புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

1. புதிது
இன்னும் அவன் எழுதப்போகும்
காகிதத்தின் முன்
தலைகுனிந்து அமர்ந்திருந்தான்
சொற்களின் தேர்வு
அவனை நிலைகுலையச் செய்தது
அவ்வாறு இருப்பதைப் பற்றிய
ஓவியம் அல்லது புகைப்படம்
காணும் நெஞ்சினில் ஆடிக்கொண்டிருந்தது
சிறிது நேரத்தில் அவன்
அங்கு இல்லாமல் போனான்
அவனது குரல் மட்டும்
கேட்டபடி இருந்தது
அவன் குனிந்து
தனக்கு ஆன அதை எடுத்தான்
புதிதாகத் தோன்றியதை
அவனது நெடுநாள்
பயணத்தோடு இனைத்தான்
அரிதான நேரத்தில்
கண் விழித்துப் பார்த்தான்
எவ்வித முனைப்பும்
புதியது எனப்பதிய
இப்பொழுது அவன் கண் விழிக்க
அந்த காகிதத்தில்
எல்லாம் எழுதி முடிக்கப்பட்டிருந்தது

2. ஒருவன்
ததும்பிக் கொண்டே இருக்கும்
நீர் நிலையைப் போல் இருக்கிறாய்
சிறு அசைவுகளில்
நம்மை ஏமாற்றக் கோடிக்கணக்கான
ஞாபகங்கள் இருக்கிறது
உன்னைத் தேடுவது
எனது முயற்சி மட்டுமே
ஆனால் நான் பயணம் செய்கிறேன்
யார் எது என்னவென்று எனக்குத் தெரியாது
இருளில் வானத்தை நோக்கிப் பார்க்கிறேன்
காற்று வீசிக்கொண்டிருக்கும்
கணக்கிட முடியாத அமைதியான
வனாந்தர பகுதியில் மட்டுமே
இடம் பிரதேசம் பகுதியென
நான் உன்னைத் தேடுகிறேன்
மக்கள் நடமாட்டத்தில்
தனியாளாய் நிற்கிறேன்
என்னைத் தொலைத்தவனாய்
நினைவுகளை நம்பி
அத்தனை பேரும்
பிரிந்து பிரிந்து போனாலும்
யாரவது ஒருவனை மீண்டும்
வழியற்ற பாதையில்
நான் சந்தித்து விடுகிறேன்

3. ஓவியம்
அது ஒரு வரையப்படாத ஓவியம்
குறிப்பிட்ட காலத்தில்
அசையாமல் ஆடாமல்
என்றுபோல் இன்றும் இருந்தது
அந்த ஓவியத்தில்
இருந்த பெண்ணின்
உடையிலிருந்த மலர்கள்
சற்றுமுன் பூத்திருந்தது
அவள் நின்றிருந்த
வாசல் வழி கண்ட முகப்பு
தற்சமயம் ஸ்தூலமாக இல்லை
நினைவுகளின் நீரில்
அவள் முகம் நன்றாக
தெரிய மின்னலின் வலி
அவனுக்கு உதவி செய்தது
ஞாபகத்தின் இண்டு இடுக்குகளில்
அழகிய தருணம்
நட்சத்திரம் போல் மின்னியது
என்றும் அவ்வோவியம் அழியாமல்
ஆற்றின் நீரில்
மிதந்து சென்றது