புக்களால் ஒரே அறையாக தடுக்கப் பட்டிருந்தது . கதவை மெதுவாக தள்ளிப் பார்த்தேன். திறக்கவில்லை. சட்டென்று என்னுள்ளே ஒன்று ஏதோ வில்லங்கம் என .தோன்றியதால் செல்போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு சாவி துவாரத்தில் கண் வைத்து பார்த்தேன் . பெரிய நீண்ட பெரிய அறை என்பதால் ஏறக்குறைய அறையில் எல்லாமே தெரிந்தது. ஏசியும் ஒடிக் கொண்டிருந்ததை சாவி துவாரத்தின் வழியே கண்களில் உணர்ந்தேன் . டியூப்லைட் ரெண்டும் எரியாததால் அறையில் மிகச்சரியாக நடுவில் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கார விளக்கின் பல விளக்குகளின் ஒளி நிறைந்து தெளிவாக தெரிந்தது.  பெரிய மேஜையின் அருகில் அபிசேக் இயங்கிக் கொண்டிருந்தான்.

நான் சப்தம் செய்யாமல் மெதுவாக காத்திருப்பு , வரவேற்பு அறைகளின் கதவுகளை மூடிவிட்டு ஆபீஸின் வெளியே வாசற்படியில் அமர்ந்தேன். செல்போனை எடுத்து வாட்சாப் ஐ பார்த்துக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தது. தங்கப்பன் அழைத்திருந்தார்  சைலன்ட்டில் இருந்ததால் ரிங்டோன் சப்தம் கேட்கவில்லை  உடனே எடுத்து. மெதுவாக  ”சொல்லுங்கண்னே ”

உட்கார்ந்திருந்த வாசற்படியிலிருந்து ரோட்டை பார்த்தேன் வாகனங்களும் அதில் மனிதர்களும் பல கலவையான சிந்தனைகளோடு நேர் பார்வை பார்த்துக் கொண்டு பயணித்தனர் . எதிரே இருந்த நகராட்சி பள்ளியின் சுற்று சுவரை ஒட்டிய மரங்களும் அதிலிருந்து விழுந்த காய்ந்த இலைகளும் காற்றில் பறந்தபடி இருந்தது. அத்தனை வாகன சப்தங்களிலும் சுற்று சுவரை ஒட்டி போடப்பட்டிருந்த குப்பை தொட்டியருகே ஒரு எருமை மாடும் , இரண்டு நாய்களும் படுத்த வாக்கில் மரநிழலில் இளைபாறிய படி இருந்தன. எழுந்து ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டு உறுமிக் கொண்டு சுற்றி சுற்றி வந்தன. சட்டென்று ஒன்று மட்டும் ரோட்டை குறுக்கே கடந்து மலபார் கோல்டு கடையையொட்டி இருந்த சந்தில் நுழைந்து மறைந்தது.

சரியாக நாற்பது நிமிடம் கழித்து கதவு திறந்து அபிசேக் வெளியே வந்தார் . முகத்தில் களைப்பு தெரிந்தது.என்னை வாசற்படியில் பார்த்ததும் திடுக்கிட்டது முகத்தில் தெரிந்தது உடனே அதை மறைத்துக் கொண்டு.

“வாங்கண்ணே வந்து ரெம்ப நேரமாவுதா என்னாண்ணே இந்த பக்கம்“.

“அப்பா போன் பண்ணாரு ஆபீஸ் ரூம்ல மூனு நாளா டியூப்லைட் எரியலன்னு அதான் வந்தேன். உங்களுக்கும் தெரியும்னு சொன்னாரு.”

“இப்பதான் வந்தேன் உள்ள வரலாமான்னு இருந்தேன் அதுக்குள்ள ஒரு போன் வந்திச்சி பேசி முடிச்சேன் நீங்க வெளியே வந்தீங்க ”

”அப்பாதான் வேலயிருக்கு போய் பாக்க சொன்னாரு உள்ள  நானும் மோகினியும் ஆடிட்டருக்கு தர வேண்டிய பேப்பர்ல்லாம் தேடி எடுத்துகிட்டும்.அதோட  மாசக் கணக்கும் பாத்திட்டிருந்தோம் என்றான்” என்னை சற்று முறைத்தபடி.

நான் வாசற் கதவை தள்ளி திறந்து உள்ளே சென்றேன் 

வரவேற்பறையின் மேஜைக்கு பின்புறமிருந்த சேரில் மோகினி  அமர்ந்து அப்போது தான் முகம் கழுவி துடைத்து பவுடர் போட்டுக் கொண்டிருந்தாள் என்னை அழுத்தமாக பார்த்ததோடு “வந்து ரெம்ப நேரமாவுது போல” என வார்த்தையால் கொக்கியிட்டாள்

கண்கள் மட்டும் கலங்கி துயரத்திலிருந்தது அது முகத்தில் தெரியவில்லை. தேர்ந்த நடிகையோ?

”எப்படித் தெரியும் உனக்கு?”

“ஸிம்பிள் உங்க டூல்ஸ் பை எங்க வச்சிங்க” என்றபடி துயரப் புன்னகையுடன் கேட்டாள் . கூடவே “செல்போன சைலன்ட்ல போட்டு மேஜையில் வச்சிட்டேன் அதான்  தங்கப்பன் கூப்பிட்டது எனக்கு கேக்கல இப்பதான் செல்லுல பார்த்தேன்” என்றாள். நடிகை யில்லையோ? அபிசேக்கிடம் சொல்லியிருப்பாளே? என்ற எண்ணங்கள் ஓடின.

“ஆமா உள்ள வெயிட்டிங் ஹால்ல இருந்த சேர்ல வச்சிட்டேன் , அத அவரு பாக்கல போல”  என்றேன் .

உனக்கு ஏன் இந்த பிழைப்பு என்பது போல பார்த்தேன் 

மேஜையை சுற்றி நடந்து என்னை நோக்கி வந்தாள் தயக்கத்துடனே நெருங்கியதும் முகம் மாறியது அழும் நிலைக்கு வந்து விட்டாள்.எனது கைகளை பிடித்துக் கொண்டு கதறிவிட்டாள்

”என்னால தாங்க முடியல எப்படி சொல்றதும்னு தெரியல ஆனாலும் உங்ககிட்டயாவது சொல்லிடனும்”

உடனே நான் விலகாமல் முதுகில் தட்டி கொடுத்து தலையை வருடி ”சரி விடு அழுவாத அப்பாவ பத்தி தெரியும் கொஞ்சம் முன்ன பின்ன இருப்பாருன்னு கேள்விபட்டிருக்கேன், பையனும் இப்படித்தான்னு இன்னிக்கிதான் தெரிஞ்சிகிட்டேன்” என்று ஆறுதல் படுத்தினேன். கொஞ்ச நேரம் அழட்டும் என காத்திருந்தேன். அவள் என் மீது சாய்ந்ததில் என்னுள்ளே இருக்கும் இன்னொருவன் ஆதி இச்சையின் அழைப்பிற்கு கட்டுப்பட்டான்  முதல் முறையாக . அவளின் முகத்தை பார்த்தேன் திடுக்கிட்டேன் சாத்தானின் புன்னகை எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *