இராதா கிருஷ்ணனின் 3 குறுங்கதைகள்

1.

அவர்தான்  வேலைக்கான ஆர்டர் தரும் இடத்தில் இருந்து அந்த ஆர்டரை எனக்கு அளித்தவர் என்பதை நம்ப சற்றுநேரம் ஆனது. ஏனெனில் அவர் அந்த பள்ளி நிறுவனத்தின் அலுவல் பணி செய்பவர்களில் ஒருவராக இருந்தார். 40 களில் இருக்கும் அழகான, இல்லை மிக அழகான பெண்மணி அவர். எந்த ஒருவரும் பார்த்து சட்டென சில கணம் ஸ்தம்பித்து போகும் அளவு அழகு கொண்டவர். முக்கிய காரணம் லக்ஷ்மி ஓவியத்தை நகலெடுத்தது போன்ற தோற்றம், வெளிர் பொன்னிறம், முக்கியமாக பூனைக் கண்கள் , கண்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு இருக்கும் என்று அவரை பார்க்கும் முன்பு எனக்கு தோன்றியது இல்லை.

முதன் முதலில் ஆர்டர் கேட்க போன போது எதுவும் கேட்க தோன்றாமல் ஒரு கணம் பார்த்து நின்றேன். அவரில் அப்போது தோன்றிய புன்னகை இப்போதும் அச்செடுத்தது போன்று ஞாபகம் இருக்கிறது. அது என் மறைவு வரை அகலாது என்று நினைக்கிறேன் . அவர் சிரித்த காரணம் நான் அவரில் பாதி வயதில்தான் இருந்தேன் என்பதுதான் . என்னிடம் விசாரித்து விட்டு மாலை தாளாளர் இருப்பார், பேசி விட்டு அழைக்கிறேன் என்றார் .

நான் மட்டும் இல்லாது வேறு இரு நிறுவனங்களும் இந்த ஆர்டர்க்காக முயற்சிக்கின்றன , எனக்கு வாய்ப்புமிக குறைவு , எனவே நம்பிக்கை இல்லாமல் கிளம்பினேன் . மாலை அவர் அழைத்து ” ஆர்டர் உங்களுக்குதான் , காலை பத்து மணிக்கு வாங்க ” என்றார் . மகிழ்ச்சியில் திளைத்தேன்.

மறுநாள் சென்ற போது ஒன்று புரிந்தது , முடிவு எடுக்கும் அதிகாரம் இவரிடம்தான் உள்ளது என்று. அரைமணி நேரம் அங்கு இருந்த போதே எனக்கு அது புரிந்து விட்டது . மற்ற ஊழியர்கள் இவருக்கு அதிக மரியாதை அளித்தனர் . தாளாளர் அறைக்கு சென்ற போது அவரும் தன் இருக்கையில் இருந்து எழுந்து உடன் வந்தார் . உள்ளே 60ஐ நெருங்கும் ஒரு நபர் இருந்தார் , நேர்த்தியான சட்டை , பெரிய சட்டக கண்ணாடி , நீள முகவெட்டு கொண்டிருந்தார். நல்ல உயரமானவர் என்று அவர் அமர்ந்த நிலையிலேயே உணர முடிந்தது. அவர் பேசவே இல்லை.  இந்த பெண்மணிதான் ஆர்டர் பற்றி பேசினார். முடிக்க வேண்டிய நாட்கள் , தரம் , விலை எல்லாமே இவர்தான் பேசினார் . அவர் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார் . எனக்கு அவர்களுக்குள் இருந்த உறவு புரிந்து விட்டது . அதேசமயம் இவரை கண்டு ரசிப்பதை நிறுத்தக் கூடாது என்று மனதில் எண்ணிக் கொண்டேன் .

ஒரு வாரம் பள்ளியில் இருந்து பணிகள் முடித்து கொடுத்தேன். அப்போது அவரை தினமும் சந்தித்தேன். ஓரளவு என்னிடம் பேசத் தொடங்கி விட்டார். ஆனால் அவர் என்னை பொருட்படுத்தவே இல்லை. சிறுவன் கொஞ்சம் அத்துமீறி ரசிக்கிறான் என்ற அளவிலேயே எடுத்து கொண்டார். ரசிக்கவும் அனுமதி கொடுத்தார். அதை விரும்பவும் செய்தார் என்றே எண்ணினேன். மேலும் தாளாளர் தன் அறை விட்டு அதிகம் வெளியே வராததும்,இவர் மட்டுமே வந்து பணிகளை பார்ப்பதும் மதிப்பிடவும் செய்ததால் எனக்கு பேசப் பழக அதிகம் வாய்ப்புகள் கிடைத்தது .

வேலை முடியும் சமயத்தில் தனது வீட்டில் சில வேலைகள் உள்ளது என்று சொல்லி தன் கணவரின் அலைபேசி என்னை கொடுத்து அவரிடம் பேசிக்கொள்ள சொன்னார். அப்படி ஒரு பாத்திரம் ( கணவர் ) இருப்பதே அதன் பிறகுதான் எனக்கு உரைத்தது ! பேசி அவரை நேரில் போய் பார்த்தேன் . வேலைகள் செய்து கொடுத்தேன்.அவரை இப்படி சொல்லலாம் , சிடுசிடு குணம் கொண்டவர் , சற்று ஓவராக சுத்தம் பார்த்தார் , சின்ன சின்ன விசயங்களிலும் அவரை திருப்தி செய்ய முடியாமல் திணறினேன் , செய்த பணிகளில் குறை கண்டுபிடித்து கொண்டே இருந்தார் . பொறுக்க முடியாமல் கணவர் பற்றி அவரிடமே முறையிட்டு விட்டேன் , கேட்டு சற்று சிரித்தார் . எனக்கு அப்போது தாளாளரின் முகம் ஞாபகத்திற்கு வந்தது .

2.

எங்கள் பகுதியில் நிறைய பிச்சைக்காரர்கள் , அரை, முழு பைத்தியங்கள் உண்டு , ஒருவர் எப்போதும் திட்டி கொண்டே செல்வார் . அவர் மீது எல்லோருக்கும் பயம் உண்டு. இன்னொருவர் மதுர என்று நாங்கள் பெயர் வைத்த பைத்தியம் , அவரை பற்றிதான் இதில் சொல்ல போகிறேன் .

அவர் யாரிடமும் பிச்சை கேட்டு பார்த்து இல்லை. தண்ணீர் மட்டும் வீடுகள் முன்பு கேட்டு பார்த்து இருக்கிறேன். மிக அழுக்கான, அழுக்கால் கருப்பாகி போன கிழிந்த உடையில் இருப்பார்.ரோட்டில் இருக்கும் அட்டை குப்பைகளை எடுத்து கவரில் போட்டு அதை சுமந்தபடி திரிவார். முடி எல்லாம் கட்டை பிடித்து இருக்கும் . தாடி பாதி முகத்தை மறைத்து இருக்கும். கருப்பான முகம், கண்கள் மட்டுமே உயிருள்ளவை போல தோன்றும்.  சிறுவர்கள் மதுர என்று கிண்டல் செய்வார்கள்.  சில வீடுகளில் உணவு அவருக்கு தருவதைப் பார்த்து இருக்கிறேன்.

நான் அப்போதுதான் வேலைக்கு செல்ல ஆரம்பித்து சற்று காசு பார்க்க துவங்கி இருந்தேன். தினக் கூலி மாதிரியான வேலைகள் என்பதால் தினமும் சற்று பணம் கிடைக்கும். எனக்கு மதுர மீது பிரியம் உண்டு. நான் இரவு ஹோட்டலில் சாப்பிட்டால் இவருக்கும் இரண்டு தோசைகள் அல்லது  ஒரு ஆணியன் தோசை வாங்கி கொடுப்பேன்.மெல்ல அவருக்கு என்னிடம் கேட்கலாம் என்ற மனநிலை உருவாகி வந்தது என நினைக்கிறேன். ஏனெனில் அவர் நான் நின்று கொண்டிருந்த டீ கடை அருகில் வந்து நின்றார். அவர் டீ க்காக வந்திருக்கிறார் என்று உணர்ந்து அவருக்கு டீ வாங்கி தந்தேன். பிறகு நான் வரும் போது அவர் வருவார். தினமும் ஒருமுறைதான். வாங்கி அங்கு குடிக்க மாட்டார் , ஒன்யூஸ் டம்ளரில் வாங்கி அப்படியே சென்று விடுவார் .

ஒருமுறை கடையில் அவருக்கு தேங்காய் பர்பி வாங்கி கொடுத்தேன். வாங்கி கொண்டார். அதுபோல இன்னொருமுறை இரண்டு வாங்கி கொடுத்தேன். ஒன்றை திருப்பி கொடுத்தார். என்னால் அவர் கையில் இருந்து திரும்ப வாங்க முடிய வில்லை. அவர் வலியுறுத்தவே வாங்கி அதை கீழே போட்டு விட்டேன். அவர் வருத்தப்பட்டிருப்பார் என்பதை உணர்ந்தேன். ஆனால் அப்படி வாங்கி உண்ணும் அளவு மனம் முதிர்ச்சி கொள்ள வில்லை .

ஒருமுறை மழையில் அவரை பார்த்தேன். அப்படியே நனைந்த படி அமர்ந்து இருந்தார். ஒருவர் குடையுடன் வந்து ஒதுங்கி மழை வராத இடத்திற்கு போக சொன்னார். ஆனால் அவர் அங்கேயே அமர்ந்து இருந்தார். சில சமயம் அவரில் பைத்தியம் முற்றி வருவதாகவும் ,சிலசமயம் இவர் பைத்தியமல்ல என்றும் தோன்றும் .

ஒருமுறை நான் டீ கடை வருவதற்கு முன்பே அவர் அங்கு இருந்ததை பார்த்தேன். கையில் டீ இருந்தது.யார் வாங்கி கொடுத்தது என்ற ஆர்வம் வந்து கடைக்குள் புகுந்தேன். அங்கு ஒருவர் இவரை காட்டி தினமும் அவர் கேட்டதை கொடுங்கள் என்று 1000 ரூபாய் கொடுத்து கொண்டிருந்தார். எனக்கு ஆச்சிர்யம் தாங்க முடிய வில்லை . பிறகு அவர் மதுர யிடம்  சென்று ஏதோ சொல்லி அவரை திட்டி கொண்டிருந்தார்.  மதுர வேறுபக்கம் பார்த்த படி நின்று கொண்டிருந்தது. பிறகு அவர் கடை உள்ளே வந்து நின்றார் .  ஒரு டீ வாங்கி அருந்தினார். நான் அவர் அருகில் சென்றேன் .தாங்க முடியாத ஆர்வத்தால் “உங்களுக்கு தெரிந்தவரா” என்று கேட்டேன் . ” என் அண்ணங்க” என்றார் அவர் !

3.

நாணம்

அசரப் அண்ணாவை  என் சிறுவயதில் இருந்து அறிவேன். அவரைப் பற்றிய முதல் ஞாபகம் அவர் லுங்கி அணிந்து அதனுள் பெண்கள் அணியும் உள்பாவாடை அணிந்து இருந்ததுதான். அந்த வயதில் அதன் காரணம் எனக்கு புரிய வில்லை என்றாலும் இந்த வித்தியாசத்தை அப்போது  உணர்நதிருக்கிறேன்!  எங்கள் காம்பவுண்டு வீடுகள் வரிசையில் முதல் இடதுபக்க வீட்டில் அவர் இருந்தார். சிறுவர்கள் வீட்டிற்குள் வந்தால் தின்பண்டங்கள் தருவார், எனக்கு பழங்கள் தந்து இருக்கிறார், மிருதுவானவர் ,பேசுவது அருகில் சென்றால்தான் கேட்கும், ஆனால் பேசுவது எல்லாம் கிண்டல்கள்தான் , சிரித்து சிரித்து விழுவோம்.

“நிறைய  படித்தவர்,பாவம் இப்படி ஆகிட்டார் ” என்று அம்மா ஒருமுறை வருந்தி சொன்னாள் .  என் பத்து வயதுகளில் அடுத்த தெருவிற்கு குடிப்பெயர்ந்து விட்டோம் . பிறகு எப்போதாவது அவரை பார்ப்பேன். அந்த வீதி செல்லும் போது அவரை பார்ப்பேன்.நாளாக நாளாக அவரை பார்ப்பது குறைந்தது .

எங்கள் பகுதி நகரின் மையம் என்பதால் எல்லா வகை ஆட்களும் இருப்பார்கள். ஊரில் குடும்பம் விட்டு ஓடி வந்து அறை எடுத்து தங்கியவர்கள் முதற்கொண்டு இப்படியான திருநங்கைகள் வரை. நாலைந்து பேராக அறை எடுத்து தங்கி இருப்பார்கள், கல்யாணங்களில் பிரியாணி சமைப்பதுதான் இவர்களது தொழில். அசரப் அண்ணா ( நான் அண்ணா என்றுதான் அழைப்பேன் ) நல்ல கிராக்கி உள்ள பிரியாணி மாஸ்டர் என்பதால் அவருக்கு நிதி சிக்கல் எதுவும் இல்லை. தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார் . இன்னொன்று இவர் மற்ற திருநங்கைகள் போல தன்னை பெண்ணை போல வெளிக்காட்ட மாட்டார். மீசை இருக்காது, எண்ணெய் வைத்து சீவிய முடி, வெள்ளையாக இருப்பார் , கொஞ்சம் குண்டு , நல்ல வெண்ணிற சார்பு உள்ள சட்டை  லுங்கி அணிவார். நடையில் கூட பெண்ணின் சாயலை காட்ட மாட்டார். இப்போது யோசிக்க அவருக்கு இப்படி தன்னை பொதுவெளியில் வெளிபடுத்த நாணம் இருந்தது என்று தோன்றுகிறது. ஒரே ஒருமுறை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண் வேடமிட்டு ஊர்வலத்தில் அவர் தன் சகாக்களுடன் ஆடிச் சென்றதை பார்த்து இருக்கிறேன் .

பிறகு என் படிப்பு முடிந்து வேலைகள் என எங்கள் பகுதி விட்டு வெளியே சென்று விட்டேன். எப்போதாவது வந்து செல்வேன். அப்படி வரும்போது அவரை ஒருமுறை பார்த்தேன். சற்று உடல் மெலிந்து இருந்தார். என் வேலை எல்லாம் விசாரித்து விட்டு அம்மா அப்பாவை பார்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். என் அக்காவை அவருக்கு பிடிக்கும். மகளே என்று விளிப்பார்.  நாங்கள் அங்கு இருந்த போது  அந்த வீதியில் பூக்காரர்கள் சென்றால் நிறுத்தி வாங்கி அக்காவிற்கு தருவார். “உன் அக்கா எப்படி இருக்கா” என்று கேட்டார். “நீயாவது இந்த பக்கம் எப்பாவாவது வருவ , அவ இங்க இருந்து போன பிறகு பார்க்கறதே இல்ல” என்றார் , “நான் வந்து பார்க்க சொல்றேன்” என்றேன் .

அதன் பிறகு அவரை பார்க்கவே இல்லை. அவர் இறந்த செய்தி கேட்கும் வரை. அம்மாதான் போனில் அழைத்து சொன்னாள்.  தூக்குமாட்டி இறந்து விட்டார் என . மனம் கேட்காமல் கிளம்பி 2 மணிநேரம் பயணம் செய்து பார்க்க வந்தேன். தகவல்கள் எல்லாம் அதிர்ச்சிகள் தந்தன. உள்ளே கதவு பூட்டி தூக்கு மாட்டி இருக்கிறார். இரண்டு நாட்களாக யாரும் பார்க்க வில்லை. பிறகு துர்நாற்றம் வந்து கதவை உடைத்து பார்த்து இருக்கிறார்கள் .  அவர் கடந்த ஒரு வாரமாக சிக்கலில் இருந்தார் என்றார்கள்.இவரது நெருங்கிய திருநங்கை நண்பர் ஒரு வாரம் முன்பு கொல்ல பட்டிருக்கிறார். இவரை ஸ்டேஷனில் அழைத்து நீண்ட நேரம் விசாரித்து இருக்கிறார்கள். அன்று இரவு இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *