வாசலிலேயே நான் வளைக்கக் கொடுத்திருந்த இரும்பு குழாய்கள் வேலை முடிந்து எடுத்து கட்டி வைக்கப் பட்டிருந்தன . குழாய்களின் வளைவின் உள்பக்கதில் வளைக்கபடுவதன் அழுத்தத்தால் உருவாகும் மெல்லிய ஒடுக்குகளோ , தழும்புகளோ இருக்கிறதா என்று பார்த்தேன் . எதுவும் இல்லை , நன்றாக இருந்தது , அளவு டேப் எடுத்து வளைவின் அளவுகள் சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன் , சரியாக இருந்தன . அரைவட்ட வடிவ கூரைக்கான பீம்கள் இவை , இரும்பு குழாய்களை இப்படி தேவைக்கேற்ப வளைத்து ,அதை பயன்படுத்தி , அதன் மேல் பர்லின் பைப்புகள் இணைத்து அதன் மீது வளைத்து கொண்டுவரப் பட்ட ஷீட்கள் மாட்டி கூரைகள் அமைப்போம் . இரும்பு குழாய் வளைக்கும் எந்திரம் என்னிடம் இல்லை , அதை  ‘தேவகி பைப் பெண்டிங் ‘ எனும் இந்த தொழிலகத்தில்தான் கொடுத்து வளைப்பேன்.  கூரை அமைக்கும் தொழிலில் இறங்கியதில் இருந்து இப்போது வரை இங்குதான் வளைக்க கொடுக்கிறேன் ,வேறு எங்கும் இடம் மாற்றியதில்லை , காரணம் இதன் முதலாளி மணி அண்ணன் . எனக்கு பிரியமானவர் ,அவருக்கும் என் மீது பிரியம் உண்டு , நான் தொடர்ந்து பணிகள் கொடுப்பதாலும் ,எப்போதும் பெரிய அளவு பணிகள் தருபவன் என்பதாலும் எனக்கு பில்லில் நல்ல சலுகை காட்டுவார் ! வாசலில் இருந்த குழாய்கள் சரியாக பணி முடிந்த திருப்தியில் பில் பணம் அளிக்க , மணி அண்ணனை பார்க்க  உள்ளே அவர் இருக்கும் மேசை நோக்கி சென்றேன் .  அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது , அவர் இருக்கையில் சற்று குண்டான வெளிர்மஞ்சள் நிறம் கொண்ட ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள் !
பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு , உப்பிய கன்னங்கள் , சுருட்டையற்ற சீரான  நீளமுடி , கொஞ்சம் நீண்ட கழுத்து , பெரிய மார்பு , நெற்றியில்  வட்ட செந்நிறபொட்டு ,அதன் கீழ் திருநீற்றின் கீற்று ,விரிந்த பூ வடிவ கம்மல் , இதை எல்லாவற்றையும் காலி செய்யும் அழகில் மூக்கில் இருந்த குட்டி தங்கதுளி போன்ற மூக்குத்தி , தெய்வீகம் வெளிப்படும் முகம்தான் ! என்னை பார்த்ததும் வருகையாளரை வரவேற்கும் புன்னகை  , அப்போது கன்னங்களில் குழி விழுந்தது போல இருந்தது ,பேரழகி என்று எண்ணிக்கொண்டேன் , அமர சொன்னதும் அமர்ந்து சில கணம் என்னை மறந்து பேச்சை ஆரம்பிக்காமல் அவரை பார்த்து  கொண்டிருந்தேன் , அவரிடம் இருந்து வெளிப்படும் ஒளி அவரது வெளிர் மஞ்சள் நிறம் அவருக்கு அளித்து கொண்டிருக்கிறது என்று தோன்றியது , கூடவே அந்த அறையில் இருந்த விளக்கொளிதான் காரணம் என்று  உள்மனமும் சொன்னது !
சட்டென சுதாகரித்து ” பைப் வளைக்க கொடுத்திருந்தேன் ” என்றேன் . கூடவே ” நீங்க.. ” என்றேன் ,மேலும் ” மணி அண்ணா எங்க” என்றேன் . அவர் புன்னகைத்து ” வீட்டுக்காரர்தான் , வெளிய போயிருக்கார் ,இப்ப வந்துடுவார் ” என்றார் . பிறகு ” என்ன பெயரில் ஆர்டர் கொடுத்து இருக்கீங்க “என்று சொல்லிய படி ஆர்டர்கள் எழுதியிருக்கும் நோட்புக் எடுத்தார் , நான் என் பெயரை சொன்னேன் , பெயர் தேடிக்கண்டு பிறகு என் முகம் நோக்கி ” வேலை முடிஞ்சுருச்சு” என்றார் , ” ஆமா ,வெளிய இருக்கு ,பார்த்தேன் ” என்றேன் . மேலும் ” அண்ணன் எப்ப வருவார் ,பில் கொடுக்கணும் ” என்றேன், அவர் ” நானே பில் போடுவேன்” என்று சொல்லியபடி பில் புக் எடுத்தார் ,எனக்கு மெல்ல உள்ளூர அதிர்ச்சி வந்தது , “இல்ல அவர் வரட்டும்” என்றேன் , அவர் ” நான்தான் இப்ப இதெல்லாம் பார்த்துக்கறது , அண்ணன் வந்தாலும் நான்தான் பில் போடுவேன் ” என்றார், எனக்கு அவரை பார்த்த போது உருவான ஈர்ப்பும் பிரேமமும் சட்டென வடிந்து ,என்னடா இது புது பிரச்சனை என்ற எண்ணம் வந்தது . அண்ணன் என்றால் நான் கொடுப்பதை வாங்கி கொள்ளும் அளவிற்கு சலுகை காட்டுவார் , இவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சற்று தவித்தேன் .” சரி பில் போடுங்க “என்றேன் .
பில் போடும் போது அவரில் இருந்த மெல்லிய உடல் அசைவும் , கவனத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன் ,ஏதோ உறுத்தியது! ,ஆனால் ஒரு கணம்தான்  , பிறகு முந்திய மனநிலைகள் எல்லாம் மறைந்து அவர் உடல் அழகுதான் மீண்டும் மனதை நிறைத்தது , செந்தூர நிறம் கொண்ட சேலை அணிந்திருந்தார் , காதோரங்களிலும், கழுத்து பகுதிகளிலும் குட்டிக் குட்டி வேர்வை துளிகள் படர்ந்திருந்தன, மீண்டும் பேரழகி  இவள் என்ற எண்ணம் வந்தது .
பில் போட்டு முடித்து எனக்கு எடுத்து அளித்தார் , மொத்த தொகை இடத்தில் 14860 ரூபாய் என்று இருந்தது ,பார்த்து அதிர்ச்சி ஆகி விட்டேன், இரு மடங்கு அளவு பில் தொகை இருந்தது , கோபத்தில்  எழுந்து விட்டேன் , ” என்னங்க இரண்டு மடங்கு ரேட் போட்டுருக்கீங்க, நான் இங்க ரெகுலரா ஆர்டர் கொடுப்பவன் , அதான் அவர் வந்து பில் போடட்டும் னு சொன்னேன் ” , இப்போது அவரை பார்க்கவே கோபமாக வந்தது , அவர் ” இதுதாங்க இங்க ரேட்,எல்லாருக்கும் இந்த ரேட் லதான் பண்ணி கொடுத்துட்டு இருக்கோம் , அவர் வந்தாலும் இதுதாங்க” என்றார் , நான் ” அவர் வரட்டும் ” என்று சொல்லி அந்த பில்லை டேபிள் மீது எறிந்து விட்டு வெளியே சென்றேன் . வெளி வாசலுக்கு வந்தேன் , தலையில் இருந்த சூடு குறையாமல் இருந்தது . மணி அண்ணன் வரும்போது வரட்டும் என்றெண்ணி அருகில் இருந்த பேக்கரி நோக்கி சென்றேன் .
முதன்முதலில் இங்கு குழாய்கள் வளைக்க ஏழு வருடம் முன்பு வந்தேன் , அப்போது மணி அண்ணன் யார் என்றெல்லாம் தெரியாது , நல்ல இரும்பு குழாய் வளைக்கும் தொழிலகம் எங்கு இருக்கிறது என்பது பற்றி விசாரித்தபோது நண்பர் ஒருவர் பரிந்துரைத்தன் காரணமாக  தேடி வந்தேன் . அப்போது இந்த அளவு பெரிய கட்டிடமாக இருக்க வில்லை , சிமிண்ட் ஷீட் கட்டிடமாக இருந்தது , வாசலிலேயே ஒரு மேசை போடப்பட்டிருக்கும், அங்கு எப்போதும் மணி அண்ணன் அமர்ந்து பேசி கொண்டிருப்பதை பார்க்கலாம் , எப்போதும் நான்கைந்து பேர் அமர்ந்து பேசி கொண்டிருப்பார்கள் ,அவர்கள் பெரும்பாலும் அவரது நண்பர்களாக இருப்பார்கள் ,எப்போதும் பேச்சு களைகட்டும், நான் முதன்முதலாக போன போதும் மணி அண்ணன் முன்பு இருக்கையில் இருந்த இருவரோடு சுவாரஸ்யமாக பேசி கொண்டிருந்தார் , அவருக்கு பின் பகுதியில் வளைக்கும் எந்திரங்கள் ஓடி கொண்டிருந்தன ,அதை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுற்றி பணியாற்றி கொண்டிருந்தனர் .
என்னை பார்த்ததும் அமர சொல்லி விசாரித்தார் , குண்டான பருத்த உடல் , நல்ல உயரம் , மலையாள கெட்டி மேல் உதட்டை மறைக்கும் மீசை , சற்று பெரிய காதுகள் , வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார் . மேடையில் சில வார மாத  இதழ்கள் இருந்தன . நான் எனது குழாய்கள் வளைக்கும் தேவைகளை சொன்னேன், இரு நிரந்தர கோரிக்கைகள் வைத்தேன் ,ஒன்று விலை குறைவாக இருக்க வேண்டும் ,இன்னொன்று குறித்த நேரத்தில் தர வேண்டும் என்பது . இரண்டையும் சரி என்று சொல்லி குழாய்களை எடுத்து வர சொன்னார் . கொண்டு வந்து இறக்கினேன் , இரண்டு மணிநேரம் காத்திருக்கும் பட்சத்தில் கையோடு வளைத்து தருவதாக சொன்னார். சரி என்று அங்கேயே அமர்ந்து விட்டேன் , அவர் நண்பர்கள் கிளம்ப ,நானும் அவரும் மட்டும் இருந்தோம் , அப்போது எனக்கு 28 வயது ,ஆனால் பார்க்க 18 வயது கொண்டவன் போல இருப்பேன் . ஒரு சிறுவன் இந்த அளவு ஆர்டர் எடுத்து செய்வது அவருக்குள் ஆச்சிர்யம் கொடுத்தது , என் பின்னணி , தொழில் போக்கு எல்லாம் விசாரித்தார் .
“கவனமா தொழில் பண்ணுங்க , வேலை முடியதுக்குள்ள கஸ்டமர் கிட்ட பணம் வாங்கிடுங்க ,நேர்மையா தொழில் பண்ணுங்க , வேகமா வளரணும்னு நினைச்சு அகலக்கால் எங்கயும் வச்சுடாந்திங்க , எதையும் பொறுமையா பண்ணுங்க” என தொழில் சார்ந்து பார்த்த சில மணி நேரங்களிலேயே எனக்கு கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டிருந்தார் , சுவாரசியமாக கேட்டு கொண்டிருந்தேன் . பிறகு அவர் வளர்ந்த விதம் பற்றி கூறினார் ” இந்த காட்டூர்க்கு 10 வயசுல வந்தது , ஹெல்பெர் வேலை மட்டும் 12 வருசத்துக்கு மேல பார்த்திருப்பேன், பிறகு கொஞ்சம் நல்ல வேலை,கொஞ்சம் சேமிப்பு னு வச்சு இந்த தொழிலை ஆரம்பிச்சேன் , அப்ப மிசின் ஆபரேட்டர் , ஹெல்பேர்,ஓனர் எல்லாம் நான் ஒரு ஆள்தான் , பிறகு கொஞ்சம் கொஞ்சம் வளந்து இப்ப இப்படி இருக்கு ” என்றார் , அவர் சொல்ல சொல்ல அவர் மீது மதிப்பு கூடிக்கூடி போனது . இடையில் இரண்டு முறை டீ வந்தது . எதேட்சையாக டேபிளில் இருந்த இதழ்களுக்குள் ஒளிந்திருந்த காலச்சுவடு இதழை பார்த்தேன் , ஆச்சிரியத்துடன் எடுத்து இது போல இலக்கிய இதழ்கள் எல்லாம் வாங்குவீங்களா என்றேன் . அவர் சட்டென கண்கள் விரிய ” நீ புக் எல்லாம் படிப்பியா ” என்றார் ,நான் ” அது மட்டும்தான் கொஞ்சம் உருப்படியா செய்யறேன் ” என்று சொல்லி சிரித்தேன் , அவர் “நானும் ” என்று சொல்லி ” ஜெயகாந்தனை அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன் ,அவர் எழுதினது எல்லாமே வாசிச்சு இருக்கேன் ” என்றார் . மேலும்  ” நான் முன்னாடி வேலைக்கு போன இடத்தில் எங்க ஓனர் புக் வாசிப்பாரு, அவர் கிட்ட இருந்து அப்படியே ஒட்டினது ” என்றார், நான் ” சுந்தர ராமசாமி ,அசோக மித்ரன் எல்லாம் வாசிச்சு இருக்கீங்களா ” என்றேன், இல்ல ” ஜெயகாந்தன் மட்டும்தான் , வேற யாரையும் வாசித்து இல்லை ” என்றார் , நான் ” ஜெயமோகன் ” என்றேன், அவரை அடிக்கடி கேள்வி படுறேன் , வாசிச்சு பாக்கணும்னு தோணுது ” என்றார் . பேசி பேசி நேரம் போனதே தெரிய வில்லை , வேலை முடித்து பையன்கள் குழாய்களை வெளியே கொண்டு வந்து வைத்தார்கள் , நான் எதிர்பார்த்ததை விட மிக குறைவான  விலையை போட்டு பில் கொடுத்தார் , மகிழ்ச்சியுடன் பணம் கொடுத்தேன் , அடிக்கடி வருமாறு கூறினார் , அவரே குழாய்களை ஏற்றி செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தார் .
அதன் பிறகு ஒருமுறை கூட அவர் பில் போட்டு கொடுத்த வளைப்பதற்கான ஊதியத்தை நான் சரிபார்த்தது இல்லை ,என்ன பில்லோ அதை கொடுத்து விடுவேன் ,எப்போதும் மார்கெட் தொகையை விட குறைவானதாகவே இருக்கும் , எப்போது வந்தாலும் குறைந்தது 2 மணி நேரங்கள் ஆவது இருப்பேன், அவரது நண்பர்கள் எல்லோரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள் ,எல்லோரிடமும் பையன் பெரிய ஆள் ஆகி விடுவான் என்று புகழ்வார் . அவர் மனைவி பற்றி ஓரிருமுறை சொல்லி இருக்கிறார் , ஆனால் இப்படி இருப்பார் என்று சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை !
பேக்கரியில் அரை மணிநேரம் ஓடியிருக்கும் , அவர் வந்திருக்கலாம் என்று எண்ணி அங்கு சென்றேன் , வாசலில் அவரது ஆக்டிவா இரு சக்கர வாகனம் இருந்தது . உள்ளே சென்றேன், இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார் , அந்த பெண்மணி அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்  , அவர் கைகளில் என் பில் தான் இருந்தது , அதில் உள்ள ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டி அந்த பெண்மணி அவரோடு பேசி கொண்டிருந்தார் , நான் வந்ததை அறிந்து ஒரேசமயம் இருவரும் என்னை நிமிர்ந்து பார்த்தனர் , அவர் ” வாங்க தம்பி ” என்று அழைத்து உட்கார சொன்னார் .
என்னிடம் ” இவங்க என் சம்சாரம் , இப்ப அக்கௌன்ட்ஸ் எல்லாம் இவங்கதான் பார்த்துக்கறாங்க ” என்றார் , பிறகு மனைவியிடம் ” இவர் சிவா , திருப்பூர்காரர் , நீண்ட கால கஸ்டமர் ” என்றார் . நான் வேறுவழியின்றி வணக்கம் சொல்வது போல அந்த பெண்மணியை நோக்கி புன்னகைத்தேன் , கிட்டத்தட்ட அதுவே எனக்கும் திரும்ப கிடைத்தது !
 மணி அண்ணன் மெல்ல தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தார் ” இப்ப கரன்ட் ,பசங்க லேபர் எல்லாம் கொஞ்சம் அதிகமாகிடுச்சு, அதான் வேற வழி இல்லாம விலை அதிகம் பண்ண வேண்டியதாகிடுச்சு ” மேலும் தொடர்ந்து  ” கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம் ” என்றார் .
” அண்ணா , முதல் முறையா நீங்க இப்படி பேசி பாக்கறேன், உண்மையில என்னால நம்ப முடியல ,பேசறது நீங்களானு , அண்ணா , வெறோன்னும் இல்லை , இந்த பில் எனக்கு கட்டுபடி ஆகாது , நீங்க முன்னாடியே நான் பொருள் இறக்கும் போதே இதை சொல்லி இருக்கலாம் “என்றேன் .
உண்மையில் அண்ணன் பழைய ரேட் தான் இப்போதும் எனக்கு போட்டிருப்பார் , இந்த பெண்மணி வந்ததுதான் இப்போது சிக்கலாகி விட்டது . அதை மணி அண்ணனை பார்த்தவுடனே உணர்ந்தேன், அவரது  முகத்தில் அந்த தவிப்பினை நன்றாக என்னால் உணர முடிந்தது .
அண்ணன் திரும்பி அவர் மனைவியிடம் ” கொஞ்சம் ரேட் கம்மி பண்ணி இன்னொரு பில் போட்டு கொடு ,நம்ம தம்பிதான் ” என்றார் . அப்போது அந்த பெண்மணி எரியும் முகத்துடன் அவரை பார்த்தார் , பின் சட்டென அந்த கோபத்தை மறைத்து என்னிடம் திரும்பி  சாதாரண பாவத்தில் ” இல்லங்க , ரேட் இதுதான் ,மாற்ற முடியாது , இதில் இருந்து கொஞ்சம் கம்மி பண்ணி கொடுங்க ” என்றார் .
“எவ்வளவு கம்மி பண்ணுவது “என்றேன்.
“அந்த 60 ரூபா கம்மி பண்ணிடுங்க “என்றார் .
சட்டென சிரித்து விட்டேன் !
பின் பணம் எடுத்து 14000 ரூபாய் எடுத்து கொடுத்தேன் , அந்த பெண்மணி மீதி என்பது போல பார்த்தார் , நான் திரும்பி  அண்ணனை பார்த்தேன் , அவர் ”  போதும் தம்பி ” என்று எழுந்து கொண்டார் , அந்த பெண்மணி ஏதோ சொல்ல வாயெடுக்க அவர் ” கொஞ்சம் சும்மா இரு ” என்று சொல்லி என்னை நோக்கி ” பொருள் எடுத்துக்குங்க, வெளிய கட்டி வச்சிருக்கு ” என்றார் . அந்த பெண்மணி அண்ணனை  நோக்கி ” இப்படியே வெவரம்கெட்டத்தனமா இளிச்சுட்டு  எல்லாத்தையும் விட்டுட்டு போங்க “என்று எரிந்து விழுந்தார் , அவர் பதில் சொல்லாமல் சங்கடத்துடன் நிற்க நான் அவரிடம் ” சரி ,நான் வரேன் அண்ணா ” என்று சொல்லி கிளம்பினேன் , ஆட்டோ கொண்டு வந்து குழாய்களை ஏற்றி கிளம்பினேன் , அதன் பிறகு இங்கு நான் வரவே இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *