ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

1

நிர்வாணம்

நீ கொண்டாடும் பட்டாம்பூச்சிகள்
முன்னர்
ஒரு மில்லியன் நிர்வாணத்தை
சுமந்திருந்தது.
உன் மௌனத்துக்கு முன்
நீ சுமந்த சொற்களின் வடிவத்தைப் போல.
எனக்கு நன்றாக தெரியும்
பளபளப்பான புழுக்களின் ஆடையில்
நீ அமேசன் பக்கமாக நகர்ந்தாய்
மரங்களைப் போலான பச்சை இரவுகளில்
உன் புணர்வு நடந்தேறும்
விலங்குகளின் சப்தங்களை ப்ரியம் கொள்ளாத நீ
வனச் சில்லூரிகளின் சப்தத்தை இசையாய் கொண்டாடுவதில்
உற்சாகம் அருந்துவாய்.
எனக்குத் தெரியும்
மலைப் பாம்பின் பசியை ஒத்தது
உன் தாபம்.
நீ சொல்
பட்டாம்பூச்சியின் முன்னயே நிர்வாணத்தை
உன் சொற்களில் வைத்திருப்பது பற்றி.
உன் ப்ரியத்தை சொல்லி
அந்த மாய குகைக்குள்
என்னை தள்ளிவிட்டுச் சென்றிடாதே.
அதற்காக நீ
மௌனம் கொள்வதும்
உன் அகச் சொற்களை திரையிட்டுருப்பதும்
நிர்வாணத்தை மூடி மறைப்பதற்காகவேயென்றால்
என்னை மன்னித்துவிடு
நான் நிர்வாணம் பூண்டுகிறேன்
பட்டாம்பூச்சிகள் பார்த்திருக்க.

2
அரூபச் சொற்கள்

உங்கள் சுய அன்பில்
உங்களை நுகர வேண்டாம்.
கண்ணாடி அகத்தை காட்டிவிடுவதில்லை.
உங்களிலிருந்து
இன்னொன்றை பிரதி செய்யும்
தப்பை செய்யாமலிருந்ததுமில்லை கனவு.
ஞாபகங்களை ப்ரியம் கொள்ளும்
மனசுக்குத் தெரியும்
நூறாயிரம் கணங்களை தொலைத்தது பற்றி.
இப்போது ஒவ்வொரு கணங்களும்
ஒவ்வொரு ஞாபகம் தான் என,
எழுதிக் கொள்கிறேன்
மறந்து போன ஞாபகங்கள் சில
கவிதையில் அரூபச் சொற்களாய்
வந்தமர்ந்து முடித்து வைக்கின்றன.
.
3
மதுசார நெடி

நேசிப்பை அதிகம் வைத்திருந்தேன்
விரும்பி வளர்க்க எண்ணாத
அந்த ஆண் பூனையைப் போல.
ப்ரியத்தை எனக்காய் நீ வைத்திருந்தாய்
முற்றத்தில் கட்டப் பட்டிருக்கும்
நேசிக்கப் படாத நாய் போல.
இதிலொன்றும், மாயையெதுவுமில்லை.
வித்தைகளும் மெய்யறிவுடையதுதானே.
மீதமானவைகளை அருந்துவது சாத்தான்கள்.
நாம் தான் மீதம் வைக்காமல்
அருந்தப்பழகியிருக்கிறோமே,
அது கய்யாமின் உயர்தர மதுவானாலும் சரி.
ரூமியின் பாடல் வரிகளில்
ஒரு சூஃபி இசையை கேட்க ப்ரியம்
கொண்டு பின்னால் வருகிறேன்,
நீ சப்பித்துப்பிய ஆட்டு மந்தைகளின்
எழும்புகளில் மொய்த்துக்கிடக்கும் ஈக்களைப் போல.
இன்னும்..இன்னும் பலர்
அங்கே அமர்ந்திருக்கிறார்கள்,
பாரசீகம் பேசிக்கொண்டு.
நீ மதுசார நெடி வீச
எழுந்து கொள்கிறாய்,
தூரத்தில் கேட்கிறது ஒரு றப்பான் இசை.

4

சிகப்பு வெளிச்சப் பெண்

நான் இருட்டை ப்ரியம் கொண்டவள்
கறுப்பு நிறத்துடையவள்
உருகும் மெழுகுவர்த்தியின் நிறத்தில் ஆடை அணிந்தவள்
நீங்கள் கூச்சலிட நான் என்
பெருத்த கொங்கைகளை வைத்திருப்பவள்.
எனக்கும் உங்களைப் போல
ஒரு விடுமுறை நாளிலாவது
கடற்கரைக்கு சென்று
மகிழ ஆசையுடையவள்தான்.
என் அலங்காரத்தை கண்டு
நீங்கள் சிரித்து விடுவீர்கள்,என்பதாலயே
சிகப்பு வெளிச்சத்தில் ஒதுங்கி விடுகிறேன்.
எனை நெருங்குகின்றவர்களே
இயற்கையான இச்சையுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள்
எதற்கு மேற்கத்திய குதிரைகளை
மேய விடுகிறீர்கள்.
என் தொண்டைக்குழி வாடிப் போய் கிடக்கிறது
மதுசார நெடியுடன் நெருங்காதீர்
பசியில் காய்ந்து கிடக்கும் வயிறு
பிதற்றுகிறது.
கடவாயில் வழியும் வீணியால்
அசிங்கம் பண்ணாதீர்கள்
நாகரீகமாக உங்களின் பூனை நகங்களை நெஞ்சில் பதியுங்கள்
எதற்கு விலங்குகளைப் போல
அசிங்கம் பண்ணுகின்றீர்
நீண்டு விரிந்த என் கூந்தலில்
பூவச்சூட வேண்டாம்
சப்பாத்தி மா போல பிசைந்து தள்ளாதீர்.
ஒட்டி கறுத்துக்கிடக்கும் தொப்புள்குழியில் சிகரட் துகள்களையிட்டு நிரம்பாதீர்.
உயர்தர மதுவின் நெடியைப்போல
புணர்வின் வார்த்தைகளை
ஒப்புவிக்காமலாவது
புணர்ந்து செல்லுங்கள்.
இறுதியாக
நான் ஒரு பெண்ணென்ற உங்களது
உயர்ந்த எண்ணத்தை
எனது படுக்கையிலாவது
விட்டுச்செல்லுங்கள்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *