பாபுபிரித்விராஜ் கவிதைகள்

1.

கனத்த வடம் போல்

தோழிகளின்

தோள்களில் முறுக்கி

பிழியப்பட்ட சேலைகள்

ஊரை கடக்கயியலாமல்,

அசைந்தாடும் அழகு

நீளமாக உறைந்தபடி

நிலை கொள்கிறது

தேர்.

2.

தீர்த்தவாரி அன்றுதான்

தேடலின் ஒரு துளி

புனருத்தாரணமானது

அன்றிலிருந்து

அச்சந்திப்புகள்

தீராத தாகமாக

வந்து கொண்டிருக்கிறது

கூடியும் குறைந்தும்

உரையாடிக் கிடந்தன

யாரோ ஒருவரின்

தூரத்தை

தினம் தினம்

தொட்டு விட்டு வருவதாகவும்,

எனக்கான தொலைவை

எவரேனும்

அடையாளம் காண்பதாகவும்

கண்டடைந்த அத்தரிசனம்

சுழன்றோடியபடியே இருக்கிறது

மழை வீழ்ந்து

கிடந்தது

உடலெங்கும்

அலகு குத்தலாக,

அவரவர் வேண்டுதலில்

நிரம்பிய கருணை

கரை புரள்கின்றன..

3.

ஒளித்து வைத்த

என் பலகீனத்தை

வெளிச்சமாக்கும்

மேகநிழல்!

பறக்க முனையும்

முனைப்போடு

கிளைமுறிக்க

எத்தனிக்கும்

எத்தனையாயிரம்

நிழல்கள்!

4.

தண்ணீர் இல்லாமல்

வறண்ட பாறையாக

வர மறுக்கும்

அருவி வடிந்த மலை,

நினைவோடையில்

சமைந்து வடிவாகிறது.

எத்தனை முறை

கீழிறங்கியும்

வான் முட்டி

வளர்ந்தபடி

அம்மலை..

ஆவியாக்கத் திறனற்ற

கதிர் மறையும்படியல்லவோ

அக்கரும்பனித்துளி

காட்சியளிக்கிறது..

5.

மந்திரமும்

ஆசனமும்

தியானத்தின் ஒருங்கும்

விளைவில் ஒடுங்கிய

எச்செயலும்

அடையாளமற்று

அடையும் எதுவும்

மறுமொழி உரைக்காத

எப்பூதமும்

ஆழமாய் இறங்கும்

நிழல் போல்

பயணிக்கிறது.

அலைகளில் ஒதுங்க வரும்

கரிய நிழலென

வானிலிருந்து வருகிறதென்

பறவை.