பாரதி நிவேதன் கவிதைகள்

அலகில் சிக்காத கடல்

1.

நீங்கள் என்னை அந்த தெருமுனையில் பார்க்கலாம்

இறைவனின் கள்ளாகவும் ஊமைச்சாராயமாகவும்

தேசப்பிதா பவனி வரும் காலத்தில்

உள்ளூர அமைதியும் வெளியே கலவரமும் தொடுத்த என்னைப் போன்ற சிறுபான்மை கடவுளர்களை உங்களால் சகித்துக் கொள்ள எந்தக் கோடை மழையும் உதவப்போவதில்லை ஆனால் மாலுமிகள் அற்ற கப்பல்கள் மழைநீர் வடியும் முன் கடந்துவிடுகின்றன

நேற்றுதான் பெய்ததுபோல் இருக்கிறது அந்த மழை

இந்த வண்ணத்து பூச்சிகளால்

இந்த மரங்கொத்தி கதவில்லாத வீட்டைக் தட்டிக் கொண்டே இருக்கிறது ஒருபோதும் நான் திரும்பப் போவதில்லை

2.

என் வீட்டிற்கு யாழினி வந்திருந்தாள்

ஒரு செல்லிடைப்பேசியால் தொலைந்து போய் விட்டாள் இறைவனின் கள் இப்படித்தானாம்

கைமீறி போய்விட்டதால்

கல்லுக்குள் தரித்துக் கொண்டது தேரை

எனக்குள்ளேயே கரை காணாமல் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறேன்

எங்கிருந்து பிரிவது

பிறகு எதைக்கொண்டு சுழல்வது

அழித்தொழிக்கப்பட்ட பொம்மைகளிலிருந்து

உயிரைப் பிடித்துக் கொண்டு வடிவெடுக்கத்தான் வேண்டும்

மழைக்கு முளைத்த நதியில்

எப்படியும் மிதந்து

சேர்ந்துவிட வேண்டும்

கூழாங்கல்லை

3.

மனதின் தாழ்வாரத்து வேரில்

பசை கொண்டிருக்கிறது காலம்

அதன் முதல் துளியில் பிறந்தது பிரபஞ்சம்

பிரபஞ்சம் வளரும்போது

மனம் போயிற்று

ஆசிர்வதிக்கப்பட்ட நேசமொன்றில்தான் கடலில் கடைந்தெடுத்த நஞ்சு

தொண்டைக் குழியைக் கவ்வப்பார்த்து  ஒயிலாடுகிறது

4.

உள்ளே சிரிக்கும் என்னை முதலில்

கண்ணாடியிலிருந்து

வெளியேற்றச் செய்யும்

அந்தப் பறவையின்

நிறம்

இளமஞ்சளில் இருப்பது தற்செயலானது அல்ல

அதற்குள் இங்கு ஏதேதோ நடந்துவிட்டது

எவ்வளவு நீரூற்றியும் பூக்கவில்லை

இனி ஆண்மைக்காக ஒரு ஆட்டம்

அதைத் தொலைத்தழுக ஒரு ஆட்டம்

பூக்கலாம்

5.

ஒருநாள்

சில சொட்டுக் கண்ணீரில்

பல நாட்களாக உருமாற்றம் அடைந்து மிதக்கிறது

சுற்றிலும் நொய்ந்த உணவுப் பொதிகள்

வேறுகாலத்தைக் காட்டும்

மிச்சமிச்ச மதுக்குப்பிகள்

சூடாறாத புகை வளையங்கள்

கட்டிலில் ஆணியறையப்பட்ட

அவன் விழிப்பில் வனம்

கண்மூடலில் ஆழ்கடல்

சருகுகளின் மீது நெளிந்து

மரஞ்செடி கொடிகளில் வளைந்து

மூச்சை கக்கியபடி

கட்டிலின் கால்மேட்டில் காலப்பாம்பு

பெருங்கோணத்தைத் துண்டித்து

சாய்கோணத்தில் விசைப்பாகி

அவன் தலைமாட்டில்

வந்தமர்ந்திருக்கிறது வல்லூறு

கனல் கக்கும் மூச்சொன்றிற்கு

இருமுறை றெக்கைகள்

பட படக்கின்றன

வனமும் ஆழ்கடலும் சந்திக்கும்போது

அவன் பிரிவான் என்பது

திருச்சொற்களின் ஏழாம் அதிகாரம்

ஆறாம் வசனத்தில் எழுதப்பட்டதுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *