அரா கவிதைகள்

 

1.

குருதியில் கிளறிய எச்சில் துளி ஓட்டத்தில்

எகிறிவரும் கிளறல் மொழியில்

உடல் எக்கிக் குதித்து  தாவுகிறது

 

தாவலின் ஒவ்வொரு அளவையும்

கோடு கிழித்து கணக்கிடுகின்றனர்

உள்ளுறுப்புகள் முழுக்க 

எச்சிலின் புளிப்பு வாசனை 

பூகோளமிட்டு உருள

குதிக்கும் பந்துகளாகி

உடலின் அங்கங்கள் சிதறுகிறது

 

எங்கிருந்தோ வந்த குழந்தைகள் கூறிய

வண்ணங்களின் பெயர்களை 

தமிழிலும் ஆங்கிலத்திலும்

சரியும் தவறுமாக சொல்லி

எடுத்துச் செல்கின்றனர்

பந்துகளை இழுத்து உடலைக் கூட்டும் சக்தியற்று 

கவனம் கழன்று சூட்டில் கிடக்கின்றேன்

கரு விழிகள் இருக்கும் பந்துகளை

ஏதேச்சையாகப் பிடுங்கியவள்

கட்டிப்பிடிக்கும் போது 

பார்வைகள் உடைகிறது 

*****

 

2.

மூடப்பட்ட கதவுக்கு முன்னே நீயும் 

பின்னே நானும் யோசித்துக்கொண்டிருக்கிறோம் 

அல்லது யோசிக்கும் பாவனையைப் பூசி 

நின்றவாறும் அமர்ந்தவாறும் இருக்கிறோம்

 

கதவு திறக்கப்பட்ட பின் 

உன்னைப் போல் நான் காத்திருக்கப் போவதில்லை 

என்னைப் போல் யோசித்துக் கொண்டு 

நீ உட்காரப் போவதில்லை 

இதெல்லாம் இரவில் நிகழ்ந்த தூக்கத்தின் 

மிச்ச மீதி எச்சங்களாக 

ஒவ்வொரு நாளையும் கண்ணி போட்டு தொடங்குகிறது 

நுரையோடு துப்பப்படும் எச்சிலும் 

சிவப்பு மஞ்சள் கறைகள் கலந்து ஒழுகும் எச்சிலுமென 

ஒவ்வொரு கோப்பையும் தனக்கு நிறம் பூசி முகம் கழுவுகின்றன 

****

 

பச்சை உடலின் ரப்பர் வாலில் 

துருத்திக் கொண்டிருக்கும் 

துளிர் விரல்களின் விசைக்குள் ஆடும் 

மூலக்கூறுகளின் சாய்தலுக்குள்

தொங்கும் முட்டைகளின் வாசனையில்

கைகள் திறக்கிறது 

திறந்த கைகளின் ரேகையற்ற மச்சங்களின் 

பொன்னிற வெளிச்சத்தில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் தாளில் எழுதுவதற்கு 

விரல்கள் ஆயத்தமாகும் காலத்தில் 

ஒலிகளின் தொந்தரவை ஓவியமாக்கி 

கருமை சுரக்கும் பொழுதுகளின்

மத்தியான சாயலின் அம்புகள் பறக்கின்றன.

 

*******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *