எளிய காரியம் ஒரு பிரளயம்

உழவர் சந்தையைத் தாண்டியதும்தான் சங்கரனுக்குத் தோன்றியது மூக்கடைத்து மூச்சுவிட சிரமமாக உள்ளதென்று. அவன் காலைநடை செல்லும் வழக்கமான நேரம், வழக்கமான பாதை.

புறநகரில் உள்ள அவன் வீட்டில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில். ஈஸ்வரன் பிள்ளை என்ற புண்ணியவான் அளித்த நன்கொடை நிலம்.  அகலித்து வான்நோக்கும் செம்மண் விளையாட்டு மைதானம். சுற்றிலும் ஆலும் வேம்பும் பனையும் அரண்களாக. அத்தனை வயதினரையும் அங்கு  காணலாம். எப்பவும் கிரிக்கெட்டும் புட்பாலும் விளையாடும் அணிகள் மைதானத்தையே கதிகலங்கச் செய்து கொண்டிருப்பார்கள். குனிந்த தலையோடு சங்கரன் அரைமணிநேரம் மைதானத்தைச்சுற்றி நடப்பான்.  வியர்வை பீறிட்டு வழிந்திடுமாறு ஓடிப்பார்க்க ஆசை தோன்றும். திம்மென்று நிலமதிர ஓடிச்செல்பவர்களைக் காண கால்கள் உந்தித்தள்ளும். ஓட்டமும் நடையுமாக வேகம் கொண்டு நடந்து முடிந்து வீடு திரும்பும்போதே கால்களில் வலியெடுக்கும். சில நாட்களில் முன்பாதங்களை ஊன்றி நடக்க முடியாத வலி. மூட்டுகளில் அவ்வப்போது விண்விண்  தெறிப்பு. அதனால் புதிய முயற்சிகள் எதையும்  அவன் மேற்கொள்வதில்லை. காலை நடை என்பதே ஏழு மணிக்கு முன்னர் துயில் நீங்கினால் மட்டுந்தான். மாதத்தில் பாதி நாட்கள் இடைவெளி. பெண்கள் அவனைக்கடந்து வேகுவேகென்று தாண்டிச்செல்லும்போது மட்டும் அவன் வருத்தமடைவான். அந்த நேரத்திலும்  அவர்களின் உடலில் இருந்து வியர்வையோடு கிளர்ந்து வரும்  பெர்ப்யூமை அவன் புன்னகையோடு எதிர்கொள்வதுண்டு.  மற்றபடி அவன் கொள்வது ஒரே வேகம். ஒரே தலையாட்டல். ஒரே தாளகதி.

மூக்கைச் சீந்தினான். மீசை மயிர்களில் அரிப்பெடுத்தது. கைக்குட்டை எடுத்துவர மறந்திருந்தான். டீ சர்ட்டின் கை விளிம்புகளில் துடைத்துக்கொண்டான். எப்படி ஜலதோசம் பிடித்தது? அவன் வீட்டில் யாருக்கும் இருக்கவில்லையே.

அவன் மனைவியும் பிள்ளைகளும் ஊருக்குச் சென்றது நேற்று. சாயந்திரம் அவர்களை அவன் பஸ் ஏற்றிவிடும்போது உள்ளே மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடியது. பிள்ளைகளும் மனைவியும் அற்ற வீடென்பது உற்காசம் அளிப்பதாக மாறியிருந்தது. அவன் விரும்பிய புத்தகத்தை கவனச் சிதறல் ஏற்படாமல் நீண்ட நேரம் படிக்கலாம்.   குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற அச்சம் நீங்கி ஹாலிவுட் வெண் தொடைகளை, முலை இடுக்குகளை, உதட்டு உறிஞ்சல்களை எச்சில் ஊற ரசிக்கலாம். அவன் மனைவிக்கு அது தெரிந்துவிட்டதோ என்னவோ உம்மென்று அவனை முறைத்துக்கொண்டிருந்தாள். மனைவிகள் மிக விரைவாக முதலாளிகளின் கடுத்த முக பாவனைகளை வந்தடைந்து விடுகிறார்கள். ஒன் டூ ஒன்னில் எப்பவும்போல கூட்டம் அப்பி ஏறியது. இரண்டு பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு வாயிலில் முண்டி ஏறி இருக்கை பிடிப்பது என்பது அவனால் கூட ஆகாத காரியம். தயங்கி வேடிக்கைப் பார்த்து நின்றனர். மூத்தவள் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள். “நீயெல்லாம் ஒரு அப்பாவா…போ..போய் சீட்டுப்போடு..பாத்திமா அப்பால்லாம் உடனே சீட்பிடிச்சு அவள உக்கார வெச்சுருவார் தெரியும்மில்ல” என்று விரட்டினாள். சின்னவள் அதற்கும் கைகொட்டிச் சிரித்தாள். அவளும் அவள் பங்கிற்கு தத்தக்கா பித்தக்கா என்று அவனை ஏசினாள். கண்கள் மட்டும் கலங்கமின்மையின் பூரிப்பில்.

அடுத்ததாக ஒரு பேருந்து வந்து நின்றது. நிறைய இடங்களில் இடைநிற்கும் பேருந்து. பயணிகள் பாதிதான் ஏறியிருந்தார்கள். அவன் பாய்ந்து  சென்று காலியாக இருந்த இருக்கைளில் ஒன்றில் சாய்ந்து கிடந்து அவர்களைக் கூவி அழைத்தான்.

சின்னவள் அவனும் ஊருக்கு உடன் வரவேண்டும் என்று அடம் பிடித்து அழுதபோது உண்மையிலேயே அவனுக்குச் சங்கடமாக இருந்தது. பிள்ளையைத் துாக்கி மார்போடணைத்து முகம் முழுக்க முத்தங்கள் கொடுத்து சாந்தப்படுத்தினான். அவன் மனைவி உடனேயே செல்போனை சின்னவளிடம் நீட்டி “நீ..பொம்மப்படம் பாரு” என்று ஆற்றுப்படுத்தினாள்.  சன்னலோர இருக்கைக்காக அவர்களுக்குள் குருசேத்திரம்.

செட்டியார் மெஸ்ஸில் இரவுணவு.  புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றி இருக்கும் உணவகங்களில் அதுதான் பரவாயில்லை ரகம். இட்லியும்  தோசைவகைகளும் சப்பாத்தியும் மட்டுந்தான் உத்தரவாதம். அதற்கே பெருங்கூட்டம். எதிரே மாவட்ட அரசு மருத்துவமனை. இட்லிக்கான வாடிக்கை நிரந்தரம்.

ஒரு இருக்கை காலியானதும் சென்று அமர்ந்துகொண்டான். அவனுக்குப் பரிச்சயமான பரிமாறுபவரைத்  தேடினான். அவரைக் காணவில்லை. அவர் என்றால் அவனைப் பார்த்து தேவைக்கு அதிகமாக ஒரு சிரிப்பினை வழங்கி இலையை உடனே போட்டுவிடுவார். அவன் கொஞ்ச நேரம் காத்திருந்தான். இட்லிக்கொப்பரை மூடியை விலக்கி ஆவிபறக்கும் இட்லிகளை நீர் தெளித்து பக்குவமாக விரிப்பில் கிடத்தினார் செட்டியார். மாஸ்டரும் கல்லாவில் வாங்கிப்போடுபவரும் ஆர்டர் எடுப்பவரும் அவர்தான்.  பம்பரமாக சுற்றுவார். கூலிக்கு வருபவர்கள் மாதக்கணக்கில் தொடர்ந்து நீடிப்பதில்லை. வந்தாலும் நாசூக்காக பரிமாறும் கூறு கொண்டவர்களும் அபூர்வம்.

அவன் அமர்ந்திருந்த மேசையின் நடுவில் நான்கு வாய்கள் கொண்ட சாம்பார் வாளி. இரண்டில் சாம்பாரும் ஒன்றில் தேங்காய்ச் சட்னியும் மற்றொன்றில் தக்காளிச் சட்னியும்.  அவனுக்கு இடதுபுறம் அமர்ந்திருந்தவர் பரபரத்தார். முகத்தை ஏறிட்டுப்பார்த்தான். தெரிந்த முகமாக இருந்தது. தெக்கத்தி ஆண்களுக்குரிய முகவெட்டும் முரட்டு மீசையும்.  நிறமும் முகமும் உடல்மொழியும் அவரின் சாதி என்ன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. கல்லாவை நோக்கி ”அண்ணாச்சி..நமக்கு பத்து கல்தோசை.. இரண்டு பார்சல்” என்று கத்தினார். முன் விழுந்த இலையை விரித்து தண்ணீர் தெளித்தவர். “ஹச்..ஹச்..” என்று இடைவிடாமல் தும்மினார். மீசையை நீவிக்கொண்டார். எதிரே சாம்பார் வாளி. அவரின் எதிர்ப்புறம் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கணம் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார். இரண்டு இட்லியும் பாதி உளுந்த வடையும் இலையில் மீதம்.

சங்கரன் எழுந்து வெளியே சென்றுவிடலாமா என்று எண்ணினான். அவரின் மூக்கிலிருந்து சீறிப்பாய்ந்த நீர்த்திவலைகள் நிச்சயமாக சாம்பாரிலும் சட்னியிலும் கலந்து கரைந்திருக்கும். அருவருப்பாக இருந்தது. குமட்டவும் செய்தது. ஆனால் அருகில் வேறு கடைகள் எதுவும் சாப்பிடும் தரத்தில் இல்லை. ஏற்கனவே சுற்றியிருக்கும் அத்தனைக் கடைகளிலும் சண்டை வேறு போட்டாயிற்று. செட்டியார் கடை ஒன்றுதான் மனம் உடைந்து சண்டைபோடும் தருணங்கள் இதுவரை நேரிடாத உணவகம்.

புறநகர்ப் பேருந்து நிலையங்களைச் சுற்றியிருக்கும் கடைகள் அனைத்தும் ஆகத் தரங்குறைந்தவையாகத்தான் இருக்கின்றன. இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்கள் அனைத்திலும் இதே கதைதான். என்ன காரணமாக இருக்கும்? என்று யோசித்திருக்கிறான். நிரந்தர வாடிக்கையாளர்களை அவர்கள் நம்பி இருக்கவில்லை என்பது முதற்காரணம் என்றால் கடைகள் வாடகை, ஏலம் எடுப்பதில் உள்ள அதிகாரப் போட்டிகள் போன்றவை கூடுதல் நெருக்கடிகள்.

வீட்டில் சமையல் இல்லாத நாட்களில் அவன் முகம் வாடிப்போவான். சகித்துக்கொண்டு சாப்பிட  பழகிக்கொண்டான். பரிமாறுபவர்களின் நடை உடை பாவனை முதல் ஒவ்வாமை. மிகக்குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்க நேரிட்டவர்களைப்  போல அவர்கள் மிகுந்த சலிப்போடு உணவைப் பரிமாறுவதை அவன் தவறாமல் கண்டிருக்கிறான். சட்டினியோ சாம்பாரோ காலியானால் உடனே அறிந்து பரிமாறுவதும் கிடையாது. அவன்தான் அவர்களுக்கு தெரியவரும்வரை சாப்பிடாமல் அமர்ந்திருப்பான். அல்லது கத்திக்கூப்பிட்டு வாங்கிக்கொள்வான். இங்கிதம் தொலைத்து பஞ்சகால உணவகங்களைப் போல கிடைத்தால் போதும் என்ற மனநிலைதான் சாதாரணம். பணம் கொடுத்து சாப்பிட்டாலும் கட்டாயமாக ஏற்படும் இந்த இழி நிலையை ஏன் யாரும் பெரிய குறையாக எடுத்துக்கொள்வதில்லை. தனக்கு மட்டுந்தான் இத்தனைச் சிரமமாக இவையெல்லாம் உள்ளனவா? நுண்ணுணர்வு என்று இதைத்தான் சொல்ல வேண்டுமா? எத்தனை நுாற்றாண்டு பரிணாம வளர்ச்சி அடைந்த பின்னும் மனித இனம் வந்து சேர்ந்திருக்கும் முட்டுச்சந்து இவ்வளவுதானா?

சிலுசிலுவென்று தென்றல் அவன் சட்டைக்குள் புகுந்தது. மனம் உடனடிப் பரவசத்தில் உற்சாகம் கொண்டது.

“வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம்” என்றான் முணுமுணுப்பாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *