இரு குறுங்கதைகள்

1.
பிடிக்காத , ஆனால் எப்போதும் வேறு தவிர்க்க வழி இல்லாமல் சந்திக்க வேண்டிய, பழக வேண்டிய நட்புகள் என சிலர் இருப்பார்கள். அப்படியான ஒரு நண்பன்தான் கிறிஸ்டோபர். அவனை நான் முதலில் சந்தித்தது என் மூன்றாவது வகுப்பில். அப்போது அவன் 5 ஆவது படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் பள்ளி விட்டு சென்று கொண்டிருந்த போது ஒரு சிறிய பிளாஸ்டிக் பூச் சரத்தை கொண்டு வந்து என்னிடம் ஒரு ரூபாய்க்கு விற்றான். நானும் என்னவென்று தெரியாமல் ஏமாந்து வாங்கினேன். அடுத்தடுத்த நாட்களில் என்னை தேடிவந்து காசு கேட்டு மிரட்டினான். கேட்டால் அதற்கு வட்டி என்றான்.  நான் அளித்த காசுக்கு எதற்கு நான் வட்டி தர வேண்டும் என்று தெரியாமல் குழம்பினேன்.  அவன் என்னிடம் கிடைக்கும் பணத்தை எல்லாம் பறித்தான், பிறகு ஒருநாள் என் ஆசிரியரிடம் சென்று முறையிட்ட பிறகு, அவனை ஆசிரியர் கண்டித்த பிறகுதான் என்னை விட்டான் .
நான் 9வது வரும் போது அவன் பெயிலாகி பெயிலாகி என் வகுப்பு தோழன் ஆனான். ரவுடி இயல்பு கொண்டவனாக இருந்தான். எனக்கு தொந்தரவு தர வில்லை என்றாலும் ஆசிரியருக்கு அடங்காமல் இருப்பது, வெளியே சண்டித்தனம் செய்வது என்று திமிராகத் திரிந்தான். ஆனால் ஆழத்தில் அவன் சற்று நல்லவன் என்ற எண்ணம் எனக்கு உண்டு. நான் பத்தாவது முடித்து டிப்ளமோ என்று போய் விட்டேன். அவன் 10 வது பெயிலாகி வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டான். பிறகு எங்காவது வெளியில் பார்க்க நேர்ந்தால் பேசிக் கொள்வோம். அவன் ஆசை ஆசையாகப் பேசுவான். எனக்கு அது சற்று ஆச்சிர்யம் அளிக்கும்.  ஏனெனில் படிக்கும் போது இந்த அளவு இறங்கி வந்து பேச மாட்டான். ஆண்டுகள் செல்ல அவனை சந்திப்பது இல்லாமல் ஆகியது.  இன்னொரு நண்பன் சொல்லக் கேட்டு அவன் குடியில் விழுந்ததை அறிந்தேன். எல்லோரிடமும் குடிக்க பணம் கேட்டு கெஞ்சி நச்சரிக்கறான் என்றார்கள். வருத்தமாக இருந்தது. ஏனெனில் அவன் ஒருவரிடம் கெஞ்சுவான், இறைஞ்சுவான் என்பதெல்லாம் என்னால் கற்பனை செய்ய இயலாமல் இருந்தது. படிக்கும் சமயத்தில் ஒருமுறை வாத்தியார் அவனை பிரம்பால் வெளுத்து வாங்கினார், ஆனால் அவன் விறைப்பாக நின்று கொண்டிருந்தான். கண்கள் கலங்கி இருந்தாலும் அழவோ கத்தவோ இல்லை. அப்படியான நெஞ்சுரம் கொண்ட ஒருவன் நூறு இருநூறுக்கு எல்லாம் கெஞ்சுகிறான் என்பது உள்ளபடி வருத்தமாக இருந்தது .
பிறகு வேலை, அதையொட்டிய நண்பர்கள், வேலைச் சிக்கல்கள் , குடும்பச் சிக்கல்கள் என பள்ளி காலங்களையே மறந்து விட்டிருந்தேன். பள்ளி வழியாகச் செல்லும் போது மட்டும் பழைய ஞாபகங்கள் மெல்லக் கிளம்பும், கிறிஸ்டோபரின் வீடு பள்ளிக்கு அருகில் என்பதால் அவன் ஞாபகமும் கூடவே வரும், எப்படி இருக்கிறானோ என்று எண்ணிக் கொள்வேன் .
ஒருநாள் பழ மார்கெட் வழியாக பைக்கில் சற்று வேகமாக சென்று கொண்டிருந்தேன், குறுக்கும் நெடுக்குமாக டெம்போக்கள், டாடா ஏஸ் மினி லாரிகள், கைவண்டிகள் நெரிசலுக்கு இடையில் ஊர்ந்து கொண்டிருந்தன, அதில் ஒரு கைவண்டியை கிறிஸ்டோபர் தள்ளிக் கொண்டிருப்பதை பார்த்தேன். நான் பார்த்த சில நொடிகளில் அவனும் என்னைப் பார்த்து விட்டான். சங்கடமும், தவிப்பும் தவிர்க்க முயன்ற மனநிலையும் அவனில் வெளிப்பட்டது .
2.

மாட்டுச்சந்தை போல இருக்கும் லாரிபேட்டை. இங்கு மாடுகளுக்கு பதிலாக லாரிகள். அதை ஓட்டும் டிரைவர்மார்கள். அவர்களுக்கு துணையாளாக இருக்கும் கிளிகள் என செல்லமாக அழைக்கப்படும் கிளீனர்கள். லாரி டிரான்ஸ்போர்ட் ஆபிஸ்கள், லாரி பழுது பார்க்கும் எண்ணற்ற பணிமனைகள், அதில் பணியாற்றும் மெக்கானிக்கள், வெல்டர்கள், ஹெல்பர்கள், இவர்கள் தவிர்த்து டீக் கடைகள், புரோட்டா கடைகள் என களைகட்டும். அப்பாவின் பணியிடம் அங்குதான். அப்பா வெல்டர், டிங்கர் என்றும் சொல்வார்கள், வண்டியில் இருக்கும் இரும்பு பகுதிகள் சேதமடைந்தால் அதை சரி செய்யும் பணி. லாரி ஏதேனும் விபத்தாகி எங்களிடம் வேலைக்கு வந்தால் அன்று அப்பா தீபாவளிநாள் போல உற்சாகமாக இருப்பார். ஏனெனில் வழக்கமான எப்சி நேரம் என்றால் லாரி முதலாளிகள் செலவு செய்ய கஞ்சம் காட்டுவார்கள். ஆனால் விபத்து என்றால் வண்டி ஓட்டம் நிற்கக் கூடாது என்பதற்காக  செலவை யோசிக்காமல் விரைந்து சரி செய்யப் பார்ப்பார்கள். அப்பா தவிர்த்து லாரி பேட்டையில் ஏழெட்டு  டிங்கர் பணிமனைகள் உண்டு. அப்பா சின்ன வேலைகள் மட்டுமே பார்ப்பார். அதற்காக சிறியவகை கேஸ் வெல்டிங் மிசின் வைத்து இருப்பார். எங்கு வேண்டுமானாலும் அதை இழுத்து அல்லது இருவர் தூக்கிச் சென்று விட முடியும்.  வண்டி நிற்கும் இடத்திலேயே வந்து செய்து கொடுப்பார். அவருக்கு ஹெல்பர் இல்லை , இருந்தால் அவருக்குச் சம்பளம் கொடுத்தால் கிடைக்கும் சிறிய பணமும் பிரிந்து விடும் என்பதால் வைக்க வில்லை. முன்பு இருந்தார்கள், அப்படி முன்பு அப்பாவிடம் ஹெல்பராக இருந்த அப்பு என்ற ஒருவர்தான் இன்று அப்பா இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக பணிமனை வைத்து இருக்கிறார்.  அவரிடம் நான்கு பேர் வேலை செய்கிறார்கள். அப்பு இப்போதும் அப்பாவுக்கான மதிப்பை கொடுத்தே பேசுவார். அப்பாவுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியில்லாத ஒரு இலவச ஹெல்பர் உண்டு, அது நான்தான் ! பள்ளி விட்டதும், விடுமுறை நாட்களிலும் என்னை அழைத்தும் சிலசமயம் இழுத்தும் சென்று விடுவார். அப்படி வற்புறுத்தி என்னை அப்பா செல்லும் நாட்களில் இளநீ , புராட்டா எல்லாம் வாங்கித் தருவார். அப்படியெல்லாம்  சென்று அங்கு வேடிக்கைப் பார்த்து திரிந்து நான் பார்த்த பல அண்ணன்களில் சேட்டன்களில் ஒருவர்தான் தைலம் விற்கும் சேட்டன்!

வேடிக்கை பார்ப்பதில் என்னை மிஞ்ச ஆள் இல்லை. ஏதாவது வேலை கொடுத்தால் அதை செய்ய நடக்கத் துவங்கி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து, கொடுத்த வேலையை மறந்து வேறு எங்காவது சென்று கொண்டிருப்பேன். டீ வாங்க அம்மா அனுப்பினால் அந்த தூக்குபோசியை எடுத்துக்கொண்டு, ஸ்கூலுக்கு சென்று கொண்டிருப்பேன் ! லாரி பேட்டையில் எண்ணற்ற மனிதர்கள் வந்து போவார்கள் என்பதால் எனக்கும் வேடிக்கை பார்க்கச் சலிக்காது. நடந்தபடி  லாட்டிரி டிக்கெட் விற்று வருபவர்கள், லுங்கி சைக்கிளில் கொண்டு வந்து விற்பவர்கள், சீட் வயர் பின்ன வருபவர்கள், காது கிளீன் செய்யும் ஆட்கள், கடலைப்பொரி வண்டிகள், ஜோசியர்கள் என வகைவகையாக வருவார்கள். அப்படி வந்த ஒருவர்தான் முட்டி குலங்கரை தைலம் விற்கும்  சேட்டன். நல்ல உயரமாக இருப்பார்.  அவர் தைலத்தை கூவிச் சொல்வதே வித்தியாசமாக இருக்கும். நாலைந்து முறை கேட்டும் புரியாமல் பிறகு அப்பாவிடம் என்ன சொல்கிறார் என்று கேட்ட பிறகுதான் அவர் முட்டி குலங்கரை தைலம் என்று சொல்கிறார் என்றே புரிந்தது. அவர் தான் பார்க்கும் எல்லோரிடமும் விற்க முயற்சி செய்வார். ஆனால் அவரிடம் யாரும் தைலம் வாங்கி நான் பார்த்தது இல்லை. அவர் லாரி பேட்டையிலேயேதான் சுற்றிக் கொண்டிருப்பார் என்பதால் அநேகமாக அங்கு நான் செல்லும் போதெல்லாம் பார்ப்பேன், நாளாக நாளாக முக அறிமுகம் வந்த பிறகு நானும் அவரும் பார்க்கும் தருணங்களில் மெலிதாக புன்னகைத்து கொள்வோம் .

7-8 வயதில் இருந்தே அப்பாவுடன் சென்று கொண்டிருந்தேன். ஆனால் 14-15 வயது காலத்தில் அப்பாவுடன் கசப்பு ஆரம்பித்து விட்டது.  ஒருநாள் அப்பா வேலைக்கு என்னை அழைக்க நான் கோபித்து வீட்டை விட்டு ஓடி இரவு திரும்ப வந்து சேர்ந்தேன். அதன் பிறகு அப்பா என்னை அழைத்துச் செல்வதை விட்டு விட்டார். நான் வேறு இடங்களுக்கு ஸ்கூல் நேரம் போக மீதி நேரத்தில் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். மளிகைக் கடை, மாவு மில், ஜாக்கெட் ஊக்கு தைக்கும் வேலை என அலைந்து கடைசியில் ஒரு பால் கம்பெனியில் காலை 4 -7 வரை செய்யும் வேலை கிடைத்து அங்கேயே தொடர்ந்து இருந்து விட்டேன். பிறகு எப்பவாவது அம்மா அழைத்து வர அல்லது ஏதாவது சொல்லி அனுப்ப லாரி பேட்டை செல்வேன். இப்படி சில வருடங்கள் போயிருக்கும், ஒருநாள் அம்மா அப்பாவை அழைத்து வரச் சொல்லி அனுப்பினாள். சென்று அப்பாவிடம் சொல்லி, அவர் வரும்வரை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கால் சற்று ஊனமாகி நடக்க சிரமப்பட்டு ஒரு பிச்சைக்காரர் வந்து கொண்டிருந்தார்.  நான் இருக்கும்  இடத்திற்கு அவர் வருவதற்கு முன்பே சிலரிடம் அவர் பிச்சை கேட்டு, அவர்கள் தராமல் இருப்பதைப் பார்த்தேன். என்னிடம் பணம் எதுவும் இல்லை. கொடுக்க இயலாத வருத்தம் சற்று வந்தது. அவர் அருகில் வரும் போதுதான் அவரை முன்பு பார்த்து இருக்கிறேன் என்பதைச் சட்டென  உணர்ந்தேன். அவர் முட்டி குலங்கரை தைலம் விற்றவர், நம்ப முடியாமல் பேச்சற்று நின்று விட்டேன், அவர் என் அருகில் வந்த போதுதான் என்னைக் கவனித்தார். என்னிடம் யாசிக்க வில்லை, மெலிதாக புன்னகைத்தார். முகத்தில் இயலாமையின் வலி இருந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *