சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 2

குளியல்

மனைவியின் முகம் மாறிக்கொண்டிருப்பதை சங்கர் உணர்ந்தான். இனிமையும் நல்ல சுபாவமும் முகம் சுளிக்காத தன்மையும் கொண்ட அவள் தற்போது மாறிவிட்டாள். தொற்று பற்றிய பயம்; சகஜ வாழ்வை இழந்துவிட்ட சூழல்; கைகளை அடிக்கடி கழுவிக்கொண்டிருப்பது ஆகியவற்றில் மனம் பாதிப்படைந்து முகமும் மாறிவிட்டது. சங்கருக்கு தன்னுடைய முகமும் மாறிவிட்டதோ என்று தோன்றி அடிக்கடி கண்ணாடியில் பார்ப்பான். முதுமைக்கான அறிகுறிகள் இருப்பதாகத் தோன்றியதே தவிர முகம் மாறிவிட்டதாகத் தோன்றவில்லை.

ஒருநாள் கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்ணாடிக்குள் போய்விட முடியும் என்றும் அங்கு பல மனிதர்கள் இருப்பார்கள் என்றும் தோன்றியது. கண்ணாடிக்குள் நுழைந்தான். பெரிய கண்ணாடி மாளிகை. நிறைய ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். அவர்களுடைய பாவனைகளிலிருந்து அவர்கள் கணவன், மனைவி என்று அறிந்தான். சத்தமான குரலில் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். கணவன் மனைவியைக் குறை கூறியும் மனைவி கணவனைக் குறை கூறியும் கத்திக்கொண்டிருப்பதாக சங்கருக்குத் தோன்றியது.

பூனைகள் அந்தப் பெரிய கண்ணாடி மாளிகையில் ஆங்காங்கே அலைந்துகொண்டிருந்தன. சண்டையிட்டு ஓய்ந்து போனவர்கள் அங்கிருந்த தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு சண்டைக்குத் தயாரானார்கள். அப்போதுதான் ஏதோ ஒரு வாசல் வழியே அந்தக் கண்ணாடி மாளிகைக்குள் நுழைந்த தன் மனைவி தன்னைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். எங்கேயாவது ஒளிந்துகொள்ளலாமா என்று பார்த்தான். அந்தக் கண்ணாடி மாளிகையில் ஒளிவதற்கு வசதியான இடம் இல்லை. எனவே இருந்த இடத்திலேயே நின்றான். மனைவி அவனை நோக்கி வந்தாள். அருகில் வந்ததும் அன்று காலையில் நடந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு சண்டை போட்டாள். அவள் தன்னை நோக்கி வரும்போதே சண்டைக்குத் தேவையான சக்தியை மனத்தில் திரட்டிக்கொண்டிருந்தது இப்போது வசதியாக அமைந்துவிட்டது. பதிலுக்கு சண்டை போட்டான். சண்டை போடுவதில் ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிப்பது குரல்தான். ஓங்கிய குரல் உள்ளவர் முன்பு எவ்வளவு கத்தினாலும் எடுபடாது. சங்கர் மனத்தில் திரட்டி வைத்திருந்த சக்தி எல்லாம் அவளுடைய ஓங்கிய குரல் முன்பு எடுபடவில்லை.

திடீரென்று விசில் சத்தம் கேட்டது. கனவானாகத் தோற்றம் தந்த ஒருவர் கண்ணாடி மாளிகையின் நடுப்பகுதியில் நின்றிருந்தார். “பத்து நிமிடம் எல்லோரும் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். சூடான டீ வருகிறது. தொண்டைக்கு இதமாக இருக்கும். இஞ்சி போட்ட டீ” என்றார். அமைதியானார்கள். டீயும் வந்தது. பெரும்பாலோர் டீயை உறிஞ்சிக் குடித்தார்கள்.

சங்கரும் டீ வாங்கிக் குடித்தான். தொண்டைக்கு இதமாக இருந்தது. மனைவியின் ஓங்கிய குரலில் தன் குரல் அமுங்கிப் போய்விடும்படி இயற்கையாகவே தன் குரல் அமைந்துவிட்டதற்காக வருந்தினான். ஒவ்வொரு முறையும் தோல்வியடைய வேண்டியிருக்கிறது. மனைவி டீயைக் குடித்துவிட்டாள். சங்கர் இன்னும் பாக்கி வைத்திருந்தான்.

கண்ணாடி மாளிகையின் நடுவே நின்றிருந்த கனவான், “பத்து நிமிடம் முடியப்போகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். மீண்டும் விசில் சத்தம் கேட்டது. தம்பதிகள் மீண்டும் சண்டை போட ஆரம்பித்தார்கள். சங்கரின் மனைவி ரெஸ்ட் ரூம் போய்விட்டு வருவதாகவும் அதுவரை இங்கே இருக்குமாறும் சொல்லிவிட்டுச் சென்றாள்.

சங்கர் அந்தக் கனவான் பின்னாலே சென்றான். வாசல் அருகே வந்ததும் அவர் திரும்பிப் பார்த்தார். “அய்யா எனக்கு குரல் வளம் இல்லை. தொண்டை ரிப்பேராகிவிட்டது. நீங்கள் என்னை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்” என்றான் சங்கர். “உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. பலவீனமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் மனைவி வெளியேற நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் கனவான்.

பின் அலமாரியிலிருந்து ஒரு துண்டை எடுத்து சங்கரிடம் கொடுத்தார். “சற்று தள்ளி ஆறு ஓடுகிறது. அதில் ஒரு குளியல் போட்டுவிடுவது நல்லது. உடல் கொந்தளிப்பு அடங்கும்” என்றார். சங்கர் துண்டை வாங்கிக்கொண்டு குளியல் போட ஆற்றை நோக்கிச் சென்றான்.


பத்மினி

நான் சங்கரபாண்டியனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். நான் வேலை பார்க்கும் துறையில் என் தலைமையில் ஓர் அணி இருந்தது. எங்களுக்கு எதிர் அணி ஒன்றும் இருந்தது. இடையில் ஒரு சிறு குழுவை சங்கரபாண்டியன் வைத்திருந்தார். மன்றத் தேர்தலுக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருந்தோம். சங்கரபாண்டியன் குழு பெரும்பாலும் எங்களின் எதிர் அணியுடன்தான் ராசியாக இருப்பார்கள். அந்த இணைப்பைத் துண்டிப்பதற்குத்தான் சங்கரபாண்டியனின் குழுவுக்கு இரண்டு பதவிகள் தருவதாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. சங்கரபாண்டியன் நான்கு பதவிகள் கேட்டார். நான் இரண்டிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

எதிர் அணியில் மோசமானவர்கள் இருப்பதாகவும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் இல்லை என்றும் அவர் ஆதரிக்க வேண்டியது எங்கள் அணியைத்தான் என்றும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தேன். பேச்சுவார்த்தை பாரில் நடந்துகொண்டிருந்தது. சங்கரபாண்டியன் நிறைய குடிப்பவர். மது வந்துகொண்டிருந்தது. நான் எப்போதும் லிமிட்தான். அதற்கு மேல் போகமாட்டேன்.

தங்களது குழு எதிர் அணியிடம் சேர்ந்தால் நாங்கள் தோற்பது உறுதி என்றும் அதனால் நான்கு பதவிகள் கொடுக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப அவர் கூறிக்கொண்டிருந்தார்.

கிருஷ்ணனை வழிபடுபவனும் தந்திரங்களில் சிறந்தவனுமான நான் அவரிடம் கூறினேன். எந்த பீடிகையும் இல்லாமல் பட்டென்று கூறினேன். “பத்மினியை நான் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு மாறுதல் செய்கிறேன். என்ன சொல்கிறீர்கள்” என்றேன். அவர் திகைத்தார். ஆனால், உள்ளூரக் கிளர்ந்தார் என்று நான் உணர்ந்தேன்.

“நீங்கள் உங்கள் உறுதிமொழியை பழுதில்லாமல் செய்துவிட முடியுமா” என்றார்.

“நிச்சயம் முடியும். ஆனால், நீங்கள் எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும். இரண்டு பதவிக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றேன்.

சங்கரபாண்டியன் சிக்கன் துண்டைக் கடித்துக்கொண்டே சிரிப்புடன், “சரி” என்றார். “பிராமிஸ்” என்றேன். பிராமிஸ் என்று என் கை மீது கை வைத்தார்.

சங்கரபாண்டியன் வசப்பட்டுவிட்டார் என்றும் இரண்டு பதவிகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் எங்கள் அணியினரிடம் கூறினேன். ஆச்சரியப்பட்டார்கள்.

தேர்தல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பத்மினியை மாறுதல் செய்து, சங்கரபாண்டியன் அதிகாரியாக இருக்கும் அலுவலகத்தில் அவளும் பணியில் சேர்ந்துவிட்டாள். பணியில் சேர்ந்ததை மாறுதல் செய்யும் அதிகாரியான என்னிடம் வந்து சொன்னாள்.

‘சங்கரபாண்டியனால் பத்மினிக்கு ஏதும் தொந்தரவு வருமோ; அப்படியென்றால் நான் செய்த வேலை தவறாகிவிடுமே. நாங்கள் ஜெயிப்பதற்காக தவறான காரியம் செய்துவிட்டேனோ’ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கள் அணியில் உள்ளவர்களுக்கு எங்கள் இருவருக்குமிடையே நடந்த டீல் பற்றித் தெரியாது.

சில நாட்கள் கழிந்து, பத்மினி என்னை அலுலவகத்தில் பார்த்தாள். “சார் ரொம்ப தேங்ஸ். ஏற்கெனவே இருந்த ஆபீஸ் ஒரே பிடுங்கல். நிறைய பைல்ஸ். இந்த ஆபீஸ் எனக்குப் புடிச்சிருக்கு. பைலும் கம்மி. ஆபீசர் தொந்தரவும் இல்லை” என்றாள்.

“சங்கரபாண்டியன் எப்படி இருக்கிறார்” என்று கேட்டேன்.

“அவர் ஜெண்டில்மேன் சார். என்னை ரொம்ப கண்ணியமா நடத்தறார். நான் வேலை பார்த்த ஆபீஸ்லேயே இதுதான் சார் பெஸ்ட்” என்றாள்.

“மாறுதல் பண்ணினதுலே உங்களுக்கு மகிழ்ச்சிதானே” என்றேன்.

“ஆமா சார். ரொம்ப தேங்ஸ் ஸார். மகிழ்ச்சிதான் சார்” என்றாள்.

எல்லாத் தரப்புக்கும் வேண்டிய நல்லதைத்தான் செய்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன். எங்களுடன் பிரசாரத்திற்கு பத்மினியும் வந்தாள். அந்தத் தேர்தலில் நாங்கள் பெரிய வெற்றியடைந்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *