க.சுப்பிரமணியன் கவிதைகள்

 

1.எப்படியும் விடிந்துவிடுகிறது!

நாம் எதையும் செய்யத் தேவையில்லை

வானத்தையோ பூமியையோ

இடம்மாற்றி வைத்து மெனக்கெடவேண்டியதில்லை

இருளை வாரியல்லவோ

சேவல்களிடம் கூவச்சொல்லி கெஞ்சவோ,

தேவையில்லை

அன்னாசிப்பழத்தைப் போல

இருளை சீவிச் சீவி எடுத்துதான்

விடியலைச் சுவைக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை

நட்சத்திரங்களைச் கூட்டிச்சேர்த்து

நீலவிரிப்பின்கீழ் மூடிமறைக்கவோ

கணுக்கணுவாய் வளரும் நிலவை

எப்படி மறைப்பதென திக்குமுக்காடவோ அவசியமில்லை

ஆந்தைகளின் தடுமாற்றத்தையோ

வண்டுகளின் கொண்டாட்டத்தையோ பற்றிய

கவலையின்றி…

மெல்ல…ஆனால் உறுதியாக அடியெடுத்துவைத்து

வருகைதந்துவிடுகிறது விடியல்!

ஒரு விடியலை அடைய உங்களுக்குத் தேவை

கொஞ்சம் பொறுமையும் காத்திருப்பும்…

விடியலுக்குமுன் முற்றுப்பெறாத நீளாயுளும் மட்டும்தான்!

2.இளஞ்சிவப்பு சேலையில்

கைகளை நெஞ்சோடு சேர்த்துக்கட்டி

பேருந்து நிறுத்தத்தில்

அத்தனை பவ்யமாக நிற்கிறாள்

பதின்பருவத்துப் பெண்…

யாருக்கு அவள் மரியாதை செலுத்துகிறாள்

கூட்டத்தில் அவளது ஆசிரியர் இருக்கிறாரோ…

தன்னடக்கத்துடன் மட்டுமே கற்றுக்கொள்ளவேண்டிய

உண்மை அவள்முன் நிற்கிறதோ…

ஒருவேளை எங்கும் நிறைந்த

கடவுளுக்கு தன் பணிவைத் தெரிவிக்கிறாளா…

விழிகளை அலையவிடுகிறேன்

அவளது அழகைத் தவிர வேறேதும் தட்டுப்படவில்லை

பேருந்து எப்போதோ தாண்டிவிட்டது

அந்த நிறுத்தத்தை…

நினைவில் தொடரும் அவள் எழிலின்முன்

இப்போது என் சித்தம் கைகட்டி நிற்கிறது!

3.அவருக்குப் பின்னால்

அவருக்குப் பின்னால்

உதிர்ந்துகிடப்பது அறுபத்தி மூன்றாண்டுகள்

குறிப்பாய் அதில் சில புதன்கிழமைகளை

விடாமல் சிலாகித்துக்கொண்டேயிருப்பார்

ஒரு புதன்கிழமையில்தான் அவர் வேலைக்குச் சேர்ந்தார்

இன்னொரு புதன்கிழமையில்

அவரின் அபிமான கவிஞரின் ஆட்டோகிராப் வாய்த்தது

அறியாத ஒருவனிடம் விலகிநிற்பதுபோல்

கல்யாணத்துக்குப் பின்னும்

இடைவெளி பேணிய மனைவி

வலிய நெருங்கிவந்ததும் ஒரு புதன்தான்

புதன்கிழமைகளின் சுபிட்சங்களை

ஆரங்களாய்க் கோர்த்து வாழ்ந்துகொண்டிருந்தார் மனிதர்

இன்னும் சில புதன்கிழமைகளின்

வருடங்கள் மட்டும் நெடுநாட்களாய்

அவரது ஞாபகத்துடன்

தொட்டுப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறது

ஒரு நாற்காலியில் நம்மை அமர்த்திவிட்டு

தன் புதன்கிழமைகளின் குவியலில்

அவர் தொலைந்துபோகையில்

திரும்ப வரப்போவது அவரா

அவரது புதன்கிழமைகளில் ஒன்றா என

நாம் பயந்துவிடுகிறோம் என்பதை

அவருக்கு எப்படிச்சொல்வது?

ReplyForward

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *