“நான் வேலையை விட்டு நிக்கிறேன், எனக்கு முடிய மாட்டேங்குது” சரளா அக்கா பிரபுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் .
“அதெல்லாம் முடியும், போய் வேலையை பாரும்மா” பிரபு அதட்டி விட்டான். சரளா அக்கா கலங்கிய கண்களை துடைத்தவாறே ப்ளாஸ்டிக் டிரம்களை கழுவுவதற்காக எடுத்துச் சென்றாள்.
பிரபு எஸ்ஸார் பிரின்டிங் நிறுவனத்தின் பொறுப்பாளி. எந்த வேலையும்,எந்த பணியாளனும் அவன் சொல்படி,அவன் மனம் விரும்பியபடிதான் செயல்படும். செயல்படுவார்கள். ஓனர் ஞானமுத்துவிற்கு பணம் வசூல் செய்யும் வேலை மட்டுமே. தொழில் மொத்தத்தையும் பிரபுவே பார்த்து கொள்வான். பனியனில் வரும் அச்சு வேலை சார்ந்த நிறம், தரம், குறித்த நேரத்தில் டெலிவரி, சரியாக சாம்பிள் எடுப்பது எல்லாமே பிரபுவின் பொறுப்பு தான். கூடவே பொருட்கள் வாங்குவது, சம்பளம் கொடுப்பது போன்றவையும் இவன் பொறுப்புதான். பிரபு திருடுவதில் நிபுணன். பொருள் வாங்கும் இடத்தில் கமிசன், சம்பளம் கொடுப்பதில் திருடுவது என அவன் கைவைக்காத இடமே கிடையாது. டீ வாங்குவதில் கூட கமிசன் அடிப்பான். அது எப்படி என்றால் தினமும் 50-60 பலகாரங்கள் வாங்க வேண்டியது இருக்கும், அதில் இவன் கடைகாரனிடம் பேசி பலகாரத்தை சற்று சிறியதாக்கி அதில் ஒரு பலகாரத்திற்கு ஒரு ரூபாய் வீதம் குறைக்க வைத்து அதை கமிசன் அடிப்பான். வேலையில் இருக்கும் எல்லோருக்கும் சம்பளம் குறைவாகவே இருக்கும் படி செய்வான். அவர்கள் வெளியே வேற வேலைக்கு போக விடாதபடி பார்த்து கொள்வான். அவனது சம்பளத்தை விட மூன்று மடங்கு கமிசன் அடிப்பான். இங்கு பணி செய்பவர்கள் உள்ளே வந்து மாட்டினால் பிறகு வருடக் கணக்கில் இருப்பார்கள். சரளா அக்காவும் இந்த வகைதான், இந்த தீபாவளியோடு நின்று விடலாம் என்று இருந்தாள், வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தாள். பிரபு வீட்டிற்கே வந்து நைச்சியமாக பேசி கம்பனிக்கு வர வைத்துவிட்டான் .
கண்ணாடி அறையில் இருந்து சரளா அக்கா பிரபுவுடன் பேசிச் சென்றதை ஓனர் ஞானமுத்து பார்த்துக் கொண்டிருந்தார். மாலை எதற்கோ பிரபு அறைக்குள் உள்ளே வந்து பேசும் போது இதை விசாரித்தார் . ” உடம்பு முடியல , நிக்கறேனு சொல்லுது ” என்றான் பிரபு . ” ஆளெல்லாம் கிடைக்கறது கஷ்டம் , போக விட்டுடாத” என்றார் ஞானமுத்து.
*
ஞானமுத்து எதையும் கணக்கிட்டு அதை தனக்கான ஆதாயம் கண்டு தெளிவாக இறங்கும் திறன் உள்ளவர். பிரபு திருடும் ஒவ்வொரு பணமும், அதன் வழிகளும் அவருக்கு தெரியும். ஆனால் எதையும் அவனிடம் கேட்டது இல்லை . அவன் வழியாக கிடைக்கும் ஆதாயம் அதை விட அதிகமாக இருந்தது. தொழில் அவனால் சீராக சென்று கொண்டிருந்தது. தனக்கு பிரச்னை இல்லாமல் அவன் திருடி கொள்வது அவனது திறமை எனும் அளவில் பார்த்தார். பிறகு ஒரு கட்டத்தில் பிரபு வீடு வாங்கப் போகிறேன் என்று சொன்ன போதுதான் உஷாராகி பணத்தை கையாள என தனியாக ஒருவரை வேலைக்கு வைத்தார். ஆனால் பிரபுவால் அதையும் மீறி திருட முடிந்தது .
ஞானமுத்துவுக்கு தனது வருமானங்களை சொத்துகளாக ஆக்குவதே நேரம் சரியாக இருந்தது . நாலைந்து இடங்களில் நிலங்கள் வாங்கினார். வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார் . இது போக வேறு வகை சேமிப்புகளும் . இந்த மொத்த சேமிப்புகளும் அவரின் செல்ல மகள் தாரணிக்காக காத்திருந்தது . அவள் அழகு என்று எல்லாம் சொல்ல முடியாது , சற்று உயரம் குறைவு , முன் பற்கள் சற்று பெரிதாக இருக்கும், ஆனால் அவளது சிரித்த முகம் அவளை ஒரு சுட்டி சிறுமி போல காட்டும். திருமண வயதில் இருந்தாள்! ஞானமுத்து தன் மகள் திருமணம் பற்றிய நிறைய கணக்குகள் இருந்தது, அதற்கு ஏற்ப மாப்பிளை தேடிக் கொண்டிருந்தார் .
*
தியேட்டரில் கூட்டம் குறைவாக இருந்தது. தாரணி அருகில் இருந்த ராஜா மீது தலையை சாய்த்து இருந்தாள். ராஜா ஓடிக்கொண்டிருந்த சினிமாவில் கவனம் செலுத்தி கொண்டிருந்தான் . ” அப்பா ஒத்துக்க மாட்டாரு , நாம பேசாம ஓடி போயிடலாமா ” என்றாள் தாரணி . ராஜா அவள் தலையில் கை வைத்து கேசத்தை கோதியபடி ” நீ என்ன சொல்றயோ அதை நான் பண்றேன் ” என்றான் . தாரணி சட்டென நிமிர்ந்து திரும்பி அவனை நோக்கி கண்களில் நீர் வர புன்னகைத்தாள் .
*
ஞானமுத்துவுக்கு ஒரு சாதாரண வேலைக்கு போகாத சொந்த வீடு எதுவும் இல்லாத வேறு சாதி மட்டுமில்லாது வேறு மத நபருடன் தன் மகள் ஓடி போய் விட்டாள் என்பதை நம்பவே முடிய வில்லை. அவளை வளராத சிறுமியாகவே எண்ணி இருந்தார். நண்பர்களுக்கு , உறவினர்களுக்கு , தெரிந்த ,தெரியாத நபர்களுக்கு பதில் சொல்லியே ஓய்ந்து விட்டார். பெரிய அவமானம், இவ்வளவு வசதி, தொடர்புகள் இருந்தும் ஒரு காலி பையன் தன் பிள்ளையை தன்னிடம் இருந்து பறித்து சென்று விட்டதை அவரால் பொறுத்து கொள்ளவே முடிய வில்லை .
*
நல்ல அழகான இரண்டு அடுக்கு வீடு, முன் வாசலில் தாரணி இல்லம் என்று கல்வெட்டு பதிக்கப் பட்டிருந்தது. ராஜாவும் தாரணியும் வாசலில் நின்று வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தனர். புதுமண புகுவிழா ! ஞானமுத்து உள்ளே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தபடி உள்ளே வந்தவர்களிடம் சிரித்தபடி உரையாடிக் கொண்டிருந்தார். வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் ஞானமுத்துவின் காசு. மகளுக்காக கட்டி கொடுத்திருந்தார். வீடு மருமகன் பெயரில் வாங்கப் பட்டிருந்தது !
விழாவிற்கு கம்பனி ஆட்கள் எல்லோரும் வந்து இருந்தனர். சரளா அக்கா உணவு பந்தலில் இலை எடுத்துக் கொண்டிருந்தாள். பிரபு காலையிலேயே வந்து தேவையான உதவிகள் செய்து கொடுத்து கொண்டிருந்தான். உணவு பந்தலில் உணவு பரிமாறுவதை எல்லாம் முன்னின்று பார்த்து கொண்டான். பந்தி எல்லாம் முடிந்து எல்லோரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர் . பிரபு அருகில் அமர்ந்திருந்த சரளா அக்காவிடம் அவள் மட்டும் கேட்கும் விதத்தில் மெல்லிய இரகசிய குரலில் ” நியாமா சம்பாதிச்சா நிக்கும், இப்ப எவனோ ஒருத்தன் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டான் ” என்றான் . சரளா அக்கா புன்னகைத்துக் கொண்டாள் !