சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 4

பறவை

ஈஸ்வரனுக்குக் காபி குடிக்க வேண்டும் போலிருந்தது. மருமகளும் பேரனும் ஏ.சி. அறையில் கதவைச் சாத்திக்கொண்டு இருக்கிறார்கள். வெளியில் வந்தால் சொல்லலாம். கதவைத் தட்ட முடியாது. அறைக்குள்ளே நடந்துகொண்டிருந்தார். அவருக்கு நிசப்தத்தில் இருக்க முடியாது. ரேடியோவில் ஏதோ பாட்டு சத்தக் குறைவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவருக்குக் காபி போடத் தெரியும். வீட்டில் மருமகள் இருக்கையில், கிச்சனுக்குள் நுழைந்து காபி போடுவதை அத்துமீறலாக அவள் கருதுவாள். மேலும் அது ஒரு சங்கடமான சூழ்நிலையாக இருக்கும்.

மருமகள் இருக்கும் அறையின் கதவு திறந்தது. அறையினுள் நடந்துகொண்டிருந்தவர் கதவு திறப்பதைப் பார்த்ததும் சேரில் உட்கார்ந்துவிட்டார். அறையிலிருந்து வெளியே வந்த மருமகள் அவர் சேரில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். காபி தம்பளரை மேசையில் வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள். ஈஸ்வரன் காபியை எடுத்துக் குடித்தார்.

ஈஸ்வரனின் மனைவி இறந்து மூன்று மாத காலமாகிவிட்டது. இரண்டு மகன்கள். ஒரு மகன் ஹைதராபாத்தில் இருக்கிறான். இன்னொரு மகன் கோவையில் இருக்கிறான். கோவையில் இருக்கும் மகனின் வீட்டில்தான் ஈஸ்வரன் இருக்கிறார். எத்தனை தடவைதான் தினசரி பேப்பர்களைப் படிப்பது. ஓர் ஆங்கிலப் பத்திரிகை. ஒரு தமிழ் பத்திரிகை. ஈஸி சேரில் சாய்ந்து ஆங்கில பேப்பரின் இண்டு இடுக்கெல்லாம் படிப்பார். தெரியாத வார்த்தைகளுக்கு அகராதியில் அர்த்தம் பார்ப்பார். ஜன்னல் வழியாகத் தெரியும் மரக்கிளைகளைப் பார்ப்பார். சலிப்படைந்ததும், அவர் அறையில் உள்ள டி.வி.யை ஆன் பண்ணுவார். பாட்டு சீனில் இருபது நபர்கள் குதித்து ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள். கதாநாயகியைச் சற்று நேரம் பார்ப்பார். பிறகு அணைத்துவிடுவார்.

ஹைதராபாத்தில் இருக்கும் மூத்த பையன் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துவிட்டு பிறகுதான் தெரிவித்தான். மனைவி உயிருடன் இருந்தபோது ஹைதராபாத்திற்குச் சென்று நான்கு நாட்கள் மனைவியுடன் தங்கியிருந்தார். அந்த மருமகளுக்குத் தமிழ் தெரியவில்லை. உருதும் தெலுங்கும் ஆங்கிலமும் பேசுகிறாள். அவளிடம் பேசிக்கொள்வது சிரமமாக இருந்தது. நல்ல பெண்ணாகத் தெரிந்தாள். இவர்களை மரியாதையுடன் நடத்தினாள். அவர்கள் வீடு இருக்கும் சாலை வாகனங்கள் போக்குவரத்தும் ஆட்கள் நடமாட்டமும் இரைச்சலும் உள்ளதாக இருந்தது. நான்கு நாட்கள் இருந்தது போதும் என்றும் திரும்பிவிட்டார்கள். மனைவி இறந்தபின், தன் குறைந்தபட்ச உடைமைகளுடன் கோவை வந்து இளைய மகனுடன் தங்கியிருக்கிறார்.

இளைய மகனின் வீட்டில் புழங்கும்போது ஏதேனும் தன்னையறியாமல் தவறு நடந்துவிடுமோ என்ற அச்சத்துடன் இருப்பார். ஒருதடவை சாப்பிட்ட தட்டை எடுத்துக் கிச்சனுக்குள் சிங்கில் போடச் சென்றபோது கை தவறி கீழே விழுந்துவிட்டது. கழிந்த உணவுப் பொருட்கள் சிதறிவிட்டன. சத்தம் கேட்டு மருமகள் வந்தாள். அவர் தேவையில்லாமல் பயந்துபோய், “நான் தொடச்சிடறேன்” என்று விளக்குமாறு, முறம், துணியைத் தேடினார். அவரை விலகச் சொல்லிவிட்டு மருமகள் அந்த வேலையைச் செய்வாள் என்று நினைத்தார். ஆனால் அவள் சுத்தம் செய்வதற்கான பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு டைனிங் டேபிள் சேரில் உட்கார்ந்துகொண்டாள். ஈஸ்வரனுக்கு இந்த வேலையெல்லாம் பழக்கமில்லை. “நான் தொடச்சிடறேன்” என்று சொன்னது தப்பு என்று உணர்ந்தார். எப்படியோ அந்த வேலையைச் செய்துவிட்டு அறைக்கு வந்து கை கழுவினார். மருமகள் எழுந்து வந்து அந்த இடத்தை மாப் பண்ணினாள்.

அவர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துப் பிரித்தார். கண்கள் பத்திரிகையின் மீது இருந்தன. கவனம் செல்லவில்லை. சற்று நேரம் அவ்வாறே இருந்தார். இங்கும் இல்லாமல் வேறெங்கு இருப்பது; வேறு வழியில்லையே என்று யோசித்தார். முதியோர் இல்லம் சரிவராது என்று ஏற்கெனவே சில இல்லங்களை மகன்களுக்குத் தெரியாமல் பார்த்து, அவை மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்தார். பெரும் மாதாந்திரத் தொகைக்குச் சில வசதியான இல்லங்கள் கிடைக்கலாம். இங்கேயே இருந்து அல்லல்படுவதுதான் விதிக்கப்பட்டது என்று நினைத்தார்.

மனைவி சந்திராவை நினைத்துக்கொண்டார். நாற்பது ஆண்டு காலமாகக் கூட இருந்தாள். முதல் சில ஆண்டுகள் தவிர்த்து அவளை அவர் திட்டிக்கொண்டேதான் இருந்தார். அவளுக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தான் கொடுக்கவில்லை என்று நினைத்தார். அவருக்கு வருத்தம் ஏற்பட்டது. ஜன்னல் வழியாகத் தெரிந்த மரக்கிளையில் இரண்டு பறவைகள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். என்ன பறவைகள் என்று தெரியவில்லை. பறவைகள் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. அவர் பறவையாக மாறி இன்னொரு கிளையில் அமர்ந்தார். அந்தப் பறவைகள் இந்தப் பறவையைக் கண்டதும் பறந்து மறைந்துவிட்டன. அந்தக் கிளையில் அவர் பறவையாகவே உட்கார்ந்திருந்தார்.

***

என் வாசகி

எனக்கு ஒரு பெண்ணிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசினேன். என்னுடைய வாசகி என்றாள். இப்படி ஒரு போன் வருவது என் எழுத்தாள வாழ்வில் இதுதான் முதல் தடவை. என்னைப் பார்க்க வேண்டும் என்றாள். நான் அடுத்த நாள் மாலை 4.00 மணிக்கு என் அலுவலகத்திற்கு வரச் சொன்னேன். எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. என்னைப் பார்ப்பதற்கு வாசகியா. வாசகர்களே வருவது இல்லை என்ற நிலையில் இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்தநாள் எனக்குப் பரபரப்பாக இருந்தது. என் மேஜையையும் அறையையும் ஒழுங்கு செய்தேன். ஒருவேளை வயதான பெண்ணாக இருப்பாளோ. போனில் பேசிய கொஞ்ச நேரத்தில் வயதைக் கேட்கமுடியுமா. சரி. பொறுத்திருந்து பார்ப்போம். பருமனான, வயதான, முகத்தோற்றம் சரியில்லாத ஒரு பெண் வருவாள் என்று தோன்றியது. அவள் எப்படியிருந்தாலும் என் வாசகிதான். என் ஆண் தன்மை அவள் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்பியது. பியூனிடம் சொல்லி ஏற்கெனவே பிளாஸ்கில் காபியும் பிஸ்கட்டும் வாங்கி வைத்திருந்தேன். மணி 4 ஆயிற்று. வரவில்லை. நான் இருக்கும் கண்ணாடி அறையிலிருந்து ஹாலின் வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வாசலில் கல்யாணி வருவது தெரிந்தது. இந்த நேரம் பார்த்து இவள் வருகிறாள். இரண்டு மாதத்தில் பணிஓய்வு பெற இருக்கிறாள். குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. அது சம்பந்தமாக வருகிறாள். என் கண்ணாடிக் கதவைத் திறந்தாள். என் முன் நின்றுகொண்டே பேசினாள். உட்காரச் சொன்னால் ஒரேயடியாக உட்கார்ந்துவிடுவாள். துறை அவளை எப்படிப் பழிவாங்குகிறது என்று சொல்ல ஆரம்பிப்பாள். அது பல வருடக் கதையாக இருக்கும். அவளுக்கு நல்லது நடக்கும் என்றும் கவலைப்படாமல் இருக்குமாறும் கூறி அவளை அனுப்பி வைத்தேன். அந்த வாசகியை ஞாயிறு அன்று வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

ஹாலின் வாசலில் ஒரு பெண் தெரிந்தாள். அங்கிருக்கும் ஊழியரிடம் விசாரிப்பதைப் பார்த்தேன். பூயூனைக் கூப்பிட்டு அனுப்பி அவளை உள்ளே வரச்சொன்னேன். அவள் வந்தாள். பார்ப்பதற்கு பரவாயில்லாமல் இருந்தாள். அவள் என் பெயரைச் சொல்லி அவர்தானா என்று கேட்டாள். நான் அவளை அமரச் சொன்னேன்.

“ஸார் நீங்க எழுதற கதைகளில் எல்லாம் ஒரு மர்மம் இருக்கு ஸார். இதுதான் முடிவுன்னு சொல்ல முடியலே. அதுதான் எனக்குப் பிடிச்சுருக்கு” என்றாள்.

“நீங்கள் என்ன செஞ்சுக்கிட்டிருக்கிங்க” என்றேன்.

“நான் சம்பந்தர் கல்லூரியில் சைக்காலஜி பேராசிரியராக டெம்பரவரியாக வேலை பார்க்கிறேன்” என்றாள்.

அவள் பேசினாள். “மனம் என்பது க்ளீன் ஷீட் இல்லை. குழப்பமானது. இந்தக் குழப்பத்தைச் சுமந்துகொண்டே மனுஷங்க அலைய வேண்டியிருக்கு. சிக்கலான நூல்கண்டு போல குழப்பம்.”

ஆமாம். மனுஷங்களுக்கு அது பெரிய துயரம்தான். சுமந்துகொண்டிருக்கும் குழப்பத்தை வைத்துக்கொண்டே பேச வேண்டியிருக்கு. அதனால்தான் ரொம்பப் பேராலே தெளிவாவே எதையும் சொல்ல முடியாது. சிலர்னாலேதான் விஷயங்களைத் தெளிவா கம்யூனிகேட் பண்ண முடியுது” என்றேன்.

பிறகு, நான் பேச்சை மாற்றினேன். “உங்க கணவர் என்ன செய்றார்.”

“எனக்குக் கல்யாணம் ஆகலை ஸார். நான் ஆஞ்சநேய பக்தை.”

“ஆஞ்சநேய பக்தையா.”

“ஆமாம் ஸார். ஆஞ்சநேயரோடு நான் பேசமுடியும். அவரும் என்னோடு பேசுவார். பிராய்டு, ஹேவ்லாக் எல்லிஸ், எரிக் பாம், யுங் தியரிகளைப் பற்றி ஆஞ்சநேயரிடம் பேசுவேன். ஆஞ்சநேயர் நல்ல கருத்துக்கள் சொல்வார். எனக்கு அது ரொம்ப உபயோகமா இருக்கும். என் ப்ரெண்ட் ஒருத்திக்குக் கல்யாணமாகி, புருஷன் டார்ச்சர் தாங்காம பத்து நாட்களிலே தூக்குப் போட்டுச் செத்துப்போயிட்டா. அதிலிருந்து நான் தீவிர ஆஞ்சநேய பக்தையாகிட்டேன். முதல்லேயே பக்தை. இப்ப தீவிர பக்தை ஸார்.”

“என்னை ஏன் பாக்கணும்னு நெனச்சிங்க.”

“உங்க சிறுகதைத் தொகுப்பு ‘காணாமல் போனவர்கள்’ படித்தேன் ஸார். அக்கதைகளில் உள்ள மர்மங்கள் எனக்குப் பிடிச்சிருந்தது ஸார். நான் ஆஞ்சநேயர்ட்டே பேசறப்ப உங்கக் கதைகள் பற்றியும் மர்மங்கள் பற்றியும் சொன்னேன். அதற்கு ஆஞ்சநேயர், ‘அந்த எழுத்தாளரைச் சந்திச்சு திகிலான கதை, துப்பறியும் கதை எழுதச் சொல்லு. அவர் தமிழ்நாட்டில் பிரபலமாகிவிடுவார்’ என்று சொன்னார். அந்த விஷயத்தை உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்” என்றாள்.

எனக்குத் தலை சுற்றுவது மாதிரி இருந்தது. மனக்குழப்பம் கூடியது. பியூன் பிளாஸ்கில் இருந்த காபியை டம்ளரில் ஊற்ற வந்தான். நான் அவனிடம், “வேண்டாம்” என்று சைகை காட்டினேன். பிறகு எழுந்து நின்று அந்தப் பெண்ணிடம், “உங்க ஆஞ்சநேயர் சொன்ன மாதிரியே திகில் கதை, துப்பறியும் கதை எழுதறேன்” என்றேன். அந்தப் பெண் எழுந்து நின்று என்னை வணங்கி வெளியேறினாள்.

நான் பியூனைக் கூப்பிட்டு காபி கொடுக்குமாறு கூறினேன். காபியைக் குடித்தேன். ‘ஓர் எழுத்தாளனுக்கு இதெல்லாம் சகஜம்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *