ஞானம்தான் ஏதுக்கடி
அவர் ஊர்ப்பிரமுகர் இல்லை. ஆனால் உமாநாத்தைப் பொறுத்தவரை அவர் பிரமுகர்தான். காரியங்களைச் செய்து கொடுப்பதற்கு அவருக்கு எல்லா இடங்களிலும் ஆட்கள் இருந்தார்கள். அதனால்தான் உமாநாத் இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தார். எவ்வளவோ சிவன் கோயில்கள் இருக்க, இந்தக் கோயிலைச் சுற்றி மட்டும் எப்படி இவ்வளவு காவி உடைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிலர் பிரபலமாகிவிடுகிறார்கள்.
உமாநாத் இந்த ஊருக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது. முதலில் கஷ்டங்கள் இருந்தன. பின்னர் பழகிவிட்டது. மனைவி, மகன்களுடன் சண்டை போட்டு இங்கு வந்துவிட்டார். வரும் முன்பே பிரமுகரிடம் ஒரு ஹால், ஒரு ரூம் மேற்கத்திய டாய்லெட் உள்ள வீடு வாடகைக்குப் பார்த்து வைத்திருக்குமாறு கூறியிருந்தார். உமாநாத் வந்து பார்த்தார். அவருக்கு இந்த வீடு போதும் என்று தோன்றியது. குடும்ப சூழ்நிலை பற்றி ஏற்கெனவே பிரமுகரிடம் உமாநாத் கூறியிருந்தார்.
இங்கு வந்தபின் காலை வெயிலுக்கு முன்னும், இரவு வருவதற்கு முன்னும் இரண்டு தடவை கோயிலில் உள்ள வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வருவார். கோயிலைச் சுற்றித் திரியும் காவியுடைக்காரர்களை சாமியார் என்பதா, பிச்சைக்காரர் என்பதா, சந்தியாசி என்பதா என உமாநாத்தினால் கணிக்க முடியில்லை. பிரகாரத்தைச் சுற்றிவரும்போது ஒருவர் பழக்கமானார். காவியுடை அணிந்தவர்.
பூர்வீகம் பற்றிக் கேட்கக் கூடாது என்பதால் என்ன பேசுவது என்று உமாநாத்திற்குக் குழப்பமாக இருந்தது. அவருக்குச் சிரித்த முகம். “நான் இந்த வெளிப் பிரகாரத்தைச் சுற்றும் நேரமும் நீங்கள் சுற்றும் நேரமும் ஒரே நேரமாக அமைந்துவிட்டது” என்றார்.
“ஆமாம். அப்படி நேர்வதுண்டு. இதற்கெல்லாம் காரணம் கண்டுபிடிக்க முடியாது. கோயிலை ஏன் பெரிசா கட்டி சாமியை ஏன் அதுக்குள்ளே வைச்சான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொல்வாங்க. சாமி பெருசா தெரியணும்னா கோயில் பெருசா இருக்கணும். இல்லையா.”
“இப்ப சின்னச் சின்ன கோயில்கள் இருக்கே.”
“இப்ப நெனைச்சா பெரிசா கட்ட முடியுமா. பெரிய கோயில்கள் பாதை போட்டு வைச்சுருக்கு. அந்தப் பாதையிலே சின்னக் கோயில்கள்.”
“உங்களுக்குப் பின்னாலே ஏதாவது தத்துவம், ஞானம் இருக்கா.”
அவர் சத்தமாக வேண்டுமென்றே சிரித்தார். “ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கே ஞானம்தான் ஏதுக்கடி” என்றார்.
அவர் தொடர்ந்து பேசினார். “உலகம் புதிர்மயமானது. மனிதனுக்கு உள்ள உறவுகள் அனைத்தும் புதிர்மயமானவை. குடும்பத்தோடு உள்ள உறவு. ஆபிஸோடு உள்ள உறவு. டீக்கடைக்காரரோடு உள்ள உறவு. எல்லாம் புதிர்மயம். நாளை வேறொரு ஸ்தலத்திற்குச் செல்கிறேன். இந்த ஸ்தலத்தை விட்டுப் பிரியும் நேரம் வந்துவிட்டது. வருகிறேன்.” அவர் சென்றுவிட்டார்.
கோயிலுக்குள்ளேயே ஒரு சௌகரியமான இடத்தில் உட்கார்ந்தார். பிச்சைக்காரி போல, மன நோயாளி போல தோற்றம் தந்த பெண் ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். அவர் அருகே வந்ததும், “உமாநாத் சௌக்கியமா” என்று கேட்டுவிட்டு சென்றுகொண்டிருந்தாள்.
உமாநாத்திற்கு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ, அமானுஷ்ய எண்ணங்களோ, பயமோ ஏற்படவில்லை. எல்லாமே புதிர்மயம்தான் என்று நினைத்துக்கொண்டார்.
விருப்பம்
எனக்கு அந்த நடிகையிடமிருந்து போன் வந்தது. அடுத்த நாளே விமானத்தில் கிளம்பி வருமாறு தெரிவித்து, பணமும் என் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியிருந்தாள். அந்த நடிகையிடமிருந்து நறுமணம் வரும். அது என்ன வகையான வாசனைத் திரவியம் என்று தெரியாது. அந்த நறுமணம் மயக்க உணர்வைத் தரும்.
நான் ஓட்டலை அடைந்து அறைக்கும் சென்றுவிட்டேன். என்னைச் சந்திக்க வந்துகொண்டிருப்பதாக நடிகை தெரிவித்தாள். நான் அவளைச் சந்திக்க என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.
நடிகை வந்துவிட்டாள். களைத்திருந்தாள். சோபாவில் உட்கார்ந்தாள். “பிரபலமானால் பெரிய தொல்லை. எங்கேயும் போகமுடியாது. கூட்டம் சேர்ந்திரும். ஓட்டல் வாசல்லேயிருந்து இங்கே வர்ர வரைக்கும் மூணு இடத்திலே போட்டோவுக்காக நிக்க வேண்டியதாச்சு.”
நடிகை என்னுடன் படித்தவள். அப்போது சினிமாவிற்கு என்னுடன் வந்திருக்கிறாள். முதலிலேயே சொல்லிவிட்டாள். “உன் மேல் எனக்கு காதல் கிடையாது. மத்த பசங்களுக்கு பயம் காட்றதுக்காக நான் போற இடத்துக்கு என் கூட வரணும்.”
“என்னைப் பாத்தா பயந்துருவாங்களா” என்றேன்.
“நீ பாத்தா முரடா இருக்கே. எனக்கு ஏற்கனவே ஒரு ஆள் இருக்குன்னு நினைப்பாங்க. அது போதும். தொல்லை குறையும்” என்றாள்.
சினிமா தியேட்டரில் உட்கார்ந்திருந்தபோது பக்கத்து சீட்டில் இருந்த கைப்பிடியில் அவள் கை வைத்திருந்தாள். நான் நைசாக அவள் கை மீது கையை வைத்தேன். இன்னொரு கையினால் என் கை மீது அடித்தாள். நான் கையை எடுத்துக்கொண்டேன். உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பது ரொம்ப சிரமம். ஆனாலும் அவள் கூட இருக்கும் சுகத்திற்காக ஒரு காலத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
“என்ன விஷயம்” என்றேன். அவளிடமிருந்து வந்த நறுமணத்தில் நான் கிறங்கிக்கொண்டிருந்தேன். அவள் அழைத்த விஷயத்தைச் சொன்னாள்.
“நான் இதை ஏத்துக்கமாட்டேன். திருமணமாகி நல்ல மார்க்கெட் இருக்கிற, கணவனும் உள்ள, அழகான நடிகை நீ, உனக்கு எதுக்கு இந்த யோசனை” என்றேன் நான்.
“அந்த காலத்துலே நீ என்னை அடையணும்னு ஆசைப்பட்டியா இல்லையா. இப்ப உனக்குச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.”
“அப்ப நீ ஆசைப்பட்டியா.”
“ஆமா. ஆசைப்பட்டேன். ஆனா எனக்கு சினிமா நடிகையாகணுங்கிற லட்சியம் இருந்துச்சு. அதனால அதைப் பொருட்படுத்தலை. இப்ப எனக்குக் குழந்தை வேணும்னு ஆசை வந்திருக்கு; உன் மூலமா.”
“அது சாத்தியமா. நீ கல்யாணம் ஆனவ.”
“எனக்குக் கருப்பையிலே உன் இந்திரியத்தை எப்படி காப்பாத்தறதுன்னு தெரியும். கருப்பையிலே கரு ஆகலைன்னா திரும்பவும் உன்னைக் கூப்பிடுவேன்.”
“நான் பொறியிலே மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு.”
“பொறியிலே இல்லை. என் பிடியிலே. நீ மாட்டேன்னு சொல்லாதே. உனக்கு மூடு வர்றதுக்கு என்ன செய்யணும்.”
“சினிமாவில் நீ நடித்த காதல் காட்சிகளில் ஒன்றை எனக்கு செல்லில் காட்டு” என்றேன்.
அவள் காட்டினாள். கதாநாயகன் அவளைத் தடவினான், உதட்டை வைத்து முகத்தில் உரசினான். கட்டிப்பிடித்தான். உதட்டில் கைவிரலால் தட்டினான்.
செல் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவள் அவனை இறுக்கி முத்தமிட்டாள். அவன் அவளைக் கைகளால் தூக்கி படுக்கையில் கிடத்தினான். நறுமணம் கிறக்கியது. இப்படித்தான் பிரானேஷ் பிறந்தான். பின்னாளில் உலகம் புகழும் கிரிக்கெட் வீரனானான். அவனுக்கு இந்திய அரசின் உயரிய விருது கிடைத்தது. நானும் நடிகையும் அவனைப்பற்றிப் பெருமைப்பட்டோம். அவனை அவள் இதிகாச வீரன் என்று சொல்லுவாள்.