ஏக் தோ தீன்

எங்கள் விடுதியின் வாசலில் அந்த அம்மாள் அமர்ந்திருந்தார். மஞ்சள் டிஸ்டம்பர் ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்டிருந்த மாணவர் விடுதி. தென்வடலாக மேற்கில் இருந்து வரும் காற்றிற்கு ஒரு தடுப்பணை போல  கட்டப்பட்டிருந்தது. எனவே சதா சன்னல்கள் வழி காற்று பீறிட்டுக்கொண்டே இருக்கும்.

நான் தயங்கித் தயங்கிப் படியேறினேன். அந்த அம்மாள் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார்.

”தம்பி..ஸ்கூலுக்குப் போகலையா?“ சிரிப்போடு கேட்டாலும் முகத்தில் கடுமையான இறுக்கம். அவர்களால் மனம்விட்டு சிரிக்க முடியாது என்று தோன்றியது. உக்கிர பாவனை உறைந்த ஒரு கல்சிற்பம்.

அந்த அம்மாளின் கண்களைச் சுற்றி மெலிதான கருவளையம். முகம் நல்ல சிவப்பில் இருந்தாலும் கன்னத்தசைகள் ஒட்டியிருந்தன. அவர் மீதிருந்து எழுந்த வாசனை நான் அறிந்த பெண்களின் வாசனையில் இருந்து முற்றாக வேறுபட்டிருந்தது. ஒரே சமயத்தில் விருப்பையும் அருவருப்பையும் உண்டாக்கும் விதத்தில்.

”வயித்து வலி” என்றேன்.

”நான் ஏக்நாத்தோட அம்மா..தம்பி..ஏக்நாத் நல்லா படிக்கிறானா?”

”ம்..” என்றேன்.

      அந்த அம்மாள் அப்போது என் அருகே மிக நெருங்கி அமர்ந்திருந்தார். என்னால் என் கண்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. அடிவயிற்றின் தழும்புகளையும், தொப்புளையும் பதற்றத்தோடு பார்த்தேன். கால்விரல்களில் மெட்டிகள் இல்லை. கொலுசுகளின் பிரமாண்டம் என்னை அயர்ச்சி அடையச்செய்தது. யாருமற்ற தனிமைதான் என்னை இவ்விதம் மாற்றுகிறதா?

 அந்தப் பிராந்தியமே தனிமைக்குள் மூழ்கிக்கிடந்தது. முற்பகல் வெய்யிலில் செம்மண் மேலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. . அந்த அம்மாளின் நெருக்கத்தால் எனக்குள் என்னனென்வோ மாற்றங்கள்.  என் உடம்பில் திடீரென வெப்பம் பரவத் தொடங்கிற்று. சற்றுத் தொலைவில் சமையல் கூடத்தில் அண்டாவோடு சோற்றுக்கரண்டி மோதி எழும் ஒலி. அங்கே வார்டனும் சமையல்காரரும் இருக்கக்கூடும். வேப்பமரங்களும் விடுதியின் பின்புறமிருந்த பெரிய ஆலமரமும் ஒருவித பித்துநிலையில் ”ஓ..”வென காற்றிற்கு ஆடின.

 சன்னாசி மூலம் நான் அப்போது பெண்கள் குறித்து மேலும் பல தகவல்களை தெரிந்து கொண்டிருந்தேன். மங்கள சுந்தரியில் பகல் பதினோருமணி காட்சிகளுக்கு அவன் என்னை அழைத்துச் சென்றிருந்தான்.  அகன்ற திரையில் வந்துசென்ற பெண்ணுடலும் அதனை முகர்ந்து உருகிய வெற்றுடம்பு ஆண்களும் எனக்கு வேறோரு உலகத்தை அறிமுகம் செய்திருந்தனர்.

”அவன நல்லா பாத்துக்கோங்க தம்பி..அப்பா இல்லாதவன். பாம்பேயில இரண்டாம் கிளாஸ் வரைச் சேர்த்து படிக்க வைச்சோம். அவனோட அப்பா என்னையும் அவனையும் விட்டுட்டு ஒருநாள் திடீர்னு காணாமப் போயிட்டார். எனக்கு அங்க வேற யாரையும் தெரியாது. என்னோட சொந்தமல்லாம் சங்கரன்கோவில் பக்கம் இருக்காங்க..அவனோட அப்பா எங்க ஊருக்கு கொத்தவேலைக்கு வந்தப்ப பழக்கம். ஒரு வாரந்தான்  இருக்கும். அதுக்குள்ள திருமலைக்கோவிலுக்கு போயி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க வீட்டில அண்ணன்மாரு என்னை வெட்டிப் புதைக்க தேடி அலைஞ்சாங்க..நாங்க அப்பத்தான் பாம்பேக்கு ரயில் ஏறினோம்”

சொல்லும்போதும் அந்த அம்மாளின் முகத்தில் இறுக்கம் கலையவில்லை. முந்தானை காற்றில் விலகி மென்வயிற்றின் பொன்னிற மயிர்கள் தெரிந்தன. அந்த அம்மாளுக்கு அதுகுறித்து அதிகம் அக்கறை இல்லாதது போலிருந்தது.

”ஆஸ்டலுக்குத் தேடி வராதேனு அவன் சண்டைபோடுறான். எனக்கும் அவன இங்க சேக்க விருப்பமே இல்ல. நான் உயிர் வாழ்றதே அவனுக்காகத்தான். வீட்டில இருக்கறப்ப ஒழுங்கா படிக்கவே போகமாட்டான். சொன்ன பேச்ச கேட்கமாட்டான். அரளிக்கொட்டையை அரைச்சுக் குடிச்சு செத்துப்போவேன்னு என்னை மிரட்டிக்கிட்டே இருந்தான்.  எதுக்கெடுத்தாலும்  பயங்கர சண்டை. அதான் அவன இங்க கொண்டு வந்து சேர்த்தேன்.”

மதிய வகுப்பு முடிந்து மாணவர்கள் கூடடையும் பறவைகள் போல  விடுதி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். ஆஸ்டல் லீடரிடம் விடுதிக்கான சாவி இருந்தது.

“ஏக்நாத் அதோ வர்றான்” என்று சுட்டிக்காட்டினேன்.

அந்த அம்மாளின் முகம் புன்னகைத்து அவனை அடையாளம் கண்டுகொண்டது. தன்னிச்சையாக எழுந்து நின்றார். கண்இமைகள் துடித்து உதடுகள் கோணின. கண்ணீர் முட்டி நின்றது.

பையன்கள் எங்கள் இருவரையும் சுற்றி நின்றார்கள். ஆஸ்டல் லீடர் சைமன்  விடுதியின் கதவைத்திறந்தும் அவர்கள் கலைந்து போகவில்லை. வெகு தொலைவில் வரும்போதே ஏக்நாத் அம்மாவைப் பார்த்து  தயங்கி நின்றான். எங்களிடம் எப்போதும் அடிகளும் உதைகளும் வாங்கி சதா அழும் பாவனையிலே இருக்கும் அவனை அப்படிப்பார்ப்பது அதிசயமாக இருந்தது.

”இங்க ஏன் நீ வந்த” என்று ஏக்நாத் கத்தினான். அவன் அழுகை அதில் வெளிப்பட்ட துயரம் எங்கள் அனைவரையும் ஒரு கணம் பதறச் செய்தது. ஏக்நாத் மீது உண்மையிலே அப்போது ஒருவித பரிதாபம் தோன்றியது.

இது நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும். தென்காசி பரதனில் சின்னத்தம்பி படம் இருநுாறு நாட்கள் ஓடி எங்கள் விடுதி வரை அதன் புகழ் எட்டியிருந்தது. ஒரு ஞாயிறு சர்ச் போவதில் இருந்து தப்பித்து அச்சம்பட்டி இடைகால் வரை நடந்து தென்காசிக்கு பஸ் ஏறினேன்.  காலைக்காட்சிக்கு அன்றும் கூட்டம் முண்டியடித்து நின்றது. தியேட்டர் வாசல்முன் ஒட்டியிருந்த சினிமாப் பட போஸ்டரை வேடிக்கை பார்த்து செய்வதறியாமல்  நின்றேன். கூட்டத்திற்குள் அம்பாசிடர் கார் ஒன்று மிதந்து ஊர்ந்து வந்தது. வாசல் முன் நிறுத்தி அதில் இருந்து கனத்த உடம்பும் முறுக்கு மீசையும் கொண்ட கடோத்கஜ மனிதர் ஒருவர் இறங்கினார். உள்ளே  ஒரு பெண்.

முதல் பார்வையிலேயே காருக்குள் இருப்பது ஏக்நாத்தின் அம்மா என்பதை கண்டுகொண்டேன். தலைநிறைய மல்லிகை. உதடுகளில் மினுங்கும் சாயப்பூச்சு. அடர்பச்சைநிற பட்டுச்சேலை. அலங்காரத்திற்கும் முகத்திற்கும் பொருந்தாமல் உணர்ச்சிகளற்ற முகம். அப்போதும் ஏக்நாத் அம்மாவின் முகத்தில் அந்த இறுக்கத்தை கவனித்தேன்.

சாயந்தரம் விடுதி திரும்பி ஏக்நாத்தைதான் முதலில் தேடினேன். வாலிபால் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை புல்தரையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். மொத்த விடுதியும் விளையாட்டு மைதானத்தில் குழுமி இருந்தது.

நான் ஏக்நாத்தின் அருகில் சென்று ”உங்க அம்மாவை இன்றைக்கு பரதன் தியேட்டர் வாசலில் பார்த்தேன்” என்றேன்.

அவன் அதைக் கேட்டுக்கொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. என்னைப்பார்த்து மரியாதையாக சிரித்துவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஆர்வத்தை காட்டினான்.

”உங்க அம்மா புதுப்பொண்ணு போல இருந்தாங்க”

வலையில் மோதி பந்து சிங்காரத்தின் கைகளுக்குள் சிக்கிக்கொள்ளவும் கூட்டம் ஓ….வென ஆர்ப்பரித்தது.

”உங்கம்மா கூட ஒரு ஆள் இருந்தாரு…பெரிய மீசை வைச்சிருந்தாரு”

ஏக்நாத் என்னை திரும்பிப் பார்த்தான்.

”அது எங்க அம்மா இல்ல.”

” உங்க அம்மாதான்டா..வலதுகையில உன்னோட பேர் பச்சைக் குத்தி இருந்தத பார்த்தேன்”

அவன் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தான். இமைகளை மூடி மூடித் திறந்தான். விளையாட்டு அளித்த உற்சாகம் உடனே வடிந்து முகம் தீவிரத் தன்மைக்கு உருமாறிற்று

”ப்ளீஸ்ணா..வேற யார்கிட்டயும் அம்மாவைப் பாத்ததை சொல்லாதீங்கண்ணா” என்று என் கைகளைப் பிடித்து கெஞ்சத் தொடங்கினான்.

”அப்படீன்னா நான் சொல்றப்ப மட்டுந்தான் நீ அந்தப் பாட்டை பாடனும் சரியா”

”சத்தியமாண்ணா”

”சரி.இப்ப சத்தம்போட்டு பாடு.கேட்போம்”

ஏக்நாத் யோசிக்கவே இல்லை. சட்டென்று எழுந்து நின்றான்.

”டிங் டாங் டிங்க்…டிங் டாங் டிங் டாங்க்….ஏக் தோதீன் சார்பாஞ் சாட்”

நான் கேட்ட முதல் இந்திப்பாடல் இது. இன்றும் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் ஏக்நாத்தின் பித்தேறிய குரலும்  இறுக்கம் உறைந்த அவன் அம்மாவின் முகமும் நினைவிற்கு வரும்.

       இப்பாடலைப் பாடும் ஒவ்வொரு முறையும் ஒரு கலைஞனுக்குரிய  பரவசத்தோடு முகமெல்லாம் பூரித்து ஜொலிப்பான் ஏக்நாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *