அக்காவை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. என் கண்ணே பட்டிருக்குமோ என்னமோ? முன்பு போல அவள் பிரகாசமாக இல்லை. முகம் இறுக்கம் கொண்டு உம்மென்று ஆகிவிட்டது. நான் சென்றால் தாராளமாகச் செலவு செய்வாள். அத்தானும் பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்து அள்ளிக்கொண்டு வருவார். எல்லாம் ஒரே ஒரு மூளியால் இல்லாமல் போயிற்று.
அந்த மூளியை நானும் சென்று பார்த்தேன். என் அக்காவை விட அவள் எந்தவிதத்தில் உசத்தி என்கிற எரிச்சல் என்னிடமிருந்தது. அத்தானின் ஜவுளிக்கடைக்கு எதிரே அவளின் பேன்ஜி ஸ்டோர். உள்ளே கண்ணாடிகள் பதிக்கப்பட்ட அரங்குகள். அழகு சாதனப்பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள். விதவிதமான விளையாட்டுப் பொம்மைகள். அவற்றின் மத்தியில் ஒல்லிக்குச்சி உடம்போடு கருத்து, முன் பல் தெத்தி மார்புகளே இல்லாமல் அந்த மூளி அமர்ந்திருந்தாள். ச்சையென்று வந்தது. இந்த மூளிக்காகவா அத்தான் அக்காவை ஒதுக்கிவைக்க துணிந்து விட்டார்? அவள் புருசன் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. குழந்தைகள் இல்லை.
அன்றிரவு என்னால் நிம்மதியாகத் துாங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். அருகே அதிரும் குறட்டையில் என் வீட்டுக்காரர். தொந்தி ஏறி இறங்கி ஒரு பூதத்தைப் போல படுத்திருந்தார். எப்போதும் வரும் எரிச்சல் அவர் மீது வரவில்லை. என்ன இருந்தாலும் இவருக்கு நான் தான் வேணும். நாள்தோறும் அது ஒரு செல்லக் கடமை போல. ஐந்து நிமிட சாமியாட்டம். அதன்பின்னர் அறையை அதிரச் செய்யும் குறட்டையொலியோடு கும்பகர்ண உறக்கம். சாப்பாட்டில் குறை இருந்தாலும் சகித்துக்கொள்வார். ஆனால் இதில் மட்டும் இல்லை என்ற நிலை வந்துவிடக்கூடாது. துாரமான நாட்களில் ஒவ்வொரு நாளும் அவரிடம் அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பேன். இல்லையென்றால் நின்று பேசிக்கொண்டிருப்பவர் சட்டென்று பின் பகுதியில் கை வைத்து சேட்டைகளை ஆரம்பித்துவிடுவார். கைகளால் சாந்தப்படுத்த வேண்டியிருக்கும். கைலியைக் கூட ஒழுங்காக கட்டியிருக்கவில்லை. மயிர் நிரம்பிய தொடையைக் காட்டியபடி விலகியிருந்தது. பிள்ளைகள் ஆளுக்கு ஒரு திக்கில் உருண்டுகிடந்தார்கள். பெரியவள் பார்த்தால் அவளே வந்து சரி செய்துவிடுவாள். எல்லா ஆண்களும் எதற்காக இப்படித் தவியாய் தவிக்கிறார்கள்? இவருக்கும் வேறு எவளோடாவது தொடுப்பு இருக்குமோ? மனம் சஞ்சலத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அக்காவை அத்தானுக்கு நிச்சயம் செய்த நாள் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அம்மா என்னை வெளியே தலைகாட்டக் கூடாது என்று சொல்லிவிட்டாள். மாப்பிள்ளை வீட்டார்கள் ரெண்டு வேன்களில் வந்திருந்தார்கள். மட்டப்பாவில் ஜாமியானா பந்தல் போட்டு மின்விளக்குகள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. அக்கா அத்தானை போட்டாவில் மட்டுந்தான் அதற்கு முன்னர் பார்த்திருந்தாள். சொக்கலிங்கம் மாமா மாப்பிள்ளை போட்டோவை அப்பாவிடம் காட்டினார். அப்பாவின் முகம் எந்தவித மாறுதலும் இன்றி, பார்த்த உடன் தலையை ஆட்டியது, அம்மாவிடம் போட்டோவை நீட்டினார் அப்பா. அம்மாவின் முகத்தில் அதிருப்தியின் ரேகைகள் சட்டென்று தெரிந்து மின்னல் வேகத்தில் மறைந்தும் விட்டன. அக்கா பார்க்கும்போது நான் அவளின் தலைக்குப் பின்னே நின்று எட்டிப்பார்த்தேன். அக்காவின் கண்கள் கலங்கின. உதடுகளை உள்மடக்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். அக்கா நல்ல சிவப்பு, சுருண்ட ரோமங்கள் கொண்ட அடர்ந்த கூந்தல். எங்கள் வீட்டிலேயே பெரும் அழகி. அவளோடு ஒப்பிடும்போது நான் ஒன்றும் பிரமாதமான அழகு இல்லை. ஆனாலும் அம்மா ஏன் அப்படி என்னை விரட்டினாள் என்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.
தெருவில் ஆட்கள் சத்தம் கேட்டது. நான் கோமதி சித்தி மாடியில் இருந்து எட்டிப்பார்த்தேன். சொக்கலிங்கம் மாமாவின் குரல் கனத்துக்கேட்டது. தெருவே மாப்பிள்ளையை வேடிக்கை பார்க்க வாசலில் நின்றது. அத்தான் அவருடன் வந்த ஆண்களிலேயே மிகவும் குட்டையாக இருந்தார். தலையை ஆட்டி ஆட்டி நடந்தார். கனத்த தேகம். ஏற் நெற்றி. அடர்ந்த புருவங்கள். கைகளிலும் மார்பிலும் கொசகொசவென ரோமங்கள். பார்த்த உடனே சொல்லிவிடலாம் முரட்டு ஆத்மா என்று. அக்காவை நினைத்து அப்போதே எனக்கும் அழுகை வந்தது. அவள் எதிர்பார்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியாதா என்ன?
அம்மா அக்காவை புதுப்பெண்ணாக்கியிருந்தாள். தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து பட்டுடுத்தி, செண்ட் மணக்க சபையில் வந்து நின்று வணங்கினாள். அக்கா வேறு யாரோ போலிருந்தாள். அவள் முகம் ஏமாற்றத்தை மறைக்க மிகவும் பிரயத்தனப்பட்டது. செங்கோட்டைச் சித்தி ”ஏட்டி..கொஞ்சம் சிரிச்ச மாதிரிதான் இரேன்?” என்று வெளிப்படையாக சொல்லியும் விட்டாள். அம்மா உடனே பதறி சத்தமாகச் சிரித்து “சின்னப்பிள்ளயிலா..பயமா இருக்காதா?” என்று சொல்லி பேச்சை வேறு திசைக்குத் திருப்பினாள்.
அத்தானின் முகம் பூரித்திருந்தது. பரபரப்புடன் காணப்பட்டார். பெண்ணை அவருக்கு நிரம்ப பிடித்துவிட்டது. அவரோ பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர். அக்கா பி.எட். வரை படித்தவள். பேரழகி. நல்ல சிவப்பு. யாருக்குத்தான் அக்காவைப் பிடிக்காமல் போகும்?
செண்டு அத்தைதான் அப்பாவிடம் கேட்டாள். ”ஏண்டா…மாப்பிள்ளை நம்ம சுமதிக்கு கொஞ்சம் கூட மேட்ச் ஆவலியேடா… ஊருல வேற நல்ல மாப்பிளையே உன் கண்ணுல தட்டுப்படலயா..?
“நீ..அந்நால போயிரு..மாப்பிள்ளை குணம் தங்கம். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ஜவுளிக்கடை வேலை உண்டு வீடு உண்டுனு இருக்கற பையன். இந்தக் காலத்தில இப்படி யாரு கிடைப்பா? போட்டது போதும்னு சொல்லிட்டாங்க…நம்ம இருக்கற நிலைமைக்கு கலெக்டர் மாப்பிளையா கிடைப்பான்?”
“அட..கூறு கெட்ட பயல..பிள்ளையைப் பெத்து அரும்பாடு பட்டு வளர்த்து இப்படியா சாக்கடையில கொண்டு தள்ளுவே..”
அப்பா உடன் பிறந்த அக்கா என்று கூட பார்க்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அடிக்கப் பாய்ந்து விட்டார். பலவேசம் மாமாதான் தடுத்தார்.
“வ்வே..மாப்ள..உங்க அக்காவைப் பத்திதான் உமக்கு நல்லாத் தெரியுந்தானவே…சும்மா இரும்..ஆக வேண்டியதப் பாரும்”
அம்மாவும் அப்பாவும் பேசிப்பேசி அக்காவை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். திருமணம் முடிந்த பிறகு அக்கா மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். அத்தானும் அவள் மீது பாசத்தோடு இருந்தார். அக்காவைப் பிரிந்து ஒரு நாள் கூட அவர் இருந்ததில்லை. இரண்டு பிள்ளைகளின் பேறு காலங்களில் கூட ரெண்டு நாளைக்கு ஒரு முறை அக்காவைப் பார்க்க வந்துவிடுவார். அம்மாவிற்கு அந்தவிதத்தில் ஆறுதல். மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று.
அக்கா ஒரு நாள் கன்னங்கள் வீங்கி, கலைந்த தலையோடு வீட்டிற்கு வந்தாள். பார்த்த உடன் பதறிப்போனேன்.
“என்ன நீ..சொல்லாமக் கொள்ளாம இப்படி அலங்கோலமா வந்து நிக்க..என்னாச்சுக்கா..?”
வந்தவளை பாயில் அமர வைத்து தண்ணீர் கொடுத்தேன். அக்கா ”ஓ.”வென அழ ஆரம்பித்தாள். எனக்கு நெஞ்செல்லாம் வலியெடுத்தது. அவள் கைகளை பிடித்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.
“என்ன இது..சின்னப்பிள்ள மாதிரி…என்னன்னுதான் விசயத்த சொல்லேன்?”
அப்பா அம்மாவிற்கு தெரிய வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கிய பின்னர்தான் அவள் சொல்லத் தொடங்கினாள். கல்யாணம் ஆகி பதினைந்து ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அக்கா முதல்முறையாக அழுகிறாள். என் வீட்டிற்கு அத்தானோ குழந்தைகளோ இல்லாமல் தனியாக வந்திருக்கிறாள். பக்கத்து வீட்டில் இருந்து கிளியக்கா எட்டிப்பார்த்து ” என்ன சங்கரி..யாரு வந்திருக்கா?” என்று நோட்டம் விட்டுச் சென்றாள். நான் வேகமாகச் சென்று வாசல் கதவைச் சாத்தி தாளிட்டேன்.
அவர் மதியச் சாப்பாட்டிற்கு வரும் முன்னர் அக்கா மறுபடியும் கிளம்பி விட்டாள். பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக சகித்துக்கொண்டுதான் இருந்தாக வேண்டும். வேறு எங்கே செல்வது. அப்பா அம்மாவின் நிலையோ மோசம். முதியோர் உதவித் தொகையைக் கொண்டு ரேசனில் அரிசி வாங்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் இருக்கும் நிலையில் அக்கா அங்கே சென்று எத்தனை நாட்கள் தங்கியிருக்க முடியும்? அத்தான் அதையே ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அந்த மூளியை வீட்டிற்கே கூட்டிக்கொண்டு வந்துவிட்டால்?
கடந்த ஆறுமாதமும் ஒரே சண்டை. இரண்டு மூன்று முறை அக்கா மகளிர் காவல்நிலையம் வரை சென்று வந்துவிட்டாள். அத்தான் திருந்துவதற்கான வழியையே காணவில்லை. குடிக்கவும் பழகியிருந்தார். இரவு வீடு திரும்பியதும் பருவம் வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று பாராமல் ஒரே அடிதடி. பாத்திரங்களைத் துாக்கி வீசுகிறார். பிள்ளைகள் இரண்டும் கதறி அழுகின்றன. பஜாரில் முக்கிய பிரமுகர்கள் அத்தனைப்பேரிடமும் சொல்லிப் பார்த்தும் ஆயிற்று. “ஆம்பிளனா..முன்ன பின்ன இருக்கந்தான் செய்வான்…எல்லாம் சரியாயிரும்… அது அவனோட தனிப்பட்ட விசயம் ..நாங்க எப்படிமா போய் புத்தமதி சொல்ல முடியும்? என்று விலகிக்கொண்டார்கள். முதலாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு அத்தானைப் போல வேறு தொடுப்புகள் இருந்தன என்று அக்கா ஆங்காரத்தோடு சொன்னாள்.
கடைசியாக என் வீட்டுக்காரரை விட்டு பேசிச் சரிப்படுத்த முடியுமா? என்று அக்கா கேட்டாள். சரி என்று அவரை அனுப்பினேன். அவருக்கும் நிறைய தயக்கம் இருக்கத்தான் செய்தது. “இதைப்போயி..நான் எப்படி அவர்கிட்ட பேச முடியும்?.. நீ..யாருல எனக்கு அட்வைஸ் பண்ணனு அவரு கேட்டா..நமக்குத்தான் சங்கடம்” என்று கையைப் பிசைந்தார். நான்தான் பரவாயில்லை ஒரு முயற்சிதானே?” என்று தள்ளிவிட்டேன். அவர் வரும் நேரந்தான். என்னால் வீட்டிற்குள் இருக்க முடிவில்லை. வாசலுக்கும் சமையல் கட்டிற்கும் நுாறு முறைக்கு மேலாவது அலைந்திருப்பேன்..
சின்னவளும் பெரியவளும் சண்டை போட்டு, தலையணையால் ஒருவரை ஒருவர் அடித்து அழுது புரண்டு, இறுதியில் துாங்கியும் விட்டார்கள். வெளியே சென்றிருந்தவர் பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு திரும்பினார். வந்ததும் “குட்டீக துாங்கிட்டுதுகளா?” என்று குசுகுசு குரலில் கேட்டார்.
முகம் உடம்பு கழுவி, பவுடர் போட்டு தலையைக் கூட கண்ணாடி முன் நின்று வாரிக்கொண்டார். எனக்கு சமையல் கட்டில் குவிந்திருந்த எச்சில் பாத்திரங்களை நினைத்தால் கவலையாக இருந்தது, கழுவ ஆரம்பித்தால் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகிவிடும். அதுவரை அவர் பொறுத்திருப்பாரா? சில நாட்கள் அப்படியே துாங்கியதும் உண்டு. ஆனால் இன்று அவரிடம் நிறைய பேச வேண்டும். அத்தானின் கதையைக் கேட்க வேண்டும்.
“உங்க அத்தான் அவள விடமாட்டாரு?” என்றார் தணிந்த குரலில்.
“ ஏன்..எதுக்காம்..அப்படி என்ன சொக்குப்பொடி போட்டு அவ மயக்கிட்டா?”
“ அவ சொக்குப் பொடியெல்லாம் போடல..ஆனா..” என்றவர் தயங்கினார். பிள்ளைகள் துாங்கிவிட்டார்களா என்பதைப் பார்த்து உறுதி செய்து கொண்டார். மிக மெல்லிய குரலில் என் காதில் வந்து கிசுகிசுத்தார். எனக்கு உடம்பெல்லாம் கூசியது. அருவருப்பும் குமட்டலும் வந்தது.ஆம்பளங்களுக்கு அப்படியெல்லாம் ஆசை இருக்குமா என்ன?
“ச்சீ..” என்று அவரைப் பிடித்து தள்ளினேன். எனக்கு மிகவும் பயமாகவும் இருந்தது.
