பால்யத்தில் தினமும் அஞ்சி நடுங்கும் ஒரு நபராக என் தாய்மாமா இருந்தார். தெருவிற்குள் கடுவா என்பார்கள். காலை மாலை என இரண்டு முறை  உணவுண்ண அவர் வீட்டிற்கு வந்து செல்வார். அந்த நேரங்களில் மட்டும் நாங்கள் முன்ஜாக்கிரதையோடு தலைமறைவாகத் திரிவோம். பாட்டிகூட அவருக்கான சாப்பாட்டை தட்டில் எடுத்துவைத்துவிட்டு வாசல் திண்டில் அமர்ந்து கொள்வாள். மாமாவிற்கு சோற்றைப்பார்த்ததும்  ஆவேசம் பிறக்கும். கொதிக்க கொதிக்க குந்தி அமர்ந்து, அவரைச்சுற்றி சோற்றுப்பருக்கைகள் சிதறியிருக்க காற்றில் யாருடனோ பேசியபடி சாப்பிடுவார். அந்நேரத்தில் வீட்டிற்குள் யார் சென்றாலும்  குரோதம் வழியும் ஒரு தீவிரப்பார்வை. ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று தனித்தனியே அவர் தேர்ந்து வைத்திருக்கும் கெட்டவார்த்தைகளால் எச்சில் தெறிக்க ஏசுவார். அவர் காட்டிய அந்த சன்னத நிகழ்வு அன்று அகப்பட்டவர் தம்வாழ்நாள் முழுக்க மனித குரூரத்தின் உதாரண நிகழ்வாய் நினைவில் நின்றுகொண்டே இருக்கும்.

பாட்டியை உலக்கையால் பின்மண்டை சிலிர்க்கும் ஒலியெழும்படி வீட்டிற்குள் அவர் அடிக்கும் காட்சிகள் இன்னமும் எனக்கு துல்லியமாக ஞாபகத்தில் இருக்கின்றன. வாரத்தில் இரண்டு நாட்கள் பாட்டிக்கு உயிர்போகும். ஆனாலும் பாட்டி சாகும்வரை அவருக்கான சாப்பாட்டை கைவிடவில்லை. தட்டுநிறைய குவித்துவைப்பது ஒருபோதும் குறைந்ததுமில்லை.

”சவத்துப்பயல விசம் வெச்சு கொன்னுற வேண்டியதுதான” என்று பலமுறை அவளிடம் சண்டை போட்டுள்ளேன். அன்று என் உழைப்பில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ஜவுளிக்கடையில் பன்னிரெண்டுமணிநேரம் தொலைத்துவிட்டு வந்தபின் மூன்றாம் சாமம் வரை ஆர்வத்தோடு வாசித்துக் கிடந்த நாட்கள்.

”அது பாவம்ல” என்பாள் பாட்டி. பாட்டியிடம் இருந்தே சைவ உணவின்பால் எனக்கு ஈர்ப்பும் அபாரமான சுவைகளும் ஒட்டிக்கொண்டன. அவள் தீவிர சைவம். தடித்தடியாக அவள் சேகரித்து வைத்திருந்த திருவாசகத் தொகுதிகளை என் பதினைந்து வயதில் எடுத்து வாசிக்க முயன்றிருக்கிறேன். ”அவ தான அவன் வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டது. மருமகளுக்கு இருந்த வீட்டுல ஒண்ண எழுதிக் கொடுத்திருக்கலாம்ல..இப்ப குடும்பம் குட்டினு அவனும் ஆம்பளயா இருந்திருப்பான்..” தாத்தா தொப்புள்வரை வடிந்திருந்த வெண்தாடியைக் கோதிக்கொண்டு சொல்வார். மார்பிலும் தொடைத்திரட்சிகளிலும் பஞ்சுத்திரிகள் போன்று  மயிர்கள் சுருண்டிருக்கும். அவர் அறையென்பது  நிரந்தரமாக நறுமணம் வீசும் தோட்டம். குறைந்தபட்சம் ஜவ்வாது வாசனையாவது இல்லாமல் போகாது.

சிறுவயதில் தாய்மாமா மீது எப்போதும் ஒருவித பயமே இருந்துள்ளது. என் அம்மா சொல்வாள் “உங்கப்பனும் அவனும் ஒருநாள் மல்லுக்கட்ட பார்த்தாங்க..நல்லவேளையா தாத்தா வந்து தடுத்தாரு..” அப்பா மாமியார் வீட்டிற்கு விருந்திற்கு வந்த சமயமது. உறவுகள் அத்தனை பேரிடமும் மாமாவிற்கு கடும் வெறுப்பு இருந்தது. வீட்டில் இருக்கும்போது மாமா சிரித்துப்பேசி ஒருபோதும் நான் பார்த்ததில்லை. காந்திபஜாரில் குற்றேவல் புரிந்துகொண்டிருக்கும்போது அவர் முகம் சிரிப்பில் ஒளிர்ந்து கொண்டிருப்பதை தொலைவில் நின்று கண்டதுண்டு. என்னைப்போன்ற சுள்ளான்கள் எல்லாம் அவர்மீது கல்லெறிந்து விளையாடுவார்கள்.

 இரவு முழுவதும் டி.வி.டெக் வாடகைக்கு கொண்டு சென்று காட்டிவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிப் படுத்திருந்தேன். காலையில் சாப்பிட வந்தவர் உறங்கிக்கொண்டிருந்த என்னை திடுமென்று குண்டியில் மிதித்து ”எந்தில மூதி..இங்க என்னல படுத்திருக்க” என்றார். பதறி எழுந்து அமர்ந்து நடுங்கினேன். அவர் கண்களைப் பார்ப்பதை தவிர்த்து தரையை வெறித்தேன்.  நேருக்கு நேர் பார்த்தால் அவர் வெறி கூடும் என்பது என் அனுபவம். ”என் லேகியத்தை யாருல எடுத்தது” என்றார் பற்களை கடித்தபடி.

அதற்குள் வெளியே எங்கோ சென்றிருந்த பாட்டி வீட்டிற்குள் ஓடிவந்தாள். ”ஒரே பச்சலை நாத்தமா இருக்குனு..நான்தான் குப்பையில எடுத்துப்போட்டேன்…போதியீல போறவனே… அந்தப்பயல போட்டு ஏம்ல அடிக்க” என்றபடி வந்து தடுத்தாள்.

”த்தேவ்டியா.. உன்ன எவன்டி இ்ங்க இருக்கச் சொன்னான்..உன்புருசன் சம்பாதிச்ச….தாளா இது..ஒடீரு..இல்ல..கொன்னுருவேன்” மாமாவின் கோபம் பாட்டியின் மீது திரும்பியது.

சாமி வந்தவன் போல் மாறினேன்.

”தாயோளி..நீ இப்ப வீட்டவிட்டு வெளிய போறியா இல்ல தலைவேற முண்டம் வேற வெட்டவா” அடுப்படிக்குள் இருந்த கனத்த விறகு வெட்டும் அரிவாளை பாய்ந்து எடுத்தேன். ஒருகணம் மாமா என் நிலைகண்டு திகைத்து நின்றார்.

”ஏய்..ஏய்..” என்று பிதற்றினார். பயம் கண்களில் தெரிய அசையாமல் பார்த்தார்.

நான் மாமாவின் கழுத்தைநோக்கி வீசினேன். தலை கிறுகிறுத்தது. கைகாலெல்லாம் ஒரே நடுக்கம். காற்றில் ஒலியெழுப்பிக்கொண்டு வாசல் கதவின் மேல் வெட்டு விழுந்தது. பாட்டி ”ஐயோ..என்ன நடக்குது…முருகா..” என்றாள். மாமா அச்சம் கொண்டு ஒரு அடி பின்வாங்கினார். நான் ”போல வெளிய” என்று மேலும் ஒருமுறை எக்கி மாமாவின் தோளை நோக்கி வீசினேன்.

அவ்வாறாக மாமாவினை வென்றேன். அப்போது கைலிகட்டவும், மாமா முறைத்துக்கடக்கும் சமயங்களில் தெருமுக்கில் நின்று பெரிய மனிதருக்கான தோரணையில் பயல்களோடு கதையளந்து கொண்டு நிற்பதையும் பழகியிருந்தேன். ஆனாலும் உள்ளுக்குள் அவர்மீது ஒரு பயம் அழியாமல் இருந்தது. அது என் சிறுவயது முதல் என்னோடு தானாக வளர்ந்து வந்த ஒன்று. என்னால் அதை ஒன்றும் செய்ய இயலாது என்று பலமுறை அறிந்திருக்கிறேன்.

தெருவிற்குள் குடும்பச் சண்டையில் விளைந்த ஒருத்தரின் குரோதம் மாமா சிறுவனாக இருந்தபோது கஞ்சா குடிக்கும் பழக்கத்தை அவருக்கு கற்றுத்தந்ததாக பாட்டி சொல்வாள். தாத்தா பகட்டாக இருந்த நாட்கள். பணம் அது இல்லாதவர்களை கடுமையாக அவமதித்துக்கொண்டே இருக்கும். பாட்டிக்கு பெரிய குடும்பத்துப்பெண் என்கிற ஆணவம். அது சதா அவள் நடையிலும் அவள் பேச்சிலும் வழிந்து கொண்டு இருக்கும். ”உங்க பாட்டி ஆம்பள கணக்கா இரண்டு கையையும் பின்னால கட்டிக்கிட்டு நடந்து போறத தெருவே வேடிக்கைப் பார்க்கும்” என்று மாமா முறையுள்ள ஒருவர் பாட்டியை குளிப்பாட்டி நாடிக்கட்டு கட்டி, சாத்திவைத்திருக்கும்போது பேசியதை கேட்டிருக்கிறேன். ”என்னை ஜெயிக்க வைக்க வந்தவ…..ஜெயலெட்சுமி” என்று தன் அப்பா கொஞ்சியிருப்பதாக பாட்டி என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் பாட்டியின் முகம் மகிழ்ச்சியில் மேலும் சிவக்கும். பூரிப்பில் மினுங்கும் பாட்டியின் ஒரு மாறுகண் அவளை யாரோ போல  அந்நியப் படுத்திக்காட்டும்.

திருமணமாகி ஒருசில ஆண்டுகள் மட்டுமே மாமா அத்தையோடு வாழ்ந்திருக்கிறார். கேரளத்தில் இருந்து வாக்கப்பட்டு வந்த பெண். அத்தை நல்ல சிவப்பு. மாமா இருளின் தம்பி. அத்தையின் காலடியில் கிரங்கிக் கிடந்திருக்கிறார். கிறுக்கனாக திரிந்தவர் திருமணத்திற்குப்பின் நல்ல கணவனாக மாற முயன்றிருக்கிறார். அந்நாட்களில் காட்டில் இருந்து கொண்டு வரும் விறகுகளை வாங்கி அடுப்பெரிக்கும் பழக்கமிருந்தது. மாமா தினமும் விறகு வெட்ட முந்தலுக்குப் போய் வருவார். முதல் கரு தரித்த பின்தான் அத்தைக்கு மாமா குறித்த பயம் வந்தது. அப்போதும் பாட்டியிடம் போதுமான செல்வம் வீடாகவும் காலியிடமாகவும் கைவசம் இருந்தது.

பாட்டியின் ஈமக்கிரிகைக்காக மாமாவைத் துாக்கிகொண்டுவர முயன்றார்கள்.  பிள்ளைவரம் வேண்டி கோவில் கோவிலாக அலைந்து பெற்ற ஒரே மகன் இப்படி வீணாப் போனானே என்ற கவலை பாட்டி சாகும் வரை இருந்தது. கொல்லிவைக்க மாமாவை அழைத்து வரச்சென்ற முயற்சி ஒரு சிறு கைகலப்பு நடந்து,  தோல்வியில் முடிந்தது. பாட்டியின் மறைவிற்குப்பின் மாமாவின் பழைய நடவடிக்கைகள் குறையத் தொடங்கின.

ஒருபோதும் யாரிடமும் யாசிக்காதவர் உறவினர்களிடம் உணவு வாங்கி உண்ணும் நிலைக்கு வந்தார். அது அம்மாக்கள் மிஞ்சிய சொத்துக்களை பங்கிட்டுக்கொண்டு மாமாவை நடுத்தெருவில் நிறுத்திய காலம். கடைத்தெருவின் திண்ணைகளில் உறங்கி எழுந்து அவருக்குத் தெரிந்த சிறுசிறு வேலைகள் செய்து வாழ்ந்து கொண்டிருந்தார். தொடர்ந்த வயிற்றுப்போக்கும் சர்க்கரை நோயால் காலில் வந்து வீங்கியிருந்த கொத்துப்புண்ணும் அவரைப் படுத்தத் தொடங்கியிருந்தது. உறவினர்கள் வீடுகளுக்கு உணவிற்காக போய் நிற்கிறார் என்பது செவி வழிச்செய்தியாக வந்து கொண்டிருந்தது. சித்தியின் ஊருக்கு கொண்டு சென்று மாமாவைப் பராமரிப்பது என்று பேசி ஒரு முடிவிற்கு வந்தோம். மாமாவை பராமரிக்கும் கடமை சித்தி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். அண்ணன் வீரதீரச்செயல்களில் தயக்கமின்றி இறங்கும் முன் ஏற்பாடாக கொஞ்சம் ஏற்றியிருந்தான். காந்திபஜாரில் மாமா வழக்கமாக படுத்திருக்கும் கடையின் அருகே சென்றோம். இருளுக்குள் இருளாக மாமா படுத்திருந்தார். கால்கள் இரண்டும் குலுங்கிக் குலுங்கி ஆடிக்கொண்டிருந்தது அந்த இருட்டிற்குள்ளும் தெரிந்தது.

”மாமா எந்திங்க….சித்தி வீட்டுக்குப்போலாம்” என்றேன். மாமாவிடம் இருந்து எந்தவித அசையும் இல்லை. எங்களை இருளுக்குள் இருந்து இனம் கண்ட பின் எழுந்து அமர்ந்தார். தெருவிளக்கின் ஒளி முகத்தில் விழுந்தது. ஆள் மெலிந்து பலகீனப்பட்டிருந்தார். வயதான கடுவாவை பார்ப்பது போல் இருந்தது

”போதும்டா சாமிகளா..என்ன இங்கயாவது இருக்க விடுங்கடா..நான் எவ வீட்டுக்கும் வரல” இரண்டு கைகளாலும் எங்களைக் கும்பிட்டார். அவர் கண்களில் மினுக்கம்.

எங்களைக் கண்டு மாமா பயந்தது அதுதான் முதல் முறை. கடைசி முறையும் அதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *