கோவையிலிருந்து திருப்பூர் செல்வதென்றால் அரசு பேருந்துகளே சிறந்தது, இருக்கை அகலமாக
இருக்கும், மேலும் தொலைகாட்சியில் பிடிக்காத படத்தினை போட்டு சாவடிக்க மாட்டார்கள்,
பெரும்பாலும் ஸ்பீக்கர் எதுவும் இருக்காது, தப்பி தவறி இருந்தாலும் கூட காதுக்கு தொந்தரவு
தராத கொஞ்சம் பழைய பாடல்களாக போடுவார்கள். மாறாக தனியார் பேருந்துகளில் ஆட்களை
நிறைக்க இருக்கைகளின் அகலத்தை குறைத்து ஆட்கள் நிற்பதற்கு அதிகம் இடமிருக்கும் படியாக
அமைத்திருப்பார்கள். இருக்கையில் அருகிலிருக்கும் நபர்கள் ஒல்லியாக இருந்தால் தப்பித்தோம்,
கொஞ்சம் குண்டாக இருந்தால் கூட இருக்கத்தால் நெளிந்து கொண்டே பயணிக்க வேண்டி வரும்.
வரிசையில் முதல் இரண்டும் தனியார் பேருந்துகளாக நின்று கொடிருந்தது, மூன்றாவதாக அரசு
பேருந்து. கொஞ்சம் தாமதமாக சென்றாலும் பரவாயில்லை என்றெண்ணி அரசு பேருந்து நோக்கி
சென்றேன்.

உள்ளே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள், சரியாக பெண்கள் இருக்கைக்கு அடுத்த வரிசையில்!
அதுவும் ஜன்னலோரம் இல்லாது இந்த பக்கம் முதல் இருக்கையில், அப்படி அமரும் போது
கூட்டம் அதிகமானால் பெண்கள் வந்து அருகில் நிற்க வாய்ப்பிருக்கிறது,மேலும் உரசவும்
வாய்ப்பிருக்கிறது. எப்போதும் தொலைதூர பேருந்துகளில் இந்த இடங்களுக்கு போட்டி இருப்பதை
பார்த்திருக்கிறேன், ஆச்சர்யமாக இளைஞர்கள் அல்ல நடுவயது மற்றும் நடுவயது
தாண்டியவர்கள்தான் இப்படி அலைகிறார்கள். எதேட்சையாக இருக்கை அமைந்து
பிறகு ஒரு இருக்கை அமைகிறது என்றால் கூட சரிதான், எனக்கும் . ஆனால் அந்த வாய்ப்பினை
அமைத்து கொள்ளுதலில் ஒரு அலைதல் இருக்கிறது! அப்படி அலைபவர்கள் மீது வெறுப்பு வரும்,
இப்போது இந்த பேருந்திலிருந்த இந்த இருவர் மீதும் சற்று ஒவ்வாமையும், கூட கொஞ்சம்
சிரிப்பும் வந்தது. இரண்டு பேரில் ஒருவர் கொஞ்சம் நன்றாக உடை அணிந்து, நன்றாக
அலங்காரம் செய்து பிராத்தலுக்கு வரும் பெண் போல இருந்தார், அப்படி எண்ணும் போதே
சட்டென சிரித்து விட்டேன் . நான் அவர்களை தாண்டி இடது புற வரிசையில் ஜன்னல் அருகே
இருந்த இருக்கையில் அமர்ந்தேன். மெல்ல ஒவ்வொருவராக வந்து பேருந்தில்
ஏறிக்கொண்டிருந்தனர். பாதி இருக்கைகள் நிறைந்து விட்டது.

பாப்கார்ன், தண்ணிர் பாட்டில், வெள்ளரி, கர்சீப் விற்பவர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து
சென்று கொண்டிருந்தனர், யாசகம் கேட்கும் ஒரு திருநங்கை ஏறி உள்ளே வந்தார். தினமும்
பார்க்கும் திருநங்கைதான், எந்த கோணத்திலும் அழகானவள். தினமும் புது புது உடைகளில்
வருவாள். எப்போதும் டைட் சுடிதார்தான், மூன்று முழத்திற்கு குறையாமல் மல்லிப்பூ
வைத்திருப்பாள். அவள் யாசகம் கேட்பதில் ஒரு மிரட்டல் தொனி இருக்கும், விழிகள்,
தோரணைகள் வழியாக, கொடுத்தே ஆக வேண்டி இருக்கும். அவள் என் பக்கத்தில் வருவதற்கு
முன்பாகவே கையில் ஐந்து ரூபாய் காயினை எடுத்து வைத்து கொண்டேன். அருகில் வந்த போது
கொடுத்தேன். தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பது போல செய்து விட்டு நகர்ந்தாள். வசூல்
முடித்து ஒய்யாரமாக குதித்து இறங்கி சென்றாள். நல்ல அழகி என்று உள்ளம் சொன்னது.

சற்று நேரம் அவள் சென்று மறைந்ததின் வெறுமை இருந்தது. ஜன்னல் வழியாக சாலையில்
சென்று கொண்டிருப்பவர்களை பார்த்து கொண்டிருந்தேன்,கொஞ்சம் தூரத்தில் வாட்ச்கள்
நிறைந்த ஒரு போர்டு கையில் வைத்து கொண்டு நான் இருந்த பேருந்து நோக்கி ஒருவர் வந்து
கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பேருந்துக்குள் ஏறி,எந்த வாட்ச் எடுத்தாலும் 100 ரூபாய்தான்
என்று சொல்ல தொடங்கினார். எப்படியாவது விற்று விட வேண்டும் என்ற வேகம் அவரில்
தெரிந்தது . சுருளான சீவாத தலைமுடி, சற்று அழுக்கான உடை, மெல்லிய வெள்ளை முடிகள்
வளர துவங்கி இருந்த தாடி, களைப்பான கண்கள், முந்திய நாள் நன்றாக குடித்து இன்று
அப்படியே எழுந்து ஓடி நேராக இங்கு வந்தவர் போல இருந்தார். செருப்பு அங்கங்கு விட்டு
எப்போது வேண்டுமானாலும் உயிர்விடும் நிலையில் இருந்தது. ஒவ்வொருவராக கேட்டு
கொண்டு வந்தார், யாரும் அவரை பொருட்படுத்தவில்லை. என்னருகே வந்தார், எனக்குள் ஏதோ
ஒருவிதத்தில் அவர் மீது பரிதாபம் உருவாகி விட்டிருந்தது , யாரும் அவர்களுக்கு வேண்டாம்
என்ற பதிலை கூட அவரிடம் சொல்லவில்லை என்பதுதான் அதற்க்கு காரணம். நம் மக்கள் மீது
இது சார்ந்து கோபம் உண்டு. பைக்கில் லிஃப்ட் கேட்கும் ஆட்களிடமோ, அல்லது வேறு
எங்காவது விற்பனையாளர்களிடமோ அல்லது யாசகர்களிடம் கூட மக்கள் பெரும்பாலும் முகம்
கொடுக்கவோ, பதில் சொல்லவோ தயாராகவே இருப்பதில்லை. அப்படி ஒரு நபர் தன் முன்
வந்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டார்கள் . முற்றிலும் தவிர்த்து விட்டு போவார்கள். மக்களுக்கு
அவர்களிடம், இல்லை என்றோ வேண்டாம் என்றோ சொல்ல கூட நேரம் இருக்காதா, அவ்வளவு
பெரிய அப்பாட்டக்கர்களா என்று தோன்றும்! இப்போது இந்த வாட்ச் விற்பனையாளனிடம்
வேண்டாம் என்பதை மதிப்படன் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்துடனே வேணாம் அண்ணா, என்கிட்ட வாட்ச்கள் இருக்கு என்று ஸ்னேக பார்வையுடன் சொன்னேன்.
நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் நின்று விட்டார்.

“தம்பி, நல்ல வாட்ச்கள் இது, எது வேணும்னாலும் எடுங்க, 100 ரூபாய்தான்”என்று சொல்லிய
படி ஒரு வாட்சினை எடுத்து என் கையில் கொடுத்து “பாருங்க தம்பி”என்றார்.

”எனக்கு வேணாம்னா , என்கிட்ட நிறைய வாட்ச்கள் இருக்கு”என்று சொல்லி வாட்ச்சினை
திரும்ப கொடுத்தேன்.

அவர் வாங்காமல் ”வேற வேணும்னாலும் பாருங்க தம்பி ” என்று இன்னொன்றை எடுத்தார்,
எனக்கு என்னடா இப்படி மாட்டிகிட்டோம் என்று தோன்றியது.

உண்மையில் அந்த வாட்ச்கள் 100 ரூபாய்க்கு தகுதியானவைதான், பிராண்ட் எல்லாம்
கிடையாது, ரப்பர் ஸ்டிராப் என்பதால் அறுந்து போகாது. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு
வருடம் கூட வரும், வாட்ச்களின் வடிவம் கூட நன்றாக ஈர்க்கும் படி இருந்தது. இருந்தும் நான்
வாட்ச் அணிபவனல்ல, அக்கா வாங்கி கொடுத்த ப்ராண்டட் வாட்ச் இரண்டு என்னிடம் உண்டு.
எனவே எனக்கு வாங்க விருப்பமில்லை என்பதை விட தேவை இருக்கவில்லை. சற்று சலிப்புடன்
வேணாம்னா தொந்தரவு பண்ணாதிங்க என்றேன்.

அவர் சட்டென  ”தம்பி, காலைலயிருந்து இன்னும் போனி ஆக, நல்ல வாட்ச் தம்பி இது,
வாங்கிக்கங்க” என்றார் . அதைகேட்டவுடன் சட்டென்று என் மனம் மாறிவிட்டது. போனி
ஆகாததன் தவிப்பு ஒரு தொழில் செய்பவனாக எனக்கு தெரியும். வேறு எதுவும் யோசிக்காமல்
”கொடுங்க ”என்று வாங்கி கொண்டேன், அவர் முகம் மலர்ந்து வாட்ச் எடுத்து கொடுத்து தொகை
வாங்கி கொண்டு ”தேங்க்ஸ் தம்பி”என்று சொல்லி மேற்கொண்டு யாரிடமும் விற்காமல்
பேருந்தின் முன்படி வழியாக இறங்க துவங்கினார்.

அப்போது இன்னொரு விற்பனையாளன் சரியாக முன்வாசல் படியில் மேலே வந்தான். அவனிடம்
இவர் கண் ஜாடை வழியாக என்னை கண்காட்டினார். அவன் என்னை நோக்கி வந்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *