போதி கவிதைகள்

1.
பறவைகளைப் பற்றி
எப்போதாவது நினைக்கிறேன்
ஏற்படுத்திக்கொண்ட சிக்கல்கள்
நிலுவையாய் உள்ள கோரிக்கைகள்
நீண்டு கொண்டே செல்லும் மாதத்தவணைகள்
இவற்றின் மத்தியில்
நீ ஓர் ஓரமாக வந்து போகிறாய்
பெருநகரம்
உன்னையும் என்னையும் அவர்களையும் இவர்களையும்
மார்போடணைத்துக் கொள்ளவே விரும்புகிறது
நடந்து செல்ல ஏராளம் உண்டு வீதிகள்
சுவாசிக்க மாசடைந்த காற்று என்றாலும்
தாராளமாய்
மலையாக குவிந்து கிடக்கின்றன
சமையலுக்கான காய்கறிகள் மற்றும் பண்டபாத்திரங்கள்
புதுக்கருக்கு குலையாத ஆடைகள்
வீதியெங்கும் காய்த்து தொங்குகிறது
மனம் வெறிச்சோடிய போதெல்லாம்
நகரப்பேருந்தின் கூட்ட நெரிசலில் முட்டிமோதி
எப்படியோ ஆறுதல் பெற்றுவிட முடிகிறது
சந்தர்ப்பம் அமைந்தால் மனப்புணர்ச்சியும்
உடனடி ஸ்கலிதமும்
பத்து ரூபாயில் அமையும் குறும்பயணத்தில்
ஒரு நகரத்தைக் கண்டு களிக்க முடியாமல்
நீண்டு கொண்டே இருக்கின்றன காரோடும் வீதிகள்
பார்த்துத் தீராத மனித முகங்கள்
ஒன்றைப் போல் ஒன்று அல்ல எனினும்
அத்தனைப் பேரும் அந்நியர்கள்
யாரும் யாருடனும் உறவாடத் தயாரில்லை
அருகே நெருங்குவது கூட அத்துமீறல்
தொட்டுப் பேசியோ
அணைத்துப் பிரிவதோ
அநேகம் பேர்களின் அன்றாடம் இல்லை
வெறுமனே கடந்து செல்லும் போதுகூட
அச்சமும் சந்தேகமும் உந்தித்தள்ள
சதா ஒற்றறியும் பாவனைகளை அணிந்து கொள்கிறோம்
ஓராயிரம் வழித்தடங்கள் புதிர்ப்பாதைகளைப்போல
விரிந்திருப்பினும்
ஆயுளுக்கும் சில வழிகளே
பயன்படுகின்றன
மனிதன் உண்டாக்கியவை
மனிதனுக்குரியவை
மனிதனை உத்தேசித்து எழுப்பப்பட்டவை
என நகரமெங்கும் மனித ஆக்கிரமிப்பு
பிளவுண்ட பெருஞ்சுவரின் விரிசலில்
முளைத்திருக்கும் ஆலமரத்தின் பசுந்தளிர்
புரியாமல் தன் இருப்பினை அசைத்துப்பார்க்கிறது
பகல் வற்றி உலர்ந்து போகும் என்று பதறி
வேகமாக படியத்தொடங்குகிறது இரவு
இரவில் சில இல்லாமல் ஆகின்றன
இரவில் சில பருவுடல் கொள்கின்றன.

2.
சமன் குலைவில் பிறந்தது
உனது வருத்தங்கள்
ஒன்றில் கிளைத்தது ஓராயிரம்
ஓராயிரத்தில் இருந்து கிளைத்தன
இந்த தீரா உபத்திரவங்கள்
உன்னிடம் இருப்பது உள்ளங்கை அளவு
என்னிடம் இருப்பது என் இரண்டு உள்ளங்கைகள் அளவு
உலகெல்லாம் நிறைந்திருப்பது
கடலளவு
சமன்குலைவின் முகாந்திரம் அறிய
நீ தியானி
இரண்டினை ஒன்றாக்கு
இருள் ஒளியைத்தின்னும் மாயம் நிகழட்டும்
மனம் அழிந்தால்
சமன்குலைவின் ஒரு கோலம் முடிவுறும்
உன் துயரை முதலில் வெல்
உருவம் அழிந்தால்
உலகின் துயரம் இல்லாமல் ஆகக்கூடும்
பிறகு
சமன்குலைவை நீ
முன்னின்று நடத்தத்துணியலாம்.

3.
சத்திய ஆவேசத்தில் பிறந்தது
அறத்தின் பாற்பட்டு எழுந்தன கோஷங்கள்
ஒன்று பல்லாயிரம் என்றானது
ஆயுதங்கள் பிறந்தன
ஆயுதங்களை வழிநடத்தும் கரங்கள் கண்டறியப்பட்டன
ஆயுதங்கள் இரத்த ருசி அறிந்தவை
தங்களின் பசி தீர்க்க அவை
அழகான தர்க்கங்களை அளித்தன
தாடியும் அழுக்கும் படிந்த மனித முகங்களில்
ஆயுதங்களை நியாயப்படுத்தும் தத்துவங்கள்
குடியேறின
ஒரு சொல்லென அவை முதலில்
அவர்களின் மனங்களில் முளைத்தன
ஒரு சொல் பின்பு வற்றாத சொற்றொடர் என்றாயின
பல்லாயிரம் பக்கங்கள் அவை படர்ந்தன
மனித மனங்களைக் கவரும் தத்துவங்களை
ஆயுதங்கள் பயன்படுத்திக்கொண்டன
நியாயம் என்பதே ஒற்றைத் தரப்பு என்றானது
மண்டியிட மறுத்தவர்கள்
மன்றாட மறந்தவர்கள் என
அனைவரும் பலியிடப்பட்டனர்
உயிர்ப்பலி வேள்வி என அடையாளப்படுத்தப்பட்டது
தத்துவங்கள் உருக்கொண்டு எழுந்து
உயிர்ப்பலிகளை
நியாயப்படுத்தின
உடன் பிறந்த நிழலையும் அஞ்சும் காலம் பிறந்தது
அதிகாரம் சுரந்து நின்றது
உள்நுழையும் துரிதம் காட்டி
பரமபத ஆட்டம்
ஓய்ந்து திரும்பியபோது
குருதியின் வாடை அன்றி
பிறிதொன்று இல்லை

4.
அனைவரும் கொண்டிருக்கும் கனவுகளில் இருந்து தனித்திருக்கும் என்னுடையது.
கன்னி ஒருத்தியை ஒவ்வொரு இரவும் இரவுக்குள் அழைத்துவருவேன்
அவள் கொள்ளும் வெட்கத்தின் சாயைகள் இரவினை அந்தியாக மாற்றும்
அவள் உடலின் மென்ரோமங்கள் உன்மத்தம் ஊட்டும்
என் கனவு என்றாலும் என்னையே நான் அஞ்சுவேன்
கன்னியின் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு ஓடுவேன்
எல்லாருடைய கனவுகளைப் போலவே என் கனவோட்டமும்
ஓரிடத்திலேயே ஓயாமல் நிகழும்
பயணமோ ஒற்றைப் புள்ளியில் மையம் கொண்டிருக்கும்
கன்னியை அடையும் பதற்றமும்
கனவில் ஓடுகிறோம் என்கிற போதமும்
காலமற்ற பெருவெளியில் என்னைத் தனியே
நிறுத்தும்
கனவு கலைந்து எழுந்து
இருளுக்குள் அருகில் இருப்பவளை உலுக்கி
ஊடாடும்போது கனவில் வந்த கன்னியை
நினைத்துக்கொள்வேன்
உங்களின் கனவு என்னை ஒன்றும் செய்வதில்லை
என் கனவு ஒன்றே என்னை கலைத்துப்போடுகிறது