தெய்வம் என்றொரு தெய்வம்

நாற்பத்தியிரண்டு வீடுகள்  கொண்ட சிறிய கிராமம் ஒன்றில் பதினெட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தைக்கு தெய்வநாயகம் என்று பெயர் இடப்பட்டது. அப்பா பிரம்மநாயகம் பண்ணையார் வாரிசுகளில் கடைசி தலைமுறையைச் சேர்ந்தவர். பண்ணையத்திற்கு படிப்பெதற்கு என்று கேள்வி கேட்டு முகம் சிவக்க சிரித்து ஓயும் தன் தந்தையின் சொல்லை வேதவாக்காகக் கருதிய பிரம்மநாயகம் திண்ணைப் பள்ளிக்குக்கூட செல்லவில்லை. கணக்கப்பிள்ளைகள் எழுதிய கணக்கு வழக்குகள் அத்தனை சுத்தமாக இருந்தன என்ற நம்பிக்கையை அவரும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒத்துக்கொண்டார். இளமையில் நாடகக்காரிகளின் பின்னால் மல்லுவேட்டியும் பட்டுச்சரிகை முழுக்கைச் சட்டையும் அணிந்து  பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் பொன்போல மின்னிய இரவுகள் மட்டுமே பிரம்மநாயகத்தின் நினைவுகளில் நீண்ட நாட்கள் நின்றன. வியர்வை நெடிவீசும் நடனக்காரிகளின் அக்குள் ஈரம் வரைந்த பிளவுஸ் ஓவியங்கள் அவருக்கு மிகவும் விருப்பமான கல்லோவியங்களாக இருந்தன. வயல்களும் தோட்டங்களும் காலிடைப் புதர்களுக்குள் படுவேகமாக மறைந்து கொண்டிருந்ததை உணர்ந்து திடுக்கிட்டு அவர் விழித்துக் கொள்வதற்குள் நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பண்ணையார் பிரம்மநாயகம் பிள்ளையால் மிஞ்சிய வயலில் விளைந்த நெல்லை மட்டுமே குடும்பம் உண்ணவும் உடுத்தவும் உறங்கவும் கொண்டுவந்து சேர்க்க இயன்றது. பண்ணையம் இருந்த மிதப்பில் அவருக்கு விவசாயமும் தெரியாது. இன்னாசிக்குடும்பன் பாடுபட்டு அறுவடை செய்து  முற்றத்தில் அடுக்கும் மூட்டைகளில் ஒரு சிறிய பகுதிதான் கடைசியில் எஞ்சியது.

தெய்வ நாயகத்திற்கு பத்து வயது வரை பேச்சு வரவில்லை. எப்போதுமே மிதமிஞ்சிய புன்னகையும் வானத்தில் மிதந்தலையும் குதுாகலமும் பரவசப் பார்வையும் கொண்டு மோனத்தவத்தில் இருந்து வந்தான். பிள்ளைகளோடு விளையாடுவதில் அவனுக்கு ஆர்வம் துளியும் ஏற்படவில்லை. வயிறு புடைக்க தயிர்சாதத்தை பிசைந்து ஊட்டி, வாய் துடைத்து ஒற்றைத்துண்டில் அமரவைத்தால் அவன் துண்டினைத் தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைத்ததில்லை. .இயல்பாக குழந்தைகளுக்கு இருக்க வேண்டிய துருதுருப்பும், வீடு முழுக்க முட்டி மோதி தனதாக்கிக்கொள்ளும்  வேட்கையும் அவனிடம் காணப்படவில்லை. சவலைப்பிள்ளையாக இருப்பானோ என்றுதான் ஆரம்ப நாட்களில் சந்தேகிக்கப்பட்டான். உண்பதைத் தவிர அவன் ஆர்வம் வேறு எவற்றின்  மீதும் படியவில்லை. திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கைப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் உள்ளவன். தெருவில்  செல்லும் ஆடு மாடுகள், கோழிகள், நாய்கள், சாக்கடையில் புரண்டெழுந்து பதறி ஓடும் பன்றிகள் என அனைத்தின் மீதும் விழிகள் இமைக்காத லயிப்பு உண்டு. கோழிகளும்  சேவல்களும் அவனைக் கண்டு பயப்படுவதில்லை. அவனருகில் வந்து நின்று இறக்கைகள் உரச ஒட்டிச்செல்லும். சிட்டுக்குருவிகள் அவன் அருகில் பறந்து திரிந்து அந்தர் பல்டிகள் அடித்து அவனை மகிழ்விக்கும்.

தெய்வநாயகத்தின் அன்னை பேறுகாலம் நடந்த மூன்றாம் நாளில் கடும் காய்ச்சல் கண்டு இறந்து போனாள். பீத்துணி அலசவும், பிள்ளைக்கு புட்டிப்பால் ஊட்டவும் வந்த கொழுந்தியாள் நாலாயிரம் பிரம்மநாயகத்தின் இரண்டாம் தாரம் என்றானாள். சிற்றன்னையின் வேண்டா வெறுப்பிலும், எடுத்ததற்கெல்லாம் பேயாய் கத்தும் இரைச்சலிலும் அவன் குழந்தைப் பருவம் பதறிப் பதறி கழிந்தது. நாளுக்கு பத்துமுறை தொடையில் கிள்ளப்பட்ட கொடுமை நடந்த போதும் தெய்வநாயகத்தின் அசமந்தம் மட்டும் மாறிவிடவில்லை. பங்களாச்சுரண்டை ஐயரின் உண்டு உறைவிடப்பள்ளியில் தெய்வநாயகம் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட பிறகு அவனுக்கு குடும்பத்தின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச ஒட்டுதலும் இல்லாமல் போனது. காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்கு கூட அவன் வீடு திரும்புவதில்லை. சன்னாசி பாதிரியாரோடு அவன் கர்த்தரை வேண்டுவதிலும், மனம் உருகி சோத்திரங்கள் சொல்வதிலும் விருப்பம் உடையவன் ஆனான். வேதாகமத்தின் வசனங்களை செவி கூர்பவனாகவும், புதிய ஏற்பாட்டின் வசனங்களை சதா உதடுகளுக்குள் முணுமுணுக்கும் இயல்பு கொண்டவனாகவும் அவன் வளர்ந்து வந்தான். கோதுமை உப்புமாவும், புழுக்கள்  நெளியும் புழுங்கல் அரிசி கஞ்சியும் அவன் தேஜஸை குறைத்துவிடவில்லை. துாய பேதுரு ஆலயத்தின் விசுவாசியாக வாழ்ந்தான். பள்ளிப்படிப்பு முடிகிறவரை இறைசேவையில் தீவிரம் கொண்டவனாக இருந்தான். பதினான்காம் வயதில் அவனுடன் இருந்த நாற்பத்தெட்டு மாணவர்களுக்கும் ஞானஸ்தானம் வழங்கப்பட்ட போதும் அவனுக்கு மட்டும் தொட்டிநீரில் மல்லாக்கச்சாய்த்து நடக்க வேண்டிய முழுநீராட்டு மறுக்கப்பட்ட நாளில் இருந்துதான்  அவன் அவிசுவாசி என்றானான். பண்ணையார் வீட்டுப்பிள்ளைக்கு ஞானஸ்தானமா? என்ற கேள்வியால் அவன் நிலைகுலைந்தான்.

அன்றிரவு அவன் பரலோகத்தில் இருக்கும் பிதாவிடம் மனம் உருக வேண்டினான். அவன் வேண்டுதல் மாதங்கள் பல கடந்தும்  செவிகூரப்பட்டதற்கான அடையாளங்கள் ஏதும் அவனுக்குக் கிடைக்கவில்லை. கடும் ஏமாற்றத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த கையோடு அவன் நாற்பத்தியிரண்டு வீடுகள் கொண்ட தன் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். கருப்பசாமி கோயில் வளாகத்தில் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பில் குடிசைகட்டி தனித்திருக்க ஆரம்பித்தான். பிரம்மநாயகத்தின் இருப்பு தெய்வநாயகத்தின் துறவு வாழ்க்கைக்கு எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. எந்தவித ஆவலாதிகளும் அவனால் ஊருக்குள் எழவில்லை என்கிற ஆறுதலே  பிரம்மநாயகத்தின் நிம்மதி.  முன்னோர் செய்த பாவங்கள் அனைத்தும் தெய்வநாயகத்தின் உருவில் வந்து பிறந்திருப்பதாக பிரம்மநாயகத்திற்கு தோன்றியது. ஆகவே அவனை கைவிட்டு விடுவதைத்தவிர தனக்கு மீட்பு வேறில்லை என்பதை அவர் நம்பினார். உண்பதற்கு மட்டுமே வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்திருப்பான் தெய்வநாயகம். நாலாயிரம் மண்சட்டி நிறைய கெட்டித்தயிர் ஊற்றிய பழைய சோறும் எலுமிச்சை ஊறுகாயும் கொண்டுவந்து வைப்பாள். சிற்றன்னையின் முகத்தை அவன் ஒருநாளும் ஏறிட்டுப் பார்த்ததில்லை. அவனுக்குப் பிறகு நான்கு குழந்தைகள் அவன் வீட்டில் பிறந்திருந்தார்கள். மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் அவனைக் கண்டு பயந்தார்கள். அம்மாவின் முரட்டு அடிகளுக்கு அஞ்சிய அவர்கள் தெய்வநாயகத்தைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான் ஊருக்குள் அந்த அரசு அலுவலகம் கொண்டுவரப்பட்டது. பிரம்மநாயகத்தின் தரிசு நிலமான ஓடைப்பத்தில் அந்த அலுவலகம் கட்டப்பட்டது. பிரம்மநாயகம் மனம் உவந்து தன்னுடைய நிலங்களில் ஒரு பகுதியை அரசிற்கு நன்கொடையாக அளித்தார். எக்காலத்திலும் அது அரசு பயன்பாட்டிற்கு மட்டுமே இருந்து வரவேண்டும் என்கிற ஒரே நிபந்தனையோடு. அந்த அரசு அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு மந்திரி திறந்து வைத்த மறுநாளில் இருந்து  தெய்வநாயகம் அலுவலகத்தின் வாசலில் சென்று அமர்ந்து கொண்டான். இரவிலும் பகலிலும்  அவன் அலுவலக வளாகத்தில் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் ஏற்படுத்தாமல் ஒரு மரத்தினைப்  போல அமர்ந்திருந்தான். அலுவலகத் தலைவர் ஒருநாள் அவனை நெருங்கி, ”ஏலே கோட்டிக்காரப் பயலே இந்தால ..இந்த தபாலக் கொண்டு தலயாரி முருகன் கையில் கொடுத்து உடனே கூட்டிட்டு வாழ” என்று அவனைக் கிளப்பி விட்டார். தலையாரி முருகனோடு அலுவலகத்தின் உள்ளே நுழைந்த போது தெய்வநாயகம் காட்டிய ஆர்வம் அங்குள்ளவர்களுக்கு  ஆச்சரியமாக இருந்தது. குற்றேவல்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் தெய்வநாயகத்தின் மகிழ்ச்சி கூடிக்கூடி வந்தது. எடுத்ததெற்கெல்லாம் தெய்வ நாயகத்தை அழைக்க ஆரம்பித்தார்கள் உத்தம அதிகாரிகள். நாளடைவில் தெய்வநாயகம் இன்றி அடிப்படை வேலைகள் எதுவும் நடந்துவிடாது என்ற நிலை அந்த அலுவலகத்தில் ஏற்பட்டது. அலுவலக வாசலைத் திறந்து அறைகளைப் பெருக்கி ஒட்டடை அடித்து ஒழுங்கு படுத்தி வைப்பதில் ஆரம்பித்து அனைவரும் கிளம்பிச் சென்ற பிறகு ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிகளை அணைத்து சன்னல்களைச் சாத்தி தாளிட்டு வாசல் கதவினைப் பூட்டும் வரை தெய்வநாயகமே முன்நின்று செய்தான்.

தெய்வநாயகம் அந்த அரசு அலுவலகத்தின் ஒரு அங்கமாக மாறிப்போனது ஒரு தற்செயல் நிகழ்வுதான் என்றார்கள் ஊர்க்காரர்கள். தெய்வ நாயகத்திடம் கேட்டால் ”எங்க இடத்தில இருக்கற எல்லாமும் எனக்குச் சொந்தமானது தானுங்களே” என்று சொல்லி மந்தகாசம் புரிவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *