அலுப்பின் கவிதைகள்

அதே நிறுத்தத்தில்
அதே எண்ணுள்ள பேருந்துக்காக
காத்திருக்கிறேன்
அதே அலுவலகத்தில்
அதே வேலைகள் தொடர்கின்றன
அதே மனைவி… அதே பிள்ளைகள்
எப்போதும் கிழக்கில்
அதே சூரியன்
இரவெப்போதும் அதே தூக்கம்
அதே வாழ்க்கை என்று சலித்துக்கொள்கையில்…
‘அதே வசனம்’ என்றொரு அசரீரி
‘உனக்கு முன் 1845780 00004563687…. பேர்
அலுத்துக்கொண்டார்கள்’ என
தொடர்ந்து சொன்னது
அவர்களுக்கு என்ன ஆனதென்றேன்
ஆர்வம்தாளாமல்!
காலம் தீரும்வரை
அலுத்திருந்துவிட்டு
செத்துப்போனார்கள் என்றது அதே குரலில்!

2.
ஞாயிற்றுக்கிழமையைப் பூட்டியாகிவிட்டது
விரைவில்
மற்ற தினங்களையும் பூட்டிய செய்தி வரலாம்
ஜன்னல், பால்கனியிலிருந்து
வாரத்தின் எந்த நாட்களையும் பார்ப்பதற்குத்
இன்னும் தடைவிதிக்கவில்லை
பாலோ, தயிரோ, வெண்டையோ, அவரையோ
வாங்க கொஞ்சம் அவகாசம் அளிக்கப்படும்
பின் வீட்டுக்குள்ளே இருந்தபடி
அரசுடன் ஒத்துழைக்கலாம்…
கணினியின் துணையுடன் வேலைகளைத் தொடரலாம்
பாடங்களைப் படிக்கலாம்…
பொழுதுகளைப் போக்கலாம்…
பாத்திரம் கழுவுபவளுக்கு
இன்னும் ஆன்லைனில் வேலையை முடிக்கும்
தொழில்நுட்பம் வசப்படவில்லை
எந்த தொழிலாளியும்
பாதியில் நிற்கும் கட்டடத்தை
வீட்டிலிருந்தே கட்டியெழுப்பிவிடமுடியாது
ஒரு வைரஸ்
உலகத்தையே சிறையில் வைத்துப் பூட்டி கெக்கலிக்கிறது
புஜங்களில் ஏற்றப்பட்ட தடுப்பூசி
என்னால் அவ்வளவுதான் முடியுமென தலைகவிழ்ந்துகொள்கிறது
ஊரடங்கிலும் இருபத்திநாலு மணிநேரம்
என்பதுதான் கொஞ்சம் அசெளகரியமாய் இருக்கிறது