க. சுப்பிரமணியன் கவிதைகள்

னக்காகவே விடிந்தேன்

ஒவ்வொரு பூவின்

காதோரமும் சொல்லிப் போகிறது பகல்

வேடிக்கையைத் தெரிந்துகொண்ட மலர்

தேனீ

வண்டு,

வண்ணத்துப்பூச்சி

எறும்பென

அணுகும் ஒவ்வொன்றிடமும்

உனக்காகவே மலர்ந்தேனெனச்

சொல்லிச் சிரிக்கிறது!

 

முதல் சந்திப்பெனும்

நடுக்கத்தில்

முத்துமுத்தாய்

வியர்த்து நிற்கிறது மலர்!

அடியடியாய் எடுத்துவைத்தணுகி

அன்பின் கதகதப்புறையும் விரல்களால்

தீண்டி வியர்வையகற்றும் பகல்

அத்தனை இயல்பாய்

கொய்தெடுத்து நீக்குகிறது

மலரின் நடுக்கத்தை!

ந்தியில்

உதிர்ந்து ஒதுங்குகின்றன

ஒரு பகலும் மலரும்…

சில கணங்களுக்குப்பின்

மலர் மட்டுமே எஞ்ச,

அதன் வேரடியில்

அங்குமிங்குமாய்

அலைபாய்ந்துகொண்டிருக்கும்

தென்றலை

சந்தேகமாய்ப் பார்க்கிறது மலர்!

முகம்நொடித்து

விலகும் தென்றல்

உதிர்ந்த மலரையே

நகர்த்தத் தெம்பில்லாத நானா

ஒரு பகலைத் தூக்கிப் போயிருப்பேனென

முணுமுணுக்கிறது!

 

திர்ந்த பகல்

புத்தெழிலுடன் திரும்பியிருக்கிறது

காம்புக்கு…

வேரடிச் சந்திப்பின்போது

ரகசியத்தைக்

கேட்காமல் விட்டதையெண்ணி

இன்னுமின்னுமென

வாடியபடியே செல்கிறது மலர்!

 

லருக்கு

ஒரேயொரு பகல்தான் ஸ்நேகிதம்!

பகலுக்கோ

கோடி கோடி மலர்கள் பரிச்சயம்!

 

அதிகாலையில் பிடிவாதமாய்

முகம் சுண்டிநிற்கிறது மலரொன்று

“உலகின் மறுமுனையிலிருந்து

உன்னைக் காணத்தான்

ஓடோடிவந்திருக்கிறேன் நான்…”

மண்டியிட்ட புலர்காலையிடம்,

சுருளவிழும் பாம்பெனத்

தளர்கிறது மலரின் பிடிவாதம்!

 

சிந்து பெருகும்

தன் பிரகாசத்தை

மலரின் மீது அள்ளிச் சூடுகிறது பகல்

பதிலுக்கு

தன் நறுமணத்தை

பகலின் மேனியங்கும்

அள்ளி அள்ளிப் பூசுகிறது மலர்!

 

அத்தனை பிரியத்தை

பொழிந்துவிட்டு

ஓடியொளிந்துகொள்கிறது பகல்…

கண்டுபிடித்துவிடலாமென்னும் வீறாப்பில்

காம்பிலிருந்து குதிக்கின்றன மலர்கள்!