சாயா கூப்பிட்டாள்.
லேப்டாப்பிலிருந்து கண்களை நகர்த்தி சற்று சலிப்புடன் கேட்டான். “என்ன சாயா?”
மெளனமாயிருந்தாள். மெளனம் எனில் கோபம். ”என்ன சொல்?“
“உங்களுக்கு தெரியாதா அவசரம்னா மட்டும்தானே உங்களைக் கூப்பிடுவேன். இப்டி சலிச்சுக்கறீங்க. வேற யாரப்போய் இப்ப நான் கூப்பிடமுடியும்”.
“ஸாரிம்மா. ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணிட்டு இருந்தேன். உடனே ஹெடாபிஸ்க்கு அனுப்பணும். அதான்.”
“ஊரு உலகத்துல இல்லாத பெரிய வேல.”
“பெரிய வேலைதான். பிரபல தனியார் வங்கியின் சீனியர் பிராஞ்ச் மேனேஜர் . சிட்டி மெய்ன் பிராஞ்ச். அத விடு. சொல்லு எதுக்கு ஃபோன் பண்ணினே?”
“ரித்துவுக்கு இன்னைக்கு ஹாஃப் டேதானாம்”.
ரித்து என்கிற ரித்திகா தேர்ட் ஸ்டேண்டர்ட். பர்பிள் ஹைபிஸ்கஸ் ஸ்கூல்.
“ஏன்?”
“இன்னைக்கு ஸ்கூலோட ஃபெளண்டர்ஸ் பர்த் டே.”
“அத மொத நாளே சொல்ல மாட்டாங்களா? ஸ்கூல்லேர்ந்து உன்கிட்ட யார் சொன்னா?”
“நளினி தேவி மிஸ்தான் சொன்னாங்க. நானும் கேட்டேன். திடீர் ஐடியாவாம். ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் அவரப் போய் பாக்க பர்மிஷன் கேட்டாங்களாம். அதான்.”
“சரி. நம்ப மூர்த்திக்கு ஃபோன் பண்ணிடு.”
“ஏங்க புரிஞ்சுதான் பேசறிங்களா ? இல்ல கஷ்டமர்கிட்ட பேசறமாதிரி பேசறீங்களா?”
எரிச்சல் வந்தது. இது அதற்கான நேரமில்லை. வாட்ச் பார்த்தான். இன்னும் அரைமணி நேரத்துக்குள் அந்த ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும்.
சொல்லமுடியாது. சொன்னாள் கத்துவாள்.
“முதல்ல மூர்த்தி அண்ணாவுக்குத்தான் ஃபோன் பண்ணினேன். அவங்க பொண்ணுக்கு முடியலையாம். ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போய்ருக்காராம். ”
“அப்ப அவர் ஸ்டேண்ட்லேருந்து வேற ஒரு ஆட்டோ அனுப்பச் சொல்லு”.
“அறிவிருக்கா அன்பு உனக்கு?”
சாயா பேர் சொல்லிக் கூப்பிட்டால் ரொமன்ஸ் அல்லது கோபம் என்று அர்த்தம். இப்ப நிச்சயமாக ரொமான்ஸ் இல்லை. விரலிடுக்கில் நழுவும் நீர் போல அதுவும் குறைந்து கொண்டே வருகிறது. செவன்த் இயர் இட்ச்.
இல்லைன்னுதான் நெனக்குறேன்.
“பொம்பளப்புள்ளய எப்படி தெரியாத ஆளோட வரச்சொல்லுவீங்க?”
“அவ சின்ன புள்ளதானடி?”
“ந்யுஸ்லாம் எங்க பாக்கறிங்க. வீட்டுக்கு வந்தா எப்ப பாத்தாலும் ஃபோன நோண்டறது. இல்லேன்னா வீடியோ கேம்ஸ். கேம்ஸ் வெளாடற வயசாயா உனக்கு?”
“தாயே யசோதா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா என் தங்கம்ல. நீ ஒரு ஆட்டோ எடுத்துட்டுப் போய் ரித்துவ அழச்சிட்டு வந்துடு.”
“டேய்.”
அப்படிக் கூப்பிட்டால் கடுங்கோபம் என்று அர்த்தம் இவர்களின் குடும்ப டிக்ஷனரியில்.
“காலைல நீ கிளம்பறப்ப என்ன சொன்னேன்?”
“பை சொன்னேன்”.
“இங்க பாரு எனக்கு வர்ற கோவத்துக்கு இந்த ஃபோனத் தூக்கிப் போட்டு உடச்சிடுவேன்”.
“ஐய்யோ.. வாங்கி மூணு மாசம் தான் ஆவுது. ஆமா உன் வயித்து வலி எப்டிமா இருக்கு”.
“ஞாபகம் இருக்குல்ல. அதா சொல்றேன். என்னால போவமுடியாது. இன்னும் அரமணி நேரத்துல போய் பாப்பாவ அழச்சிட்டு வந்து உட்டுட்டு போய் ரிப்போர்ட் அனுப்புங்க.”
ஃபோனை வைத்து விட்டாள்.
தயக்கத்துடன் அவளை அழைத்தான். எடுக்க வில்லை. திரும்ப அழைத்தால் ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுவாள்.
ராட்சஷி. அழகான ராட்சஷி.
இப்ராஹிம் பார்க் போர்டுக்கு கீழே கூட்டமாயிருந்தது. காரின் வேகம் குறைத்தான். யாரோ கண்ணாடியில் தட்டினார்கள். எரிச்சலாக வந்தது.
கண்ணாடியைக் கீழிறக்கினான்.
“என்னபா?”
“சார்.. சார் ஒரு ஆக்ஸிடெண்ட். அர்ஜெண்ட்டா ஹாஸ்பிட்டல் போகணும்.”
“108 கூப்பிடுங்க. ஃபர்ஸ்ட் எய்ட் இருக்கும்.”
“பண்ணிட்டோம் சார். வர்ற வழில பிரேக் டவுன்னாய்டுச்சாம். ப்ளீஸ் சார். ஒரு சின்ன பாப்பாக்கு அடிபட்ருச்சு”.
பாப்பா. அடிவயிற்றில் ஒரு கத்தி இறங்கியது. யார்? யார்?
அந்த ஆள் மடியில் ஒரு பெண்குழந்தை. அந்தக் குழந்தையின் தலையிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என்னாச்சு? என்னாச்சு?
“என் பொண்னு சார். என் பொண்ணு சார். ஸ்கூல் முடிஞ்சு அழச்சிட்டு வர்றப்ப ஒரு லாரி இடிச்சுட்டான் சார். ஹெல்ப் பண்னுங்க சார்..”
அந்த ஆள் கையெடுத்துக் கும்பிட்டார்.
அந்த ஸ்கூட்டி கீழே விழுந்து கிடந்தது. அதன் கண்ணாடியில் கட்டப்பட்ட ஒரு ஊதாநிற பலூன் காற்றில் எழும்பி படபடத்துக் கொண்டிருந்தது.
ஒற்றை நொடி யோசித்தான். “சரி தூக்குங்க”. இவனும் ஒரு கை கொடுத்தான். ரத்தம் சூடாக இவன் சட்டையை நனைத்தது. பின் சீட்டில் படுக்க வைத்து டவலை எடுத்து நீட்டினான். “பிளட்டை அரஸ்ட்” பண்ணுங்க. “தோ போய்டலாம்”.
அவர் இவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். “எங்க குலசாமி சார் நீங்க. சரியான நேரத்துக்கு வந்தீங்க”.
“அது பரவால்ல. பாப்பா இப்ப எப்படி இருக்கு?”
“தலைல ரெண்டு தையல் போட்டுருக்காங்க.. ரத்தம் ஸ்டாப் ஆய்டுச்சு. ஒண்ணும் ஆபத்து இல்லேன்னு சொல்லிட்டாங்க.”
மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டார்.
திடும்மென ஞாபகம் வர வாட்ச் பார்த்தான். 4.00 மணி.
“ஓ.மை காட். ” சாயாவைக் கூப்பிட்டான்.
“ஏன்டா.. ஏன்டா இப்டி பண்னினே”.சாயா அழுது கொண்டே பேசினாள்.
“என்ன சாயா என்னாச்சு? ரித்து?”
“எத்தனைக் கால் பண்றது. ஏன் எடுக்கலை. ரிப்போர்ட் அனுப்பிக்கிட்டிருந்தீயா?”
“சாயா.. காம். ப்ளீஸ். ரித்து எங்கே?“
பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். “காணும்டா.. புள்ளய காணும்டா.”
விரல்கள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தது.“என்ன என்ன? ஸ்கூலுக்கு ஃபோன் பண்ணினியா?”
“இங்க ஸ்கூல்லதான் இருக்கேன். யாரும் இல்ல. வாட்ச்மேன் மட்டும் இருக்கார்.”
“மிஸ்சுக்கு ஃபோன் பண்ணினியா?”
“கேட்டுட்டேன்.. கேட்டுட்டேன். வழக்கம் போல ஆட்டோல போயிருக்கும்னு நெனச்சுட்டாங்களாம். ஐய்யோ ரித்திக்கா.”
“இப்ப எங்க இருக்க?”
“ஸ்கூல் வாசல்ல.”
“அங்கேயே இரு. நான் வந்துடறேன்.”
“வந்து என்ன புடுங்கப் போறே? இடியட்.. இடியட்.”
“நான் வந்து..”
“சொல்லாத.. ஒண்ணும் சொல்லாத.. மூடிக்கிட்டு வா.”
கடவுளே.. கடவுளே.
இவனைப் பார்த்ததும் ஓடி வந்து கைகளைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“அழாதே.. அழாதே. அர்ச்சனா அம்மாகிட்ட பேசினியா? அவங்க அழச்சிட்டுப் போயிருக்கப் போறங்க?”
“பேசிட்டேன். இன்னக்கு அர்ச்சனா ஸ்கூலுக்கு வரலையாம்.”
வாட்ச்மேன் அருகில் போனான். “என்னய்யா ஸ்கூல் நடத்துறிங்க? உங்கள நம்பி தானே புள்ளையை அனுப்பறோம்”.
“சார் என்கிட்ட கோவப்படாதீங்க. ஸ்கூல் டயத்துல நாங்க பாத்துக்குவோம். அதான் ஃபோன் பண்ணி சொன்னோம்ல. நீங்க பொறுப்பா இல்லாம இருந்தா நாங்க என்ன பண்றது?”
கோபத்தில உடல் நடுங்க அவரைப் பார்த்துக் கத்தினான்.
“உங்கள சும்மா உட மாட்டேண்டா.”
சாயா இவன் கை பிடித்து இழுத்தாள். “நீங்க தப்பு பண்ணிட்டு அவர் கிட்ட கோபப்பட்டு என்ன பிரயோசனம்?“
அருகில் இருந்த கடைகாரர் இவனைக் கூப்பிட்டார்.
“சார். இப்ப நம்ம ஊர்ல புள்ளைங்க நிறைய தொலஞ்சி போய்ட்டுருக்கு. போனவாரம் கூட செயிண்ட் மேரி ஸ்கூல்ல ஒரு பொம்பள புள்ள காணமப் போய்டுச்சு… அது என்னமோ தெரில.. பொம்பள புள்ளையா காணமப் போகுது. இல்ல கடத்துறாங்களா தெரில. உடனே போலீஸ்ல கம்பிளெய்ண்ட் குடுங்க சார்.”
“அய்யய்யோ.. என் பொண்ணு.“ சாயா தரையில் சரிந்து அழ ஆரம்பித்தாள்.
“ஒண்ணும் ஆகாது.. ஒண்ணும் ஆகாது”. சொல்லும் போதே இவன் குரல் குழறியது.
“இந்த ஏரியா வெஸ்ட் கண்ட்ரோல்ல வரும். வெஸ்ட் ஸ்டேஷன்ல சீக்கிரமாப் போய் கொடுங்க.”
காரை ஸ்டார்ட் செய்யும் போது சாயா ஃபோன் ஒலித்தது.
பதட்டத்தில் காலை ஆஃப் செய்தாள். ஃபோன் மீண்டும் கூப்பிட்டது.
“சொல்லுங்க மூர்த்தி அண்ணா. அப்டியா. அப்டியா. கடவுளே.. கடவுளே. எங்க வீட்டு வாசல்ல நிக்குறிங்களா? தோ வந்துடறோம். ”
“என்ன? என்ன?“
“பாப்பா மூர்த்தி அண்ணாவோட இருக்காளாம். நம் வீட்டு வாசல்ல நிக்குறாங்களாம்.”
தெருமுனை திரும்பும் போதே வாசலில் ஆட்டோ நிற்பது தெரிந்தது.
ரித்திகா கையில் ஊதாநீற பலூன் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.
இறங்கிய வேகத்திற்கு சாயா ஓடிப்போய் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.
இவன் வேகமாகப் போய் மூர்த்தியின் சட்டையைப் பிடித்து இழுத்தான்.
“என்ன பண்றிங்க?” சாயா கத்தினாள்.
“ஏண்டா ஒரு வார்த்தை ஃபோன் பண்ணிச் சொல்லிருக்கலாம்ல.”
மூர்த்தி இவன் கைகளை விலக்கி விட்டுச் சொன்னார். “உங்க ரெண்டு பேருக்கும் எத்தனை தடவை ஃபோன் பண்றது? எங்கேஜ்டாவே இருந்தது. என் பொண்ண டாக்டர்கிட்ட காட்டிட்டு திரும்பி ஸ்கூல் பக்கமாத்தான் வந்தேன். ரிது பாப்பா மட்டும் தனியா நின்னுட்டு இருந்தது. ரொம்ப நேரமாயிருக்கும் போல. பக்கத்துல சொன்னாங்க. அதான் அழச்சிட்டு வந்து உங்க வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டியிருந்தது. இப்பதான் உங்க லைன் கிடச்சுது.”
“ஸாரி மூர்த்தி சார்.”
“மன்னிச்சுருங்க மூர்த்தி அண்ணா.”
“பரவால்லம்மா. என் தம்பி மாதிரி தானே. புள்ளைக்கு ஒண்ணுன்னா அப்பாக்கு பயமாத்தானே போய்டும். நானும் இப்படி பதறித்தான் என் பொண்ண டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன். எனக்கு சாரோட கண்ல பயம் தெரிஞ்சுதும்மா. எனக்கு ஒண்ணும் வருத்தமில்லே.“
அருகில் போய் மூர்த்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டான். ஆட்டோவிலிருந்த மூர்த்தியின் குழந்தை ரித்துவைப் பார்த்து கை ஆட்டியது.
அதன் கையிலிருந்த ஊதா நிற பலூன் காற்றில் மெலிதாக ஆடிக்கொண்டிருந்தது.