வாயை மூடடா குரங்கே

அச்சத்துடன் இருந்தேன்.  சுந்தரம் கனிவுடன் பேசினார் ”பாருங்கள் புலவரே உங்களுக்குத் தெரியாதது இல்லை இருந்தாலும் சொல்கிறேன்.  மனிதருக்கும் எல்லா உயிர்க்கும் இயற்கை விதித்திருக்கும் கடமை ஒன்றுதான்.  உயிரோடு இருப்பது.  மற்றொரு கடமை இனவிருத்தி செய்வது.  மற்றெதெல்லாம் அப்படி முக்கியமானவையல்ல.  என்ன?”

நான் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

”ஏதோ உங்களுக்கு நல்லூழ் உங்கள் ஜாதகத்தில் புதன் வலுத்திருக்கிறது அறிஞராக புலவராக இருக்கிறீர்.  சூரியன் வலுத்திருப்பவன் அரசன்.  பிரம்மாண்ட சூரியனின் அருகிலேயே இருக்கும் புதன் சூரியனைத் தொழுதுகொண்டு சுற்றியிருப்பதுதான் நல்லது.  எங்கோ சூரியனுக்கு வெகுதொலைவின் இருளில் அலைவது சனி.  அதன் எதிர்ப்புணர்வை புதன் கைக்கொள்ளலாகுமா?

பாருங்கள்.  உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  என் போல நீரும் தமிழர் என்பதால் அன்பில் சொல்கிறேன்.  நன்றாக இருங்கள்.  மதுரையும் தஞ்சையும் என்று பழங்கனவுகளால் இன்று ஒரு பயனும் இல்லை.  பெத்த நாயகர் மதுரைக்கு சென்றிருக்கிறார்.  உங்களிடம் கனிவுடன் பேச வேண்டும் என்று கூறிச் சென்றார்.  என்ன ஒரு அன்பு பாருங்கள்.  கேள்விப்பட்டிருப்பீர்கள் கொங்குப் பகுதியில் சில சிறுவர்கள் புரட்சிக் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.  ராயர் சீமையிலிருந்து ”ஒரு முறைக்கு நூறுமுறை யோசிக்க வேண்டும்” என்று ஓலை வந்தது பெத்த நாயகர் பதற்றமடைந்து விட்டார்.  அவர் நம்மை விட்டுக் கொடுக்கமாட்டார் என்றாலும் அவரும் ராயர் சீமையின் பிரதிநிதியாக இருப்பவர்தான் என்பதை மறக்கக்கூடாது.  உங்களுக்கு ஏன் இந்த வேலை? எதற்காக மூக்கையோ நாக்கையோ காதையோ இழக்க வேண்டும்?

பாருங்கள் ஆற்காட்டில் ஒருவன் உளறிக் கொண்டிருந்தான்.  படை வீரர்களால் கைது செய்யப்பட்டான்.  அவனுக்கு என்ன தண்டணை அளிப்பது என்று முடிவுசெய்யும் முன்னர் மருதூர் அய்யாவின் ஓலை வந்தது உடனே விடுவித்து விட்டார்கள்.  அவனுக்கு அப்படி குறுநில மன்னரின் ஆதரவு இருக்கிறது.  உங்களுக்கு யார் இருக்கிறார்கள்? யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்குத் தெரியும்.  வைகையை விடப் பெரியது காவிரி.  காவிரியை விடப் பெரியது கிருஷ்ணை.  அதைவிடப் பெரியது கோதாவரி.  இங்காவது பரவாயில்லை மூக்கறுதான் பட நேரும்.  தில்லி பேரரசரின் கங்கைக் கரையில் என்றால் எரித்து சாம்பலாக்கி உடலில் பூசிக் கொண்டு சுடலையாடுவார்கள்.  உங்களுக்குப் புரிந்ததில்லையா? என்று நிறுத்தி நோக்கினார் சுந்தரம்.

”புரிகிறது”

”நல்லது.”  புன்முறுவலுடன் ”எனக்கு சோதிடம் பற்றியெல்லாம் எப்படித் தெரியும் என்று வியப்பீர்கள்.  சமீபகாலமாக படித்து வருகிறேன்.  சிறு அதிகாரி என்றாலும் எனக்கும் அவசியமாகத் தான் இருக்கிறது.  கோள்கள் யாரை எப்படி பந்தாடும் என்று உய்த்தறிய முடியுமென்றால் ஏதோ ஒருவகையில் நல்லதுதானே? நெருநல் உளனொருவன் இன்றில்லை”

நான் எதுவும் சொல்லவில்லை.

”நல்லது.  நீங்கள் புறப்படலாம்.”

நான் வணங்கி விடை பெற்றேன்  அச்சிறுகோட்டையின் வெளியே வந்தபோது கால்கள் நடுங்கின.  அச்சத்தை தவிர்க்க எதிரில் காற்றில் இலைகள் அசைந்து கொண்டிருந்த அரச மரத்தைப் பார்த்தவாறு நடந்தேன்.

”என்ன புலவரே மலையப்ப சுவாமியை தரிசிக்க செல்லவிருப்பதாக சொன்னீரே எப்போது செல்வீர்? கடந்து சென்ற யாரோ தெரிந்த குரல் கேட்டது.

”மார்கழியில் செல்கிறேன்.”  அழுகுரல் போல் வந்த தொண்டையை சரிசெய்துகொண்டு திரும்பிப் பார்க்காமல் கூறிவிட்டு வேகமாக நடந்தேன்.

”என்ன வழக்கம் இது எதற்கெடுத்தாலும் மூக்கறுப்பது நாக்கறுப்பது எரிப்பது?”  அச்சம் உடலைக் கவ்வியது.  நடுக்கம் ஏற்பட்டது.  இளங்கோவடிகள் என்ன எழுதினார் ? சிலப்பதிகாரம்…..  அதாவது அதிகாரம்.  திருக்குறளில் ஒவ்வொரு பத்து குறளுக்கும் என்ன சொல்கிறார்கள்? அதிகாரம்.  நீ என்ன இளங்கோவடிகளையும் திருவள்ளுவரையும் விட அவ்வளவு பெரிய ஆளா என்ன? ..ஆமாம் நான் ஏன் இப்படி உளறிக் கொண்டிருக்கிறேன்?

மலையப்ப சுவாமியை மார்கழியில் …..என்று எண்ணம் எழ  ”எதற்கு மலையப்பன் நான் ஏன் அங்கெல்லாம் போகிறேன? எனக்கு என் திருவரங்கன் போதும்” என்று சொல்லிக் கொண்டேன்.

”அரங்கனைப் பாடாமல் வேறொரு குரங்கனைப் பாட மாட்டேன்” என்ற எண்ணம் தோன்ற திடீரென்று பதறி துள்ளிக் குதித்தேன்.  பின் சுற்றுமுற்றும் பார்த்தேன்.  யாருமில்லை.

பின் எனக்கு நானே கூறிக் கொண்டேன் ”வாயை மூடடா குரங்கே”

ReplyForward

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *