க.சுப்பிரமணியன் கவிதைகள்

பந்தய மைதானம் போலிருக்கிறது

அலுவலக நேரத்துச் சாலை

அனைத்தும் ஒன்றையொன்று முந்துகின்றன

பேருந்தை தண்ணீர் லாரி

நான்கு சக்கர வாகனங்கள் மூன்று சக்கரத்தை

மூன்று சக்கர வாகனங்கள் ஈருளிகளை

சமயங்களில் அப்படியே தலைகீழாகவும்…

ஈருளிகள் மிதிவண்டிகளுக்கு சவால்விட

மிதிவண்டிக்காரர்கள் நடைபயில்பவரை முந்துகிறார்கள்

எல்லோரும் முந்திச் செல்ல…

தளர் நடையிடுகிறார் வயோதிகர்

பூமி மெதுமெதுவாக பின்னுக்குத் தள்ளுகிறது

சாலையோர மரங்களை

வரிசைகட்டி நிற்கும் கடைகளை!

குப்பைத் தொட்டியருகே ஓய்வெடுக்கும் நாய்களை!

வயோதிகரின் முன்நெற்றியில்

சூரியன் முத்துகளை அடுக்குகிறது

பந்தயப் பரிசாக!

 

ஆயிரம் விழிகள்

வரம் கேட்கிறாய்!

முதலில் உன் இரண்டு கண்களால்

பார்த்ததைச் சொல்!

துயரங்களுக்கு நிறமிட்டு புழங்கப் பழகியிருக்கிறாள் ஸ்வர்ணா

இப்போதைய நிலவரப்படி அவளிடம்

இரண்டு மஞ்சள் துயரங்களும், ஏழு பச்சைத் துயரங்களும்

ஆறேழு நீலத் துயரங்களும்

ஒரயொரு இளஞ்சிவப்பு துயரமும் இருக்கிறது

நோயின் வாதைகளைச் சுமந்தவை மஞ்சள் துயரங்கள்

பச்சைகளோ அன்றாடத்தின் நெருக்குதல்களில் பூத்துதிர்பவை

நீலத் துயரங்கள் செய்துமுடிக்காத வேலைகளின்

கனங்களால் அழுத்துபவை

இளஞ்சிவப்போ காதலின் பொன்சுமை

பச்சைத் துயரங்களை அவள் கணக்கில் எடுப்பதில்லை

அதன்போக்கில் துளிர்க்கவும் உதிரவும் அனுமதித்துவிடுவாள்

மஞ்சளின் உதயம் அவள் கையிலில்லையென்றாலும்

பற்களைக் கடித்தாவது

அஸ்தமன மூலைக்கு தள்ளிச் சென்றுவிடுவாள்

நீலத்துயரங்களையும் அவள் நேசிப்பதில்லைதான்

பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாமென விடாமல்

மெட்டுப் போட்டுக்கொண்டிருக்கும் குட்டிச்சாத்தானின் குரல்வளம்தான்

பலசமயம் அவளை ஏமாற்றிவிடுகிறது

விளக்கணைத்த பின்பான பொழுதுகளில்

தன்னைச் சுற்றி பட்டுப்புழுவின் கூட்டை

அவள் நெய்துகொள்வது மட்டும்

இளஞ்சிவப்பு துயரத்தின் இழைகளிலிருந்துதான்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *