பெரிய கோவிலுக்கு அருகில் உள்ள பெத்தண்ணன் அரங்கத்தில், முத்தமிழ் மன்றத்தினர் நடத்திய கிராமிய கலை விழா, கலகலப்புடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு இடியோசையை போன்ற வெடியோசையை கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும், சுரங்கத்திற்குள் தள்ளப்பட்டவர்களாய் திகைத்துப் போக,” இத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. வந்திருந்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்,” என்ற ஒலிபெருக்கி ஓசையோடு வந்த வாசகத்தை கேட்டு, அரங்கத்தில் இருந்தவர்கள் சற்று அமைதி அடைந்தார்கள்.
அடுத்த கணம் ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் நீரை போல, அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் வேக வேகமாக வெளியேறத் துவங்கினர். அவர்களில் நானும் ஒருவனாய் அரங்கத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன்.
அங்கே பலதரப்பட்ட மக்கள் – சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் , இளம்பெண்கள், நடுத்தர வயதினர், நவ நாகரிக நங்கைகள், மூத்த இளைஞர்கள், முரட்டு ஜீவன்கள், முனகலுடன் செல்பவர்கள், முண்டியடித்துக் கொண்டு செல்பவர்கள், நடக்க முடியாத நிலையிலும் நடக்க முயற்சிக்கும் கனத்தவர்கள், பேசிக்கொண்டே வரும் பெரியவர்கள், பேசா மடந்தைதையாய் வரும் பருவ வயதினர், வேகவேகமாய் நடப்பதற்கு தேகம் இடம் தராததால் சின்ன அடியெடுத்து அன்ன நடை நடந்து வரும் பெண்கள், அழகான நடுத்தர மனுஷிகள், கனகச்சிதமான உடை அணிந்து காட்சி பொருளாய் கவர்ச்சி காட்டும் கன்னிமார்கள்- என பரவி கிடந்தார்கள்.
சிலர் முண்டியடித்துக் கொண்டும், சிலர் நொண்டி அடித்து விளையாடிய படியும், சிலர் வளைந்தும், நெளிந்தும், சிலர் பதுங்கிக் கொண்டும், சிலர் ஒதுங்கியபடி ஓய்வெடுத்துக் கொண்டும், பலவிதமாய் பல வண்ணங்களில் வந்து கொண்டிருந்தார்கள்.
சிலர் பரவசத்துடனும், சிலர் படுவிரசமாய் பேசிக் கொண்டும், சிலர் படு அவஸ்தையுடனும் பலவிதமாய் வந்து கொண்டிருந்தனர்.
நேரம் அப்போது இரவு 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. என்னுள்ளே பசி, பதுங்கி இருந்தபடி என்னை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. அப்பசியை எப்படியாவது அப்புறப்படுத்தி விட வேண்டும் எனும் ஆவேசத்துடன், நான் வேகமாய் விரைந்து கொண்டிருந்தேன்.
இந்த நிகழ்ச்சிக்கு நேரத்திற்கு வர வேண்டும் என்ற நியாயமான எண்ணத்தில், மதியம் எதுவும் சாப்பிடவில்லை. நேரம் ஆகிவிட்டதனால் , இரண்டு குவளை மோரையும் கொஞ்சம் நீரையும், குடித்து விட்டு ஆர்வத்துடன் திருவையாறில் இருந்து எனது இருசக்கர வாகனத்தில் இங்கே வந்து விட்டேன்.
கால்கள், எனது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த பாலன் தேநீர் கடையை நோக்கி மெல்ல என்னை இழுத்துச் சென்றன.
அரங்கத்திலிருந்து வெளிவந்த கூட்டத்தில் ஒரு நடுத்தர வயதுக்காரரும் அவரது துணைவியும் தெருவோரத்தில் நின்று அலைபேசியில் தனித்தனியே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் குழந்தைகளான இரு சிறு சிறுமிகள், . அவர்களுக்கு அருகில் ஆனந்த நிலையில் இருக்கும் அழகிய சிலைகள் போல, வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் மேலும் இரண்டு சிறுமிகள் ஓடி வந்து அவர்களோடு இணைந்து கொண்டனர். பெற்றோர்கள் அலைபேசியில் மூழ்கி இருக்க, கள்ளங்கப்படமற்று கலை அழகோடு நடந்து வந்த சிறுமிகளை பார்த்து பரவசமடைந்தபடி நான் அங்கேயே நின்றேன். அவர்களின் நடவடிக்கைகள் நளினமானதாகவும் நயமானதாகவும் மனதிற்கு இதமானதாகவும் இருந்தது.
தெருவோரத்தில் நின்றபடி , தெருவிளக்கின் ஒளிப்பதிவில் அங்கே, அச்சிறுமிகள் பெத்தண்ணன் கலையரங்க நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள். அரங்க நிகழ்வுகள் அனைத்தும், கலையின் எதிரொளியாய் அங்கே காட்சி தந்தன.
அவர்களின் அழகான கலை உணர்வை ரசிக்க முடியாமலும், முற்றிலும் ரசிக்க தெரியாமலும், அதற்கு கொஞ்சமும் வாய்ப்பே இல்லாமலும் அவர்களின் பெற்றோர், அலைபேசியில் மனம் கலங்கியபடியும் அவ்வப்போது கொஞ்சம் குழம்பியபடியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சின்னஞ்சிறிய பறவைகளைப் போன்ற அழகான அந்த சிறுமிகளையும், அவர்களின் வெளிப்படையான வெளிப்பாடுகளையும் பார்த்தவுடன் மனம் சீன தேசத்து ஷங்காய் நகரின் அழகை அகங்குளிர ரசித்து ஆனந்த களிப்பில் திளைத்து மகிழ்வது போல் பரவசப்பட்டுக் கொண்டிருந்தது..
அவர்களை பார்க்க பார்க்க, மனம் உற்சாகத்தை உள்வாங்கிக் கொண்டு உவகை அடைந்து கொண்டிருந்தது.
இப்போது, பசி எனக்கு மறந்து போய்விட்டது. அது என்னிடமிருந்து பிரிந்து வேறு எங்கோ பறந்து போயிருந்தது. அது என்னிடமிருந்து எப்படி? எந்தப் பக்கம்? எந்த திசையை நோக்கி போனது? போன்ற விவரங்கள் எனக்கு புரியவில்லை.
அச்சிறுமிகளின் ஆடல் பாடல் தேடல் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தபடி நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன் வெகு நேரம்.
