மா. காளிதாஸ் கவிதைகள்

01.
உன் குரலை
எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
அது கரகரப்பானது.
கொஞ்சம் விம்மல்களும் சொல்லவொண்ணாத வார்த்தைகளும் உள்ளொடுங்கிய
உடைபடாத பூமரைப் போல
சதா மெல்லப்படக் கூடியது.
அன்பொழுக அழைக்கும் போது
புறங்கையில் வழியும் தேனைப் போல வெட்கம் பாராமல்
தன்னை ருசிக்கத் தருவது.
கத்திக்கும் கட்டைக்கும் நடுவே அகப்பட்ட கேரட்டைப் போலக்
கடிந்து கொள்ளும் போது
தன்னையே துண்டாக்கிக் கொள்வது.
சருகான மாலையிலிருந்து
பகுதி பகுதியாய் உதிரும் பூவைப் போல
வேதனையான பொழுதுகளில்
துன்பியல் ராகத்தைச் சொட்டுவது.
விசிலடித்துக் கொண்டும், உள்ளூர ஒழுங்கற்று நடனமாடிக் கொண்டும் அப்பாவியைப் போல
அரவமற்று அதிகம் பேசுவது
ஒப்பிடும் அவசியமற்ற, எளிதான
உன் குரல்நாணில்
நிரந்தரமாக யார் செருகியது
காலத் தக்கையை?


02.
தொழதொழ சட்டையைப் போல
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது
அவசர ஆத்திரத்தில் கொட்டியவை.
காலர் மட்டும் நைந்ததைத்
தூக்கிப் போட மனமில்லாத மாதிரி
உறுத்திக் கொண்டே இருக்கின்றன சில.
அவ்வளவு எளிதில்
கறை நீங்கிவிடுமென்பதற்கோ
ஒரு சொட்டில் பளிச்சிடும் என்பதற்கோ உத்தரவாதம் தராதவையே கொப்பளிக்கப்படுகிறது.
நவீனம் என்ற பெயரில்
மௌனமாகக் கடைவிரிக்கப்படுவதும் பழைய வகைமைகளே.
நெடுநாளாய் உடுத்தாததிலிருந்து
பொடிப்பொடியாய் உதிர்வது
வெறுப்பின் வீரியமாகவும் இருக்கலாம்.
சோப்புநீரில் அலசிப் பிழிந்த சட்டையிலிருந்து கறுப்பாக வழிகிறது
வீடு முழுக்க விரவிக் கிடந்த
கெட்ட வார்த்தைகள்.
வயற்காட்டுப் பொம்மையின் சட்டைப்பையில் மிச்சமிருந்த
ஆறுதல் வார்த்தைகளையும்
கொத்திப் போகிறது காலக் காகம்.